ஏன் நான் சீரியஸானவன் இல்லை


வணக்கம் அபிலாஷ். விஷ்ணுபுரம் விழா பற்றிய பதிவுகள் வாசித்தேன். நன்றாக எழுதியிருந்தீர்கள். ஆனால், உங்களுக்கும் கே.என் செந்திலுக்கும் நடைபெற்ற விவாதம் குறித்து எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன். எழுதும் எண்ணம் இருக்கிறதா? என்னளவில் அது ஒரு முக்கியமான விவாதமாகப் படுகிறது.
இப்படிக்கு
கார்த்திக் பாலசுப்பிரமணியன்

வணக்கம் கார்த்திக்
நன்றி. கே. என் செந்திலுடன் நடந்தது ஒரு விவாதம் அல்ல என எண்ணுகிறேன். ஒரு குறுகலான சாலையில் இரண்டு கார்கள் இடமின்றி ஒன்றையொன்று மறித்து நிற்பது போன்ற சம்பவம் அது. போக இடமில்லை எனத் தெரிந்ததும் நானே ரிவர்ஸ் எடுத்து அவரைப் போக அனுமதித்தேன். நான் அவரிடம் கருத்து மோதலில் ஈடுபட முயலவில்லை. ஏனெனில் எங்கள் இடையே அது சாத்தியமில்லை என எண்ணுகிறேன்.

நாங்கள் இலக்கியம், எழுத்து, அறிவுலகம் குறித்து முழுக்க வேறுபட்ட நிலைப்பாடு கொண்டவர்கள். நான் சொல்வது அவருக்கும் அவர் கருத்துக்கள் எனக்கும் சுத்த அபத்தமாகவே தோன்றும். ஆகையால், நாங்கள் பரஸ்பரம் மரியாதையுடன் கைகுலுக்கி விடைபெறுவதே நல்லது என தோன்றியது. இப்போதும் தோன்றுகிறது.
கே. என் செந்தில் ஒரு கராறான நவீனத்துவ மனநிலை கொண்டவர். அதனாலே எனது அசோகமித்திரன் அஞ்சலிக் கட்டுரையை பற்றி விஷ்ணுபுரம் விழாவில் பேசியவர் அதன் உள்ளடக்கத்துக்கும் அதன் துவக்கத்தில் நான் பயன்படுத்திய பெண்ணுடல் பற்றின உவமைக்கும் தொடர்பில்லை என்பதை கடுமையாய் சாடினார். நவீனத்துவர்கள் எழுத்தில் வடிவ ஒழுங்கை, கச்சிதத்தை வலியுறுத்துவார்கள். கே. என் செந்திலும் அவ்வாறானவரே. ஆனால் நான் விளையாட்டுப் போக்கு கொண்ட ஒரு தலைமுறையை சேர்ந்தவன். எனக்கு ஒரு அஞ்சலிக் கட்டுரையும் கூட விளையாட்டுத்தனமாக ஆனால் நுட்பமாய் ஒரு விசயத்தை கையாளும் இடம் தான். அசோகமித்திரனின் மரணம் ஒரு ஈடு செய்ய முடியா இழப்பு, ஐயகோ என் இதயம் வெடிக்கிறதே எனும் தொனியை நான் சத்தியமாய் என் கட்டுரையில் கொண்டு வர விரும்பவில்லை. இலக்கியம் வாசிப்பதும் கிரிக்கெட் பார்ப்பதும் பக்கத்தில் பேசுகிறவர்களை ஒட்டுக் கேட்பதும் எனக்கு ஒன்று தான். அதனாலே நான் சற்றே விலகி நின்று, அசோகமித்திரனை அறியும் நோக்கம் ஒன்றையே பிரதானப்படுத்தி, அவரது தியாகம், இழப்பு, அதனாலான கசப்பு ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி அக்கட்டுரையை எழுதினேன். அதனாலே துவக்கத்திலேயே அந்த விடலைத்தனமான தொனியை கொண்டு வந்தேன்.
கூட்டத்தில் பெண்ணுடலை தெரியாமல் உரசி விட்டு யார் அந்த பெண் என ஒரு ஆண் வியந்தபடி ரசிப்பதை நான் அசோகமித்திரனின் கதை ஒன்றை ஒரு ஆரம்ப கட்ட வாசகன் படித்து விட்டுஇக்கதை படிக்க சுவையாய் உள்ளது, ஆனால் இதில் அவர் என்னவோ சொல்ல வருகிறார், என்னவோ அழகாய் சுவாரஸ்யமாய் சொல்ல முயல்கிறார். என்ன அது? அது தான் எனக்கு சரியாய் பிடிபடவில்லை.” என நினைப்பதையும் ஒப்பிட்டிருந்தேன். இது ஒரு பொருத்தமற்ற ஒப்பீடு என நான் எண்ணவில்லை. இதற்காய் ஒருவர் கடுப்பாகி கட்டுரையை மேலும் படிக்காமல் வீசி எறிவது மிகை உணர்ச்சி என்று தான் படுகிறது.
நான் ஒரு சீரியஸான எழுத்தாளன் அல்லஎன நான் கூறியதையும் கே. என் செந்தில் அன்று கண்டித்தார். நான் எழுத்தை ஒரு தவமாய் கொள்கிறவன் தான். ஆனால் எழுதும் நடவடிக்கையை மட்டுமே அப்படி அர்ப்பணிப்புணர்வுடன் காண்கிறேன். எழுதிய விசயங்களை அல்ல.
 எனக்கு எழுதும் போதான அனுபவம், மனநிலை, புலனின்பத்துக்கு இணையான சுகம், கிளர்ச்சி, திகைப்பு தான் முக்கியம். மற்றபடி எழுதப்பட்ட படைப்புக்களை நான் ஒரு தாய் நாய் தன் குட்டிகளை பார்ப்பது போன்றே பார்க்கிறேன். ரெண்டு வாரம் முலையூட்டி விட்டு அவற்றை துரத்தி விட்டு அடுத்த குட்டிகளை வயிற்றில் சுமக்க கிளம்பி விடுவேன். என் நாவல், கதை, கட்டுரை, கவிதை பற்றி வரும் விமர்சனங்கள் என்னை பெரிதும் அசைப்பதில்லை. காரணம், அவற்றை ஒரு பாரமாய் நான் முதுகில் சுமப்பதில்லை. இன்னொரு விசயம், எழுதிய பல விசயங்களை நான் சில நாட்களிலேயே மறந்து போகிறேன். நான் முன்னர் எழுதியவற்றை யாராவது நினைவுபடுத்தி வினவினால் நான் திகைத்துப் போகிறேன்.
அடுத்து, எழுத்து என்பது நான் தரிசித்த உண்மையை நேர்மையாய் பதிவு செய்வது என நான் கருதுவதில்லை. சுந்திர ராமசாமியின் காலத்தில் மக்கள் அவ்வாறு நம்பினார்கள். கே. என் செந்திலும் அவ்வாறே சிந்திக்கிறார் (அதனாலே அவரை ஒரு நவீனத்துவாதி என கருதுகிறேன்). ஆனால் இன்றைய சிந்தனையாளர்கள் எழுத்து என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நிரந்தரமற்ற உண்மை என கூறுகிறார்கள். நானும் அவ்வாறே நம்புகிறேன்.
எல்லாவற்றுக்கும் மையமான ஒரு நிரந்தர உண்மை உள்ளதாகவும், அதை எழுத்தில் பகர்த்துவதே நம் வேலை என கே. என் செந்திலைப் போன்றவர்கள் நம்புகிறார்கள். எதிலும் அவ்வாறு உறுதியாய் பற்றிக் கொள்ளாமல் நதியொழுக்கில் இலை போல் நகர்வதே வாழ்வில் சாத்தியமான ஒரே விசயம் என என்னைப் போன்றவர்கள் நம்புகிறோம். இப்போதைக்கு நம்ப முடிந்ததை இப்போதைக்கு நம்புகிறோம். நாளைக்கு இன்னொன்று கிடைத்தால் அதை பற்றிக் கொள்வோம். இதனாலே என் எழுத்தில் நீங்கள் முரண்களை, கருத்து நிலை மாற்றங்களை தொடர்ந்து காண முடியும்.
இன்னொன்று நான் எழுத்தாளன் தானா என்பதிலே எனக்கு ஐயம் உண்டு. என் வாசகர்கள் என்னை விட அதிகம் அறிவும் அனுபவமும் புரிதலும் கொண்டவர்களாய் இருக்கையில், என்னை ஏன் படித்து ரசிக்கிறார்கள் / வியக்கிறார்கள்? என்னை மீறி என் எழுத்தை சிறப்பாக்குவது எது? வாசகர்களா? நான் இயங்கும் மொழியின் மந்திரமா? என் எழுத்தை நான் எழுதுகிறேனா அல்லது அது என் வழி நிகழ்கிறதா? நான் எந்தளவு என் எழுத்தைப் பற்றி பொறுப்புணர்வுடன் இருக்கலாம்? என் எழுத்தின் கீழ்மைக்கும் மேன்மைக்கும் எந்தளவுக்கு நான் பொறுப்பாக வேண்டும்?

மேற்சொன்ன இவ்வளவு விசயங்களின், கேள்விகளின் அடிப்படையில் தான் நான் சீரியஸானவன் அல்லஎனும் வாக்கியத்தை ஆன் சொன்னேன். ஆனால் இவற்றில் எதையும் கே. என் செந்திலால் ஏற்க முடியாது. எழுத்தாளனை எழுத்தின் மையமாய் கருதும், அவனது பிரக்ஞை அவன் எழுத்தின் மையவிசை என நம்பும், எழுத்தில் சொல்லப்படும் உண்மைகள் நிலையானவை, பரிபூரண உண்மையை பிரதிபலிப்பதே நல்ல எழுத்து என நம்பும் நவீனத்துவர் அவர். அவருக்கு அவரது உண்மை. எனக்கு எனது. நாங்கள் விவாதிக்காமல் இருப்பதே தமிழ் இலக்கியத்துக்கு நல்லது.

Comments

கருத்து மோதல்களைத் தவிர்த்தல் நலமே.