சாதி மறுப்பு திருமணங்கள்


நான்சாதி மறுப்புதிருமணம் செய்தவனே. ஆனால் நான் எப்போதுமே அதை சாதி மறுப்பு திருமணம் எனக் கோரியதில்லை. ஏனெனில் சாதியை மறுக்கும் நோக்குடன் நான் திருமணம் செய்யவில்லை. என் காதலுக்காகவே அத்திருமணம் செய்தேன். ஆகையால், அதைக் காதல் திருமணம் என்றே சொல்வேன்.
 எனக்குத் தெரிந்து இந்தியாவில் நடைபெறுவதாய் கூறப்படும் சாதி மறுப்புத் திருமணங்கள் அடிப்படையில் காதல் திருமணங்களே. எந்த ஒரு செயலையும் அதன் நோக்கத்தின் அடிப்படையில் தான் நாம் அடையாளப்படுத்த வேண்டும். நீங்கள் அலுவலகத்தில் இருந்து வீடு வருகிறீர்கள். அடுத்து கோயிலுக்குப் போக வேண்டும். அதற்காக சட்டை பேண்டில் இருந்து வேட்டி சட்டைக்கு மாறுகிறீர்கள். மாறி விட்டு, கோயிலுக்குப் போகிறீர்கள். இச்செயலை கோயிலுக்குச் செல்லுதல் என்றே நாம் கூற முடியும். வேட்டிசட்டை அணிந்தகோயில் செல்லுதல் என்றல்ல. ஏனென்றால் வேட்டி சட்டை அணிவதற்காக நீங்கள் கோயில் செல்லவில்லை. கோயில் செல்வதற்காக வேட்டி சட்டை அணிந்தீர்கள். அவ்வாறே சாதியை மீறுவதற்காக நீங்கள் திருமணம் செய்யவில்லை. திருமணம் செய்ய வேண்டும் என்பதறாக வேறு வழியின்றி சாதியை மீறுகிறீர்கள்.

ஒருவேளை நீங்கள் விரும்பும் பெண் உங்கள் சாதியை சேர்ந்தவர். நீங்களோ முற்போக்கானவர். சாதியை எதிர்க்கிறவர். “நான் என்னில் இருந்து தாழ்த்தப்படவராய் கருதப்படும் ஒருவரைத் தான் மணம் புரிவேன்என உறுதி பூண்டவர் நீங்கள். என்ன செய்வீர்கள்? சாதி மறுப்புக்காக காதலை கைவிடுவீர்களா? அப்படி செய்தால் அது அபத்தத்தின் உச்சமாக இருக்கும்.
ஆகவே தான் நம் இளைஞர்கள் சாதி தம் காதலுக்கு குறுக்கே நிற்கும் போது மட்டுமே அதை மீறுகிறார்கள். அவை காதல் திருமணங்களே அன்றி, சாதி மறுப்பு திருமணங்கள் அல்ல.
அடுத்து, சாதி மறுப்பு திருமணங்கள் சாதியை மறுக்கின்றனவா?
என் பேராசிரிய நண்பர் ஒருவருடன் இது குறித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அவரது குடும்பத்தில் கிட்டத்தட்ட அனைவருமேசாதி மறுத்து”  மணம் புரிந்தவர்கள். என் குடும்பத்தில் நானும் என் அக்காவும் அப்படியே. இது போல் இன்று பல குடும்பங்கள் உள்ளதாய் நண்பர் சொன்னார். ஆனால் இப்படி செய்தவர்கள் உண்மையில் சாதியை மறுத்து தம் வாழ்வில் இருந்து ஒழித்து விட்டார்களா என நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்னார்சாதியை ஒழிப்பது அவ்வளவு சுலபம் அல்ல”.
 பேராசிரியர் ரா. அழகரசன் தனதுஉட்பகை உணரும் தருணம்நூலில் இதைப் பற்றி ஒரு முக்கியமான சேதியை குறிப்பிடுகிறார். அவரது தந்தை தீவிர பெரியாரியவாதி. ஆனால் ஒரு கட்டத்தில் தான் சேர்ந்த சாதி சங்கமொன்றில் தீவிரமாக பணியாற்றுகிறார். சாதியை எதிர்க்கிற ஒருவர் எப்படி சாதி சங்கம் ஒன்றில் செயலாற்ற முடியும் என ரா. அழகரசனுக்கு புரியவே இல்லை. பின்னர் அவர் சாதி என்பது வெளியே இல்லை, நமக்குள் மறைந்து இருக்கிறது என புரிந்து கொள்கிறார். சாதி என்பது வெளிப்பகை அல்ல, அது உட்பகை. நீங்கள் சற்றும் எதிர்பாராத தருணத்தில் சாதி உணர்வு சட்டென உங்களிடம் இருந்து தலையை தூக்கி வெளியே எட்டிப் பார்க்கும்.
பெண்ணுடலை மையமிட்டே சாதி அமைப்பு உள்ளது என ஒரு நம்பிக்கை உள்ளது. இது ஓரளவு உண்மையே. மரபணுத் தூய்மையை பாதுகாக்க வேண்டும் எனும் ஆவேசம் எல்லா சாதி சமூகங்களிலும் உள்ளது. ஆனால் இது ஒரு நிலப்பிரபுத்துவ சமுதாய மனநிலை என்பதையும் நாம் அறிய வேண்டும். ஒரு கார்ப்பரேட் மயமான சமூகத்தில், நகரவயப்படும் சூழலில் பெண்ணுடலில் இருந்து கவனம் வழுவி மெல்ல மெல்ல விலகி விடும். மாறாக, சாதி நமது சமூக உறவாடல்களில், அதிகார அமைப்புகளில் மையம் கொள்ளும். மரபணுத் தூய்மையே சாதியின் ஜீவன் என நம்புகிறவர்கள்சாதி மறுப்புத் திருமணங்கள்மூலம் அதை சாதிக்கலாம் என கோருகிறார்கள். ஆனால் வேறெப்போதையும் விடசாதி மறுப்புதிருமணங்கள் நிகழும் இன்றைய சூழலில் தான் சாதி முன்பை விட வலுவாக மாறி வருவதை இவர்கள் கவனிப்பதில்லை. திருமணம் ஒரு சாதிக்கொடுமைக்கு தீர்வு என நானும் ஒரு காலத்தில் நம்பினேன். ஆனால் எனக்கு இன்று அந்த நம்பிக்கை இல்லை.
வர்ணாசிரமம் தோன்றின காலத்தில் இருந்து சாதி மறுப்புத் திருமணங்களும், அதில் பிறந்த கலவை சாதி மக்களும் இருந்திருக்கிறார்கள் என அம்பேத்கர் The Untouchables Who They Were… எனும் நூலில் குறிப்பிடுகிறார். நமது அமைப்பு இந்த புதிய சாதியினரையும் அடுக்குக்குள் கொண்டு வந்து விடுகிறது. இவர்களுக்கு சமூகத்தில் என்ன இடம், எப்படியான அந்தஸ்தை அளிக்கலாம் என விதிமுறைகளை அப்போதே வகுத்திருக்கிறார்கள். ஆக, “சாதி மறுப்புத் திருமணங்களால்ஆயிரமாயிரம் ஆண்டுகளால் சாதி எனும் பங்களாவில் இருந்து ஒரு துருபிடித்த ஆணியைக் கூட உருவ முடியவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சாதி மறுத்துதிருமணம் செய்தவர்களும் இச்சமூகத்தில் தான் வாழ வேண்டும். சாதியம் எனும் வழித்தடத்தில் நடந்தே அவர்கள் இங்கு பிறருடன் உரையாட முடியும். உங்கள் சாதி மக்கள் ஒடுக்கப்படுவதாய் நீங்கள் உணர்ந்தால் முதலில் உங்கள் சாதி அடையாளத்தை முன்வைத்தே அவர்களைத் திரட்டிப் போராட முடியும். நீங்கள் மைய சாதி என்றால் அந்த புள்ளியில் நின்றே தலித்துகள் சார்பில் பேச முடியும். சாதியற்ற நிலை ஒன்றில் இருந்து நீங்கள் ஒரு சாதிச் சிக்கலை அணுகவே இயலாது. சாதியற்ற ஒரு பிரதேசமோ, சாதிப் பிரச்சனை இல்லாத ஒரு சூழலோ இங்கு இல்லை. ஆக, நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு சாதியை அழித்து விட்டோம் என கனவு காணலாம். ஆனால் உண்மை என்றும் உண்மை தான்.
சாதியை பிற்போக்கு சமூகத்தின் நிலையாக கருதுவதும், கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வு நம்மை சாதியின்மை நோக்கி நகர்த்தும் என நம்புவதும் பகற்கனவு மட்டும் தான். இந்தியாவில் கல்வியறிவும் பணபலமும் மிக்க சமூகங்களே சாதி வெறி மிக்கவர்களாய் மாறுவதை நாம் காண்கிறோம்.
 விழிப்புணர்வு, பகுத்தறிவு ஆகியவை ஒளிவிளக்கு போல் நம்மை வழிநடத்தும் என்றும் நான் நம்பவில்லை. நாம் முரண்பட்டவர்கள். மிகவும் விழிப்புணர்வு கொண்ட ஒருவர் பகுத்தறிவுக்கு உடன்படாத ஒரு காரியத்தை துணிந்து செய்வார். அவர் பகுத்தறிவானவராகவும் பிற்போக்கானவராகவும் ஒரே சமயம் இருப்பார். மனிதனின் நம்பிக்கையை திருத்தினால் சமூகத்தை சீர்திருத்தலாம் என்பது ஒரு பழைய காலாவதியான மார்க்ஸிய நம்பிக்கை. இன்றைய மனிதன் பிளவுபட்டவன். அவனிடம் இந்த பகுத்தறிவு பிரச்சாரம் எடுபடாது. அவன் ஒரே சமயம் இரண்டாக மூன்றாக நான்காக பிரிந்து சிந்திக்கிறவன்.
நமது சமூகம் சாதிவயமானது. அச்சமூகத்துடன் நீங்கள் உறவாடாமல் வாழ இயலாது. அவ்வாறு உறவாடுகையில் மிகச்சிக்கலான வகையில் உங்களையே அறியாமல் நீங்கள் சாதியவாதி ஆகிறீர்கள். அல்லது சாதியுடன் முரண்பட்டபடியே அதனுடன் வாழும் சுயமுரண்பாட்டு நிலையை மேற்கொள்கிறீர்கள்.
சாதி எந்தளவுக்கு புறவயமானதோ அந்தளவுக்கு அது அகவயமானதும் தான். எனது எளிய புரிதலில், சாதி மறுப்புத் திருமணம், சாதி எதிர்ப்பு போராட்டங்கள், சட்ட திருத்தங்கள், கல்வி, சீர்திருத்தம் ஆகியவை மூலம் மட்டும் சாதி அமைப்பை உடைக்க முடியாது. இவற்றுடன் நமது மனப்போக்கு அடிப்படையில் மாற வேண்டும்.
நான் × பிறிது எனும் இருமையாக வாழ்க்கையை நாம் காணும் வரை சாதி இருந்து கொண்டே இருக்கும். இந்த இருமையை நீங்கள் சாதிக்குள் மறுத்தால் மட்டும் போதாதுவாழ்வின் அத்தனை நிலைகளிலும் இதை மறுக்க வேண்டும். அழகன் × அழகற்றவன், புத்திசாலி × முட்டாள், முற்போக்கு × பிற்போக்கு, பெண்ணியவாதி × ஆணாதிக்கவாதி, இலக்கியம் × இலக்கியமற்றது இப்படி நாம் மறுக்க வேண்டிய இருமைகளின் பட்டியல் நீண்டது.

இதெல்லாம் நடக்கிற விசயமாங்க என நீங்கள் கேட்கலாம். ஆமாம், சுலபமில்லை. சாதியை அழிப்பதும் சுலபமில்லை தான்

Comments

P Vinayagam said…
சாதிகளை அழிக்க முடியா என்று முடித்திருக்கலாம். அதென்ன ''சுலபமில்லை'' என்ற பேச்சு?

சாதிகள் அவசியமா இல்லையா? என்றொரு கேள்வி. இக்கேள்விக்கு பதில் அவசியமில்லை என்று வந்தால், சாதிகள் மறையும். சாதிகள் வெறும் அடையாளங்கள் இல்லை. அவற்றோடு ஒருவனை இன்னொருவன் அடிமை கொள்வது என்ற உணர்வும் உண்டு. நிலபிரபுத்துவ காலத்தில் அவ்வடிமை உண்ர்வு அவசியம். இன்று எவரும் எவருக்கும் அடிமையாக இருக்க தேவைகள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிற்து. அரசே 100 நாள் வேலைத்திட்டத்தைச் செயல்படுத்த தொடங்கியதால், பண்ணை அடிமைகள் கிடைக்காமல் கிராமப் புறங்களில் விவசாயக்கூலிகளே கிடைப்பதில்லை. எனவே விவசாயம் அழிகிறது எனவே இத்திட்டத்தை கைவிடுக என்ற கோரிக்கை அரசிடம் விடப்பட்டிருக்கிறது. இது யு பி ஏ கொண்டு வந்த திட்டம். மோடி தொடர்கிறார். விட்டால், அரசு ஏழைகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுவைக்கப்படும் எனப்தால் தொடர்கிறார்.

அடிமை உணர்வு உருவாக்கப்படுதல் கீழ்சாதிகள் என்று இனத்தவர் உருவாகக் மெத்த காரணம். அடிமைகள் தேவை சமுகத்திற்கு என்பதால் உருவாக்கப்பட்டன. இல்லையெறாகும்போது, ஒரு பெரியதூண் சரிகிறது. அதாவது சாதிகள் இருக்கும்; கீழ்சாதிகள் இருக்கா. சாதிப்பிரச்சினை கீழ்ச்சாதிகள் இருப்பதானால் மட்டுமே உருவாகின்றன என்பதை நினைவில் கொள்க. இன்றைய தமிழகத்தில் தலித்தல்லா சாதிகள் அனைத்தும் தலித்துகளை வெறுக்கின்றன. அடிமைகளாக இருந்தோர் அப்படியே இருக்க வேண்டும். மீறும்போது சாதியினால் சமூகம் அவலப்படுகிறது. அரசும் எப்படி இவர்களை அடிமைத்தளையிலிர்ந்து விடுவிக்கலாமென அரசோடு மோதுகின்றார்கள் வலிமைமிக்க சாதிகள்.

எனவே சாதிகள் ஒழிக்கப்படவேண்டுமென்பது அஜண்டாவே அன்று. போகாத ஊருக்கு வழியைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் ''மாடுமேய்க்கும் புலையா உனக்கு மானம் ஒரு கேடா? என்று நந்தனாரை கேட்டதாக பாரதியார் எழுதிய அடிமை செய்யும் கீழ்சாதிகள் எங்களுக்கிணையாக வரக்கூடா என்ற ஆதிக்கத்திமிரை அடக்கினால் போதும்.. இந்த ஆதிக்கத்திமிரின் பயஙகர அடையாளமே ஆணவக்கொலைகள்.

நீங்கள் வேறு சாதிப்பெண்ணை மணந்ததால் சாதிகள் மீறப்படவில்லை என்கிறீர்கள். ஆனால் மீறப்படுகிறது. உஙக்ள் ஜாதிதான் உங்கள் குழந்தைகளுக்கு. உங்கள் மனைவியின் ஜாதி மணநாளிலிருந்து அழிக்கபப்டுகிறது; அடக்கப்படுகிறது; மீறப்படுகிறது. சட்டத்தில் உங்கள் மனைவியின் ஜாதி மட்டுமன்று மதமும் அழிக்கப்படாது என்று இருநாட்களுக்கும் முன் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உண்மை வாழ்க்கையில்? உங்கள் மனைவி இழந்தது ஜாதியும் மதமும் மட்டுமல்ல. பெண் என்ற அடையாளத்தைத் தவிர மற்றெல்லாவற்றையும்தான்.

வேட்டி-கோயில் என்று சொல்கிறீர்கள். சில மணங்கள் தலித்து பெண் அல்லது ஆணைத் தேர்ந்தெடுத்து மணமுடித்தல். அத்தகைய மணங்கள் சாதி மறுப்பு மண்ங்களே. அவளின்/ அவனின் கீழசாதி என்ற் அடையாளத்தை நான் உடைத்தேன் என்று பொருள்.

பள்ளிகள், அரசு இயந்திரங்கள் ''சாதி என்ன?'' என்று கேட்க நிலை ஒழிக்கப்படும்போது, சாதித் தூணில் இன்னொனறு உடைக்கப்படுகிறது. ஆக, சாதிகள் இல்லா நிலைக்கு தனிமனிதன் அகவுணர்வோ, புறவுணர்வோ தேவையில்லை. சாதிகளின் அவசியத்தை (முக்கியமாக கீழ்சாதிகள்) நீர்த்துச செய்யும் கரணியங்கள் உருவாக்கப்படும் போது, சாதிகள் வேண்டா நிலை உருவாகும். ஒன்றுக்குமுதவாததைக் கட்டிக்கொண்டு அழ நாமென்ன முட்டாளகளா?
Anonymous said…
Hi Sir,
Difficult to eradicate 'caste' from 'religion'but not impossible.
Below is a good read ..Swami Vivekanand's. Please go thru. Tks and Regards.

http://www.dlshq.org/messages/caste.htm
Arinesaratnam Gowrikanthan said…
திருமணத்தின் போது கடைப்பிடிக்கப்படவேண்டிய பிரதான கோட்பாடு. காதலித்த பெண்ணைத்தான் திருமணம் முடிக்கவேண்டும் என்பதுவும், காதல் இல்லாத திருமணங்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதுமேயாகும். காதலிக்கும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பிரதான கோட்பாடு, காதல் என்பது இருவர் (அது ஆண்,பெண் உள்ளங்களாக மட்டுந்தான் இருக்கவேண்டியதில்லை) மனதாலும், கருத்தாலும், உடல் வேட்கையாலும் ஒருவருடன் பிணைந்து கொள்ளவேண்டுமென இயல்பாக உருவாகும் அவாவேயாகும். இவை தவிர வேறு எவையும் காதலை ஊக்கப்படுத்தவும் கூடாது காதலுக்குத் தடையாக இருக்கவும் கூடாது. ஆகவே கலப்புத்திருமணங்களை ஊக்குவிப்பது ஒரு முற்போக்கு நடவடிக்கையாக இருக்கமுடியாது. காதலை ஊக்குவிப்பது முற்போக்கானதல்ல. ஏனெனில் காதலை எவராலும் ஊக்குவிக்க முடியாது. அது இயல்பாகத் தோன்றவேண்டும். ஆகவே காதலுக்கு எந்தத் தடைகளும் இருக்கக்கூடாத நிலையைத் தோற்றுவிப்பதே முற்போக்காகும். அப்போதுதான் அரோக்கியமான குடும்பங்கள் உருவாகும். ஆரோக்கியமான குடும்பங்கள்தான் ஆரோக்கியமான சமூகத்துக்கான அடித்தளமாகும். சாதிமாற்றுத் திருமணங்கள் அனைத்தும் ஆரோக்கியமான குடுபத்தைத்தான் உருவாக்கும் எனக் கூறமுடியாது. தாம் ஒரு கொள்கையாளன் என்ற பதக்கத்திற்காக, சாதி மறுப்புத் திருமணமும், தமது உளமகிழ்விற்காக ‘சின்னவீடுகளும்’ வைத்திருக்கும் ஆண்கலும் உள்ளாரகள், பெண்களும் உள்ளார்கள். ஒரே சாதிக்குள் செய்யப்பட்ட திருமணங்கள் அனைத்தும் அரோக்கியமற்ற குடுமபத்தைத்தான உருவாக்குகின்றனவா என்றால் அதுவும் இல்லை.