உன் மார்புகள் போதாது எனக்கு - பாப்லோ நெருடா

Related image

உன் மார்புகள் போதாதடி எனதிந்த இதயத்துக்கு
என் சிறகுகள் போதாதடி உன் கட்டறுதலுக்கு
உன் ஆன்மாவின் மேலாக உறங்கிய ஒன்று
என் வாய் வழி சொர்க்கத்துக்கு எழுந்து செல்கிறது.


உன்னுள்ளே ஒவ்வொரு பகலின் மனப்பிரமையும்.
கையைக் குவித்த பூக்கள் மீது பனித்துளிகளைப் போல நீ வருகிறாயடி.
நீ இங்கு வராது பாழ் செய்கிறாய் தொடுவானத்தை.
ஒரு அலையைப் போல் முடிவற்று தப்பிச் செல்கிறவளே.

பைன் மரங்களைப் போல பாய்மரக் கம்பங்களைப் போல்
 நீ காற்றில் பாடுவாய் என சொல்லி இருக்கிறேன்.
அவற்றைப் போன்றே நீ உயரமானவள், கூச்சத்தில் சொல்லற்றுப் போனவள்.
மேலும், ஒரு நீண்ட கடற் பயணத்தைப் போன்றே, சட்டென துயரம் கொள்கிறாயடி நீ.

ஒரு பழைய சாலையைப் போன்று பொருட்கள் உன்னை வந்து அண்டுகின்றன.
எதிரொலிகளாலும் நினைவேக்க குரல்களாலும் நீ நெருங்கி விம்முகிறாய்.
விழிப்புற்றேன்; சிலநேரம் பறவைகள் சிதறின; உன் ஆன்மாவில்
உறங்கும் ஒன்று புலம்பெயர்ந்ததடி அப்போது.

 (தமிழில் ஆர். அபிலாஷ்)

Comments