டி.டி.வி தினகரனின் அதிர்ச்சி வெற்றி: அடுத்து என்ன நடக்கும்?

இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றியைக் கண்டு பல அரசியல் விமர்சகர்களைப் போல நானும் குழம்பிப் போனேன். இது சம்மந்தமான டி.வி விவாதங்கள், கருத்துக்கள், பேஸ்புக் பதிவுகளை கவனித்ததன் மூலம் நான் புரிந்து கொண்டவற்றை கீழ்வருமாறு தருகிறேன்.
1)   ஒரு கட்சி தோற்கும் போது அதன் பிரதிநிதிகள் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என பணிவுடன் கூறி விட்டு, தோல்விக் காரணத்தையும் குறிப்பிடுவார்கள். இம்முறை எடப்பாடி அணியினரால் எந்த காரணத்தையும் அப்படி சொல்ல இயலவில்லை. பண விநியோகம் தான் ஒரே காரணம் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் எடப்பாடியினரும் பணம் பட்டுவாடா செய்தார்கள்.
 திமுகவினரோ ஒரு பக்கம் இத்தோல்வியில் மகிழ்ச்சி காண்பது சற்றே விசித்திரமாக உள்ளது. அவர்கள் அதிர்ச்சியையோ கசப்பையோ வெளிப்படுத்தியதாய் தெரியவில்லை. மாறாக, பாஜக மத்தியில் இருந்து அதிமுகவை கட்டுப்படுத்துவது, அதன் காரணமாய் ஆளும் அரசு செயலிழந்து போயிருப்பதைக் கண்டு மக்கள் கசப்படைந்து தினகரனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ததாய் திமுகவின் பழ கருப்பையா கூறினார். இந்த இடைத்தேர்தல் இழப்பு பொருட்படுத்தத் தக்கது அல்ல என்பது திமுகவின் தரப்பு. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தேர்தல் வந்தால் திமுகவே வெல்லும் என அக்கட்சியினர் நம்புகிறார்கள்.

மேலும், ஆர்.கெ.நகரில் என்றுமே திமுக வென்றதில்லை. ஆக, இத்தேர்தலில் வெல்ல வேண்டும் என்று திமுக பெரிதாய் கனவு கண்டதாகவும் தெரியவில்லை. அவர்கள் மனதில் எந்த அதிமுக வெல்ல வேண்டும் என விரும்பியிருப்பார்கள்? முடிவுகள் வெளியான பின் திமுகவினர் வெளிப்படுத்தும் சொற்களையும் உடல்மொழியையும் காணும் போது அவர்கள் மனதளவில் தினகரன் பக்கமே இருந்ததை ஊகிக்க முடிகிறது. ஏன்?
இவ்விசயத்தை உறுதியாக கூறுவது சிரமம். இது என் கணிப்பு மட்டுமே. ஆட்சியை கவிழ்த்து கைப்பற்றுவது திமுகவின் உடனடி திட்டத்தில் இல்லை. பாஜக தொடர்ந்து அவர்களுடன் இணக்கம் பாராட்ட விரும்பினாலும் ஸ்டாலின் இசைவதாய் தெரியவில்லை. ஏனென்றால் இப்போதைக்கு பின்வாசல் வழியே ஆட்சி அமைத்தால் அது நிம்மதியான நிலையான ஆட்சியாக இருக்காது என ஸ்டாலின் நினைக்கிறார் (மக்களுக்கு அதனால் நிம்மதி போய் விடும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.) திமுகவின் வியூகம் என்பது முடிந்தளவு எடப்பாடி-பாஜக கூட்டணிக்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவு கொடுப்பது. இந்த அரசின் மீதான மக்களின் அதிருப்தியை அதன் பாட்டுக்கு வளர விடுவது. எப்படியும் ஆட்சி கவிழ மோடி அனுமதிக்க மாட்டார். ஆக திமுகவுக்கும் உடனடியாய் தேர்தல் களம் காணும் கனவும் இல்லை. அதிமுக ஆட்சி நடைபெறும் வரையில் நடக்கட்டும். அதுவாகவே தன்னை அழிக்கட்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். தினகரன் பக்கமாய் லேசாய் திமுகவினர் சாய்வது இதனால் தான். பிடிக்காதவர் பைக்கின் பெட்ரோல் டேங்கில் ஒரு பிடி மண்ணை அள்ளிப் போடும் அரசியல் இது. ஆனால் தினகரன் இத்தேர்தல் பெரும் வெற்றி பெற்றதற்கும் ஒரு பக்கம் திமுகவின் இந்த மண்ணள்ளிப் போடும் அரசியல் காரணம் தான்,
2)   ஆளும் அரசுக்கு எதிரான கோபமே மக்களை தினகரன் பக்கம் சாய்த்திருக்கிறது என்பதில் எந்த அரசியல் பார்வையாளருக்கும் ஐயமில்லை. தொடர்ந்து மீடியாவில் விமர்ச்கர்களை நோக்கி எழுப்பப்படும் கேள்வி ஏன் இந்த அதிருப்தி ஓட்டுக்கள் பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கு செல்லவில்லை என்பது. இந்த கேள்வி தம்மை நோக்கி வரும் போதெல்லாம் திமுகவினர் மென்று முழுங்குகிறார்கள். உண்மையை அவர்கள் நன்கு அறிவார்கள்: திமுக எண்ணிக்கையளவில் பிரதான எதிர்க்கட்சியே என்றாலும் அவர்கள் அதிமுக அரசை முனைப்பாக எதிர்க்கவில்லை. தினகரன் அளவுக்கு ஆளும் அரசை கடுமையாய் சாடவில்லை; கவிழ்ப்பேன் என கோரவில்லை. அவ்வப்போது அறிக்கை விடுவதுடன் ஸ்டாலின் தன் கடமையை முடித்துக் கொண்டார். இந்த ஆட்சிக்கு திமுக பெரும் சவாலாக இல்லை எனும் பிம்பம் மக்கள் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது. ஆக, வாக்குகளின் எண்ணிக்கையில் திமுகவால் இரண்டாவது இடத்தைக் கூட பெற முடியவில்லை. அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இவ்வாறு திமுகவை நிராகரிக்கும் என நான் கூறவில்லை. ஆனால் ஆர்.கெ நகர் மக்களின் தீர்ப்பு என்பது இப்போதைக்கு திமுகவின் அம்பித்தனமான அரசியல் மீதான தமிழக் மக்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என புரிந்து கொள்ளலாம். திமுக இன்னும் கடுமையாய் ஆளும் கட்சியை எதிர்த்து தன்னை ஒரே மாற்றாய் முன்வைக்க வேண்டும் எனும் சேதி இந்த தேர்தல் முடிவில் நிச்சயம் உள்ளது. அதாவது நீங்கள் ஆட்சியை கவிழ்க்க வேண்டாம்; ஆனால் செயல்படாத ஒரு அரசை நீக்குவதற்கு முயல்கிறீர்கள் எனும் தோற்றத்தையாவது கொடுங்கள். இந்த செயலற்ற அரசு தமிழகத்தை நாசமாக்குவதை நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்கள் எனும் தோற்றத்தை கொடுக்காதீர்கள். அது திமுகவுக்கு நல்லதல்ல.
3)   தினகரன் தரப்பினர் அடுத்து என்ன செய்வார்கள்? பாஜகவுடன் பேரத்தை மதியமே ஆரம்பித்திருப்பார்கள். அதன் பிறகு தான் தினகரன் மீடியாவுக்கு பேட்டி அளித்திருப்பார். அவர்களின் கோரிக்கை என்னவாக இருக்கும்? பாஜகவின் வியூகம் எப்படி இருக்கும்? வரும் நாட்களில் தெரிந்து விடும். இதுவரையிலான பாஜகவின் சதுரங்க அரசியலை வைத்து இப்படி கணிக்கலாம்: எடப்பாடி, .பிஎஸ். தீபா ஆகிய மும்முனைகளுடன் தினகரனையும் மற்றொரு முனையாக வைத்து அதிமுக மீதான தனது கட்டுபாட்டை வலுப்படுத்தவே மோடி முனைவார். 100% ஆட்சி கவிழாது. ஆனால் தலைமையில் சில மாற்றங்கள் வரலாம்.
4)    நோட்டா வாக்கு எண்ணிக்கையை கூட மிஞ்ச முடியாதது பாஜகவுக்கு அவமானம் தான். அதேநேரம் இத்தேர்தலில் இருந்து அவர்கள் பெரிதாய் எதையும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தானே! ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் பாஜக தமிழக மக்கள் மனதில் கொஞ்சமாவது இடம் பிடிக்க வேண்டும். அல்லாவிடில் மத்தியில் ஆளும் அரசாய் இருந்து கொண்டு மாநிலத்தில் பொம்மை ஆட்சி நடத்தியதைத் தாண்டி அவர்கள் எதையும் அடைய முடியாது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்பு இங்கு உருவாகி உள்ள வெற்றிடத்தை இதுவரை பயன்படுத்திக் கொண்டே ஒரே தலைவர் தினகரன் மட்டுமே. வரும் ஆண்டுகளிலும் இந்நிலையே நீடிக்கக் கூடும். எடப்பாடி அணியின் முதுகில் சவாரி செய்து பாஜகவால் இங்கு அதிக தூரம் செல்ல முடியாது.
5)    பாஜக இங்கு இடம் பிடிக்க மதவாதம் பயன்படாது. அதிமுகவின் தலையில் அமர்ந்து கழுத்தைக் கடித்து உறிஞ்சுவதும் அவர்களின் அதிகாரத்தை தக்க வைக்க உதவுமே அன்றி தமிழக அரசியலில் வளர உதவாது. அவர்கள் இங்கு இரண்டு சாத்தியங்களை கவனிக்க வேண்டும். ) சாதி. இங்குள்ள சாதிய அணிகளை பாஜகவால் கைப்பற்ற இயலுமா? (வாய்ப்பு குறைவே)

) பாஜகவின் பினாமிக் கட்சியே எடப்பாடியின் அதிமுக எனும் பிம்பத்தை உடைத்து, இங்குள்ள நிர்வாகத்தின் சீர்கேடுகளை, குறைபாடுகளை சுட்டிக் காட்டி கடுமையாய் அவற்றை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி தன்னை ஒரு மாற்றாக அவர்கள் காட்ட முயல வேண்டும். அதாவது கேஜ்ரிவால் தில்லியில் முன்பு செய்தது போன்ற ஒரு எதிர்ப்பரசியல். அதை திமுக செய்யாத சூழலை பாஜக சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தால் அவர்கள் ஒரு சிறிய இடத்தைப் பெற முடியும். ஆனால் தமிழக பாஜகவினருக்கு அத்தகைய நேர்மறையான அரசியல் செய்து பரிச்சயம் உண்டா? எனக்கு நம்பிக்கையில்லை. பாஜகவின் கதி அம்போ தான் (அதுவே நமக்கு ஒரே ஆறுதல்). 

Comments

Unknown said…
What about TTV role in Tamilnadu politics
ஜீவி said…
ஆளும் அதிமுக தினகரனுடன் ஒரு சமரச உடன்பாட்டிற்கு வந்து கைகுலுக்கினால் என்னவாகும்?..
Ponmahes said…
அருமையான பதிவு அண்ணா ...வாழ்த்துகள் ..