மதியத்தின் மீது மெல்ல சாய்ந்த படி - பாப்லோ நெருடா

மதியத்தின் மீது மெல்ல சாய்ந்த படி என் துயரத்தின் வலைகளை
வீசுகிறேன் உன் சமுத்திர விழிகளுக்குள்.
அங்கே எனது தன்னந்தனிமை நீள்கிறது, தழலாகிறது
ஜூவாலைகளின் பெரும் உச்சத்தில்,
அதன் கரங்கள் மூழ்கும் ஒருவனுடையதைப் போன்று சுழல்கிறதடி.
கலங்கரை விளக்கத்தின் அண்மையில் தவிக்கும் கடலைப் போன்று
நான் அனுப்புகிறேன் சிவப்பு சமிக்ஞைகளை கனவில் ஆழ்ந்த உனது விழிகளுக்கு குறுக்கே.
என் தொலைதூர சகியே, நீ இருளை மட்டுமே அணைக்கிறாய்,
உனது அக்கறையில் இருந்து சிலநேரம் தோன்றுகிறது பீதியின் கரைப்பகுதி.
இந்த மதியங்களின் மீது மெல்ல சாய்ந்தபடி வீசுகிறேன் எனது
துயரத்தின் வலைகளை
உனது நெய்தல் கண்களில் துடிக்கும் கடலை நோக்கி.
உன்னை நேசிக்கும் போது என் ஆன்மாவில் மின்னித் தவிக்குமே
அந்த நட்சத்திரங்களை கொத்திப் போகின்றன பறவைகள்.
நிழலைப் போன்ற ஒரு பெண் புரவியில் பாய்ந்து செல்கிறது இரவு
நிலத்தில் நீலக்குஞ்சலங்களை விசிறியபடி.
(தமிழில் ஆர். அபிலாஷ்)
Comments