இயக்குநர் ஸ்ரீகணேஷின் ஆளுமை

 Image result for director sri ganesh

இயக்குநர் ஸ்ரீகணேஷுடன் சில நாட்கள் பழக சமீபத்தில் ஒரு வாய்ப்பு அமைந்தது. அவர் எங்களது கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறையின் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரது ஆரவாரமற்ற சுபாவம், எளிமை, பிரியமான அணுகுமுறை மாணவர்களை பெரிதும் கவர்ந்தது. மாதம் லட்சக்கணக்கில் பணத்தை கொண்டாட்டத்துக்காக இறைக்கும் மாணவர்கள் ஒரு முக்கியமான இயக்குநர் ஸ்லிப்பர் செருப்பணிந்து மேடையேறி தன்னடக்கத்துடன் பேசியதைக் கண்டு நெகிழந்து விட்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் மாணவர்கள் தொடர்ந்து வந்து ஸ்ரீகணேஷின் இந்த பணிவை பாராட்டிக் கொண்டே இருந்தனர். இந்தியர்களின் ஆழ்மனத்தில் எப்படி எளிமையானவர்கள்  மீது ஒரு தனி மதிப்பு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, பெரும் செல்வந்தர்கள் கூட பணத்தை, புகழை, செல்வாக்கை கைவிடுகிறவர்களைக் கண்டால் எப்படி நெகிழ்ந்து காலில் பணிகிறார்கள் எனும் விஷயம் எனக்கு என்றுமே ஆச்சரியமளிக்கும் ஒன்று. இதை நான் அன்று நேரடியாகவே காணுற்றேன்.

ஸ்ரீகணேஷுடன் தனிப்பட்ட முறையில் உரையாடுகையில் இந்த தன்னடக்கம் அவராக உருவாக்கிக் கொண்டதல்ல; அவருக்கு மிக மிக இயல்பான ஒரு பண்பு இது என அறிந்தேன். ஸ்ரீகணேஷ் இளவயதில் தந்தையை இழந்தவர். தாயால் வளர்த்தெடுக்கப் பட்டவர். ஆக, இந்த எளிமைப் பண்பை அவர் தன் தாயிடம் இருந்து பெற்றிருக்கவே வாய்ப்பதிகம் எனத் தோன்றுகிறது.
 எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருப்பதையும் கண்டேன். நாங்கள் இருவரும் சகமனிதர்களிடம் பிரியம் காட்டும் அதேவேளை சற்றே விலகி நின்று மனிதர்களை கவனித்து வாசிப்பதிலும் ஆர்வம் கொண்டவர்கள். அதே போல் நாங்கள் மனித நடத்தையின் விசித்திரங்கள் மற்றும் அபத்தங்களை கவனித்து, அவதானித்து அதன் வேடிக்கையை எண்ணி சிரிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

எங்களுக்கு தொடர்ந்து புது விசயங்களைக் கற்று திறன்களை மேம்படுத்துவதில் ரசனை கலந்த ஆர்வம் மிகுதி. “எனக்கு ஒன்றுமே தெரியாது” என கோரிக் கொண்டு மனம் பாரமற்று லகுவாக இருக்கவும் விருப்பம் அதிகம். ஸ்ரீகணேஷ் தன் வாழ்க்கை முழுக்க ஒரு சினிமா மற்றும் இலக்கிய மாணவராய் இருக்கப் போகிறார்; அப்படி இருப்பதிலே அவருக்கு கிளர்ச்சி அதிகம் எனத் தோன்றுகிறது.
சினிமாவைப் பொறுத்தமட்டில் தன் உள்ளுணர்வு மற்றும் அனுபவங்களில் தடத்தில் திக்கற்று பயணிக்காமல், நுண்ணுணர்வு, ரசனை, அறிவு ஆகியவை கொண்டு உலகை கவனித்து, புத்தகங்களில் இருந்தும், சினிமாவை நுணுகிப் படித்தும் தனக்கான சினிமா மொழியை உருவாக்குவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். அடுத்தடுத்த படங்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று மாறுபட்டிருக்க வேண்டும் என விரும்புகிறார், ஆகையால் தன் படங்களில் பரீட்சார்த்த முயற்சிகளை தொடர்ந்து செய்பவராக அவர் இருப்பார். இதெல்லாம் அவரை கவனித்ததில் நான் ஊகிக்கிற விசயங்கள் மட்டுமே.
வணிகப் படங்களும் ஒரு முக்கிய கலை வடிவம் என அவர் நம்புகிறார். இயக்குநர் முருகதாஸை எதேச்சையாய் சந்திக்க நேர்ந்ததும் அவருடன் உரையாட வாய்ப்பு கிடைத்ததையும் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். எந்த ஒரு இளம் இயக்குநருக்கும் முருகதாஸ், ஷங்கர் உள்ளிட்ட வணிக நட்சத்திரங்களிடம் இருந்து திரைக்கதை நுணுக்கங்கள் பற்றியும், காட்சி மொழி சார்ந்தும், வெகுஜன உளவியல், தமிழனின் கூட்டு மனம் பற்றியும் தெரிந்து கொள்ள ஏராளம் உண்டு. தான் ஒரு சீரியஸான ஆள், தன் படங்கள் என்றுமே நாலு பாட்டு, அறிமுக அதிரடி சீன், குத்துப்பாட்டு, நகைச்சுவை என இருக்காது என அவர் அறிவார். ஆயினும், சீரியஸான படங்களின் திரைமொழியை எப்படி கூட்டுமனத்தை ஆகர்ஷிக்கும் விதத்தில் செய்வது என அவர் அறிய விரும்புகிறார். எனக்கு அவரது இந்த மனப்போக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு எழுத்தாளனாய் எனக்கும் தமிழ் கூட்டுமனத்தின் செண்டிமெண்டுகளை, விசித்திரங்களை, உணர்வுத்தளங்களை அறியவும் பயன்படுத்தவும் ஆர்வம் உண்டு.

ஸ்ரீகணேஷின் லகுவான, கனிவான நடத்தை அவருக்கு மிகப்பெரிய பிளஸ். யாருக்கும் அவருடன் வேலை செய்ய உறுத்தல்கள் இராது. இது வேண்டாம் என உறுதியாய் அழுத்தமாய் அவர் மறுத்தாலும் கேட்பவருக்கு மனம் புண்படாது. அப்படியான குரலும் உடல்மொழியும் அவருக்கு இயல்பிலேயே கிடைத்து விட்டது. அடுத்து மனிதர்களை எப்படி கையாள வேண்டும் எனும் சூட்சுமமும் அவருக்கு இந்த இளவயதிலேயே கைவந்து விட்டது என்பதை அவர் தனது படத்தள அனுபவங்கள் சிலவற்றை என்னிடம் சொன்ன போது புரிந்து கொண்டேன். இந்த திறன் ஒரு இயக்குநருக்கு மிக மிக முக்கியம். இதனோடு நடிகர்களிடம் சிறப்பாய் நடிப்பைப் பெறவு தெரிந்திருக்கிறது. அவரது திரைமொழியும் மெல்ல மெல்ல மிஷ்கினில் இருந்து மாறி வந்து விடும் என நினைக்கிறேன்.
(“எட்டு தோட்டாக்கள்” பற்றி இன்னொரு தருணத்தில் விரிவாய் எழுத ஆசை உண்டு)
ஆர்ப்பாட்டங்களும் சுயதம்பட்டங்களும் அடவாடித்தனங்களும் நிறைந்ததாய் நாம் நம்பும் திரைத்துறையில் இவரைப் போன்ற மென்மையான தென்றல்களும் நிச்சயம் உள்ளனர். சொல்லப் போனால் திரைத்துறையில் இலக்கியத் துறையை விட தென்றல்களின் நடமாட்டம் அதிகம் என்பதே என் அவதானிப்பு.
முக்கியமான திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கர் 2017இன் மிகச்சிறந்த இயக்குநராக ஸ்ரீகணேஷை தேர்வு செய்திருக்கிறார்.

ஸ்ரீகணேஷுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.


Comments

Anonymous said…
Thanks Mr.Abhilash for this article.

I would like Mr.Ganesh to 'hiss' to safeguard his interests ( hiss = showing off like some medicore directors and you know their names) as otherwise his chance of going from strength to strength will be lost .

(Snake and its hissing story - please google for Sri Ramakrishna's parable on same)

He did good with 8 thottakal ( his fellow director of Maanagaram in one of his interviews tactfully conveyed that some directors are glossing over holywood stories to suit local needs right in front of Mr.Ganesh) but there's way to go.
Originality is inevitable and even inspiration (excepting what comes from own subjective space ) can be un-avowed.
Virumandi - life of david gale ...one got the background of it very immediately and for that reason, Mr.Kamal was taken to task (eventhough it is an enormous film).

Well, wishing you and Mr.Ganesh a fantastic year 2018 and a sheer originality in whatever that's going to get done.

Regards
Balaji.S