ரஜினிகாந்தும் காவிரி நீரும்

Image result for rajinikanth modi
ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரின் பேட்டியை - வழக்கமான ரஜினி அரசியலுக்கு எப்பத்தான் வருவாருங்க டைப் பேட்டி - சன் டிவியில் பார்த்தேன். ராஜ் பகதூர் டிவியில் அரசியல் பேசி பரிச்சயமற்றவர் ஆகையால் அவரது பேச்சில் அப்பாவித்தனமும், அதனூடே உண்மையும் அவ்வப்போது பளிச்சிட்டது.
 இந்த வகையான பேட்டிகள் இப்போது ஒளிபரப்பாவது முக்கியம். ஏனெனில் ரஜினி கட்சி ஆரம்பித்த பின் பாஜக நியமிக்கும் நேர்த்தியான தந்திரமான பேச்சாளர்கள், தரகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ரஜினியை சூழ்ந்து கொள்வார்கள். கச்சிதமா தந்திரமாய் அவர்கள் பேசுவார்கள். ரஜினி உண்மையில் என்ன தான் யோசிக்கிறார், என்ன தான் பண்ணுகிறார், அவரைச் சுற்றி என்ன தான் நடக்கிறது என நமக்கு தெரியாமல் போகும். ஆனால் ராஜ் பகதூர் போன்றவர்களோ ஒரு கண்ணாடிச் சுவர் போல. அவர் பேசுகையில் அவர் ஊடாக  நாம் நிறைய கவனித்து புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலே எனக்கு இப்பேட்டி பிடித்திருந்தது.

 உ.தா, இப்படி ஒரு கேள்வி:ரஜினி ஒரு அரசியல் தலைவராக இயங்கும் சந்தர்ப்பம் வரும் போது காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை வருகிறது. அவர் கர்நாடகத்தின் மண்ணின் மைந்தன், ஆனால் தமிழக மக்களின் பிரதிநிதி. இப்போது அவர் என்ன முடிவெடுப்பார், யாரை ஆதரிப்பார்?” இதற்கு ஒரு பயிற்சி பெற்ற அரசியல் பேச்சாளர்ரஜினி ஒரு தமிழக தலைவராக எப்போதும் தமிழக நலன் சார்ந்து மட்டுமே சிந்திப்பார். அதில் துளியும் ஐயம் கொள்ள அவசியம் இல்லை.என பொதுப்படையாய், ஆனால் பொய்யான, பதிலை அளித்திருப்பார். ஆனால் ராஜ் பகதூர் தன் இதயத்தில் இருந்து, வெளிப்படையாய் இவ்வாறு சொல்கிறார்:இல்லிங்க ரஜினி கர்நாடகாவை சேர்ந்தவர் என்கிறதால அவரால அங்க போய் நமக்காக பேச முடியும்.
உடனே நிருபர் கேட்கிறார்:அப்படீன்னா காவிரி நீர் வாங்கிக் கொடுத்து விடுவாரா?”
ஆமாங்க வாங்கித் தருவார், கொஞ்சமா வாங்கித் தருவார்.

இந்தகொஞ்சமாமுக்கியமான சொல். இது அவரையும் அறியாமல் அவர் வாயில் இருந்து நழுவி விழுந்த சொல். ரஜினி எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பற்றி அவரை நெருக்கமாய் அறிந்த உற்ற நண்பர் ராஜ் பகதூர் என்ன நினைக்கிறார் என நாம் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம். ரஜினி என்ன செய்வார்? அவர் கர்நாடகாவையும் பகைக்க மாட்டார், தமிழகத்துக்காய் துணிச்சலாய் இறங்கவும் மாட்டார். குழம்பிப் போவார். நிறைய யோசிப்பார். இரு தரப்புக்காகவும் இரண்டு பக்கமும் நிறைய பேசுவார். கடைசியில் ஒன்றுமே பண்ண மாட்டார். பூசி மொழுகிக் கொண்டே இருப்பார். தன் நண்பர் இப்படித் தான் பண்ணுவார் என ராஜ் பகதூர் சொல்ல நினைக்கவில்லை. சொல்லவும் மாட்டார். ஆனால் அவர் மனதுக்குள் ரஜினி பற்றி இருக்கக் கூடிய பூடகமான சித்திரம் இருக்கிறது. அதுவே அவரையும் அறியாமல் இங்கே வெளிப்பட்டிருக்கிறது. அவர் வாயில் இருந்து நழுவியகொஞ்சமாகஎனும் சொல் இதை நமக்கு தெளிவாக காட்டி விட்டது. இப்படி நழுவி விழும் சொற்களை பிராயிட் parapraxis என்றார். இதை கவனித்து அலசினால் சொல்பவரின் மனதுக்குள் என்ன நடக்கிறது என்பதை நாம் ஊகித்து விடலாம்.

ரஜினியை பற்றி இன்னொரு கேள்வி அவரது பிரவேசம் எப்போது தமிழக அரசியலில் நிகழும் என்பது. ராஜ் பகதூர் விரைவில் நிச்சயமாய் என்பது. அவர் எச்சில் முழுங்கி முணுமுணுத்த வேறு சில சொற்களில் இருந்து இவ்வாறு தொகுக்க முடிகிறது: ரஜினி இப்போது பிஸியாக இருப்பதால், வேறு ஏதோ சொல்ல விரும்பாத காரணங்களாலும் உடனடியாய் அரசியலில் முழுமூச்சாய் செயல்பட மாட்டார். அவை என்ன காரணங்களாக இருக்கும்?
  1. சினிமா. ரஜினி எனும் பந்தயக் குதிரை மீது பல நூறு கோடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர் சும்மா ஒருநாள் முடிவெடுத்து மற்றவர்களைப் போல் அரசியலில் இறங்க முடியாது. அரசியலில் தோற்றால் அவரால் சினிமாவுக்கு திரும்ப முடியாது. அதனால் ஏற்படும் நட்டம் மீட்டெடுக்க முடியாததாக இருக்கும். ஆனால் சினிமா பணிகளை முழுக்க, முடிந்தளவுக்கு மூட்டை கட்டி பரணில் போட்ட பிறகே அவர் அரசியலுக்கு வருவார்.
  2. ஆனால் ரஜினியின் சினிமா பணிகள், சினிமாவில் அவரது வணிக மதிப்பு அப்படி சுலபத்தில் மூட்டை கட்டக் கூடியதா? நிச்சயம் இல்லை. அப்படி எனில் அவர் ரிஸ்க் எடுத்து அரசியல் நுழைவது பொருளாதார ரீதியாய் எப்படி லாபகரமாய், நடைமுறை நியாயம் கொண்டதாய் இருக்கும்? இங்கு தான் அடுத்த காரணம் வருகிறது. அரசியல் அவருக்கு சினிமாவைப் போன்றே மற்றொரு புரோஜெக்டாக இருக்கப் போகிறது. எப்படி?
கமல், ரஜினி, விஜய், விஷால் என வரும் தேர்தலில் நடிகர்களின் பிரவேசம் பெரும் ஆட்டு மந்தை ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்வது போல் இருக்கப் போகிறது. இந்த மந்தையை வழிநடத்தும் அந்த சிறுவன் தான் பாஜக. பாஜகவின் பிரதான நோக்கம் வாக்குகளை பிரித்து சிதறடிப்பது. பெரும்பான்மையுடன் திமுக வெல்லாமல் பார்த்துக் கொள்வது. ஒருவேளை அப்படி நிகழும் எனில், தமிழ் வாக்காளர்கள் சிதறுவார்கள் தேங்காய் சொல்லுகளை பொறுக்கி ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து பாஜக தலைவர் ஒருவரை முதல்வராக்குவார்கள். இதில் இந்த நடிகர்களுக்கு என்ன பயன்?

இதற்கு முந்தையை தேர்தல்களில் இப்போது போல் முன்னணி நடிகர்கள் பங்கு பெற தயாராக இல்லை. ஒன்று, திராவிட கட்சிகள் அதை விரும்பவில்லை. அக்கட்சிகளை பகைத்து சினிமா வாழ்க்கையை அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் இப்போது பாஜகவின் அரசியல் வியூகங்களின் படி செயல்பட்டால் இந்த நடிகர்களுக்கு இழக்க பெரிதாய் ஒன்றும் இருக்காது. ஏனெனில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தான் வெல்லப் போகிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வியூகங்கள் மண்ணைக் கவ்வினாலும் இந்த நடிகர்களுக்கு பெரிய ஆபத்துகள் இருக்காது. மோடியின் தயவு உள்ளவரை அவர்களுக்கு என்று ஒரு தனியான தவிர்க்க முடியாத அதிகார மையம் மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும். ஆக அவர்கள் தம் சினிமா வாழ்க்கையை தொடர முடியும். ஆகையால் தான் அரசியலுக்குள் நுழைய விஜயகாந்த், சரத்குமார் போல தம் மவுசு குறைந்து இல்லாமல் ஆகும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

ஆகை அரசியல் என்பது இவர்களுக்கு ஒரு தற்காலிக புரோஜெக்ட் மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் பாஜக அளிக்கும் சில நூறு கோடிகளை வாங்கி பாதியை செலவழித்து விட்டு மீதியை இருப்பில் வைத்துக் கொள்ளலாம். தோற்றாலும் ஜெயித்தாலும் அவர்களுக்கு இறுதியில் லாபமே.


Comments

vijay said…
.// இந்த மந்தையை வழிநடத்தும் அந்த சிறுவன் தான் பாஜக. பாஜகவின் பிரதான நோக்கம் வாக்குகளை பிரித்து சிதறடிப்பது. பெரும்பான்மையுடன் திமுக வெல்லாமல் பார்த்துக் கொள்வது. ஒருவேளை அப்படி நிகழும் எனில், தமிழ் வாக்காளர்கள் சிதறுவார்கள் தேங்காய் சொல்லுகளை பொறுக்கி ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து பாஜக தலைவர் ஒருவரை முதல்வராக்குவார்கள்//
மிக அருமையான ஓர் எதிர்வு கூறல் .