இன்றைய வாசிப்பு சூழல்


அன்புள்ள  அபிலாஷ் சாருக்கு,
                               வணக்கம்.உங்கள் பதிலுக்கு நன்றி.மூத்த எழுத்தாளர்களால் சிறந்த புத்தகமாக பரிந்துரை செய்யப்பட்டு 
அதை அவர்களின் கோணத்திலேயே படித்து விடுவது சில சமயங்களில் நடந்து விடுகிறது.2007ல் நான் இலக்கியம் வாசிக்க துவங்கிய நாட்களில் இவ்வளவு விமர்சனங்கள், பரிந்துரைகள் இல்லை.
இன்றையசூழல் ரசனையும் ,நுண்ணுணர்வும்  சார்ந்து வாசகனுக்கேற்ற புத்தகங்களை நோக்கி நகர்த்தும் வாய்ப்பை குறைத்து விட்டதாகவே கருதுகிறேன். 

பிரியங்களுடன்,
ஜானகிராமன்

Related image
அன்புள்ள ஜானகிராமன்
இன்று ஒரு பக்கமும் நிறைய புத்தகங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் வாங்கிப் படித்து அவற்றைப் பற்றி கருத்துக்களை பகிர்வதற்குமான ஒரு அருமையான சூழல் உள்ளதென்றே நம்புகிறேன். ரசனையையும் நுண்ணுணர்வையும் பொறுத்தமட்டில் சில பத்தாண்டுகளில் நாம் முழுக்க மாறி விட்டதாய் நான் நம்பவில்லை. தமிழில் என்றுமே நுட்பமான வாசகர்கள் எண்ணிக்கையில் குறைவே.

ஆனால் நீங்கள் சொல்வதும் உண்மையே. அதற்கான காரணம் மட்டும் இலக்கியத்துக்கு வெளியே உள்ளதென நினைக்கிறேன்.
 தீவிரமான நூல்களை தொடர்ந்து வாசிப்பதற்கு கவனமும் உணர்ச்சிக்குவிப்பும் நேரமும் ஒழுக்கமும் வேண்டும். நம்மில் பலருக்கும் அப்படி ஒரு துறவியை போல் ஒடுங்கி இருந்த படிக்க முடிவதில்லை. மேலும் இன்றுள்ள கவனச்சிதறலான மீடியா கலவரச் சூழலும் ஒரு காரணம். திடீரென ஊரே கூடி ஒகி புயல் எனும், அடுத்த நாள் மீனவர்களின் போராட்டம், அடுத்து திருமாவும் பா.ஜ.க தலைவர்களும் … இப்படி ஊடகங்கள் நம் அனைவர் மனங்களையும் ஒற்றைப் புள்ளியில் குவிக்க முயன்று வெற்றி கொள்கின்றன. இலக்கிய வாசிப்பு என்பது பொதுப்போக்குக்கு நேர் எதிராய் நிலைகொள்வது, விளிம்பில் நிற்பது, மையம் நோக்கி நகர்வது அல்ல.
அதேவேளை எழுபது, எண்பதுகளில் போல நாம் இன்று பொதுநீரோட்டத்தில் இருந்து விலகி நிற்க முடியுமா என்பது ஐயமே. நாம் இன்று அனைத்து மேம்போக்கான காரியங்களை ஒரு பக்கம் கவனித்து, அவற்றில் எண்ணத்தை செலுத்தியபடியே இன்னொரு பக்கம் விலகியும் நிற்க வேண்டியிருக்கிறது. நான் இவர்களுடன் இருக்கிறேன், ஆனால் நான் வேறு ஆள் எனும் பிரக்ஞை இன்று நமக்கு அவசியம். இதை ஒரு பாலத்தில் நடப்பதுடன் ஒப்பிடலாம். பாலத்தில் நடக்கையில் நீங்கள் மண்ணிலும் இல்லை, வானத்திலும் இல்லை, ஆனால் இரண்டின் நடுவிலும் இருக்கிறீர்கள். அப்படித் தான் இன்றைய வாசகன் தன் நுண்ணுணர்வை தக்க வைக்க முடியும்.
இலக்கிய நுண்ணுணர்வை வளர்க்க தீவிர குழுக்கள் அவசியம். நான்கு பேர் சேர்ந்து வாரம் ஒருமுறை தாம் படித்த விசயங்களைப் பற்றி விவாதித்தாலே அவர்களின் கற்பனையும் அக நுட்பமும் பலமடங்கு வளரும். வாசிப்பு என்பது உண்மையில் ஒரு கூட்டு நடவடிக்கை. உங்கள் மனதுடன் இணைந்து வாசிக்கையிலே தான் என் மனமும் விரிவு பெறும்.
இதற்கு நேர்மாறாய் இன்று புத்தக விற்பனைக்கான விளம்பர பரிந்துரைக் கட்டுரைகள், எழுத்தாளர் பேட்டிகள், புரொமோ டிரையிலர்கள், இலக்கிய கூட்டங்கள், சிற்றுரை பேருரைகள் நடக்கின்றன. இவை சமூகமாக்கல், விற்பனை, சந்திப்பு, ஆறுதல் ஆகியவற்றுக்கு பயன்படுமே அன்றி வாசிப்பு நுண்ணுணர்வை நீங்கள் இவற்றில் இருந்து பெற முடியாது. ஆனால் இந்த அற்ப சமாச்சாரங்கள் இன்றி நீங்கள் இலக்கியத்தில் செயல்படவும் முடியாது. புத்தகங்களை பிரசுரித்து பரபரப்பாக்கி வாசகர்களிடம் கொண்டு சேர்க்க இத்தகைய ஒரு “கட்சி மாநாட்டு” சூழலும் அவசியம் தான்.
இச்சூழல் ஒரே சமயம் இப்படி இலக்கியத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் இருக்கிறது. நாம் இதை சாமர்த்தியமாய் பயன்படுத்த வேண்டும். இதை நீங்கள் திருமண நிகழ்ச்சியின் போது வரும் கூட்டம், அவர்களின் இரைச்சல், குழப்பம், கவனச்சிதறல், சண்டை சச்சரவு, மொய், விருந்து, மீதமாகும் உணவு, கசகசப்பு, செருப்புகள் ஆகியவற்றுடன் ஒப்பிடலாம். உண்மையான திருமண வாழ்வு இவர்கள் எல்லாம் இடத்தை காலி பண்ணின பிறகு தான் ஆரம்பமாகும். இவர்கள் இன்றி திருமணமே நடக்காது. இவர்களின் அன்பும் அங்கீகாரம் ஆதரவும் முக்கியம். ஆனால் திருமண நாளுக்குப் பிறகும் இவர்கள் கிளம்பாமல் தங்கி விட்டால் தம்பதியினர் வாழ்க்கையை ஆரம்பிக்கவே முடியாது.

இந்த புத்தகக் கண்காட்சியின் அத்தனை சத்தமும் நமக்கு மிகவும் தேவை. ஆனால் இது முடிந்த பிறகு தான் உண்மையான இலக்கிய செயல்பாடுகள் நடக்கும். வெளிச்சமும் ஒலியும் பிடிக்காத கரப்பான்பூச்சிகளை போல் உண்மையான எழுத்தாளனும் வாசகனும் வெளியே வந்து அடுத்த நவம்பர்-டிசம்பர் வரை வேலை செய்வார்கள். அடுத்து அவர்கள் மீண்டும் இருட்டுக்குள் மறைந்து விடுவார்கள்.

Comments

Anonymous said…
தீவிரமான நூல்களை தொடர்ந்து வாசிப்பதற்கு கவனமும் உணர்ச்சிக்குவிப்பும் நேரமும் ஒழுக்கமும் வேண்டும். நம்மில் பலருக்கும் அப்படி ஒரு துறவியை போல் ஒடுங்கி இருந்த படிக்க முடிவதில்லை. மேலும் இன்றுள்ள கவனச்சிதறலான மீடியா கலவரச் சூழலும் ஒரு காரணம். இலக்கிய வாசிப்பு என்பது பொதுப்போக்குக்கு நேர் எதிராய் நிலைகொள்வது, விளிம்பில் நிற்பது, மையம் நோக்கி நகர்வது அல்ல.
Well said