ரோஹித் ஷர்மா அடுத்த அணித்தலைவரா?

Image result for rohit sharma
ரோஹித் ஷர்மாவின் அணித்தலைமை பாணி முன்னாள் இலங்கை அணித் தலைவர் ஜெயவர்த்தனேவை நினைவுபடுத்துவது. ஜெயவர்த்தனே உலகின் தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவர் என்பது என் நம்பிக்கை. அவர் தலைமையின் கீழ் இலங்கை 2007 உலக்கோப்பை இறுதிப் போட்டியை எட்டியது. 2012 T20 உலக்கோப்பை இறுதிப் போட்டியையும் எட்டியது. இரண்டு உலக்கோப்பை தொடர்களிலும் அவர் தன் அணி வீர்ர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியது, எந்த பதற்றமும் அவர்களை தாக்காமல் கூலாக இருக்க வைத்தது, அட்டகாசமான களத்தடுப்பு மற்றும் வியூகங்கள் அமைத்தது ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 2007 உலக்கோப்பையில் அவர் மலிங்கா மற்றும் முரளிதரனை பயன்படுத்தி எதிரணியினரை நடுங்க வைத்த விதம் இன்னும் நினைவில் உள்ளது. இலங்கையின் 11 பூனைகளை அவர் புலிகளாய் தோன்ற வைத்து எதிரணியினரின் இதயத்துடிப்பை எகிற வைத்தார். ஒவ்வொரு ஆட்டத்திலும் முரளி தான் எதிரணிக்கு சிம்ம சொப்பனம். ஆனால் ஜெயவர்த்தனேவோ முரளியை ஆட்டத்தில் அறிமுகப்படுத்துவதை வேண்டுமென்றே தாமதிப்பார். முரளியை அடிக்க முடியாது என பயந்து வேறு வீச்சாளர்களை தேவையின்றி அடித்தாடி எதிரணிகள் சரிய, இறுதியில் முரளி வந்து பூஜை போட்டு காரியத்தை முடிப்பார். ஜெயவர்த்தனே ஒரு அணித்தலைவர் மட்டுமல்ல, எதிரணியை ஹிப்னாட்டைஸ் செய்ய வல்ல ஒரு உளவியலாளருமே.

இவ்விசயத்தில் ஜெயவர்த்தனே இலங்கையின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கா மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் நசிர் ஹுசேன் ஆகியோரை நினைவுபடுத்துகிறார். ரோஹித்-ஜெயவர்த்தனே-ரணதுங்கா மூவரும் மெத்தனமாய் தெரிபவர்கள். ஆனால் நீறுபூத்த நெருப்பாய் ஆவேசத்தை தமக்குள் அடக்கி தேவையானபடி காட்டுபவர்கள்.
உலகில் இத்தகைய தலைவர்கள் அரிது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராய் ரோஹித் இயங்குவது பார்க்க எனக்கு மிகுந்த வியப்பு ஏற்படும். மிக சிக்கலான வயிற்றை கலங்க வைக்கும் பதற்றமான் ஆட்டங்களின் போது அவர் அசரவே செய்யாமல் அணியை வழிநடத்துவார். இதோ தோற்கப் போகிறது எனும் நிலையிலும் ஏதாவது ஒரு புது அஸ்திரத்தை வெளியே எடுத்து எதிரணி பேட்ஸ்மேனிடம் காட்டுவார். அவர்கள் பந்தை எங்கெங்கே அடிப்பார்கள் என்பதெல்லாம் ரோஹித்துக்கு அத்துப்படி.
ரோஹித் இதுவரை மூன்று முறை மும்பை அணியை .பி.எல் கோப்பையை வெல்லச் செய்திருக்கிறார் – 2013, 2015 மற்றும் 2017. இவ்விசயத்தில் ரோஹித் தோனியின் .பி.எல் சாதனையை முறியடிது விட்டார் (தோனி இரண்டு .பி.எல் கோப்பைகள் மட்டுமே வென்றிருக்கிறார்.) கோலி ஒருமுறை கூட .பி.எல்லில் கோப்பை வென்றதில்லை என்பது மட்டுமல்ல அவரது T20 அணித்தலைமை சாதனை மிக மிக மட்டம். .சி.சி தர வரிசையில் இந்தியா 5வது இடத்தில் இருக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கோலியின் அணி முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் இருக்கிறது. ஆனால் கோலியின் அணித் தலைமை அப்பழுக்கானது அல்ல. மாறாக, அது ஓட்டைகள் நிறைந்தது.
முதலில், கோலிக்கு நிதானம் இல்லை. தன் திட்டப்படி ஆட்டம் செல்லவில்லை என்றாலோ அவர் முழுக்க தன்னிலை இழந்து ஆட்டத்தை கட்டுப்படுத்த தவறி விடுவார். திருமணத்தன்று மணமகள் ஓடிப் போன மணமகன் போல் நடந்து கொள்வார். கோலியின் தலைமை என்பது 120 கி.மீ வேகத்தில் ஓடும் கார் போன்றது. சாலையில் கவிழாமல் ஓடும் வரை அபாரம். ஆனால் சின்ன விபத்து ஏற்பட்டால் கார் அப்பளமாகி விடும்.
இன்னொரு சிக்கல் கோலியின் வியூகத் திறன்கள் கேள்விக்குரியவை. தன் அணி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது அவரிடம் வியூகங்களோ பதில்களோ இருப்பதில்லை.
புது வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை அமைதிப்படுத்தி சிறப்பாய் திறமையை வெளிப்படுத்த செய்வதில் கோலி திறமையானவர் அல்ல. மிகுந்த பாரபட்சம் கொண்டவர். தலைமை ஏற்ற புதிதில் அவர் புஜாராவை கையாண்ட விதம் கடும் விமர்சனத்துக்குரியது. அதே போன்றே, ஒருநாள் அணியில் நான்காவது வரிசையில் யார் மட்டையாடுவது எனும் கேள்விக்கு இன்னும் விடையில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு புது ஆளை இறக்கி விட்டு, அடுத்த ஆட்டத்திலும் அவரை நீக்கி பழையவரை கொண்டு வந்து பல குழப்பங்களை கோலி விதைத்தார். விளைவாய், யாராலும் அவ்விட த்தில் நிலைத்து ஆட முடியவில்லை. நீங்கள் நிம்மதியாய் உட்கார்ந்து நெட்டி முறிக்கும் போது ஒரு குழந்தை வந்து நாற்காலியை கவிழ்த்து விடுமே. கோலி அப்படியானவர். அணிக்குள் பதற்றம் நிலவுகிறது. அவர் எப்போது என்ன முடிவெடுப்பார் எனத் தெரியாத பதபதைப்பில் வீரர்கள் இருக்கிறார்கள். முன்னாள் அணித்தலைவர் கும்பிளேவை துச்சமாய் நடத்தி அரசியல் செய்து அணியில் இருந்து அவர் நீக்கிய விதம் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா உள்ளூரில் ஆடுவதாலும் சாதகமான சூழில் தொடர்ந்து வெல்வதாலும் இந்த பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கவில்லை. ஆனாலும் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியா வெளிநாடுகளில் ஆடி தோல்விகளை தழுவ நேரிட்டால் கோலியின் அணித்தலைமையின் ஓட்டைகள் பல அப்பட்டமாகும்.

இந்த சூழலில், இப்போது நடந்து வரும் இந்தியா-இலங்கை தொடரில் கோலியின் ஓய்வை கோரியதைத் தொடர்ந்து அவர் இடத்தில் ஒருநாள் அணியின் தலைவராய் ரோஹித் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரோஹித்தின் அணித்தலைமை சர்வதேச ஆட்டங்களில் எப்படி இருக்கும் என நாம் பார்க்கப் போகிறோம். இதைத் தொடர்ந்து T20 அணியின் நிரந்தர தலைவராய் ரோஹித்தை நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகிறார்கள். கோலிக்கு மாற்றாக மற்றொரு தலைவர்அவருக்கு நேர் எதிரான குணாதசியங்கள்  கொண்ட ஒருவர் மேலெடுக்கப்படுவது இந்திய அணியின் மேம்பாட்டுக்கு, வளர்ச்சிக்கு அவசியம். வரும் ஆண்டுகளில் கோலிக்கு பதிலாய் யார் எனும் கேள்வி வலுப்படுவது நிச்சயம். அப்போது நமக்கு இன்னொரு பெயர் வேண்டும். ரோஹித்தின் தேர்வை அவ்விதத்தில் தேர்வாளர்களின் ஒரு சிறந்த காய் நகர்த்தல் எனலாம்
நன்றி: கல்கி, டிசம்பர் 2017

Comments