ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)

 Related image
ஆதவனும் சாரு நிவேதிதாவும்: நெருங்கி விலகும் புள்ளிகள்
சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்கள் ஆதவனுக்கு வெகு நெருக்கமாய் அவரை கொண்டு செல்கின்றன. பெண்ணுடலை மனமழிந்த நிலையில் அணுக முடியாமல், பல்வேறு சிக்கல்களில் மாட்டி பரிதவிக்கும் ஆண்களுக்கு அவர் பரிந்துரைக்கும் தீர்வும் மேற்சொன்ன கொண்டாட்டமும் கட்டற்ற நிலையுமே. எதையும் மிகையாக, உக்கிரமாக, தீவிர எதிர்நிலையில் இருந்து எதிர்கொள் என்கிறார் சாரு. சாருவின் பாத்திரங்களுக்கு ராமசேஷனைப் போல் தத்துவச் சரடுகளுக்கு இடையில் கால் தடுக்கும் பிரச்சனைகள் இல்லை. தர்க்க ரீதியாய் முடிவெடுக்கத் தத்தளிக்கும் நெருக்கடியை நவீன உளவியல் cognitive dissonance என்கிறது. சாருவிடம் இது இல்லை. அவரது பாத்திரங்கள் பகுத்தறிவு ஜென்மங்கள் அல்ல. அவர்கள் சிந்தனா தளத்தில் இருந்து விலகி ஆற்றொழுக்கு போன்ற உணர்வுத்தளத்தில் இயங்குகிறார்கள். இதுவே ஆதவனுக்கும் சாருவுக்குமான ஒரு முக்கிய வித்தியாசம்.

இன்னொரு வித்தியாசமும் உண்டு: இதுவும் முக்கியம். ஆதவனிடம் (தி.ஜாவிடமும் கூட) நாம் ஒரு தெளிவான பிராயிடிய அடுக்குமுறையை காண்கிறோம். ஒருவன் தன் தாய் மீது மோகம் கொள்கிறான். இவ்வுணர்வு அவனது குழந்தைப்பருவத்தில் முகிழ்த்து, அவனது பிரக்ஞை மனதுக்கே தெரியாமல் உள்ளொழுக்கை போல் ஓடுகிறது. அவன் பால்யத்தில் தன் தாயின் பதிலியாக முதிர் இளம் பெண்களை (மாமிகள், உறவுக்கார அக்காக்கள்) தேர்ந்து அவர்களிடம் இச்சையை வெளிப்படுத்துகிறான். அவன் பால்யம் கடந்து இளைஞனான பின் தன்னை விட வயது குறைவான பெண்களை அல்லது சமவயது பெண்களை நாடுகிறான். அப்போது அவர்களுடன் பொருந்திப் போக முடியாமல் முதிர்ந்த பெண்ணுடல் அவனுக்குள் உளவியல் இடையூறாக தடுக்கிறது. நெருக்கடி அவன் மென்னியை நெரிக்கிறது. அவன் சமவயதிலான னது காதலிக்கும் தன்னை விட மூத்த காதலிக்கும் இடையில் மாட்டித் தவிக்கிறான்.
இந்த அடுக்குமுறையை (தாய்-மாமி-அக்கா-இளங்காதலி-மாமி) நீங்கள்மோகமுள்ளிலும்” “என் பெயர் ராமசேஷனிலும்தெளிவாக காணலாம். அங்கு ஜமுனா என்றால் இங்கு பங்கஜம் மாமியும் மாலாவின் தாயும்; அங்கு தங்கம் என்றால் இங்கு மாலாவும் பிரேமாவும். இரு சாரார் இடையிலும் மாட்டி ஊசலாடுகிறார்கள் பாபுவும் ராமசேஷனும். இரு நாவல்களிலும் இவர்கள் எந்தவொரு தீர்வையும் சென்றடைவதில்லை. தடுமாற்றமே அவர்களின் விதியாக இருக்கிறது.
ஆனால் சாருவிடம் இந்த தெளிவான அடுக்குமுறையை நாம் காண்பதில்லை. அவர் பிராயிடியத்தைக் கடந்து இப்பிரச்சனையை பார்க்கிறார். பிராயிடின் காலத்தில் மனிதனை ஒரு முழுமையான ஒருங்கிணைவாக பார்த்தாரக்ள். அவனுக்குள் பல முரண்பாடான விசைகள் செயல்பட்டாலும் அவனது பகுத்தறிவு அவனை மையப்படுத்தி, தெளிவான முடிவெடுக்க உதவுகிறது என்றார் பிராயிட். அப்படி ஆனவனே இயல்பான ஆரோக்கியமான மனிதன் என்றார். இதையே தி.ஜாவும் ஆதவனும் பிரதிபலித்தார்கள். ஆனால் சாரு (கவிதையில் நகுலனை செய்வதைப் போன்று) ஒரு உடைபட்ட மனிதனை சித்தரிக்கிறார். சதா சிதறிக் கொண்டே இருக்கும் மனிதன் அவன். அவனது நெருக்கடி தாயுடலில் இருந்து படிநிலையாக ஆரம்பிப்பதில்லை. அவனுடைய சிக்கல் பெண்கள் சார்ந்ததாக மட்டுமே இல்லை. பெண்ணுடன் முழுமையான சுலபமான (அல்லது தொடர்ச்சியான முழுமையான) சம்போகம் சாத்தியமாகாம்ல் போவது சாருவின் பெரும்பாலான பாத்திரங்களின் அடிப்படை பிரச்சனை. “புதிய எக்ஸைலின்துவக்கக் காட்சிகளே இதை அடிக்கோடிட்டு விடுகின்றன.
Image result for புதிய எக்ஸைல்
இந்நாவலின் கதைசொல்லியின் முதல் சல்லாபத்திலேயே ஒரு பொருத்தமின்மை இருக்கிறது. அவன் அப்போது கல்லூரி மாணவன். பெண்ணோ 13 வயதினள். அவளுடனான உறவைப் பற்றி பேசுகையில் சாரு ஒவ்வொரு வரியும் இன்னொன்றுடன் முரண்படுமாறு எழுதியிருப்பார். (இதை உணர்த்த ஒவ்வொரு வரிக்கும் “() × ()” என எண்ணிட்டிருக்கிறேன்.):
 () “நான் தஞ்சாவூரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டு மேகலாவுடன்அவ்வப்போது செக்ஸ் பண்ணுவதுண்டு. × () பதின்மூன்று வயதுப் பெண்ணுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு.
() எனக்கும் அப்போது செக்ஸ் என்றால் அவ்வளவாக ஒன்றும் தெரியாது. × () அவளிடம் என்னைக் கவர்ந்தது அவளுடைய இந்தா பிடி இந்தா பிடி முலைகள் தான். ×  () தனிமை கிடைக்கும் போதெல்லாம் நானும் அவளும் வெறுமனே உராய்ந்து கொள்வோம்.”
முரண்பாட்டை கவனித்தீர்களா? செக்ஸ் பண்ணுவோம் என்கிறார். ஆனால் அதைத் தொடர்ந்து எனக்கு அப்போது செக்ஸ் பற்றி ஒன்றும் பெரிதாய் தெரியாது என்கிறார். அப்படி என்றால் இருவரும் என்ன தான் பண்ணினார்கள்? அடுத்து அவளது முலைகள் பற்றி வருட லகுவானவை என்கிறார். நமக்கு இருவரும் தனிமையில் நிர்வாணமாய் படுத்து பரஸ்பரம் மேலுடலை வருடி முத்தமிடும் சித்திரம் கிடைக்கிறது. ஆனால் சாரு அடுத்த வரியிலேயே நாங்கள்வெறுமனே உராய்ந்து கொள்வோம்என்கிறார். இந்த முரண்பட்ட தகவல்களை இணைத்தால் அவர்கள் முழுமையற்ற, செக்ஸ் போன்ற, ஆனால் செக்ஸ் அல்லாத ஒரு உறவைக் கொண்டிருந்தார்கள் என புரியலாம். இதில் அவர் முழுத் திருப்தி கொண்டதாய் சொல்லவில்லை. அடுத்து, கதைசொல்லி தன் மனைவியுடன் படுக்கையில் இருக்கையில் மேகலா எனும் மற்றொரு பெண் அவனது கனவில் நுழைய சம்போகம் நிகழ்கிறது. ஆக, கதைசொல்லியின் தாம்பத்யத்திலும் பூரண செக்ஸ் இல்லை.
 தில்லி இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் ஒரு கவிதை வாசிப்பு. கதைசொல்லி ஒரு புல்வெளியில் அமர்ந்திருக்கிறான். அப்போது அங்கு ஒரு கறுப்புப் பூனை வருகிறது. இந்நாவலில் பூனை செக்ஸின் குறியீடு. கதைசொல்லியின் வீட்டுக் கிணற்றுக்குள் ஒரு பூனை விழுகிறது. அது வெளியே ஏறவும் தெரியாமல் நீச்சலடித்து நீருக்குள்ளே இருக்கவும் முடியாது தத்தளிக்கிறது. இதை அடுத்து அவனது மனைவி ஒரு வாளியை இறக்கி பூனையை மேலே தூக்கி விடுகிறார். இந்தக் கிணற்றை பெண்குறியின் உருவகமாய் நீங்கள் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும்.
ஆனால் பூனை என்பது வெறும் செக்ஸ் குறியீடு அல்ல. எதிலும் முழுமையாய் ஆழத்தில் குதிக்க முடியாத, ஒன்றில் இருந்து இன்னொன்றிற்கு தாவும் செக்ஸ் மனநிலையின் குறியீடு. தில்லி கூட்டத்தின் போது வரும் பூனை முதலில் கதைசொல்லியின் மடியில் போய் அமர்கிறது. அவன் அதன் மென்மையான மயிர்களை வருடி விடுகிறான். “வருடுவதை நிறுத்தி விட்டால் தலையைத் தூக்கி என்னைப் பார்க்கும். ஏன் நிறுத்தி விட்டாய் என்று அர்த்தம்.” (இது சுயமைதுனம் போன்றே இருக்கிறது பாருங்கள்.) கூட்டத்திற்கு ஒரு அழகிய அல்ஜீரிய பெண் கவி வருகிறாள். அவள் அப்பூனையைக் கண்டு சொக்கிப் போகிறாள். தன்னிடம் வருமாறு அழைக்கிறாள். பூனை வர மறுக்கிறது. ரொம்ப நேர பிரயத்தனத்துக்குப் பிறகு பூனை அவள் மடியில் போய் படுத்துக் கொள்கிறது. ஆனால் விரைவில் கதைசொல்லியின் மடிக்கே திரும்பி விடுகிறது. இறுதியில் கூட்டம் முடிந்து பிரிகையில் அவனை அப்பெண் தழுவி முத்தமிடுகிறாள்.
 மஹாமுத்திரா எனும் ஓட்டலில் கதைசொல்லி சந்திக்கும் அபிராமி எனும் பெண்ணிடம் அவனுக்குக் கிடைப்பதும் இப்படியான தொட்டும் தொடாத இச்சை வெளிப்பாடு தான். இப்படி மடியில் இருந்து மடிக்குத் தாவும் பூனைக் காதல் தான் சாருவின் பாத்திரங்களுக்கு தொடர்ந்து சாத்தியமாகிறது. உடலுறவு நிகழும் போதும் அது முழுமையின்மையிலே தொக்கி நிற்கிறது.

ஆனால் இப்பிரச்சனை அவர்களுக்கு இவ்வுலகின் அனைத்து விசயங்களை நோக்கியும் இருக்கிறது. ”புதிய எக்ஸைலில்ஒரு சுவாரஸ்யமான சின்ன சம்பவம் வருகிறது. சாருவுக்கு மிருதுவான கோழிக்கறி வெகுபிரியம். ஆனால் சென்னையில் நார்நாரான கோழிக்கறியே அதிகம் கிடைக்கிறது. அவருக்கு கோழியே வெறுத்து விடுகிறது. இன்னொரு பக்கம் அவரது தோழி அஞ்சலி பிராயிலர் கோழிகள் அனுபவிக்கும் துன்பத்தைப் பற்றி அவரிடம் பேசுகிறார். அஞ்சலி ஆரம்பத்தில் ஒரு கோழி ரசிகை. ஆனால் ஒரு இரவில் அவள் தூங்கிக் கொண்டிருக்கையில் கோழிகள் கூட்டமாய் எழுப்பும் அழுகை ஒலி அவளை எழுப்பி விடுகிறது. வெளியே சென்று பார்த்தால் அங்கே அருகில் உள்ள கறிக்கடைக்கு கோழிகளை ஒரு வண்டியிலிருந்து இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கோழியாய் காலைப் பற்றி தூக்கி வீசுகிறார்கள். உயிராபத்தில் அவை பரிதாபமாய் ஒலியெழுப்புகின்றன. ஒரு கூட்டுப்பிரார்த்தனை போன்ற ஆரவாரம். அஞ்சலியால் அன்றில் இருந்து கோழி சாப்பிட முடியவில்லை. கோழியைப் பார்த்தாலே அன்று கேட்ட கூட்டு அபயக்குரல்கள் அவள் காதில் ஒலிக்கின்றன. அவள் ஜீவகாருண்யவாதி ஆகிறாள். சாருவிடமும் அஞ்சலி இதைச் சொல்ல சாருவுக்கும் கோழி சாப்பிடுவது சிக்கலாகிறது.
ஆனால் அஞ்சலிக்கும் சாருவுக்கும் ஒரு வித்தியாசம்: அஞ்சலி ஜீவகாருண்யத்தை சீரியஸாய் எடுத்துக் கொள்கிறாள்; சாருவோ அதை விளையாட்டாய் எடுத்துக் கொள்கிறார். அவர் கோழி சாப்பிடாததற்கு ஜீவகாருண்யம் மட்டுமல்ல கோழிக்கறி நார்நாராய் இருக்கிறது எனும் காரணமும் உள்ளதே! அப்படியென்றால் மிருதுவான சுவையான கோழிக் கால் கிடைத்தால் ஒரு கை பார்ப்பாரா? சாருவால் முடிவெடுக்க முடியவில்லை. இங்கு மற்றொரு உள்முரணும், உள்போராட்டமும் சாருவுக்குள் ஆரம்பிக்கிறது (ராமசேஷனுக்குள் பிரேமாவா பங்கஜம் மாமியா என நடப்பது போல்).
 ஒருநாள் சாரு தன் நண்பர் ரமேஷுடன் ஈரோடு செல்ல, அங்கு இருவரும் மது அருந்துகிறார்கள். அப்போது அவர் ரமேஷிடம் தமிழகத்தில் கிடைக்கும் கோழிக்கறி நார்நாராக இருப்பதைப் பற்றி புலம்புகிறார். ரமேஷ் அவரை இந்தியாவிலேயே சிறந்த கோழிக்கறி கிடைக்கும் இடத்துக்கு தான் அழைத்துப் போக உள்ளதாய் சொல்கிறார். சாருவுக்குள் உள்மனப் போராட்டம் துவங்குகிறது: ஜீவகாருண்யமா சுவையான மென்மையான இந்தியாவிலேயே சிறந்த கோழிக்கறியா? ஆனால் ராமசேஷனைப் போல் சாரு இரு தரப்பிலுமான நியாய அநியாய வாதங்களை சிந்திக்கவில்லை. அவர் சொல்கிறார்: “மற்ற நேரமாக இருந்தால் மைலாப்பூர் கோழிக்கடையில் கேட்ட கோழியின் கதறல் சப்தம் ஞாபகம் வந்து, வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். ஆனால் அவர் கேட்டபோது போதையில் இருந்ததால் சரி என்று சொல்லி விட்டேன்.”
சாருவின் பாலியல்: உலகமே தாயின் உடல்
ஆதவன், தி.ஜாவுக்கு நிகழ்வது போல் சாருவுக்கு தாயுடல் ஒரு தனி இருப்பு அல்ல. உலகமே அவருக்கு தாயின் தேகம் தான். தொடர்ந்து உலகில் அனைத்துடனும் பல்வேறு முரண்பட்ட நிலைகளில் மாட்டிக் கொண்டு, விளையாட்டுத்தனமாய் அதில் இருந்து எஸ்கேப் ஆவது சாருவின் பாணி. சாருவின் பாத்திரங்கள் உருகின ஐஸ்கிரீம் போன்றவர்கள். அவர்கள் பரந்து ஓடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு என்று மையமான, திடமான நம்பிக்கையோ கொள்கையோ இல்லை. ஆக, அவர்களுக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வப்போது எடுக்கிற நிலைப்பாட்டை ஒட்டி ஒரு முரண்பாடு அவர்களுக்குள் நிகழ்கிறது. ஆனால் நிலைப்பாட்டை ஒரு சட்டை போல் உதறினதும் அந்த முரண்பாடு தீர்ந்து விடுகிறது (தற்காலிகமாகத் தான்).
இப்படித் தான் சாருவின் பாத்திரங்கள் ஈடிபல் சிக்கலை தாண்டி வந்து விடுகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்? ஏனென்றால், சாரு சமகால தலைமுறையை பிரதிபலிக்கும் கண்ணாடி! இன்றைய தலைமுறையே அப்படித் தான் எல்லா நெருக்கடிகளையும் பொழுதுபோக்காய், விட்டேந்தியாய் கையாண்டு அதில் இருந்து தப்பிக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தையே பொது இடங்களை ஆக்கிரமிக்கும் ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றினவர்கள் அல்லவா அவர்கள். “விழாமுடிந்ததும் அதை மறந்து விட்டார்கள். புதுப் பிரச்சனையை நோக்கித் தாவி விட்டார்கள். இதுவே சாருவின் உலகம்!

Comments