தொலைதூரம் செல்லாதே அன்பே - பாப்லோ நெருடா

Image result for passion painting

ரொம்ப தூரம் போய் விடாதே, ஒரு நாள் ஆனாலும் கூட, ஏனெனில் –
ஏனெனில் – எப்படி சொல்வதெனத் தெரியவில்லை: ஒரு நாள் என்பது ஒரு நாள் அல்ல; நான் உனக்காய் காத்துக் கொண்டிருப்பேன்; ரயில்கள் முழுக்க சென்று விட்ட பின் விழிப்பை இழக்கும் ஒரு காலியான ரயில் நிலையம் போல.


என்னை விட்டுச் செல்லாதே, ஒரு மணிநேரத்துக்கு கூட, ஏனெனில்
அவஸ்தைகளின் சிறு சிறு துளிகள் சேர்ந்து அடித்துச் செல்லும் என்னை,
வீடின்றி அலைந்து தவிக்கும் புகை மூட்டம்
தயங்கியபடி என்னுள் நுழைந்து நெரிக்கும் தொலைந்த எனது இதயத்தை.

ஆஹ், உனது நிழல் கோடு கடற்கரையில் கரையாதிருக்கட்டும்;
உனது கண்ணிமைகள் வெற்று தொலைவை நோக்கி படபடக்காமல் இருக்கட்டும்.
ஒரு நொடி கூட என்னை தனியே விடாதே, என் அன்பே,

ஏனெனில் அத்தருணத்தில் நீ வெகுதொலைவு போயிருப்பாய்
பிறகு நான் சுழல்பாதைகளில் திரும்ப திரும்ப மோதியபடி புவி முழுக்க திரிவேன், இப்படி கேட்டுக் கொண்டே:
நீ திரும்ப வருவாயா? அல்லது இங்கே விட்டுச் செல்வாயா, சடலமாய்?
 (தமிழில் ஆர். அபிலாஷ்)Comments