பைன் மரங்களை குடித்துக் கிறங்கி - பாப்லோ நெருடா

Image result for passion painting
பைன் மரங்களையும் உன் நீண்ட முத்தங்களையும் அருந்தி கிறங்கி,
இந்த மெல்லிய பகலின் மரணத்தை நோக்கி,
ரோஜாக்களின் வேகப்பாய்மரங்களை ஒரு கோடையைப் போல் செலுத்துகிறேன்,
இளகாத என் கடல் பைத்தியத்தால் கட்டுண்டு.

பசி நாவுகளாய் துடிக்கும் எனது கடலுடன், வெளிறி, பிணைக்கப்பட்டு,
இந்த நிர்வாண காலநிலையின் புளித்த மணத்துடன் நான் விரைகிறேன்,
சாம்பல் வண்ண, கசப்பான ஒலிகளை இன்னும் அணிந்தபடி
கைவிடப்பட்ட அலைச்சிதறலின் துயர உச்சியில்.


இச்சைகளால் என் வலி மரத்திட, எனது ஒரே அலையில் பாய்ந்தேறி செலுத்துகிறேன்,
நிலவோ பகலோ, சுட்டெரிப்பதோ உறையக் குளிர்வதோ, எல்லாம் ஒரே போதில்,
என் நற்பேறான சிறு தீவுகளின் – குளிர் இடையொன்றைப் போல கனியூறும், வெண்மை பூக்கும் - குரல்வளையில் மனம் தணிகிறேன்.

மின்சாரமேறிய அலைகளால் பித்தேற்றப்பட்ட எனது முத்தங்களின் ஆடை
இந்த ஈர நிசியில் நடுங்குதடி,
சாகசமாய் கனவுகளாக பிளவுண்டு
போதையில் நடுங்கும் ரோஜாக்கள் என் மீது பயில.

எதிர்நீரோட்டத்தில், வெளிச்சுழலும் அலைகளின் மையத்தில்,
உன் பக்கவாட்டுடல் என்னை எடுத்துக் கொள் என தன்னைத் தருகிறது என் கரங்களுக்கு,
என் ஆன்மாவில் அலகிலாது கோர்க்கப்பட்ட ஒரு மீனைப் போல,
வேகமாய் மெதுவாய், ஆகாயத்தின் கீழுள்ள சக்தியில்.


 ((தமிழில் ஆர். அபிலாஷ்)

Comments