நீ என்னை மறப்பாய் எனில் - பாப்லோ நெருடா

 Image result for neruda
நீ அறிந்திருக்க வேண்டும்
ஒன்றை.

உனக்குத் தான் தெரியுமே:
படிக நிலவை நான் பார்த்தேன் எனில்,
என் ஜன்னல் வழி, சன்னமாய் நகரும் இலையுதிர் காலத்தின்
சிவப்புக் கிளையை நான் பார்த்தேன் எனில்
தீயின் அருகாமையில் தொடவே முடியாத
அந்த சாம்பலை தீண்டினேன் எனில்
அல்லது மரக்கட்டையின் நெளிசருமத்தை தொட்டேன் எனில்,
எல்லாமே என்னை அள்ளிச் சென்று சேர்க்கும் உன்னிடம்,
ஏதோ இங்குள்ள ஒவ்வொன்றுமே,
வாசனைகள், ஒளி, உலோகங்கள்,
எனக்காய் காத்திருக்கும் உனது சிறிய தீவுகளுக்கு
செல்லும் சின்னஞ்சிறு படகுகள் என்பது போல்.


ஆனால் இப்போது
கொஞ்ச கொஞ்சமாய் நீ என்னை காதலிப்பதை நிறுத்துவாய் எனில்
நானும் நிறுத்துவேன் உன்னை காதலிப்பதை கொஞ்ச கொஞ்சமாய்.

திடீரென
 நீ என்னை மறந்தாய் எனில்
என்னைத் தேடாதே,
ஏனெனில் நான் உன்னை ஏற்கனவே மறந்து போயிருப்பேன்.

நீ இதைப் பற்றி சாவகாசமாய் யோசித்தாய் எனில்
என் வாழ்வின் ஊடாய் கடந்து போகும் புயலின் போர்ப் பதாகைகளை கருத்திற் கொண்டாய் எனில்
அதோடு நீ என்னை என் வேர்கள் ஓடும்
இதயத்தின் கரையில் கைவிட
முடிவெடுத்தால் எனில்,
நினைவு கொள்
அந்த நாளில்
அந்த மணிப்பொழுதில்,
நான் என் கைகளை உயர்த்துவேன்
அப்போது என் வேர்கள் நீந்தித் தேடிச் செல்லும்
ஒரு புது நிலத்தை.

ஆனால்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிநேரமும்,
நீ எனக்கே ஆனவள்
என நீங்காத இனிமையுடன் உணர்ந்தாய் எனில்,
ஒவ்வொரு நாளும்
ஒரு மலர் என்னைத் தேடி
உன் உதட்டை நோக்கி ஏறும் எனில்,
என் காதலே, எனக்கே எனக்கானவளே,
எனக்குள் அந்த நெருப்பு மீண்டும் கிளர்ந்தெழும்,
எனக்குள் எதுவுமோ அணையவில்லை அல்லது மறக்கப்படவில்லை,
என் பிரியம் உன் நேசத்தில் முலைகுடிக்கிறதடி, அன்பே,
நீ வாழும் வரை அது உன் கரங்களில் தவழும்
என்னை தனித்து விடாமல்.

(தமிழில் ஆர். அபிலாஷ்)
                    

Comments