நிகனோர் பார்ரா: அர்த்தங்களைக் கொண்டு சூதாடியவன்

   
Image result for nicanor parra
தமிழின் சிறந்த பத்து கவிகளை ஒரு பட்டியல் இட்டோமானால் ஒவ்வொருவரின் கவிதை மொழி, அணுகுமுறை, தொனி, நிலைப்பாடு ஆகியவை தனித்துவமாய், ஒரு தனியான பாதையாய், உறைய மறுக்கும் ஒரு சொட்டு ரத்தமாய் இருப்பதைக் காணலாம். இங்கு உன்னதமான கவியாய் அறிகிற ஒவ்வொருவரும் கூட்டத்துடன் இணையாது ஒலிக்கும் தனிக்குரல்.

 இந்த சுபாவத்தை ஓரளவு சிறுகதையிலும், அதிலும் மிகக் குறைவாக நாவலிலும், மிக மிகக் குறைவாக கட்டுரையிலும் பார்க்கலாம். கவிதையில் ஒருவரின் முக்கிய சாதனை ஒரு மொழியை கண்டுபிடிப்பதே. கவிஞர்கள் இருளில் உறங்கும் காதலியின் அங்கங்களில் வருடி எதையோ தேடி உணர்ந்து அவஸ்தை கொள்வதைப் போன்றே சொற்களை கையாள்வதைக் காணலாம். கவிஞன் எப்போதும் தன் சொற்களில் திருப்தி கொள்வதில்லை. அவனளவு மொழியில் அக்கறை கொள்கிறவர் இல்லை. லத்தீன் அமெரிக்காவின் கவிதை மரபின் உன்னத சாதனையாளனான நிகனோர் பார்ராவின் சிறப்பும் அவர் தனக்கான ஒரு புது மொழியை கண்டடைந்தது தான்அதில் ஒரு தனிச்சிறப்பு அவர் ஒரு மொழியற்ற மொழியை, ஒரு அழுக்குச் சிறுவனை குளிப்பாட்டி பளிச்சென அழைத்து வருவது போல், நம்மிடம் கொணர்ந்தார் என்பது.
அது என்ன மொழியற்ற மொழி?
மொழி அடிப்படையில் உருவகங்களால் ஆனது. பேக்கிலர்ட் கேஸ்டன் வெளிவருதல் (emerge) எனும் சொல்லைப் பற்றி தனது Poetics of Space நூலில் பேசும் போது அச்சொல்லைக் கூறிய அடுத்த நொடி நம் மனதுக்குள் ஒரு நத்தை தன் ஓட்டில் இருந்து எட்டிப் பார்க்கும் சித்திரம் பூடகமாய் தோன்றுகிறது என்கிறார். ஆதிமனிதன் இந்த நத்தையை கண்டிராவிடில் இச்சொல்லே சாத்தியப்பட்டிருக்காது என்கிறார் அவர். ஒருவர் ஆதுரமாய் நம் கைகளைப் பற்றி என்னாச்சுப்பா?” என விசாரிக்கும் போது அந்தஆச்சுஎனும் ஆகுதல் ஒரு உருவகம் தான். உருவகம் இன்றி நம்மால் பேசவே முடியாதென்றால் கவிதையை எப்படி எழுதுவது? ஆகையால் கவிஞர்கள் உவமையில் இருந்து உருவகம், அதில் இருந்து குறியீடு, அதில் இருந்து படிமம், இப்போது மீண்டும் உவமை என ஒவ்வொரு தலைமுறையிலும் தம் பயன்பாட்டை மாற்றி வருகிறார்கள். ஆனாலும் மொழியை முழுக்க விடுதலையாக்க நம்மால் முடிந்ததில்லை. ஏனென்றால் கவிதை ஒரே சமயம் அர்த்தத்தில் இருந்து தப்பிக்கவும், புது அர்த்தத்தை தோற்றுவிக்கவும் முயல்கிறது. இது ஒரு சட்டையை கழற்றி புது சட்டை அணிவது போல. கவிதைக்குள் திறப்பு என்பது இரண்டுக்கும் இடையில் கவிதை சட்டை அணியாது ஒரு சின்ன நாணத்துடன் அது நம்மை நோக்கும் தருணம் தான். இந்த நிர்வாணம் ஒரு வித சூனிய நிலை. இந்த நிர்வாண நிலையை நீட்டிப்பது எப்படி? நிகனோர் பார்ரா இக்கேள்விக்கு விடை கண்டார்.
நிகனோர் பார்ராவின் கீழ்வரும் கவிதையை பாருங்கள்:
என் இறுதி மதுக்கோப்பையை உயர்த்துகிறேன்

உங்களுக்கு வசதிப்படுமோ இல்லையோ
மூன்று தேர்வுகள் தாம் உள்ளன:
நேற்று, இன்று, நாளை

அட, மூன்று கூட இல்லை
ஏனென்றால் தத்துவஞானிகள் சொல்வது போல
நேற்று என்பது நேற்று மட்டுமே
அது நம் நினைவில் மட்டுமே உள்ளது:
இதழ்கள் கவரப்பட்ட ரோஜாவில் இருந்து
இனி எடுக்க ஒன்றுமில்லை.

நாம் கையிலுள்ள சீட்டுகள் ரெண்டே:
இன்று மற்றும் நாளை.

அட, ரெண்டு கூட இல்லை.
நம்மை அது அவசரமாய் கடந்து செல்லும் போதும்,
அதை நாம் - இளமையைப் போல் - பருகும் போதும்
மட்டுமே அது இன்றாக உள்ளது
என்பதை நாம் அறிவோம் அல்லவா.

கடைசியில் எஞ்சுவது
 நாளை மட்டுமே
நான் உயர்த்துவேன் என் இறுதிக் கோப்பையை
ஒருபோதும் வராத அந்த நாளுக்காக.

ஆனால்
நம் வசம் உள்ளது
அவ்வளவு தான்.
(தமிழில் ஆர். அபிலாஷ்)

பார்ரா உருவக, உவமைகளுடன் போராடுவதில்லை. அவற்றை முறியடிக்க முனைவதில்லை. அவற்றை தாராளமாகவே பயன்படுத்துகிறார் (ரோஜா, சீட்டு). ஆனாலும் அபாரமான எடையின்மை ஒன்று அவரது கவிதையில் உள்ளதை நீங்கள் கவனிக்கலாம். எப்படி அது சாத்தியமாகிறது?
பார்ரா இக்கவிதையை ஒரு தலைப்பின்னல் போல் உள்முரண்களால் இக்கவிதையை பின்னியிருப்பதை கவனியுங்கள். ஒவ்வொரு வாக்கியத்தையும் அடுத்தடுத்த வாக்கியங்களால் முறியடிக்கிறார். முதலில் மூன்று வாய்ப்புகள் என்றவர் இறுதியில் ஒன்றுமே இல்லை என்கிறார். இதன் மூலம் அர்த்தங்களின் பாரம் மொத்தத்தையும் கவிதையில் இருந்து இறக்கி வைக்கிறார். இதன் விளையாட்டு தொனி, அதிர்ச்சியூட்டும் அடாவடியான பாணி அவருக்கே உரித்தானது. ஒரு பெரிய கேள்வியை கேட்கும் பாவனையில் ஆரம்பித்துஅட சும்மனாச்சும் சொன்னேங்கஎன கலாய்த்து முடிக்கிறார். அவரது நிலைப்பாடு என்னவென உறுதியாய் சொல்வது மிக மிக சிரமம் என்கிறார்கள் அவரது விமர்சகர்கள்.
இக்கவிதை என்ன தான் சொல்ல வருகிறது எனக் கேட்காமல் எப்படி எதையும் சொல்லாமல், அர்த்தங்களில் இருந்து தப்பிக்கிறது என்பதே அதன் சிறப்பு. மற்றொரு லத்தீன் அமெரிக்க மேதையான நெருடாவின் கவிதைகளிலும் இந்த சுயமுரண் பாணியை, சூனியத்தைக் காணலாம். பார்ரா இதை அர்த்தங்களின் தளத்தில் செய்ய நெருடாவோ உணர்ச்சிகளின் தளத்தில் நிகழ்த்தினார்.

நிகனோர் பார்ரா ஜனவரி 23, 2018இல் தன் 103வது வயதில் காலமானார். அவருக்கு அஞ்சலி!

நன்றி: உயிர்மை, பிப்ரவரி, 2018

Comments