இலக்கிய வாசிப்பில் இருந்து எதையாவது பெற முடியுமா?

எழுத்தாளன் ஏன் முரண்பட்டவனாய் இருக்க வேண்டும் என்பது குறித்த எனது முந்தைய பதிவை ஒட்டி முகநூலில் பிரகாஷ் கோவிந்தனுக்கும் எனக்கும் ஒரு நல்ல விவாதம் நடந்தது.  அது கீழ்வருமாறு:

பிரகாஷ் கோவிந்தன்: முரண்கள் அற்றால் விவாதங்கள் இல்லை.. முரண்கள் அற்றுபோனால் எழுத வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் முரண்களை இயல்பாய் அனுமதிப்பது வேறு.. ஒரு நோக்கத்துக்காக அனுமதிப்பது வேறு.. அது வெறுமனே மருள் வந்ததாய் நடிக்கும் சாமியாடியைப் போல..
ஆர். அபிலாஷ்: முரண்கள் அர்த்தங்களின் அசுரப்பிடியில் இருந்து நம்மை விடுவிக்கும். ஒரு சர்வாதிகாரியிடம் இருந்து தப்பிப்பது போன்றது அது. இதுவே முரண்களை முன்னெடுப்பதன் நோக்கம்!

பிரகாஷ் கோவிந்தன்: இதெல்லாம் ஒரு எழுத்தாளன் தன்னுடன் ஆடும் அந்தரங்க ஆட்டம் மட்டுமே எழுத்து என்பதாக எண்ண வைக்கிறதே? சமூகத்துக்கும் எழுத்தாளனுக்குமான தொடர்பு என்ன?


ஆர். அபிலாஷ்: சமூகமும் எழுத்தாளனும் இருவேறல்ல. ஒன்று தான். ஆக, இது சமூகம் தன்னுடனே ஆடும் அந்தரங்க ஆட்டம்  :)

பிரகாஷ் கோவிந்தன்: ஆக ஒரு எழுத்தாளன் ஒரு சமூகத்தையே தன்னுள் தன்னுள் சுமக்கும் பிளவு பட்ட பல ஆளுமைகளின் தொகுப்பு எனக் கொள்ளலாமா

ஆர். அபிலாஷ்: மிகவும் சரி  :)

பிரகாஷ் கோவிந்தன்: எனில் எழுத்தாளனும் சமூகத்தின் பலம் பலவீனம் இரண்டையும் பிரதிபலிக்கிறான். ஒரு சாதாரண மனிதனும் அதையேச் செய்கிறான். எனில் இவர்களை வேறுபடுத்துவது எப்படி..?

ஆர். அபிலாஷ்: மொழிக்குள் எந்தளவு தீவிரமாய் இறங்கி செயல்படுகிறார்கள் என்பதே இருவருக்குமான வித்தியாசம். சில நேரம் சாதாரணர்கள் சிக்கல்களை, நெருக்கடிகளை, முரண்களை வெளியே நின்று கண்டு விட்டு நகர்ந்து விடுகிறார்கள். அல்லது அதை அனுபவிக்கிறார்கள், ஆனால் அனுபவத்தை பதிவு செய்து பிறருடன் கடத்துவதில்லை. வித்தியாசம் மிக மிக நுண்மையானது, சன்னமானது, ஆகையால் தான் யார் வேண்டுமெனிலும் எழுத்தாளனாக முடிகிறது. அதற்கு தனித்திறன் எல்லாம் தேவையில்லை.

 இதை ஒட்டி பிரகாஷ் கீழ்வருமாறு கேட்டிருந்தார்:

இதுதான் சார் எதிர்பார்த்தேன்..  :)
இந்த உண்மை கொஞ்சம் ஏமாற்றமா இருக்கு.. ஒரு வாசகனாக என் எழுத்தாளனை நான் என்னிலும் மேலான ஒரு ஆசிரியனாக நினைக்கிறேன்.. என் அக சிக்கல்களுக்கு அவரிடம் தெளிவு இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அவரிடமிருந்து எனக்கு மொழி மட்டும்தான் கிடைக்குமென்றால், ஒரு அனுபவ பதிவு உத்தி மட்டும்தான் நிகர அடைவு என்றால்..
அவ்வளவுதானா எனும் குழந்தையின் ஏக்கம் வருகிறது அல்லவா?

உண்மையில் நீங்கள் உங்கள் எழுத்தாசான்களிடம் இருந்து மொழியைத் தாண்டி வேறு எதையும் அடையவில்லையா? எழுத்தாளனின், எழுத்தின் அறம் என்பதெல்லாம் வெறும் கற்பிதம் என்றல்லவா ஆகிவிடும்”

இனி இக்கேள்விக்கான என் பதில்:
அன்புள்ள பிரகாஷ் கோவிந்தன்
நீங்கள் எழுப்பியுள்ளவை முக்கியமான கேள்விகள். சற்றே விரிவான பதில்களை கோரும் கேள்விகள் இவை என்பதால்...

// ஒரு வாசகனாக என் எழுத்தாளனை நான் என்னிலும் மேலான ஒரு ஆசிரியனாக நினைக்கிறேன்.. என் அக சிக்கல்களுக்கு அவரிடம் தெளிவு இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.//
நானும் பதின்வயதில் அப்படியே நம்பினேன். வாழ்க்கையின் புதிர்கள், தத்தளிப்புகள், நெருக்கடி, நிலையின்மை, உறவுகளை கையாளத் தெரியாமை என பல பிரச்சனைகள் என்னை நடுக்கம் கொள்ளச் செய்தன. வாழ்க்கையைக் குறித்து மேலும் தெளிவானவனாக ஆக வேண்டும் எனும் விழைவே என்னை நிறைய வாசிக்கத் தூண்டியது. இன்று நான் சந்திக்கும் இளம் இலக்கிய / தத்துவ வாசகர்கள் பலரும் இதே நாட்டத்துடன் தான் வருகிறார்கள்.
இத்தேடலின் போது நான் முதலில் புரிந்து கொண்டது இது: இலக்கியம் மனித மனத்தின் போக்குகளை புரிய வைக்கிறது. ஆனால் வெளியே காணும் மனிதர்களை இலக்கியம் வழி அறிவது ஸ்பூனால் கடலை அள்ளிக் குடிப்பது போன்றது. மனுஷ்யபுத்திரன் என்னிடம் ஒருமுறைச் சொன்னார்: “வாழ்நாள் பூரா புத்தகம் படித்தாலும் அது அன்றாட வாழ்வுக்கு உதவாது. இலக்கிய புரிதல் / அறிவு வாழ்க்கைக்கு விரோதமானவர்களாகவே நம்மை மாற்றுகிறது.” இது சற்றே அதிர்ச்சியாகப் பட்டாலும், முழுக்க உண்மை என்றே பின்னர் உணர்ந்தேன். எழுத்து ஒருவகையில் திரிக்கப்பட்ட, சுவையான, அகத்திளைப்பு தருகிற ஒரு வாழ்க்கைப் பதிவை, அவதானிப்பை, பார்வையை நமக்குத் தருகிறது.
ஆக, இலக்கிய வாழ்க்கை என்று ஒன்று உண்டு என புரிந்து கொண்டேன். இலக்கிய அம்மாக்கள், இலக்கிய அப்பாக்கள், இலக்கிய காதலிகள், இலக்கிய நண்பர்கள், இலக்கிய போராளிகள், இலக்கிய இயற்கை ஆர்வலர்கள், இலக்கிய வெற்றியாளர்கள், இலக்கிய பேரழகிகள், இலக்கிய கருணையாளர்கள், இலக்கிய சமூக நீதியாளர்கள்… . இவர்கள் யாரும் இலக்கியத்துக்கு வெளியே இருக்க மாட்டார்கள். இலக்கியத்துக்கு வெளியே நாம் காணும் உலகம் முற்றிலும் மாறானது. அது சொல்லிலோ தர்க்கத்திலோ கற்பனையிலோ அடங்காதது.
தி.ஜாவின் யமுனாவை ஒத்த ஒரு பெண்ணை நேர்வாழ்வில் கண்டு அதே போல் அவள் மீது நீங்கள் பித்தானால் அவள் யமுமாவை விட ஆயிரம் மடங்கு சிக்கலானவள் என அறிவீர்கள். திகைப்பீர்கள். யமுனாவைக் கொண்டு “யமுனாவை” அறிய முடியாது. ஆனால் “யமுனாவின்” சில அம்சங்களை ரசிக்க யமுனா உதவலாம்.
இவ்வாறு, இலக்கிய வாழ்க்கை ஒரு மாற்று அரூப வாழ்க்கை என அறிந்து கொண்டேன்.
இலக்கிய மாற்றுலகின் ஜீவிகள் போலியானவர்கள் என நான் கூற வரவில்லை. இவர்கள் ஒரு வாழ்க்கைத் தரப்பின் பல தரப்புகளை, கருத்தியல் / அழகியல் விவாதத்தின் பல சாத்தியங்களை பரிசீலிப்பதற்காக உருவாக்கப்பட்டவர்கள். அதனாலே ”தண்ணீர்” நாவலின் சாயா மற்றும் ஜமுனாவை நீங்கள் கதைக்களன், சம்பவங்கள், பிற பாத்திரங்களில் இருந்து விலக்கி தனியாய் காண முடியாது. ஆனால் நிஜவாழ்வில் ஒருவரை அப்படி குடும்பம், சாதி, சமூகம், வேலையிடம் ஆகியவற்றில் இருந்து தனித்து விலக்கி நமக்கே ஆன ஒரு தோழி / தோழனாய் காண முடியும்.
தஸ்தாவஸ்கியின் நாவல் பாத்திரங்கள் சற்றே வலுக்கட்டாயமாய் ஒரு நாடகப் பாத்திரம் போன்றே உருவாக்கப்பட்டிருப்பார்கள். ரஸ்கோல்நிக்கோவ் ஒரு முற்போக்கு புரட்சியாளன் / தனிமனிதவாதி என்றால் அவனுக்கு நேர் எதிராய் (கர்த்தரின் சாயலில்) சோனியா தோன்றுவாள். இரு எதிரெதிரான வாழ்க்கைப் போக்குகளை பிரதிநுத்துவப்படுத்தும் பாத்திரங்கள் இருவரும். ஆக, ஒரு புனைவு என்பது வாழ்க்கையின் நீட்சியோ பிரதிபலிப்போ அல்ல, ஒரு விவாத நிகழ்வு அல்லது உளவியல் பரிசோதனை என நான் புரிந்து கொண்டேன்.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன். ஒரு விவாதம் அல்லது பரிசோதனைக்கு முடிவு என்று உண்டல்லவா? அதில் இருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்ளலாம் அல்லவா?
இங்கு தான் இலக்கியம் மாறுபடுகிறது. அது தொடர்ந்து முடிவுகளை தள்ளிப் போடுகிறது. “ஐ லவ் யூ” சொல்வதை தொடர்ந்து தள்ளிப் போடும் காதலியைப் போன்றது இலக்கியம். அது ஒவ்வொன்றாய் பரிசீலித்து விட்டு எதிலுமே திருப்தியில்லை என மௌனிக்கிறது; எல்லா சிறந்த கதைகளும் முடிவிலியை நோக்கி முகத்தைத் திருப்பிக் கொள்வது இதனாலே.
எனது நேற்றைய வகுப்பில் ஷேக்ஸ்பியரின் “மெக்பத்” நாடகம் பற்றி ஒரு உரையாடல் நடந்தது. மெக்பத் ஒரு படைத்தளபதி. அவனுக்கு மன்னன் ஆகும் பேராசை ஏற்படுகிறது. ஆனால் அதற்கு மன்னனைக் கொல்ல வேண்டும். மெக்பத்துக்கு அத்துணிச்சல் இல்லை. ஆனால் அவன் மனைவியோ வெகுதுணிச்சலானவள். அவள் தன் கணவனை தொடர்ந்து தூண்டி கொலைக்கு தயாரிக்கிறாள். அவள் அப்போது கணவை நோக்கி சொல்கிறாள்: “வாய்ப்பிருந்தால் நானே கூட மன்னரைக் கொன்றிருப்பேன். எனக்கு ஈவிரக்கம் என ஒன்றும் இல்லை. என் முலையில் பாலுறுஞ்சும் மதலையைக் கூட பிடுங்கி சுவரில் அடித்துக் கொல்ல தயங்க மாட்டேன் நான். ஆனால்…”
ஆனால் என்ன?”
மன்னரின் முகத்தைப் பார்க்க என் அப்பாவைப் போலவே உள்ளது. அதனாலே என் கை நடுங்குகிறது. அவரைக் கொல்ல எப்படி என்னால் கத்தியை உயர்த்த முடியும்?”
இந்த வசனம் வெகுபிரசித்தமானது. மெக்பெத்தின் மனைவியின் ஒரு உள்-முரணை இது காட்டுகிறது. அவளுக்கு வேண்டுமெனில் தன் குழந்தையைக் கூட கொல்ல முடியும். ஆனால் அப்பாவை ஒத்த முகத்தோற்றம் கொண்ட ஒருவரைக் கொல்ல முடியாது.
இதை ஒட்டி நான் ஒரு கேள்வியை வகுப்பில் கேட்டேன்: “மன்னரை அவளால் ஏன் கொல்ல முடியாது என்பது நமக்கு இப்போது தெரியும். ஆனால் கொல்ல வேண்டும் எனும் சிந்தனை எப்படி அவளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்? மன்னர் பார்க்க அப்பாவைப் போல இருக்கிறார் என்பதே அவரை தன் கணவர் மூலம் கொல்ல வேண்டும் என தூண்டுதலை அவளுக்கு ஏற்படுத்தியதா? ஏன் செய்யக் கூடாது என்பதற்கு அவள் தரும் காரணம் தான் ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான காரணமுமா? எனில், அவள் தன் அகத்தின் ஆழத்தில் தன் தகப்பன் மீது கடும் துவேசம் கொண்டிருக்கிறாளா?”
இக்கேள்விகளை ஷேக்ஸ்பியர் நேரடியாய் எழுப்புவதில்லை. ஆனால் அதற்கான ஒரு சின்ன சாத்தியத்தை பாதி திறந்த ஜன்னல் கதவைப் போல் உண்டாக்கி வைத்திருக்கிறார். இக்கேள்விகள் நமக்கு எந்த பதிலையோ தீர்வையோ தருவதில்லை. மாறாக மேலும் மேலும் குழப்பங்களுக்குள் இட்டுச் செல்கின்றன.
மீண்டும் உங்கள் கேள்விக்கு வருகிறேன். இலக்கியம் குழப்பத்தையே நம் உள்ளங்கையில் வைத்து விட்டுப் போகிறது என்றால் அதன் வழி நீங்கள் எப்படி தெளிவை அடைய முடியும்? எனில், இலக்கியத்தின் நோக்கம் தான் என்ன?
ஆக இலக்கியமோ எழுத்தாளனோ தெளிவைத் தரும் ஆசான்கள் அல்ல - அவர்கள் ஒளியை ஏற்றுவதில்லை, விளக்கை அணைத்து இருள் நம்மை சூழும்படி செய்கிறார்கள். ஏன்?
இதற்கான விடை தத்துவத் தளத்தில் மட்டுமே உள்ளது:
மனிதன் தன் இருப்பை நகைச்சுவையிலோ கவிதையிலும் மட்டுமே (சுலபத்தில்) அறிய முடியும் என்கிறார் மார்ட்டின் ஹைடெக்கர். ஒரு நகைச்சுவையின் போது நாம் ஏன் சிரிக்கிறோம்? நாம் சற்றும் எதிர்பாராத ஒரு அபத்தத்தை, கோணலை, பொருத்தமின்மையை ஒரு நகைச்சுவைக் காட்சியோ வசனமோ எழுத்தோ நம் முன் வைக்கிறது. அப்போது சில நொடிகள் புரியாமையில் தவிக்கிறோம். அர்த்தங்களின் அனைத்து சாத்தியங்களும் அப்போது நம்மை கைவிடுகின்றன. முன்பு விஜயகாந்த் தன் அரசியல்வாதி/ நடிகர் எனும் பாத்திர அமைப்புக்கு பொருத்தமற்ற ஒன்றை சொன்ன போது நமக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வதென தெரியாமல் திகைப்பு ஏற்பட்ட. சிரித்தோம். இதுவே சிறந்த கவிதைகளை வாசிக்கையிலும் நடக்கிறது என்கிறார் ஹைடெக்கர். நாம் இன்மைக்குள் மட்டுமே இருக்கிறோம், ஆனால் அதை உணர முடியாதபடி மொழியின் ஆதிக்கம் நம் மீது உள்ளது. சிரிக்கையிலோ ஒரு கவிதையில் நெகிழ்கையிலோ இந்த ஆதிக்கத்தில் இருந்து சில வினாடிகள் நாம் விடுபடுகிறோம். நாம் வாழும் அர்த்தமின்மையின் சுதந்திரத்தை அறிகிறோம். இந்த விடுதலை மிக மிக சற்றே நேரமே நமக்கு சாத்தியப்படுகிறது. அதனாலே ஒரு அற்புதமான சிறுகதையை படித்து திகைத்து ரசித்து விட்டு அது ஏன் அற்புதம் என சொல்லத் தெரியாமல் சொல்லற்று போகிறோம்.
ஆக, எழுத்தாளன் நமக்கு எதையும் கற்பிப்பதில்லை; நாம் கற்றதை அவன் அழிக்கிறான். அது மட்டுமே அவன் பணி.
ஒரு புத்தகத்தைக் கற்று அதில் இருந்து எதையாவது அடைய வேண்டும் என்பது தொழிற்புரட்சியின் பின்பு ஏற்பட்ட ஒரு உளவியல் தேவை என நினைக்கிறேன். உற்பத்தியாகும் ஒவ்வொரு பொருளும் பயன்மதிப்பு கொண்டது. இலக்கியமும் உற்பத்தியாகும் பொருள். ஆக அதற்கும் பயன்மதிப்பு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் இலக்கியம் ஒரு பண்டம் அல்லவே. இத்தெளிவு நமக்கு வேண்டும். ஒரு பண்டம் உங்களை சற்றே கூடுதல் மதிப்பு மிக்கவராக்குகிறது. ஆனால் இலக்கியமோ உங்களை “ஏழை” ஆக்குகிறது. (சொர்க்க ராஜ்ஜியம் அத்தகையோருக்கே J)
// உண்மையில் நீங்கள் உங்கள் எழுத்தாசான்களிடம் இருந்து மொழியைத் தாண்டி வேறு எதையும் அடையவில்லையா? எழுத்தாளனின், எழுத்தின் அறம் என்பதெல்லாம் வெறும் கற்பிதம் என்றல்லவா ஆகிவிடும்//
எழுத்து மனித குலத்துக்கான அறத்தை அறைகூவுகிறது என்பதுடன் எனக்கு உடன்பாடில்லை. உலகம் ஏற்கனவே சிறப்பாகவும் சிறப்பற்றதாகவும் ஒரே சமயம் இருக்கிறது. அதை மேம்படுத்தவோ சீரழிக்கவோ நம்மால் முடியாது என்பது என் பார்வை. மேலும், “அறம்” என்றால் என்ன என்பதை என்னால் இன்னமும் புரிந்து கொள்ள இயலவில்லை. இப்போதைக்கு “அன்பு” எனும் சொல்லை மட்டுமே புரிந்து வைத்திருக்கிறேன். அதற்கே எனக்கு நீண்ட காலம் எடுத்தது. ஒருவேளை இறப்பதற்கு முன் “அறம்” என்கிற வஸ்துவை கண்டு கொண்டேன் எனில் நிச்சயம் அதைப் பற்றி எழுதுகிறேன்.
ஆர்வமூட்டிய இந்த விவாதத்துக்கு நன்றி!

Comments