நான்கு வர்ணங்கள் எனும் விசித்திரம் (1)

Image result for தேவர் மகன்
எனக்கு ரெண்டு நெருக்கமான நண்பர்கள் உண்டு. எல்லா விசயங்களிலும் ஒரே வகையான சுவை, நம்பிக்கை, ஆர்வம். ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் முழுக்க வேறுபடுவார்கள். ஒருவர்சாதியெல்லாம் இந்த காலத்தில் எங்க பார்க்கிறாங்க?” என்றால் இன்னொருவர் இந்தியர்களின் அடிப்பனையான உளவியலே சாதியில் தான் இருக்கிறது என்பார். சாதி என்பது பிறப்படிப்படையில் உருவானாலும் நாம் அதை தொடர்ந்து கடந்து சென்றபடி இருக்கிறோம், ஆனால் அரசியல்வாதிகளும் குறுகின நோக்கம் கொண்ட சிந்தனையாளர்களும் சாதிப் பிரிவினையை நமக்கு நினைவூட்டியபடி இருக்கிறார்கள் என்பார் ஒருவர். இன்னொருவரோ படிப்பு, வேலை, காதல், திருமணம், ரசனை, நட்பு, அன்பு என ஒவ்வொன்றிலும் நம் பார்வையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய நிறமியாக, நமது நிலைப்பாட்டை முடிவு செய்யும் ஒரு காரணியாக சாதி செயல்படுகிறது என்பார்.

எனக்கு நன்கு தெரிந்த ஒரு முற்போக்கு எழுத்தாளர் அவர். பெண்ணியவாதி. சமூகப் போராளி. ஊடகங்களில் முன்னிலைப்படும் ஒரு ஆளுமை. புனைப்பெயரில் எழுதுபவர். அவரிடம்உங்க உண்மையான பெயர் என்னங்க?” எனக் கேட்டேன். “சொல்ல மாட்டேன்என்றார்.
 ”சரி உங்க ஊர்ப் பெயர் என்ன?”
 “ம்ஹும்
ஏன் சொல்ல மாட்டீங்க?”
அவர் முடியாதென தலையாட்டினார். நான் அவர் முகத்தை உற்றுப் பார்த்தேன். இந்த முக அமைப்புக் கொண்டவர் எந்த ஊரை சேர்ந்தவராக இருப்பார்?
அவர் சட்டென சொன்னார், “நான் இத்தனைக் காலமாய் என் சொந்தப் பெயரை யாரிடமும் எங்கும் வெளிப்படுத்தினதில்லை. ஏன் தெரியுமா?”
தெரியலையே
சொன்னா உடனே என் சாதியை கண்டுபிடிச்சிருவாங்க
ஆனாலும் சற்று நேர மௌனத்திற்குப் பிறகு அவர் தன் பெயரை சொன்னார். உடனே நான் அவர் சொந்த ஊரை ஊகித்து அது தானே எனக் கேட்டேன். அதற்கு அடுத்த நொடியே அவர் இத்தனைக் காலமும் தன் பெயரை மறைத்தது நியாயம் தான் எனப் பட்டது. எனக்குள் குற்றவுணர்வு ஏற்பட்டது. தொடர்ந்து, அவரைப் போன்ற ஒரு முற்போக்கான சிந்தனையாளருக்கே இந்த அவல நிலையா எனத் தோன்றியது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பிரசித்தமான பேட்டி ஒன்றை யூடியூப் இணையதளத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். சிமி கரேவால் எடுத்த பேட்டி அது. அதில் ஜெ தான் ஒரு பெண்ணாக, தனிமனிஷியாக வாழ்வில் போராடி வெற்றி கண்டது பற்றி உணர்வெழுச்சியாக பேசிக் கொண்டு போகிறார். எங்குமே சாதிய ரீதியாக தன்னை முன்னெறுத்தவில்லை. தன் சாதியின் பிரதிநிதியாக தன்னை காட்டவில்லை. ஆனால் பேட்டியின் துவக்கத்தில் தான் தமிழ் ஐயங்கார் சாதியில் பிறந்தவர் என்பதை தெளிவாய் சொல்லி விடுகிறார். அத்தகவலுக்கான அவசியமே இல்லை எனிலும் சொல்லி விடுகிறார். ஏன்?
இந்த முரண் என்னை வெகுவாய் யோசிக்க வைத்தது. சாதியைக் கடந்து சாதித்த இருவர் - ஒருவர் தன் சாதியை தொடர்ந்து மறைக்க போராடுகிறார். இன்னொருவர் போகிற போக்கில் ஆனால் வெளிப்படையாய் அதை தெரிவித்து விட்டுத் தான் தன்னைப் பற்றி பேசவே செய்கிறார். இந்தியர்களாகிய நாம் சாதியை நிச்சயம் கடந்து செல்கிறோம் - ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அதைக் குறிப்பிட்டே ஆக வேண்டிய ஒரு அவலத்தில் மாட்டிக் கொள்கிறோம். நேர்மறையாகவோ (ஜெ) எதிர்மறையாகவோ (முற்போக்காள நண்பர்) சாதியைக் கடந்து சாதிக்கும் ஒருவருக்கும் சாதியில் இருந்து தான் தம் தரப்பைப் பேசத் துவங்க வேண்டி இருக்கிறது. இதை ஒவ்வொரு நவீன இந்தியனுக்கும் அவசியமான ஒரு உந்துதல் எனலாம்: சாதியில் கால் ஊன்றி எம்பித் தாவி சாதியைக் கடந்து பறந்தெழத் தேவை உள்ளது ஒவ்வொருவருக்கும்.
வாழ்க்கை அனுபவம் பற்றி இதுவரை பேசினோம்.
இனி இதை கருத்தியல் அளவில் பார்ப்போம். சாதியின் பிரிவினைவாதப் போக்கைப் பற்றி பேசும் காந்தி நால்வர்ணங்கள் எனும் ஒரு தூய உளவியல் மற்றும் சமூக அமைப்பு நிலையின் திரிந்த நிலை தான் சாதி என்கிறார். அம்பேத்கரோ நமது சாதி அமைப்பின் அத்தனை துர்குணங்களுக்கும் வர்ணங்கள் தாம் அடிப்படை என்கிறார். (இதைப் பற்றி சற்று விரிவாக பின்னர் பேசுகிறேன்.)
 ஆனால் வர்ணம் என்பது சாதியில் ஒரே சமயம் இருந்தபடி அதைக் கடந்து சென்று செயல்படுவதை கற்பனை செய்ய சாத்தியப்படுத்தும் ஒரு உபயமாகவும் இருக்கிறது. அதாவது, சாதியில் இருக்கவும் அதே சமயம் அதை மீறிச் செல்வதற்குமான ஒரு தேவை அனைத்து இந்தியர்களுக்கும் உள்ளது. அதற்கான ஒரு ஆழ்மன உந்துதல் நமக்குள் உள்ளது. வர்ணம் எனும் கருத்தியல் கட்டமைப்பு இந்த சாத்தியத்தை கற்பனை செய்ய நமக்கு உதவுகிறது எனலாம். களிமண்ணில் நீர் சேர்த்து குழைவாக்குவது போல் சாதி எனும் இறுக்கமான சமூக நிலையை நெகிழ்வாக்க வர்ணம் பயன்படுகிறது. இது உண்மை எனில் இதற்கான சான்றுகளை எங்கே தேடுவது?
நமது சமூக உளவியல் போக்குகளை ஆய்ந்து அறிய வணிக சினிமா ஒரு நல்ல நுண்பெருக்கியாக உள்ளது. சாதியை இறுக்கமற்ற ஒரு நெகிழ்வான கட்டமைப்பாக அணுகுவதற்கு நமது சினிமா முயன்றுள்ளதா? ஆம் எனில், எப்படி? நாம் பல்வேறு சாதிய அடைப்புகளுக்குள் மாட்டி இருந்தாலும் அதை மீறி எழுந்து வெவ்வேறு சமூக கலாச்சார நிலைகளில் நம்மை வைத்து கற்பனை செய்து பார்க்கும் ஒரு ஆவலை நமது சினிமாக்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. அதாவது ஒருவர் மத்திய சாதியை சேர்ந்தவர் என்றாலும் தன்னை தலித்தாகவோ (”ஒரே ஒரு கிராமத்திலே”) பிராமணராகவோ (ஷங்கர் மற்றும் கமலின் பல படங்கள்) கற்பித்துப் பார்க்கும் விருப்பமும் தேவையும் ஒருவருக்கு ஏற்படுகிறது. இதை சாதி அனுமதிக்காது. ஆனால் வர்ணம் எனும் கருத்தியல் அனுமதிக்கிறது. சாதி இதை நடைமுறையில் அனுமதிப்பதில்லை. ஆனால் சமூகக் கலாச்சார அளவில் வர்ணம் இதை நமக்கு அனுமதிக்கிறது. இது தான் இங்கு சுவாரஸ்யமான விசயம்.

இதைப் பற்றி சிந்திக்கையில் இருவகையான படங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
ஒன்று, நடிகர்கள் தம்மை வெவ்வேறு சாதியின் பிரதிநிதிகளாய் கற்பிதம் செய்ய பயன்பட்ட படங்கள். இரண்டு, கதாபாத்திரங்களே ஒரு சாதியில் இருந்து இன்னொன்றுக்கு இடம்பெயர பயன்படுத்திய படங்கள்.
முதல்வகைப் படங்கள்;
எம்.ஜி.ஆரின் திரைவாழ்வில்மதுரைவீரன்” (1956) முக்கியமான படம். அருந்ததியர் சமூகத்தினர் இடையில் எம்.ஜி.ஆர் பிரபலம் அடைய இப்படம் உதவியது என்பார்கள். இதே போல் எம்.ஜி.ஆர்மீனவர் நண்பன்” (1977) மூலம் மீனவ சமூகத்தினருக்கு நெருக்கமானவர் ஆனார். இங்கு கவனிக்க வேண்டிய விசயம் இப்படங்களின் ரசிகர்கள் எம்.ஜி.ஆரின் சாதியை என்னவாகக் கண்டார்கள் என்பது. எம்.ஜி.ஆர் தமிழர் அல்ல, மலையாளி; அவர் கேரளாவின் மேனன் எனும் மேல் சாதியை சேர்ந்தவர் என தமிழர்களுக்குத் தெரியும். ஆனாலும், அவர் தன் சினிமா பிம்பங்கள் மூலமும், அரசியல் கொள்கைகள், செயல்பாடுகள் மூலமும் மக்கள் மனதில் ஒரு தமிழராகவும் இருந்தார். அதே போல, அருந்ததியராகவும், மீனவராகவும், வெவ்வேறு மத்திய சாதிகளை சேர்ந்தவராகவும் ஒரே சமயம் பார்க்கப்படுகிறார்.
தேவர் சமூகத்தை சேர்ந்த என் நண்பர் ஒருவர் மதுரைப் பகுதியில் பலரும் கமலஹாசனை தேவர் சமூகத்து ஆளாகவே கருதுவதாய் சொன்னார். எனக்கு இதைக் கேட்க விசித்திரமாய் இருந்தது. கமல் உண்மையில் முத்துராமலிங்கத் தேவரின் மகன் என்று கூட பலர் நம்புவதாய் நண்பர் என்னிடம் கூறினார். இது சார்ந்த தொனமங்கள் மதுரைப் பக்கம் உலவுகின்றன என்றார். இந்த நம்பிக்கைக்குதேவர் மகன்சினிமாவின் மிகப்பெரிய வெற்றி ஒரு முக்கிய காரணம் தான். இப்படத்தைத் தொடர்ந்து கமல் இதே பாணியில்விருமாண்டிஇயக்கினார். அது மட்டுமல்ல, ஒரு மசாலா நாயகனாய் உருப்பெற துவங்கிய காலத்தில் இருந்தே கமல்தேவர் மகன்சாயலிலானஆண்மை மிக்கபல பாத்திரங்களில் நடித்து வந்திருக்கிறார். இப்பாத்திரங்களின் தொடர்ச்சி தான்தேவர் மகனின்சக்தி. “ஹே ராம்படத்தில் சாக்கேத் ராம் ஒரு பிராமண பாத்திரத்தை ஏற்ற போதும் அப்பாத்திரத்தின் குணாதசியம் விருமாண்டித் தேவரைப் போன்றே இருந்தது. கமலின் பிராமண சாதி அடையாளம் அனைவரும் அறிந்தது என்றாலும் அவரது மைய ஆளுமை குணாதசியம் பிராமணத் தன்மை கொண்டதாய் நிறுவப்படவில்லை. இன்னொரு பக்கம், தேவர் சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் சிவாஜி கணேசன் தொடர்ந்து ஒரு பிராமண சுபாவத்தன்மையை தன் பாத்திர அமைப்புகளில் தக்க வைத்தார்.
தேவர் சாதி குலப்பெருமையை கொண்டாடும் மதுரைக்கார படங்கள் தமிழில் பெரும் அலையாக பொங்கி அடித்த ஒரு காலகட்டத்தில் சசிகுமார் தேவர் ஹீரோ பாத்திரங்களை ஏற்று பல வெற்றிப் படங்களை அளித்தார். கமலைப் போன்றே சசிகுமாரும் அச்சாதியை சேர்ந்தவர் அல்ல.
எந்த வித முற்போக்கு அரசியல் கருத்தியலையும் கொண்டிராதவர் ரஜினி. அவர் ரஞ்சித்தின் இயக்கத்தில் ஒரு தலித் நாயகனாய்நெருப்புடாஎன பொறிபறக்க நடித்த போதும் ரசிகர்கள் ஆரவாரமாய் அதை ஏற்றுக் கொண்டார்கள். எம்.ஜி.ஆரின்மதுரைவீரன்அவதாரத்தின் ஒரு நீட்சியாகவேகபாலியையும்”, அடுத்து இதே ஜோடிப் பொருத்தத்தில் வரப் போகும்காலாவையும் பார்க்க வேண்டும்.

(தொடரும்)

Comments