பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா?


பெண் உளவியல் பற்றி நான் எழுதின கட்டுரைகளின் தொகுப்பு இது, எனது ஒன்பதாவது நூல். உயிர்மை வெளியீடு. இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகிறது.
அனுபவம், குடும்பம், வேலையிடம், சமூகம், பெண்ணுரிமை, மனநலம், சினிமா, ஆடை ஒழுக்கம், உடல், பேச்சு, திருமணம் என வெவ்வேறு தளங்களில் பெண் மனம் எப்படி செயல்படுகிறது என இந்நூல் பேசுகிறது.
இது ஒரு கராறான உளவியல் நூல் அல்ல. ஒரு எழுத்தாளனாய், சாமான்யனாய் பெண்களை அணுகி அவர்களை புரிந்து கொள்ள நான் செய்த முயற்சிகளே இது. கடந்த பத்து வருடங்களில் என் அணுகுமுறையில் நேர்ந்துள்ள மாற்றங்களையும் இது பிரதிபலிக்கிறது.இந்நூலின் தனிச்சிறப்புகளில் ஒன்று சந்தோஷ் நாராயணனின் முகப்பு அட்டை வடிவமைப்பு. சந்தோஷ் நம் புத்தகத்துக்கு அட்டை வடிவமைப்பது என்பது சாலையில் நோக்கமற்று திரியும் ஒருவனை ஒரு பேரழகி நிறுத்தி கையை பற்றி சில நிமிடங்கள் பேசுவது போன்ற காரியம். அவள் சென்ற பின் இது நம் கையே தானா என நீண்ட நேரம் யோசித்தவாறு நிற்போமே, அதைப் போன்றே இது என் புத்தகம் தானா எனும் உற்சாகமான திகைப்பை அவர் ஒரு அற்புதமான அட்டை மூலம் தந்திருக்கிறார். இந்நூலின் ஆதாரமான தொனியை, மையமான விவாதப் போக்கை, கருவை அவர் தன் வடிவமைப்பில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். அந்த ஊக்கு நவீன வாழ்க்கைக்கு நகர்ந்திருக்கும் ஒரு மரபான பெண்ணின் குறியீடு. அது மூடியிருக்கும் போது அதனுள் அவள் ஒரு அமைதியான அழகியாய் தெரிகிறாள். ஆனால் திறந்து கொண்டதும் அவள் ஒரு கூரிய ஆயுதமாகி விடுகிறாள். அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்பது தான் நான் பல்வேறு தளங்களில் வைத்து மீள மீள கேட்கும் கேள்வி. அதை ஒரே பிம்பம் கொண்டு சந்தோஷ் நிறுவி விட்டார். நீர் ஒரு மேதை ஐயா

Comments