புத்தக கண்காட்சியை எப்படி அணுகுவது?


அன்புள்ள அபிலாஷ் சாருக்கு ,
           வணக்கம்.உங்கள் விமர்சன கட்டுரைகள் தான் என்னை உங்களை நோக்கி அழைத்து வந்தது.வாசிப்பை பற்றி நீங்கள் தெரிவிக்கும் நுட்பங்கள் மிகவும் உதவிகரமாக உள்ளது.இவ்வாண்டில் தங்களை மிகவும் கவர்ந்த புத்தகங்களை பற்றி எழுதினால் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

                   ஜானகிராமன் 
                    நன்றி
அன்புள்ள ஜானகிராமன்
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.
 என்ன புத்தகங்கள் வாங்குவது?
ஒரு பட்டியலைக் கையில் கொண்டு கண்காட்சிக்கு செல்வது விநாயகர் உலகை சுற்றி வரப் புறப்பட்டது போல் ஆகி விடும். எந்த நோக்கமும் இன்றி கண்காட்சியை மேய்வதே சிறந்த அனுபவம். ஆனாலும் எந்த இலக்குமின்றி, தெளிவும் இன்றி எப்படி புத்தகம் வாங்குவது என கேட்டீர்களானால் அதற்கு பதில் தேட நீங்கள் உங்களுக்குள் முதலில் தேட வேண்டும். உங்கள் ரசனை என்னவென அறிய வேண்டும்.
 கடந்த ஓராண்டில் எந்த எழுத்தாளனை தொடர்ந்து ரசித்துப் படிக்கிறீர்கள்? என்ன வகையான எழுத்து அது? அதன் பாணி, ஸ்டைல், தொனி, கருத்துக்கள், நிலைப்பாடு என்னென்ன? புது எழுத்தாளரா மூத்த எழுத்தாளரா? புனைவா, அபுனைவா அல்லது கவிதையா? அரசியலா, சமூகமா, தனி அனுபவமா, உறவுகள் பற்றின பதிவுகளா, உளவியலா, கலாச்சாரமா, அடிதடி வம்புகளா, சித்தாந்தமா, தத்துவமா, ஆய்வுக் கட்டுரைகளா?
எல்லா வகையான எழுத்துக்களும் நமக்கு அவசியமே. ஆக எந்த கூச்சமும் இல்லாமல் மேற்சொன்னவாறு தொகுத்துக் கொள்ளுங்கள். அதன்படி எப்படியான புத்தகங்களை நீங்கள் தேடப் போகிறீர்கள் என தயாரிக்கலாம்.
அடுத்து, நீங்கள் தேடும் வகை நூல்கள், படைப்பாளிகள் எந்த பதிப்பகங்களில் கிடைக்கும், கிடைப்பார்கள் என அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். உதா. புது, சமகால எழுத்துக்கள், வணிக மற்றும் தீவிர ரசனைகள் கலந்த நூல்கள், சுஜாதாவின் நூல்கள் உயிர்மையில் கிடைக்கும். பண்பாட்டு ஆய்வுகள், மொழிபெயர்ப்பு, செவ்வியல் படைப்புகள், சு.ராவின் நூல்கள் என்றால் காலச்சுவடு. கிழக்குப் பதிப்பகம் இம்முறை இலக்கிய நூல்களும் அதிகம் கொண்டு வரப் போகிறார்கள். எஸ்.ராவின் நூல்கள் அதிகமும் வேடியப்பனின் கடையிலும், சாருவின் நூல்கள் கிழக்கிலும் கிடைக்கலாம். ஜெயமோகனின் நூல்கள் நற்றிணையில் கிடைக்கலாம். இது போக எவ்வளவோ வகைவகையான நூல்கள், விதவிதமான வித்தியாசமான கடைகள் இருக்கும். புது எழுத்தாளர்களின் நூல்கள் சிதறலாய் பல கடைகளில் கிடைக்கும்.
நீங்கள் சென்னையில் இருந்தால் இம்மாதம் தொடர்ந்து நடக்க இருக்கும் நூல் வெளியீட்டு கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். இம்மாதம் வெளிவரும் சிறு, நடுநிலை பத்திரிகைகளை வாங்கி புரட்டிப் பாருங்கள். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் முகநூலில் இருக்கிறார்கள். அவர்களைப் பின் தொடருங்கள். இவையெல்லாம் செய்தால் வரப் போகும் முக்கியமான நூல்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நான் ஒருபோதும் படிக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியலை நல்க மாட்டேன். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. மேலே குறிப்பிட்ட படைப்பாளிகள் கூட பொதுவாக இன்று பரவலாக படிக்கப்படுபவர்கள் எனும் ரீதியிலே. உங்களுக்கு ஆர்வமில்லையெனில் அவர்கள் பக்கமும் நீங்கள் நகரத் தேவையில்லை.
நாம் படித்தாக வேண்டிய நூல்கள் என்றொரு பட்டியல் நாம் சுலபத்தில் தயாரிக்கலாம். ஆனால் உங்கள் வாசிப்பு வளம் பெற அது உதவாது. என் 17 வயதில் ஜெயமோகனை சந்தித்து இதே கேள்வியை நான் கேட்க அவர் உடனடியாய் ஒரு தாளில் ஐம்பது சிறந்த கதைகளை எழுதித் தந்தார். ஆனால் அந்த பட்டியல் எனக்கு பயன்படவில்லை. ஏனெனில் என் ரசனை தனியானது. பரிந்துரைப் பட்டியல் படி வாசிப்பது நம் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவாது. நான் தமிழின் சிறந்த எழுத்துக்களை படித்து விட்டேன் என இறுமாப்பு கொள்ள ஒருவருக்கு இப்பட்டியல்கள் பயன்படலாம். ஆனால் உண்மையான வாசிப்பு அதுவல்ல. வாசிப்பு தனியான பாதை. ஒரு மின்மினியைத் தொடர்ந்து இருளில் தனியாக நடந்து செல்லும் பயணம். அதுவே உங்களை மேம்படுத்தும்!
ஜாலியாக கை வீசி நடந்து செல்லுங்கள். புத்தகங்களை நின்று கவனித்து புரட்டிப் பார்த்து முடிந்தால் அங்கேயே சில பக்கங்களை படியுங்கள். அல்லது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்படியாய் தோன்றினால் வாங்குங்கள். புத்தகங்களுடனான நம் உறவு பார்த்ததும் காதல் என இருக்க வேண்டும். பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமாய் இருக்கக் கூடாது.
 நான் சென்ற முறை கண்காட்சியில் ஒரு நண்பருடன் சென்றேன். அவர் எந்த கடைக்குப் போனாலும் அங்குள்ள அத்தனை கவிதை நூல்களை வாங்கி சேகரித்துக் கொண்டார். அது தன் கடமை என்பது போல் நடந்து கொண்டார். நான் மாறாக, ஒவ்வொரு கடையிலும் பத்து அல்லது இருபது கவிதை நூல்களை பொறுக்கி எடுத்து அங்கேயே அமர்ந்து அவற்றில் சில பக்கங்கள் படித்து ஒன்றிரண்டு மட்டும் தேர்ந்தெடுத்தேன். நான் கண்காட்சிக்கு சென்றே அங்கே புத்தகங்களைத் தேடுவதை விட வாசிப்பதிலே அதிகம் நேரம் செலுத்துவேன்.
இன்னொரு விசயமும் கண்காட்சியில் முக்கியம். எழுத்தாளர்களையும் நண்பர்களையும் சந்திப்பது, வேடிக்கை பார்ப்பது, சும்மா சுற்றித் திரிவது. கண்காட்சியை நான் இப்படி ஒரு சந்திப்பு முனையாக பார்க்கிறேன்.
 நீங்கள் உங்கள் காதலியைக் காண அவளது கல்லூரிக்குப் போய் காத்து நிற்கிறீர்கள். அவள் வரத் தாமதமாக அங்கு உலவும் பிற அழகிய இளம்பெண்களை ரசித்து நிற்பீர்கள் அல்லவா! கண்காட்சியிலும் அது போல் நோக்கமற்ற ரசனையும் அலைச்சலும் அருமையான அனுபவங்கள்.

சிறப்பாக அமையட்டும்!

Comments

அடுத்தாண்டு புத்தக கண்காட்சி தேதிகள் முடிவாகிவிட்டனவா?
நல்ல பதில் கட்டுரை