வணிகப்படங்களும் கலைப்படங்களும்

அன்புள்ள அபிலாஷ்,

நலம்தானே.

ராசி திரைப்படம் பற்றிய தங்களின் பதிவை வாசித்தேன். சிகரெட் மற்றும் சுருட்டை வைத்து ரம்பாவின் நோக்கத்தை காட்சிப்படுத்தியது ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்தது. அந்தப்படத்தின் இயக்குனர் இதைப் படித்தாலும் "நான் இப்படியா யோசித்தேன்" என்று வியக்கக்கூடும். இதில் நான் ரசித்தது எப்படி ஒரு சிறு விஷயத்தைக்கூட அது வெளிப்படும் விதத்தை தாண்டி  ரசிக்கமுடியும் என்பது. நம் கண்களால் காணும் காட்சிகளுக்கும் அதன் ரசனைக்கும் ஒரு எல்லை உண்டு, அதைத்தாண்டி கற்பனை செய்யவும் ரசிக்கவும் ஒரு அகக்கண் தேவை என்று தோன்றுகிறது


பார்வைக்கும் ரசனைக்குமான இந்த தொடர்பு இப்பொழுது அற்றுக்கொண்டே வருகிறது. எல்லாவற்றையும் மேலோட்டமாக பார்க்க பழகிவிட்டோம். ரசிப்பது எப்படி என்று சொல்லித்தர முடியுமா, ரசித்துதான் காட்டவேண்டும்.

என் இரண்டு வயது மகன் பேனாவில் தரைமுழுதும் கிறுக்குவான். பின்பு அந்த கிறுக்கல்களிலிருந்து அவனுக்கு தெரிந்த வடிவங்களை கண்டுகொள்வான். உங்கள் பதிவு அதைத்தான் நினைவூட்டியது. உடைந்த கண்ணாடிகளைக்கொண்டு கலெடோஸ்கோப் செய்யும் உங்கள் ரசனையை நானும் ரசித்தேன். நன்றி.

அன்புடன்,
பிரபு 

அன்புள்ள பிரபு
தரையில் கிறுக்கும் ஓவியங்களில் இருந்து தனக்கான வடிவத்தை கண்டு கொள்ளும் குழந்தையின் சுபாவத்தை என்னுடன் ஒப்பிட்டத்தை மிகவும் ரசித்தேன். என்னுடைய ஆளுமை குறித்த மிகத் துல்லியமான சித்திரம் இது தான். என் நண்பர்களில் என்னை நீங்கள் தான் மிக கச்சிதமாய் கணித்திருக்கிறீர்கள். நன்றி.
”ராசி” படத்தின் இயக்குநர் இப்படியெல்லாம் யோசித்திருப்பாரா? ம்ஹும். ஆனால் இதையே நீங்கள் கிட்டத்தட்ட எல்லா வணிக இயக்குநர்களுக்கும் சொல்லலாம். கலைப்பட இயக்குநர்களுக்கும் வணிக இயக்குநர்களுக்குமான முக்கிய வித்தியாசங்களில் ஒன்று முன்னவர்களுக்கு கோட்பாட்டு பரிச்சயம் உண்டு என்பது. உதாரணமாய், ஒரு கலைப்பட இயக்குநர் பெண்னியம் கற்றிருப்பார். பெண்ணியவாதி ஒருவர் அப்படத்தை அர்த்தப்படுத்தும் வகையில் வசதியாய் அப்படத்தை அவர் எடுப்பார். பிராயிடுக்குப் பிறகு எடுக்கப்பட்ட எத்தனையோ படங்களில் நாம் பிராயிடிய கோட்பாட்டுத் தாக்கத்தைக் காண்கிறோம். ஹேங்கரில் சட்டையை தொங்க விடுவது போல் ஒரு கோட்பாட்டில் நீங்கள் இப்படங்களை தொங்க விட முடியும்.
ஆனால் வணிகப் படங்களில் நடப்பது வேறு. நமது சமூக மனம் இப்படங்களின் மொழியில் வெளித்தெரிகிறது. கலைப்படங்களை ஆய்வது நமது கோட்பாட்டு அறிவை உரசிப் பார்க்கவும், வணிகப்படங்களை அலசுவது நமது சமூக உளவியலின் போக்குகளை புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. எனக்கு அதனாலேயே வணிக கலை வடிவங்களை கவனிப்பதில் ஆர்வம் அதிகம்.
உங்கள் அன்புக்கு நன்றி பிரபு.
அன்புடன்

ஆர். அபிலாஷ்

Comments