காந்தியும் பெண்களும்

Image result for ஆப்பிளுக்கு முன் சரவணகார்த்திகேயன்


தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு சுலபமான காலகட்டத்தில் வாழ்ந்தாலும் காந்தியின் துணிச்சல் நமக்கு உண்டா?
 நமது படுக்கையறையில் என்னென்ன விசித்திரங்கள் நடக்கின்றன என சொல்ல தைரியம் உண்டா? சொல்லப் போனால் இன்று தான் நாம் நமது அந்தரங்கங்களை ரொம்ப கவனமாய் மறைத்து தேர்ந்தெடுத்த ஒரு சில விசயங்களில் மட்டும் மிக வெளிப்படையாய் இருக்கிறோம். ஒருவித நேர்மறை பட்டவர்த்தமே நமக்கு ஏற்ற இன்றைய துணிச்சல், நமக்கு தோதான வெளிப்படை, முகம் சுளிக்க வைக்காத சுய தம்பட்டம்.
 ஆனால் காந்தி எந்த ஊடகங்களும் துணைக்கில்லாத ஒரு காலத்தில் தன்னை அநாவசியத்துக்கு வெளிப்படையாய் வைத்துக் கொண்டவர். குறிப்பாய் தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளை (இளம்பெண்களுடன் பாலியல் இச்சையின்றி படுத்துக் கொள்வது) அவர் வெளிப்படையாய் பேசினதும் முன்வைத்ததும் அவரது அரசியல் மற்றும் ஆன்மீக பிம்பத்துக்கு அவரே சூனியம் வைத்தது போல் ஆனது. எப்போதும் போல் பிடிவாதமாய் என் தரப்பே சரி என அவர் தன் பரிசோதனைகளை இறுதி வரை தொடர்ந்தார்.
இந்த பாலியல் பரிசோதனையின் நோக்கம் தான் என்ன?
செக்ஸை இச்சை நமது ஆதாரமான இயங்கு சக்தியாக உள்ளது. அதை கட்டுப்படுத்தினால் மனத்தை மிகுந்த ஆற்றலுடன் ஆவேசத்துடன் மழுங்காத கூர்மையுடன் செலுத்த இயலுமென காந்தி நம்பினார். நாற்பது வயதுக்கு மேல் பிரம்மச்சரியத்தை பின்பற்றத் துவங்கினார். இதில் பெரிய சாதனை ஒன்றுமில்லை தான். இன்று கூட முப்பது வயதுக்கு மேலான ஆண் பெண்கள் பலரும் பிரம்மச்சாரிகள் தாம். திருமணம் நடந்ததோ இல்லையோ ஒரு கட்டத்துக்கு மேல் செக்ஸை மறந்து பிற கடமைகளில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் நமக்கு ஏற்படுகிறது. அல்லது உடல், மன ரீதியான காரணங்கள் மற்றும் சந்தர்ப்ப சூழலால் செக்ஸ் பற்றாக்குறை அனைவரின் மென்னியையும் நெரிக்கிறது. இதன் விளைவாக சதா கண்ணில் பசியுடன் நாம் திரிகிறோம். மனம் அமைதியற்று இருக்கையில் செயலில் தெளிவிருக்காது. இதை காந்தி உணர்ந்தார்.
 பிரம்மச்சாரியாக இருப்பது பெரிதில்லை; பெண் ஆசையை தவிர்ப்பது கூட துணிவில்லை; பெண்ணின் அருகாமையில் இருந்து கொண்டே தான் ஆண் எனும் உணர்வெழாமல் இருப்பதே உண்மையான சாதனை என அவர் கருதினார். இது தன்னை ஆன்மீக ரீதியாய் மகிழ்ச்சியான, தெளிவான, ஆற்றல் மிக்க மனிதனாய் உருவேற்றும் என அவர் நம்பினார். இது தான் மனைவி தவிர்த்த பிற பெண்களுடன் படுக்க அவரைத் தூண்டியது.
 பாலுணர்வின்றி ஒரு குழந்தை போல் இப்பெண்களுடன் துயில அவர் பழகினார். இத்தேர்வில் பெரும்பாலும் தான் வென்றிருப்பதாகவே காந்தி கூறியிருக்கிறார். சரவணகார்த்திகேயனின் “ஆப்பிளுக்கு முன்” நாவல் இந்த சிக்கலான பரிசோதனை காலகட்டத்தை எடுத்துக் கொண்டு விவாதிக்கிறது. மிக நுணுக்கமாய் சாமர்த்தியமாய் கவித்துவமாய் இப்பிரச்சனையை அவர் விரித்துக் கொண்டு போகிறார். நம்மை ஆச்சரியப்படுத்தும் படி மனித மனத்தின் சில பக்கங்களை திறந்து காட்டுகிறார். இந்நாவலின் கதைக்களனே இதை அவர் எழுதும் முன்னரே மிக முக்கியமானதாக்கி விட்டது. அவர் இக்கருவை கையாண்டுள்ள விதம் தமிழில் என்றும் நாம் மறக்க முடியாத ஒரு நாவலாக இதை மாற்றி விட்டது.
சரி இனி சரவணகார்த்திகேயன் எப்படி கையாண்டிருக்கிறார் என பார்ப்போம்.
வெளிப்படையாய் இந்நாவல் காந்தியின் பரிசோதனைகளை ஒரு உயர் ஆன்மீக சாதனையாய் சித்தரிப்பதாய் தோன்றும். உண்மை தான். காந்தியின் மன எழுச்சியை, உன்னதத்தை, தன்னை பிறருக்காய் அழிக்கும் அவரது தார்மீகத்தை நாவல் தத்ரூபமாய் காட்டும் இடங்கள் நம்மை மிகவும் நெகிழ வைக்கின்றன. ஒரு விதத்தில் லூயிஸ் பிரஷ்ஷரின் Life of Gandhi வாழ்க்கை சரிதைக்கு இணையாக இந்நாவல் உள்ளது. அதில் வரும் காந்தி ஒரு மகான். ஒரு அவதார புருஷன். தன் ஆன்மீக துணிவால் மக்கள் மனங்களை கோயில் தீபங்களாய் சுடர்ந்து எழச் செய்த மாமனிதர். காந்தியின் மீதுள்ள நம்பிக்கையும் பிரியமும் எப்படி கலவரங்களை கட்டுப்படுத்தின, உப்பு சத்தியாகிரகத்தின் போது வரிசைக்கிரமமாய் மக்கள் நின்று அடி வாங்கி மண்டை பிளந்து அச்சமின்றி துன்பத்தை ஏற்றார்கள் என்கிற விவரணைகள் படித்து நான் கலங்கி இருக்கிறேன். அழுதிருக்கிறேன். கிட்டத்தட்ட அதே மன எழுச்சியை இந்நாவல் தருகிறது.
ஆனால் நாவல் எப்படி சாமான்யனின் கதைகூறல் வடிவம் அல்லவா? அங்கு அமானுடர்களுக்கு, மகான்களுக்கு, அவதார புருஷர்களுக்கு இடமில்லையே! இங்கு தான் இந்நாவலின் நுட்பமான தளம் வருகிறது. காந்தியின் பலவீனமான இடங்களையும் ஆசிரியர் மெல்ல சுட்டிக் காட்டுகிறார். மநுவையும், அவளை ஒத்த ஆசிரமத்து பிற இளம் பெண்களையும் காந்தி பாலுறவுகளில் இருந்து தடுத்தது அவர்களின் ஆன்மீக சுத்திக்காகவா அவரது சுயநலனுக்காகவா?
 மநுவைத் தவிர காந்தியுடன் படுக்கும் பிற இளம் பெண்கள் பரிசோதனையின் போது அவ்வளவு சௌகர்யமாய் இல்லை. அவர்களில் பலரும் (ஆபா உள்ளிட்டு) இரவில் முழுக்க நிர்வாணமாக தயாரில்லை. அரை நிர்வாணமாய் காந்தி அருகே கிடக்கையில் காந்தியின் நிர்வாண உடல் அவர்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அவர்கள் உறங்காமல் கண்ணை மூடிக் கொண்டு புலன்கள் விழித்து தவிக்க காவல் நாய் போல் படுத்திருக்கிறார்கள்.
 இவ்வளவு சிரமமாய் இருந்தும் அவர்கள் இந்த பரிசோதனைக்கு உடன்படுகிறார்களே ஏன்? அது அவர்களுக்கு காந்தி மீதான அதிகாரத்தை உறுதிபடுத்துகிறதே என்றா? பிடிக்காத கணவனுடன் படுக்கையை பகிர்ந்த ஒரு மரபான இந்திய மனைவிக்கும் இந்த காந்திய மாமணிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லையா? ஆணுடலை கைப்பற்றுவதும் அதன் வழி அதிகாரத்தை தக்க வைப்பதுமே இவர்களின் பிரதான தேவையா?
 இதனால் தான் மநுவை தன் படுக்கைத் துணையாக காந்தி பயன்படுத்தும் போது இப்பெண்கள் பெரிதும் கலவரப்படுகிறார்கள். புரணி பேசுகிறார்கள். காந்தி தன் பரிசோதனைகளை நிறுத்த வேண்டும் எனவும், அவர் பெண்களை பயன்படுத்தும் நோக்கிலேயே பரிசோதனைகள் செய்வதாய் கூறுகிறார்கள்.
ஆனால் மநு மட்டுமே பாலுணர்வு அதிகமின்றி காந்தியுடன் மிகவும் சௌகர்யமாய் இருக்கிறாள். மநு இப்படி இருப்பதற்கான காரணங்கள் என்ன?
இக்கேள்விக்கான விடைகளை ஊகிக்க நாவல் இடம் தருகிறது.
1)   மநு இளமையில் தாயை இழந்தவள். அவளுக்கு அவ்விடத்தில் ஒரு முதிய துணை தேவையாகிறது. காந்தி அவ்வாறு வந்து சேர்கிறார். அவள் காந்தியிடத்து பாலியல் இச்சையற்ற ஒரு எளிய, குழந்தைத்தனமான மனிதனைக் காண்கிறாள். இது அவளுக்கு மிகவும் நிம்மதி அளித்திருக்க வேண்டும். அவள் காந்தியை தன் தாயென கூறுவது இதனால் தான். மேலும் காந்தி அவளது கல்வி மற்றும் ஆளுமை மேம்படலுக்கு பெருமளவு உதவுகிறார்; அவளுக்கான ஆன்மீகத் தலைமையாகிறார். முக்கியமாய், அவளை தொடர்ந்து கவனித்து கண்காணித்து ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதிக்கிறார். இறுதி விசயம், இந்திய பெண்களுக்கு ஒரு விதத்தில் கிளர்ச்சி அளிக்கக் கூடியது. அவர்கள் தம்மை ஒரு ஆண் நியாயமான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என உள்ளூர விரும்புவார்கள். ஆனால் அந்த ஆண் மிக மென்மையாய், லகுவாய் நடந்து கொள்ளவும் வேண்டும் எனவும் கோருவார்கள். காந்தி கச்சிதமாய் இந்த பாத்திரங்களை வகிக்கிறார்.
2)   இந்தியப் பெண்கள் அக்காலத்தில் எந்த தன்னிறைவு தரும் வாழ்க்கை சாத்தியங்களும், சுதந்திரங்களும் அற்றவர்கள். முழுக்க முழுக்க ஆண்களால் ஏய்க்கப்படுபவர்கள். செக்ஸிலும் வீட்டு வேலைகளிலும் செக்கு மாடு போல் நடத்தப்பட்டவர்கள். காந்தியின் ஆசிமரத்தில் இந்த செக்குமாட்டுத்தனங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கிறார்கள்.அவர்கள் ஆசிரம வேலைகள் செய்ய வேண்டும். ஆனால் அவை அவர்களுக்கு விருப்பமானவையாய், தம்மை மேம்படுத்துவதாய், தேச நலனுக்கானதாய் இருக்கின்றன. இன்னொரு பக்கம் காந்தியுடன் அவர்கள் செக்ஸ் சேவை தரு கட்டாயமில்லாமல் படுக்கலாம். இதுவும் அவர்களுக்கு சுதந்திரமே.
 மநுவை பொறுத்த மட்டில் தனக்கு “பிற மனிதரிடத்து” ஈர்ப்பு ஏற்பட்டதாய் அவள் நாவலில் ஓரிடத்தில் கூறுகிறாள். ஆனால் அது ஆண் மீதான ஈர்ப்பா பெண் மீதான இச்சையா என அவள் வெளிப்படுத்துவதில்லை. என் ஊகம் மநு ஒரு லெஸ்பியன் என்பது.(அதை அவளே அறிந்திருக்க மாட்டாள்) தன்னை நேசித்து பின் தொடரும் பியாரெலாலை அவள் நிராகரிப்பதும் ஆண் செக்ஸ் மீதான அருவருப்பு காரணமாய் இருக்கலாம்.

 எப்படியும் காந்தியுடன் தூங்குவது கூட அவளுக்கு பெரும் விடுதலையாகத் தான் இருக்கும். சதா மொய்க்கும் ஆண் கண்கள் மத்தியில் வாழும் இந்தியப் பெண்ணுக்கு தன்னை செக்ஸ் ஆர்வமின்றி பார்க்க தலைப்படும் ஒரு ஆண் மிகப்பெரிய வரப்பிரசாதமே. இதுவே மநு காந்தியின் பரிசோதனையில் மிகுந்த அக்கறையுடன் அர்ப்பணிப்புடன் இயங்க காரணமாய் இருக்கலாம்
காந்தியின் பார்வையில் இருந்து பார்க்கையில் இன்னொரு விசயமும் தோன்றுகிறது: ஒரு கட்டத்துக்கு மேல் சக உயிரின் உடல் நமக்கு செக்ஸ் தேவைக்கானது மட்டுமல்ல. இரவில் ஆதுரத்துடன் அன்புடன் ஒருவித நிறைவுடன் ஆதரவான நம்பிக்கையுடன் கட்டிக் கொண்டு உறங்க நாம் எல்லாருக்கும் ஒரு எதிர்பாலின உடலை நிச்சயம் தேவை. எழுபத்தைந்து வயதுக்கு மேல் காந்திக்கு அப்படியே இருந்திருக்கக் கூடும். அதாவது, அவரது பரிசோதனைக் கடந்து, இத்தேவைகளும் இருந்திருக்கும் என கணிக்கிறேன்.
இந்நாவலின் மொழி மற்றொரு சிறப்பு. சரவணகார்த்திகேயன் மிக லாவகமான மொழித்திறன் படைத்தவர். இந்நாவல் வாசிப்பு ரசமானதாக அது மாற்றுகிறது. ஸ்டைலை பொறுத்தமட்டில் இரு எழுத்தாளுமைகள் அங்கங்கே தலை காட்டுகிறார்கள். விரவரணைகளில் வைரமுத்து. உணர்வெழுச்சியான மனமோதல்களை சித்தரிக்கும் இடங்களில் ஜெயமோகன்.
இந்நாவலின் பலவீனம்?
இது நாவல் வடிவத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே பலவீனம். ஒருவிதத்தில் இது ஒரு நீண்ட சிறுகதை. அப்படியான ஒரு எய்த அம்பு போன்ற நேர்கோட்டுப் பாய்ச்சல் இந்நாவலின் ஒரு பலவீனம். ஒரே பார்வை, ஒரே கோணம் என நாவல் செல்லக் கூடாது. அக்குறையை ஈடுகட்டும் விதம் வெவ்வேறு பாத்திரங்களின் பார்வைகளும் மாற்றுக்கருத்துக்களும் மனமோதல்களூம் நாவலில் நுட்பமாய் சித்தரிக்கப்படுகின்றன. ஆனாலும் காந்தி சார்பான மையக்குரல் சற்றே வலுவாக ஒலிக்கிறது. அதனாலே இதை ஒரு நீளமான சிறுகதை என்றேன் (சிறுகதை எப்போதும் ஒரு தொனியை, பார்வையை, நம்பிக்கையை, கருத்தை வலியுறுத்தும் அல்லது குறிப்புணர்த்தும்). நாவலில் எப்போதுமே மாறுபட்ட கதையாடல்களின் மோதலும், அம்மோதல் தரும் மயக்கமும் முக்கியம். மநு உன்னதமானவள் எனும் சித்தரிப்புக்கு இணையாக அவள் மிக சாதாரணமான, உடல் தேவைகள் கொண்ட பலவீனங்கள் கொண்டவள் எனும் தரப்பும் வலுவாக வேண்டும். இதுவே நாவலுக்கு ஒரு விரிவை அளிக்கும். பல்வேறு மனிதர்களின் மாறுபட்ட குரல்களுக்கு நாவலில் தேவையான இடத்தை அளிப்பதே அதற்கு ஒரே வழி. இந்நாவலில் மநு ஒன்மேன் ஆர்மி போல் செயல்படுகிறாள். அவளுக்கு சமமாக காந்தியின் மகத்துவம் பேசப்படுகிறது. இருவரையும் தரையில் இருத்தும் அளவு இன்னொரு தரப்பு உருவாகவில்லை. அடுத்து எழுதப்போகும் நாவல்களில் சரவணகார்த்திகேயன் கிளைக்கதைகளை உருவாக்கி, மண்ணில் பரவின வேர்களைப் போல் அவற்றை ஒன்றின் மேல் ஒன்று பாவச் செய்து சிக்கலாக்கி ஒரு பிரம்மாணடத்தை கொண்டு வர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.


இப்புத்தாண்டில் என் நண்பர்கள் அனைவருக்கும் இந்நாவலை பரிந்துரைக்கிறேன்.

Comments

அடிரா சக்கை. சூட்டோடு சூடாகப் படிச்சாச்சா?
ஆமாம் தல. வெளியீட்டு விழாவில் அபாரமாக பேசுனீங்க
Anonymous said…
Sir,
Apropos the matter, Mr.Jeyamohan brought aboard a different perspective in his writings and that's lack of spiritual guidance on Gandhi's part (such as realized souls) and his own inclination (rather chutzpah) to get onto such experiments (own pursuit to get extirpate sex ) which resulted in many leaving Gandhi (including his secretary) taking it as a taboo and
In my life too, when I discussed on this matter with my Wife and Children, they labelled Gandhi as no lesser than a ............. without even wanting to know the basics of the matter . Gandhi is indeed a guileless man and more than Gandhi, all credit goes to Kasturba ...What if we imagine Kasturba wanting to do the same experiment !

Well,Gandhi is Gandhi and stands an high exception on several matters.
To know Gandhi, we have to have a 'strong feel' which can only be felt and cannot be educated/imparted to derive such feel and in our times.

Thanks for your article.

Regards
Balaji.S