உன் உடலெனும் வரைபட நூலில் - பாப்லோ நெருடா

Image result for pablo neruda

உன் உடலெனும் வரைபட நூலில் அடையாளமிடுகிறேன்
நெருப்பாலான பெருக்கல் குறிகளால்.
என் உதடுகள் அதன் குறுக்கே செல்லும்: பதுங்க முயலும் ஒரு சிலந்தியாய்.
உன்னில், உனக்குப் பின்னால், தயக்கமாய், தாகத்தில் தவித்து,

மாலையின் கரைப் பகுதியில் உனக்கு சொல்ல வேண்டிய கதைகள்,
என் சோகமான மிருதுவான பொம்மையே, உன் வலியை இதமாக்கும் கதைகள்.
ஒரு அன்னம், ஒரு மரம், தொலைவில் மகிழ்ச்சியாய் ஏதோ ஒன்று.
திராட்சைகள் கனிந்த பருவம், கனிவான விளைச்சல் மிக்க பருவம்.


உன்னை காதலித்தேன் ஒரு துறைமுகத்தில் வாழ்ந்த நான்.
கனவும் பின்னர் மௌனமும் ஊடாடிக் கலைக்கும் என் தனிமை.
கடலுக்கும் துயரத்துக்கும் இடையில் தேக்கி வைக்கப்பட்டு.
அரவமற்று, மனம் தடுமாறி, இரு சலனமற்ற வேனிஸ் நகர படகுகளின் நடுவே.

உதடுகளுக்கும் குரலுக்கும் இடையில் எதுவோ மாய்ந்து போகிறது.
பறவையின் இறகுகள் கொண்ட எதோ ஒன்று, தவிப்பினாலும் தன்மறதியினாலும் ஆன ஏதோ ஒன்று.
வலைக்குள் நீர் நிற்காதது போல.
என் விளையாட்டு பொம்மையே, ஒரு சில துளிகளே மிச்சமாய் நடுங்கி நிற்கின்றன.
இருந்தும், இந்த தலைமறைவான சொற்களில் ஏதோ ஒன்று பாடுகிறது.
ஏதோ ஒன்று பாடுகிறது, பசியால் தவிக்கும் எனது வாய்க்குள் எதோ ஒன்று நுழைந்து ஏறுகிறது.
ஓ ஆனந்தத்தின் அத்தனைச் சொற்களாலும் உன்னை ஆராதிக்க முடிந்தால்.
மனம் பிறந்தவனிடம் கையில் அகப்பட்ட தேவாலய மணிக்கூண்டு போல்,
பாடவும், எரியவும், தப்பித்து ஓடவும் முடிந்தால்.
என் துயரமான மென்மையே, சட்டென என்ன ஆட்கொள்கிறது உன்னை?
மிக அற்புதமான, ஆக குளிரான ஒரு மலைச்சிகரத்தை நான் அடையும் போது
என் இதயம் ஒரு இரவு மலரைப் போல மூடிக் கொள்ளுமடி!


(தமிழில் ஆர். அபிலாஷ்)

Comments