வெள்ளை வண்டு - பாப்லோ நெருடா

Image result for white soul painting

வெள்ளை வண்டே, என் ஆன்மாவில் ரீங்காரமிடுகிறாய், தேனுண்டு மயங்கி,
புகையில் மெதுமெதுவாய் சுழன்று இறங்குகிறாய்.

நானோ நம்பிக்கைகளை தொலைத்தவன், எதிரொலிகளால் கைவிடப்பட்ட ஒரு சொல்லானவன்,
எல்லாவற்றையும் இழந்தவன், எல்லாவற்றையும் கொண்டிருந்தவன்.

என் கப்பலில் இறுதி கம்பிவடமே, உன் முனகலில் உள்ளதடி என் கடைசி நம்பிக்கை.
என் பாலை நிலத்தின் இறுதி ரோஜாவே.


ஆஹ்  பேச்சற்றவளே!

உன் ஆழமான விழிகள் கவியட்டும். அங்கு இரவு இறகுகளை சலனிக்கிறது.
ஆஹ், ஆடை நழுவிய அச்சமுற்ற சிலை உன் உடலடி.

உன் ஆழவிழிகளில் இரவு தலைவிரித்து ஓலமிடும்.
மலர்களின் குளிர்கரமே, ரோஜாக்களின் மடியே.

வெள்ளை நத்தைகள் போன்றவை உன் முலைகள்.
ஒரு நிழல் பட்டாம்பூச்சி உறங்க வருகிறது உன் வயிற்றில்.


ஆஹ், ஒலியற்றவளே!

இதோ நீ கலைக்க முடியாத என் தனிமை.
மழை பெய்கிறது, கடற் காற்று தனித்து திரியும் கடற்காகங்களை வேட்டையாடுகிறது.

நீராலான தெருக்களில் நீர் வெற்றுப் பாதங்களால் நடைபழகுகிறது.
அம்மரத்தில் இருந்து இலைகள் புகார் சொல்கின்றன, சுவஸ்தமற்று தவிப்பது போல.

வெள்ளை வண்டே, நீ போன பின்னரும் என் ஆன்மாவில் ரீங்காரமிடுகிறாய்
மீண்டும் காலத்தில் உயிர்ப்பெறுகிறாய், சன்னமாய், மௌனமாய்.
ஓஹ், என் சொல்லற்றவளே!
(தமிழில் ஆர். அபிலாஷ்)

Comments

Anonymous said…
வெள்ளை வண்டு எது?