லஷ்மி

Image result for lakshmi short film

என் மாணவி ஒருவர் நேற்று “லஷ்மி” குறும்படத்தைப் பற்றி என்னிடம் கேட்டார். நான் பார்க்கவில்லை என்றேன். “நிச்சயம் பாருங்கள். எனக்கு அப்படத்துடன் உடன்பாடில்லை. ஆனால் பார்க்க வேண்டிய முக்கியமான படம்” என்றார். இன்று அவகாசம் கிடைத்ததும் பார்த்தேன். கூடவே அதைப் பற்றி மனுஷ்யபுத்திரன் விமர்சித்த காணொளியும். என் கருத்துக்களுடன் அவருடன் மிகவும் ஒத்திருந்தது கண்டு மகிழ்ந்தேன்.

என் முதல் எதிர்வினை இப்படத்தில் புதிதாய், புரட்சிகரமாய் ஒன்றும் இல்லையே என்பது. நாசூக்காய் நளினமாய் எடுத்திருக்கிறார்கள். அப்பெண்ணும் அவள் கணவனும் நேர்த்தியாய் நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க தேர்ச்சி தெரிகிறது. ஆனால் இப்படம் ஏன் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கு மனுஷ் சொல்லும் பதில் கச்சிதமானது. நமது அன்றாட வாழ்வின் பின்னுள்ள பாசாங்கை இது சுரண்டி வெளிப்படுத்துகிறது. நம் கண்ணாடி மாளிகையில் கல்லெறிகிறது. நம் வீட்டிலும் இப்படி நடந்து விடுமோ எனும் அச்சத்தை கிளப்புகிறது. ஆனால் நம் அச்சத்தை துடைத்து “பயப்படாதே” போ என அனுப்பி வைக்கும் அம்சமும் இப்படத்தில் உள்ளது. ஒரு பக்கம் மத்திய வர்க்க போலித்தனத்தை, வறட்சியை விமர்சித்தபடியே அதை இப்படம் மறைமுகமாய் ஆதரிக்கவும் செய்கிறது.
இப்படம் மீறலை பேசுகிறது என்பதே ஒரு பாவனை தான். மீறலை பேசியபடியே நமது இயல்பான அன்றாட வாழ்வை அது போற்றுகிறது. அதற்கு பிரச்சனையே வராது, நமது மனைவியர் மீற மாட்டார்கள் என நம் முதுகை வருடித் தருகிறது.
முதலில், இப்படத்தில் வரும் குடும்பம் மத்திய வர்க்கம் அல்ல. கீழ்மத்திய வர்க்கம். அடுத்து, இதில் வரும் கணவன் இன்றைய மத்திய, மேல் வர்க்கத்து ஆட்களைப் போல் படித்து, நளினமான ஒருவன் அல்ல. அப்பெண்ணும் அவ்வாறே. அவன் பட்டறை தொழிலாளி. அவள் அச்சகத்து வேலையாள். இப்படத்தைக் காணும் 99% இவ்வாழ்க்கையை சேர்ந்தவராக இருக்க மாட்டார்கள். அப்பெண் காட்டன் சேலை கட்டி பேருந்தில் அலுவலகம் போகிற காட்சியில் மட்டுமே தோற்றமளவில் பெரும்பாலான மத்திய வர்க்க குடும்பப் பெண்களை போலிருக்கிறாள். மற்றபடி அவள் வேறொருத்தி. அவர்களின் வாழ்வில் அழகோ நளினமோ இசையோ கவிதையோ மகிழ்ச்சியோ களிப்போ கேளிக்கையோ இல்லை என்பது படத்தில் பிரதானப்படுத்தப் படுகிறது. அடுத்து, அவன் “அழகான, காதலே உருவான” கணவன் அல்ல. விளைவாக, அவர்களின் படுக்கை அனுபவமும் லயிப்பாய் இல்லை. ஆக அவள் “அதிருப்தி” கொள்கிறாள். இந்த குணங்கள் கொண்ட வாழ்க்கையை வாழும் ஒரு ஓவியனுடன் சோரம் போகிறாள். இது உணர்த்துவது இரண்டு விசயங்கள்.
(1)  இதற்கு எதிரான குண இயல்புகள் கொண்ட சிறப்பான வாழ்க்கை ஒன்று இருக்கிறது. இதை விட பெரிய வீடுகளில், வசதியான குடும்பங்களில், அழகான, படித்து, கலைநயமும் பணமும் படைத்த கணவன் கொண்ட வீடுகளில் மனைவிகளின் தாம்பத்யம் இன்பமாக, திருப்தியாக இருக்கிறது எனும் எதிர்சித்திரத்தை இப்படம் உள்ளடக்கி இருக்கிறது. மறைமுகமாய் அதை குறிக்கிறது. நம் வாழ்க்கை அப்படியானது அல்ல என ஆறுதல்படுத்துகிறது. இந்த கரிய ஒடிசலான பெண், கரிய பட்டறை தொழிலாளியை நமது மற்றமையாய் கட்டமைக்கிறது. இது இப்படத்தின் ஆகப்பெரிய சிக்கல்.
ஒழுக்கமீறலை பேசிவிட்டு இப்படம் அடுத்த நொடியே “ரசனையும் அழகும் கலாச்சாரமும் மிக்க உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒன்றும் ஆகாதுங்க” என்கிறது. மத்திய வர்க்க வாழ்க்கையை கேள்வி கேட்பதாய் தோற்றம் காட்டி விட்டு அதே வாழ்க்கையை நியாயப்படுத்துகிறது.

(2)  இப்படம் அடுத்து ஏற்படுத்தும் சித்திரம் திருப்தியான குடும்ப வாழ்வில் மீறல்கள் இருக்காது என்பது. இதையே மனுஷ் விமர்சிக்கிறார். இவ்விசயத்தில் என்னால் தீர்மானகரமாய் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
யார் வாழ்வும் முழுத் திருப்தியில் இல்லை. சின்ன சின்னதாய் அதிருப்தி முளைவிட்ட, மழித்து ஒருவாரமான மொட்டைத்தலையே நம் வாழ்க்கை. ஆக, நாம் ஒழுக்கமீறல்கள் வழி நம் மனதை ஆற்றியபடியே இருக்கிறோம். இப்படம் வாழ்க்கையில் முழுக்க திருப்தியான ஒரு லட்சிய தாம்பதயம் சாத்தியம் எனும் நிலையை மறைமுகமாய் சுட்டுகிறது. இதை மனுஷ் கேள்வி கேட்கிறார். மகிழ்ச்சியான வாழ்வில் இருக்கும் ஒருவர் இன்னொரு ஆண் / பெண் மீது இச்சை கொள்வாரா? நான் இவ்விசயத்தில் இப்போதைக்கு மனுஷுடன் உடன்படவில்லை. நம் மனம் எப்போதும் தளும்பிக் கொண்டிருக்கும் ஒன்றல்ல என கருதுகிறேன். நாம் நிலைகொண்டு மகிழ்ச்சியாய் இருக்கும் காலங்கள் உண்டு. அப்போது பேரழகிகளே வந்து வழிந்தாலும் ஒரு ஆண் பொருட்படுத்த மாட்டான். இதுவே பெண்களுக்கும் பொருந்தும்.

எப்படியோ, தினமும் காலையில் பொங்கலும் கெட்டிச்சட்டினியும் சாப்பிட்டு விட்டு தமிழக பா.ஜ.க தலைவர்கள் கிளப்பும் சர்ச்சைகளை விவாதிப்பதை விட “லஷ்மி”யைப் பற்றி பேசுவது பலமடங்கு மேல்!

Comments