எங்கே போச்சு சர்ச்சைகள்?

Image result for சாரு ஜெயமோகன்
இப்போதெல்லாம் ஏன் முன்பு போல் அதிகம் சர்ச்சைகள் நடப்பதில்லை, ஏன் எழுத்தாளர்களை சட்டையை கிழித்துக் கொண்டு மண்ணில் புரள்வதில்லை என ஒரு நண்பர் கேட்டார். எனக்குத் தோன்றின சில எளிய பதில்கள் இவை:

1)   இன்று இலக்கிய உலகம் கார்ப்பரேட்மயமாகி விட்டது. யாரையும் அதிகம் பகைத்துக் கொள்ளாமல் சுமூகமாய் போவது, உள்ளுக்குள் புகைந்தாலும் வெளியே ஒரு புன்னகை ஸ்மைலியை சுமந்து செல்வது, சின்ன சின்ன சச்சரவுகள் வந்தாலும் அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்வது, முடிந்தளவு கசப்புகளை மறந்து உடனுக்குடன் கைகுலுக்குவது ஆகியவை கார்ப்பரேட் சுபாவங்கள். நீங்கள் எந்த எம்.என்.ஸி அல்லது உள்ளூர் கார்ப்பரே நிறுவனம் போய் பாருங்கள். யாவரும் கேளிர் எனும் ரீதியில் அவ்வளவு இனிமையாய் பரஸ்பரம் பழகுவார்கள். இதில் ஒரு ஆழம் இராது. பிளாஸ்டிக் தன்மை இருக்கும்.

 உறவில் ஆழம் வந்தால் உடனே மனம் காயப்படும்; கசப்பில் கடிந்து கொள்வோம்; பிரிவோம், மீண்டும் இணைவோம், கண்ணீர் விட்டு கட்டியணைப்போம். இதெல்லாம் கார்ப்பரேட் பந்தளங்களில் இராது. பிளாஸ்டிக் கைகுலுக்கல், பிளாஸ்டிக் புன்னகை, பிளாஸ்டிக் வழிதல், பிளாஸ்டிக் கிளுகிளுப்பு, பிளாஸ்டிக் கோபம். உறவை விட வேலைக்கு உதவும் தொடர்புகளே அவசியம் என கார்ப்பரேட் முதலாளித்துவம் நமக்கு உணர்த்துகிறது. அதனாலே இந்த பிளாஸ்டிக் தோரண பந்தங்கள் தழைக்கின்றன.

 கார்ப்பரேட்டில் வேலை செய்யாதவர்களும் கூட பேஸ்புக்கில் புழங்குகையில் பாதி கார்ப்பரேட் ஆகி விடுகிறார்கள். ரத்தமும் சதையுமான அன்பை விட தொடர்புகளே முக்கியம் என மெல்ல மெல்ல நமக்கு பேஸ்புக் உணர்த்துகிறது. லைக், வாழ்த்துக்கள் கிராபிக்ஸ், நண்பர்களுக்கு இடையிலான friendaniversary கொண்டாட்டம், பிறந்தநாள் நினைவுபடுத்தல்கள் என பேஸ்புக் மெல்ல மெல்ல எதிர்மறையான காரியங்களை நம் உறவுகளில் இருந்து களைகிறது. நமக்கு சலிக்கும் அளவு நண்பர்களின் உலகம் ஒரு சொர்க்கபுரி என தித்திப்புகளால் நம்மை திணறடிக்கிறது. விளைவாக, பிறரை அது துன்புறுத்துமெனில் ஒரு உண்மையை கூட மறைப்பதே சாலச்சிறந்தது என நம்புகிறோம். எழுத்தாளர்களும் இன்று இந்த இடத்துக்கு வந்து விட்டார்கள்.

 பேஸ்புக் பயன்படுத்தாத படைப்பாளிகள் கூட ஏதோ ஒரு விதத்தில் அதிக தொடர்பு வலைகள் கொண்டவர்களாய் மாறி இருக்கிறார்கள். அதன் சுகத்தை அனுபவிக்கிறார்கள். ஊரோடு ஒத்துப் போவோமே என அவர்களும் கட்சி மாறி விட்டார்கள். பரஸ்பரம் இலக்கிய விழாக்களுக்கு போய் வாழ்த்துகிறார்கள். எல்லா எழுத்தும் நல்ல எழுத்தே என அரவணைக்கிறார்கள். ஒரு பெரிய அனாதை இல்லத்தின் உறுப்பினரும் நிர்வாகியும் நாமே எனும் உணர்வு நமக்கு வந்து விட்டது. என் பக்கத்தில் இருப்பவரை நான் அணைக்காவிட்டால் நான் ஒரு அனாதை எனும் உணர்வு என்னை சாப்பிட்டு விடும் என அஞ்சுகிறேன் இன்று. ஆக, இனி இலக்கிய உலகில் பாரதப் போர் நிகழவே நிகழாது. அப்படியே யாராவது அஸ்திரத்தை எடுத்தாலும் அடுத்தவர்கள் அவரை ஒரு காமிடி பீஸாக்கி விட்டு சிரித்து கலைந்து விடுவார்கள்.
2)   சர்ச்சை தரும் புகழ் எதிர்மறையான புகழ். அதனால் எந்த பயனும் இல்லை. வாசகர்கள் கூட மாட்டார்கள். புத்தகம் கூடுதல் பிரதிகள் விற்காது. இதை இன்று எழுத்தாளர்கள் உணர்ந்து விட்டார்கள். நான் இதை அனுபவரீதியாகவே உணர்ந்திருக்கிறேன். சர்ச்சை சார்ந்து நீங்கள் எழுதுபவதை படிக்கிறவர்கள் உங்களது வேறு எழுத்துக்களை பொருட்படுத்த மாட்டார்கள். உங்களது எழுத்துக்களை படிப்பவர்கள் சர்ச்சைகளை எண்ணி தலையில் அடித்துக் கொண்டு உங்களை தொடர்ந்து அக்கறையாய் படிப்பார்கள். சர்ச்சைகள் உங்களுக்கு ஒரு வெளிச்சத்தை அளிக்கும் தான். ஆனால் அது இரவல் வெளிச்சம்.
3)   இலக்கிய அடிதடிகளுக்குப் பின்னால் கொள்கை உறுதிப்பாடு இருந்தது. இது என் நிலைப்பாடு எனும் நம்பிக்கையே உங்களை சண்டை போட வைத்தது. இன்று அந்த மாதிரி நிலைப்பாடு யாருக்கும் எதற்கும் இல்லை.

4)    இலக்கிய சர்ச்சைகளின் இன்னொரு காரணம் தத்தமது இலக்கிய இடம் என்ன எனும் உறுத்தல்கள், குழப்பங்கள், நெருக்கடி. இப்போது எழுத்தாளர் தம் நூல்களை தாமே பிரசுரிக்கிறார்கள். தம் மேடையை தாமே உருவாக்குகிறார்கள். எல்லாமே தனித்தனி என்றாகி விட்டது. ஆக முரண்படுகிறவர்களுடன் சேர்ந்து செயல்படும் நெருக்கடி இனி இராது. ஜெயமோகனின் நூலை மனுஷ் பிரசுரிக்க, அதில் அவர் மனுஷை சற்றே விமர்சிக்க, அது பொறுக்காமல் அதை சாரு மேடையில் கிழிக்க, அதற்காக ஜெ.மோ உயிர்மையுடனான உறவை முறிக்கஇப்படியான சம்பவங்கள் இனி சாத்தியமில்லை. கூட்டுக்குடும்பம் பிரிந்து விட்டது

Comments

Ponmahes said…
அருமை யான பாத்து அண்ணா ..வாழ்த்துகள் ....