ஞாநியின் மறைவு: வீரியமும் நெகிழ்வின்மையும்


 
நமது தோள் பற்றி நின்று அனைத்தைப் பற்றியும் அக்கறையுடனும் நம்பிக்கையுடனும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் நம் தோளை அணைக்கையில் அவருக்குப் பின் இன்னும் ஆயிரம் கைகள் இதே போல் அரவணைத்து நிற்கும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. சட்டென அந்நண்பரின் கை விலகும் போது நாம் எடையற்று, இலக்கற்று, இடமற்று போய் விட்ட அச்சமும் பதற்றமும் ஏற்படுகிறது. ஞாநியின் இழப்பு அப்படியான ஒன்று.

ஞாநியுடன் உடனடியாய் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றும் மற்றொரு ஆளுமை சுந்தர ராமசாமி. இருவரின் நுண்ணுணர்வு, நம்பிக்கைகள், செயல்பாட்டுப் புலம் ஆகியவை மாறுபட்டவை. ஆனால் லட்சியவாதம், ஓயாத செயல்பாடு, இளைஞர்களிடம் பழங்கும் பாங்கு, தன்னை ஒரு போக்கின் மையமாக உருவாக்கிக் கொள்ளும் சக்தி இருவருக்கும் பொதுவானவை.
 இன்னொரு வித்தியாசம் இருவருக்கும் உண்டு. நீங்கள் சு.ராவிடம் மாறுபட்டுப் பேசினால் அவர் மௌனமாகி விடுவார். அல்லது வெகு நுணுக்கமாய் தன் எதிர்தரப்பை உணர்த்துவார். ஆனால் அத்தருணங்களில் ஞாநியின் பதில்களோ தெரியாமல் பச்சமிளகாயை கடித்து விட்டாற் போல் உணர வைக்கும். அதனாலே அவரது வாசகர்கள், நண்பர்கள் பலர் அவருடன் ஏதோ ஒரு கட்டத்தில் முரண்பட்டவர்களாக இருப்பர். ஆனால் முரண்பாட்டை லகுவாய் எடுத்துக் கொண்டு அன்பாய் தொடர்ந்து பழகும் கனிவு ஞாநிக்கும் சு.ராவுக்கும் பொதுவானது.
ஒரு ஆளுமையாக ஞாநியின் இன்னொரு சிறப்பு எப்போதும் தேங்கி விடாமல் இருந்தது. சமகாலத்தில் தொடர்ந்து இருந்தது. மிக சமீபமாய் அவர் வெளியிட்ட யுடியூப் காணொளியை காணும் போது இன்றைய அரசியல் நடப்புகள் குறித்து எப்படி எந்த மயக்கமும் அற்று தெளிவான பார்வை கொண்டிருக்கிறார் என வியப்பு ஏற்படுகிறது. நான் ஒரு அனுபவஸ்தன், நான் சொல்வதைக் கேள் எனும் பெரியமனிதத் தனம் ஒன்றுமில்லை. சகஜமாய் திண்ணையில் இருந்து அரட்டை அடிக்கும் சற்றே புத்திசாலித்தனமான எளிய ஆளின் அணுகுமுறை அவருடையது. அதனாலே மரணத்துக்கு சற்று முன்னும் இளைஞர்கள் அவரை நோக்கிக் கவரப்பட்டார்கள். அவரது கேணி கூட்டத்துக்கு இரு முறை சென்றிருக்கிறேன். அங்கு 50% மேல் 18-20 வயது பையன்கள் அதிகம் வருவார்கள். புதியவர்களை தொடர்ந்து வாசித்து ஊக்குவிக்கும் அக்கறையும் அவருக்கு அதிகம்.
எழுத்துலகில் ஞாநியின் இடம் ஒரு பத்தியாளராக வெகு சிறப்பானது. நான் அவரது பத்திகள் பலவற்றை மீளமீள வாசித்து வியந்திருக்கிறேன். சிக்கலான ஆச்சரியமூட்டும் விவாதங்களோ பார்வையோ அவரிடம் இராது. ஆனால் தனக்கேயான ஒரு புது கோணத்தை நிச்சயம் கொண்டிருப்பார். ஒரு பத்தியை பொட்டில் அடித்தற் போல் ஆரம்பித்து சுருக்கமாய் தெளிவாய், கொஞ்சம் காரமாய், பகடியாய் அவர எடுத்துச் சென்று முடிக்கும் பாங்கு அற்புதமானது. எந்த இளம் பத்தியாளனும் ஞாநியை நிச்சயம் படிக்க வேண்டும்.
ஞாநியிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான அம்சம் இது – எதையும் சொல்வது முக்கியமல்ல, தட்டுத்தடுமாறி தயங்கி கூறாமல் பளாரென கன்னத்தில் அறைவது போல் சொல்ல வேண்டும். இது வாசகனிடம் ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது. தொனி மிக மிக முக்கியம். நீங்கள் சொல்வதை நீங்களே தன்னம்பிக்கையுடன் வேகத்துடன் கோபத்துடன் சொல்லாவிடில் வாசகன் அதை சாலையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை போல் எம்பித் தாண்டி போய் விடுவான். சாக்கடை உடைந்து சாலையை மறித்து அவனை ஒரு நொடி பதறி தயங்கி “என்னடா இது?” என யோசிக்க வைக்க வேண்டும். அதுவே சிறந்த எழுத்தின் தன்மை. இதை நமக்கு ஞாநி கற்றுத் தந்தார்.
எதையும் “ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்…” என சாட்டையாய் விளாசி சொல்பவர்களுக்கு தமிழர் மனதில் என்றும் தனி இடம் உண்டு. தமக்கு ஒவ்வாத கருத்தைக் கொண்டு அஞ்சாமல் நாணயமாய் சொல்பவனை நம் வாசகன் பெரிதும் ரசிப்பான். ஞாநிக்கு ஏற்பட்ட பெரிய வாசகப் பரப்பின் ஒரு ரகசியம் இது.
இனி ஞாநியின் ஒரே பலவீனத்துக்கு வருகிறேன்: அவரது நெகிழ்வின்மை.
 என்னை ஒருமுறை கேணி கூட்டத்தில் பேச அழைத்தார். என்னிடம் தனக்கு அணுக்கமான விசயங்களையும் உடன்பாடில்லாத அம்சங்களையும் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினார். அன்று நான் ஞாநியிடம் உள்ள ஒரு முக்கியமான குறையை கவனித்தேன். இன்று நாம் அவரிடம் ஒரு சிறப்பாக காணும் போராட்ட குணம், அச்சமற்ற கருத்தாடல்கள், துணிச்சலான சமூக செயல்பாடு ஆகியவை அவரது முரட்டு சுபாவத்தில் இருந்து வருகின்றன. இந்த முரட்டு சுபாவம் அவரது நெகிழ்ச்சியின்மையில் இருந்து, உண்மை முன் தன்னை நிர்வாணமாய் முன்வைக்கும் துணிச்சலின்மையில் இருந்து வருகிறது. அதாவது அறிவுத் தேடலைப் பொறுத்தமட்டில் ஞாநியின் துணிச்சல் துணிச்சலின்மையில் இருந்து வருகிறது.
சமூக அரசியல் மதிப்பீடுகளில் ஒருவர் நெகிழ்வற்று இருப்பது சிறப்பு என நம்பப்படுகிறது. அதாவது கொள்கையில் உறுதியாக இருப்பது. ஆனால் கொள்கையில் உருக்கு போல் உறுதியாக இருப்பது காந்தாரி கண்ணைக் கட்டிக் கொண்டு கணவனைப் பழிவாங்கியது போலத் தான். அதில் இறுதியில் யாருக்கும் பலன் இல்லை. எல்லாருடைய நம்பிக்கைகளும் எப்போது வேண்டுமெனிலும் தகர்ந்து நொறுங்கும் அளவு பலவீனமானவையே. வாழ்க்கை அப்படித் தான் தொடர்ந்து நம்முடன் கண்ணாமூச்சி ஆடுகிறது. நமது நம்பிக்கைகளை, உறுதியான நிலைப்பாடுகளின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கிறது. துணிச்சல் மிக்கவர்கள் இதை எதிர்கொண்டு கொள்கைகளை மறுபரீசீலனை பண்ண தயாராக இருப்பார்கள். அதற்கு அடிப்படைத் தேவை எதையும் தேவையற்ற உறுதியுடன் பற்றிக் கொள்ளாமல் இருப்பது. தம் அறிவின் புரிதலின் போதாமையை தொடர்ந்து ஏற்றுக் கொண்டு முன்னேறுவது.
 காந்தி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் தொடர்ந்து தான் கண்டடைந்த உண்மைகள் மீது நம்பிக்கை கொண்டிருந்த அளவுக்கு அவநம்பிக்கையும் கொண்டிருந்தார். தன்னையும் தன் கொள்கைகளையும் பரிசோதித்துக் கொண்டே இருந்தார். அதனாலே அவர் லகுவானவராய் மிக நெகிழ்வானவராய் இருந்தார். காந்தியுடன் நீங்கள் ஒரு விசயம் பற்றி கடுமையாய் வாதம் புரியலாம். அவரும் உறுதியாய் தன் கருத்துக்களைக் கூறி பிடிவாதமாய் தெரிவார். ஆனால் அடுத்த வருடமே அவர் உங்கள் நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்து விடுவார். இது பலவீனம் அல்ல. வாழ்க்கையை, உண்மையை மிக நெருக்கமாய் கண்டறியக் கூடியவர்கள் தமது நம்பிக்கைகளை விடுத்து மேலும் சிறப்பான நம்பிக்கைகளை அடைய என்றும் தயாராக இருப்பார்கள். ஞாநியும் உங்களுடன் மாற்றுக்கருத்துக்களை விவாதிக்கும் போது உங்கள் தரப்பை அனுமதிக்கும் அளவுக்கு தாராள மனத்துடன் இருப்பார். ஆனால் அவருக்கும் காந்திக்குமான வித்தியாசம் ஞாநி துளி கூட என்றும் மாற மாட்டார் என்பது.
 இந்த உலகில் மாறாத எதுவுமே செயற்கையானது. உண்மைக்கு விரோதமானது. இதை ஞாநி உணர்ந்து கொண்டார். ஆனால் ஏற்றுக் கொள்ள தயாராகவில்லை. ஆகையால் தன் நம்பிக்கைகளை இன்னும் ஆவேசமாய் அணைத்துக் கொண்டார்.
ஒரு விவாதத்தை ஞாநி கருத்துப் பகிர்தல் எனக் கூறுவார். இரு முரண்பட்ட கருத்துக்கள் மோதி புதுக் கருத்து உருவாவதே சரியான விவாதம் என அவர் ஏற்க மாட்டார். உன்னுடன் நான் பேசி உன் கருத்தை மற்றி அமைப்பதே விவாதம் என்றார் அவர். அது விவாதம் அல்ல பிரச்சாரம். விவாதம் என்பது உன்னுடன் நான் பேசி, அதன் விளைவாய் நாம் இருவரும் நம் குறைகளை அறிந்து ஒரு புது உண்மை நிலையை போய் அடைவது. ஞாநி இதை ஏற்கவில்லை. விளைவாய் தனியாக நின்று கத்தி சுற்றிக் கொண்டே இருந்தார்.
 ஞாநில் தனது நம்பிக்கையை தனது விவாதம் துவங்கும் முன்பே உருவாக்கி இருப்பார். விவாதத்தின் போது அதை மிக வலுவாக வைப்பார். எதிர்தரப்பின் வாதத்தில் நியாயம் இருப்பதாய் தோன்றினால் உடனே தன் காது கண்களை மூடிக் கொள்வார். தான் மாறி விடக் கூடாதே எனும் அச்சம் அவருக்குள் வெகுவாக இருந்ததாய் கணிக்கிறேன்.
ஞாநி நம்முடன் நிறைய பேச ஆசைப்பட்டார். நம்மையும் பேச விட்டார். ஆனால் நாம் பேசுவது தன் மனதுக்குள் சென்று தாக்கம் செலுத்தக் கூடாதே என மிகவும் பிரயத்தனப்பட்டார். “ஐயோ என் நம்பிக்கைகள் தளர்ந்து விடக் கூடாதே” என பிரார்த்தித்தார். அவரது பார்வை சிலநேரம் மேம்போக்காய் தட்டையாய் தெரிவது அவரது நுண்ணுணர்வு இன்மையாலோ அறிவுக்குறைபாட்டாலோ அல்ல. தன் மனம் அதன் போக்குக்கு தழைத்து வளர அவர் அனுமதிக்காததனால் தான். தன் மனத்தை தான் ஏற்கனவே முடிவு செய்த கருத்தியலுக்குத் தோதாய் அவர் ஒரு பொன்சாய் மரம் போல் மாற்றிக் கொண்டததனால் தான்.
கேணி கூட்டத்தில் நான் பேசும் போது “தன்னை ஒருவன் எழுத்தாளனாய் கருதுவது ஒரு கற்பிதம் மட்டுமே. நாம் எதேச்சையாய் எழுத்தாளனாய் இருக்கத் தலைப்படுகிறோம். அதற்கு கிடைக்கும் பெயரோ பழியோ நமக்கானது அல்ல. நாம் உண்மையில் இதற்கு வெளியில் இருக்கிறோம்” என்றேன். ஞாநி அடுத்து இதற்கு எதிர்வினையாற்றினார். அபிலாஷ் வேதாந்தம் பேசுகிறார் என கடுமையாய் கோபித்தார். எனக்கு அவரது எதிர்வினையில் எந்த பிரச்சனையும் இல்லை. நான் வேதாந்தியும் அல்ல. ஆனால் வேதாந்தத்தை ஏன் ஒருவர் மட்டமான விசயமாய் பார்க்க வேண்டும்? ஞாநியின் முற்போக்குவாதம் தனக்கு எதிரான அனைத்தையும் மறுக்கக் கூடியது. அப்படி மறுப்பது அறிவுக்கும் பண்பாட்டுக்கும் எதிரானது. நான் தனிப்பட்ட முறையில் நான் நம்பாத ஏற்காத விசயங்களைக் கூட அறியவும் அவற்றுடன் உரையாடி என்னை விரிவுபடுத்தவும் விரும்புவேன். ஒரு அறிவுஜீவி, எழுத்தாளன் விட்டு விடுதலையாகி இருக்க வேண்டும். அவனுக்கு கருத்துக்களில் பிடிப்பு இருக்கலாம். ஆனால் கருத்துக்களால் அவன் தன்னை பிணைத்துக் கொள்ளக் கூடாது. ஞாநிக்கு ஒரு பலவீனம் இருந்ததென்றால் அது இது மட்டுமே!
அவர் ஒரு கனத்த சங்கிலியால் தன் கை கால்களை பிணைத்துக் கொண்ட பின்னரே நடைபழகுவார். இதனால் அவரால் வெகுதூரம் போக முடியவில்லை.
போய் வாருங்கள் ஞாநி. உங்களால் கூடுதல் ஒளி பெற்ற ஒரு மனத்தின் அன்பும் பிரார்த்தனையும். அடுத்தமுறை விட்டுவிடுதலையான ஒரு பட்சியாக எங்களிடம் வாருங்கள்!

Comments