நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன் - பாப்லோ நெருடா

Image result for pablo neruda

நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன்: நீ இல்லவே இல்லை என்பது போல,
அதோடு வெகு தொலைவில் இருந்து நீ என்னை கேட்கிறாய்
அப்போது உன்னைத் தொடுவதில்லை என் குரல்.
ஏதோ உன் கண்கள் பறந்து போனது போல்
ஒரு முத்தம் உன் உதடுகளை உறைய வைத்தது போல்.


எல்லா பொருட்களுமே என் ஆன்மாவால் நிரம்பியவை என்பதால்
நீ அப்பொருட்களில் இருந்து கிளர்ந்து எழுகிறாய், என் ஆன்மாவால் தளும்பி.
நீ என் ஆன்மாவைப் போன்றவள், நீ ஒரு கனவின் பட்டாம்பூச்சி போன்றவள்,
அதோடு நீ துக்கம் எனும் சொல்லைப் போன்றவள்.
  
நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன், அதோடு நீ வெகுதொலைவில் இருக்கிறாய்.
நீ அரற்றுவது போல் கேட்கிறது, புறாவைப் போல் முனகும் ஒரு பட்டாம்பூச்சியே.
அதோடு வெகுதொலைவில் இருந்தும் உனக்கு என்னைக் கேட்கிறது, இருந்தும் என் குரலோ உன்னை அடையவில்லை.
உன் மௌனத்தில் சலனமற்றிருக்க என்னை அனுமதித்திடு.

என் வார்த்தையின்மையால் உனது மௌனத்துடன் பேச அனுமதித்திடு
உன் மௌனம் அகல் ஒளியை போன்று பிரகாசமானது, ஒரு மோதிரத்தைப் போன்று எளிமையானது.
நிச்சலமாய் நட்சத்திர கூட்டம் சூழ நிற்கும் இரவைப் போன்றவள் நீ.
ஒரு நட்சத்திரத்தின் ஓசையின்மை உனது, தொலைவாய் ஒளிவுமறைவற்று.

நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன்: நீ இல்லவே இல்லை என்பது போல,
தொலைவாய், துயரத்தில் தளும்பி, நீ மரணத்தை தழுவி விட்டது போல.
பிறகு, ஒரு சொல், ஒரு புன்னகை, அது போதும்
நான் மகிழ்வேன், அது உண்மையல்ல என மகிழ்வேன்.


(தமிழில் ஆர். அபிலாஷ்)

Comments