தில்லியின் ஒரு கலைந்த நினைவு - ஆகா ஷாஹித் அலி

Image result for agha shahid ali

1948இல் நான்
 பிறந்திருக்கவில்லை; பெயரற்ற ஒரு சாலையில்
அப்பேருந்து திரும்புகிறது

அங்கே தன் சைக்கிளில்
என் அப்பா
என்னை விட இளமையாய்

ஓக்லாவில் இறங்கிக் கொள்ளும் நான்
ஜமுனா நதியோரமாய் ஓய்வாய் நடக்கும்
என் பெற்றோர்களை கடந்து போகிறேன்


என் அம்மா ஒரு புது மணப்பெண்
சித்திர வேலைப்பாடுகள் புடைத்த அவளது சேலை
வெள்ளித் துகள்கள் வகிடெடுத்த அவளது கூந்தல்

அவள் என்னை கவனிக்கவில்லை
அவள் கொலுசொலிகள்
லாந்தர் விளக்குகளால் ஒளியேற்றப்படும் டீக்கடைகளின்
பீங்கான் ஒலிகள் போல தொலைதூரமாய் ஒலிக்கும்
மேலும், நட்சத்திரங்கள் தம் கண்ணாடி நாவுகளால்
ஒலியெழுப்பியபடி வெளிவருகின்றன.

எப்போதும் குடும்ப ஆல்பத்தில்
மங்கிப் போய் தெரியும்,
ஆனால் இப்போது, மச்சில் நான் உடைந்து போய் கண்டெடுத்த, அகல்விளக்கால் ஒளியேற்றப்பட்ட
அவ்வீட்டுக்குள் அவர்கள் போகிறார்கள்

நான் உங்கள் மகன்
என அவர்களிடம் எனக்கு சொல்ல வேண்டும்
வயதாகிய அவர்களை விட அதிக வயதாகிய மகன்
நான் தொடர்ந்து கதவை தட்டுகிறேன்

ஆனால் அவர்களுக்கோ இவ்விரவு
அமைதியானது
இது எனது இருப்பின் இரவு
அவர்கள் கேட்க மாட்டார்கள்,

அவர்களால் முடியாது நான் கதவைத் தட்டும் ஒலியில்
நட்சத்திர நாவுகள் மூழ்கி மறைவதை
அவர்களால் கேட்க இயலாது
(தமிழில் ஆர். அபிலாஷ்)

Comments