எனக்கே என் கவிதைகள் பிடிக்கவில்லை!

Related image

எழுத்தாளர்களில் ரெண்டு வகை. 1) சதா கண்ணாடியில் தம்மை பார்த்துக் கொள்பவர்கள்; 2) தம்மைக் கண்டு லஜ்ஜை கொள்பவர்கள். நான் ரெண்டாவது வகை.
 எனக்கு நான் எழுதும் எதுவும் பெரிய ஈர்ப்பு தராது. என் புத்தகங்களை மீள வாசிக்கையில் எனக்குள் அதிருப்தியே எழும். என் கதைகள், நாவல், கட்டுரைகள் என எவையும் எனக்கு விருப்பமானவை அல்ல. எனில் அவற்றை ஏன் பிரசுரிக்கிறேன்?
நான் என்னை எனது சரியான விமர்சகனாய் கருதுவதில்லை. எனது மதிப்பீட்டில் எனக்கே முழுநம்பிக்கை இல்லை. நான் வெகுசாதாரணமாய் கருதும் என் எழுத்துக்களில் சிலவற்றை வெகுவாய் ரசிக்கும் வாசகர்கள் எனக்குண்டு. நான் முக்கியம் என தற்காலிகமாய் நம்பியவற்றை வாசகர்கள் நிராகரிப்பதும் உண்டு..இதனாலே ஒரு கட்டத்தில் நான் என் எழுத்தை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டேன், கழுதை எப்படியும் போகட்டும் என அவிழ்த்து விட்டு விட்டேன். புதிதாய், தெளிவாய், நளினமாய், நாணயமாய் பொய்யின்றி எழுதுகிறேனா என்பது மட்டுமே ஒரே அளவுகோல்.

இன்னொரு பக்கம், தன்னை நாடி வந்த ஒரு இளம் வாசகனை இருத்தி தன் முழு சிறுகதைத் தொகுப்பையும் வரிக்கு வரி வாசித்துக் கேட்பித்த எழுத்தாளரைப் பற்றி அறிவேன். சிலர் நாட்கணக்கில் களைப்பின்றி தம் படைப்புகளைப் பற்றியும் தமது மகத்துவங்கள், அதிரடிகள், படைடெடுப்புகள் பற்றி மட்டுமே தம்மிடம் சிக்கும் வாசகர்களிடம் சிலாகித்து பேசுவார்கள். இவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை.
 நான் இதற்கு நேர்மாறானவன். என்னை நாடி வருபவர்கள் என் எழுத்தைக் குறிப்பிட்டு எதையாவது கேட்டால் அவர்களின் பார்வை, அணுகுமுறை, உணர்வுகள் எப்படி உள்ளன என்பதை மட்டுமே அறிய முற்படுவேன். எப்படியெல்லாம் விநோதமான முறையில் என் எழுத்து சலனமேற்படுத்துகிறது என அறிவதில் எனக்கு ஒரு ரசனை உள்ளது. அது போக, என்னைப் பற்றி பேசுவதை அதிகம் ஊக்குவிக்க மாடேன். பேச்சை மடை மாற்றி அவர்களைப் பற்றியும் பொதுவாகவும் விவாதத்தை திருப்புவேன். என்னைப் பற்றி பேசுவதில் எனக்கு லஜ்ஜை அதிகம்.
இதன் நீட்சியாகத் தான், சமீபத்தில் விஷ்ண்புரம் இலக்கிய விழாவின் நான் கலந்து கொண்டு வாசகர்களுடன் கலந்துரையாடிய போது ஒருவர் “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” பற்றி கேள்வி கேட்டார். அந்நாவலை நான் பிரசுரிக்கும் நோக்கில் எழுதவில்லை, எழுதிய பின் அழிக்கலாம் என்றே கருதினேன்; ஒரு கட்டத்தில் குழப்பம் ஏற்பட சரி போனால் போகட்டும் என பிரசுரித்தேன் எனக் கூறினேன். இதைக் கேட்டிருந்த கே.என் செந்தில் (வழக்கம் போல்) மிகவும் கசப்புற்று “இப்படியெல்லாம் ஒரு எழுத்தாளன் கூறலாமா? என்ன வகையான படைப்பாளி இவர்? இவருக்கே பிடிக்கவில்லை என்றால் பிறர் ஏன் படிக்க வேண்டும்? எழுத்தை இப்படியா ஒருவர் கையாள்வது?” என்றெல்லாம் பேஸ்புக்கில் பொருமியிருந்தார். அவர் தன் எழுத்தை தெய்வமாய் நினைப்பவர் எனத் தெரிகிறது. நான் ரொம்ப ரொம்ப சாமான்யமான மனிதன். எனக்கு எழுத்தில் மயக்கமும் ரசனையும் அதிகம். அது ஒரு போதை. அதனாலே எழுதுகிறேன். எழுத்து எனக்கு ஒரு LSD. மற்றபடி, நான் சு.ரா போல் எழுத்தை வைத்து சன்யாசிப்பதில்லை.
ஆனாலும் பிற எழுத்தாளர்கள் கொழுநன் தொழுதெழுவாள் போல் எழுத்தை தொழுதெழுந்து பெய்யென மழை பெய்யப் பார்த்திருக்க, நான் ஒருத்தன் மட்டும் இப்படி எழுத்துலகில் தான் எழுதுவதே பிடிக்காமல் பொறுக்கியாய் இருக்கிறேனோ என எண்ணி சற்றே குழம்பிப் போயிருந்தேன். சமீபத்தில் இந்த சிறு மனக்கலக்கத்துடன் மனுஷ்யபுத்திரனை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் சமீபத்தில் எழுதிக் குவித்த ஆயிரக்கணக்கான கவிதைகளைப் பற்றி உரையாடல் சென்றது. நான் சொன்னேன்: “நீங்கள் இப்படி நிறைய நல்ல கவிதைகளாய் எழுதிக் குவிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. உங்களது சிறந்த எழுத்து எது என யாராலும் தொகுக்க முடியாமல் போகும்.2008 வரை உங்கள் சிறந்த கவிதைகள் 50 என என்னால் பட்டியலிட முடிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் சிறந்த நூறு கவிதைகளை என்னால் என்ன யாராலும் பட்டியலிட முடியாது. உங்கள் சாரத்தை நீங்கள் எழுதி எழுதி மூடி மறைத்து விட்டது போல் இருக்கிறது. ஒரு சிறந்த கவிதை இன்னொரு சிறந்த கவிதை மேல் உட்கார்ந்து மறைத்துக் கொள்கிறது.”
மனுஷ்யபுத்திரன் சொன்னார், “நான் எழுதினவற்றில் சிறந்த கவிதைகள் உள்ளனவா என்று எனக்கே ஐயம் உள்ளது. சமீபத்தில் தமிழினி வசந்தகுமார் ஒரு நவீன கவிதைகளின் தொகுப்புக்காய் எனது சிறந்த கவிதைகள் சிலவற்றைக் கேட்டார். என்னால் சத்தியமாய் தேடி அவ்வாறு பத்து கவிதைகளைக் கூட தொகுக்க முடியவில்லை. மலை மலையாய் எழுதி இருக்கிறேன். எவை எனது ஆகச்சிறந்தவை என எப்படி கண்டுபிடிக்க? கடைசியில் கையில் கிடைத்தவற்றை போகிற போக்கில் எடுத்து அவரிடம் கொடுத்தேன்.”
இதை அடுத்து, அவர் ஒரு முக்கியமான விசயத்தைச் சொன்னார், “என் கவிதைகள் எவையும் எனக்கு பிடித்தமானவை அல்ல.”
இதைச் சொல்லும் அவர் தான் எழுதின கவிதைகள் பலவற்றை மிகுந்த விருப்பத்துடன் எனக்கு முன்பு படித்துக் காட்டியிருக்கிறார் தாம். ஆனாலும் ஒரு எழுத்தாளனுக்குள் தான் எழுதியவை மீது அதிருப்தியும் சமமாய் உள்ளது. அதுவே அவனை மீண்டும் மீண்டும் எழுதி தன்னை மீறிச் செல்ல தூண்டுகிறது. இல்லாவிட்டால் பத்து நல்ல கவிதைகளுடன் ஒருவன் நிறுத்திக் கொள்ளலாமே!

எப்படியோ தான் எழுதினவற்றின் மீது அதிருப்தி கொண்ட ஒரு மகாகவிஞனைக் கண்டதில் எனக்கு மகாதிருப்தி. நான் இனி அதிருப்தி மீது அதிருப்தி இன்றி, அசூயை இன்றி, தாராளமாய் என் மீது அதிருப்தி கொள்ளலாம். 

Comments

Anonymous said…
Sir,
Thanks for the article.
Boredom is a natural phenomenon but with results ( fruits of works in forms of remuneration, praise ) knocking at your doors, it may take a different turn.
What made Tagore write more even after winning the Noble ?
Mr.Abhilash's pursuit should have been to take his writing to the next level which is that of making money ...
You feel you are bored but you are not because you are not getting the real benefits of what you do excepting few praises ..Same goes for Mr.Abdul's writing (even Mr.Jeyamohan's) of poetry ,etc ...
Mainstream (now that controversy on Mr.Vairamuthu's checking on Gnanapith gaining momentum) writing is essential ...and when people really love you (like they did Sujatha who is not labelled as top writer by likes of Jeyamohan) , you will take develop wings to go farther and I would like Mr.Abhilash to go mainstream -be it via Cinema or thru some other instrumentality ..
We can talk about boredom thereafter .
Boredom is good if you are looking to assess yourself in and out ..

Regards