இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல - 6

Image result for gandhi funeral nehru
காந்தி கொல்லப்பட்ட பின், அப்பாவின் மரணத்துக்கு பின் அப்பாவின் மீதான் அத்தனை கோபங்களும் மறைந்து, மகன்கள் அப்பாவை நேசிக்க துவங்குவது போல், காங்கிரஸார் காந்தியை தேசப்பிதாவாக வழிபடத் துவங்கினர். தமக்காய் அக்கொலையை நிகழ்த்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை தற்காலிகமாய் தடை செய்து விட்டு பின்னர் விடுவித்தனர்.

ஆனால் காங்கிரஸ் அதன் அடிப்படை சித்தாந்தத்தில் காந்தியத்தின் தொடர்ச்சி என்பதால் அதன் அரசியலும் நிர்வாகமும் முழுக்க கிராமங்களை மையமிட்டிருந்தது. சோஷலிஸ பாணியில் நேரு தொழில்மயமாக்கலை இங்கு நுழைக்க முயன்றாலும், இந்தியாவின் ஆன்மா தொடர்ந்து கிராமங்களிலே வசித்தது. விவசாயமே நமது பிரதான உற்பத்தி முறையாக தொடர்ந்தது. சாவார்க்கர் எதிர்பார்த்த வேகத்தில் இங்கு நகரமயமாக்கல் நிகழவில்லை. நகரமயமாக்கல் இன்றி இந்தியா பன்மைத்துவத்தை முன்னிறுத்தும் ஒரு நெகிழ்வான தேசமாய் தொடர்ந்தது. இதுவே காந்தியின் மறைவுக்குப் பிறகும் நீண்ட காலம் இந்துத்துவாவை இருட்டில் வைத்திருந்தது.
 ஆக, தொண்ணூறுகளின் துவக்கத்தில் மன்மோகன் சிங் தாராளமயமாக்கலையும், உலகமயமாக்கலையும் அறிமுகப்படுத்தி இந்திய சந்தையை உலகத்துக்கு திறந்து வைத்த போது, இந்தியாவை நகரமயமாக்கலை நோக்கித் தள்ளிய போது, தன்னை அறியாது அவர் சாவார்க்கரின் ஐரோப்பிய தேசியவாத அஜெண்டாவை தான் செயல்படுத்தினார். அப்போது ஏற்பட்ட தேசியவாத விசை இயல்பாகவே இந்துத்துவாவுக்கு உயிர் அளித்தது.
உயிர்பெற்ற இந்துத்துவா அத்வானியின் வடிவில் பாபர் மசூதி இடிப்பு, ரத யாத்திரை, இஸ்லாமிய வெறுப்பரசியல் எனும் முகமூடி அணிந்து முழுமூச்சாய் ஒற்றை இந்து அடையாளத்தின் கீழ் நகரவயப்பட்ட இந்தியர்களை ஒன்று திரட்டியது. ஒற்றை அடையாளம் கொண்ட தேசியவாதம் எனும் சாவார்க்கரின் கனவு மெய்ப்பட உலகமயமாக்கல் பெரிய அளவில் உதவியது.
நகரமயமாக்கலையும் முன்னேற்றத்தையும் அறிவியலையும் முற்போக்கு நிலையாக காணும் பகுத்தறிவாளர்கள் பொதுவாக இந்துத்துவா நம்மை பழமையை, பாரம்பரியத்தை, கிராமங்களை நோக்கி இழுக்க பார்ப்பதாய் தவறாய் புரிந்து கொள்கிறார்கள். மார்க்ஸியம், பெரியாரியம் ஆகிய கோட்பாடுகளும் வலுவான தேசியவாத தன்மை கொண்டவை என்பதாலும், நமது சிந்தனையாளர்கள் இவ்விரு கோட்பாடுகளை தழுவியவர்கள் என்பதாலும் அவர்கள் இந்துத்துவாவை இந்தியாவின் மரபான சிந்தனையோடு, நம்பிக்கைகளோடு இணைத்துப் பார்க்கிறாரக்ள். ஆனால் மரபின் மீதான பெருமித உணர்வை இந்துத்துவர்கள் மிக மேலோட்டமாய், பாசாங்காய், தந்திரமாய் பயன்படுத்துகிறார்களே அன்றி அவர்களுக்கும் நம் மரபுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதே உண்மை.
தலித்தியர்களும் நகரமயமாக்கலை, அது முன்வைக்கும் முன்னேற்றம், அறிவியல், தொழில் வளர்ச்சி, பொருளியல் சுதந்திரம் ஆகியவற்றை ஆதரிக்கிறார்கள். மேலும் அவர்களிடமும் தலித் × தலித் அல்லாதோர் எனும் ஒருவித இணைமுரணியல் உள்ளது. இந்த இணைமுரணியலின் அடிப்படையில் அவர்கள் “கருத்தளவில்” ஒரு தலித் தேசியவாதத்தை கற்பனை செய்கிறார்கள். இக்காரணங்களால் இந்து மதத்தின் சாதியத்தை கடுமையாய் எதிர்க்கிற தலித்துகளால் இந்து தேசியவாதத்தை தமக்கு அணுக்கமாய் கருத முடிகிறது. அவர்கள் இந்துத்துவர்களைப் போன்றே நகரங்களை, ஆங்கிலத்தை, மேற்கை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் (அதற்கான சாதிய அழுத்தங்களை புரிந்து கொள்கிறேன்). விளைவாக, இன்று திரளாக தலித்துகள் இந்துத்துவர்களாய் மாறுகிறார்கள். (அம்பேத்கர் சாவார்க்கருடன் தொடர்பில் இருந்ததாய் ஆஷிஷ் நந்தி மேற்சொன்ன கட்டுரையில் குறிப்பிடுகிறார்.)
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பான காலத்தில் சாவார்க்கர் செய்தது போன்றே, இப்போது மோடி - இஸ்லாமியரை பெயரளவுக்கு ஒரு மற்றமையாக முன்வைத்து - ஒற்றைபட்டையான ஒரு தேசியவாத அஜெண்டாவை செயல்படுத்தவே முயல்கிறார். நீட் தேர்வை அவர் மாநிலங்கள் மீது திணிப்பது இந்த அஜெண்டாவின் ஒரு பகுதியாகத் தான். இஸ்லாமிய வெறுப்பு என்பது அன்றும் இன்றும் இந்துத்துவர்களுக்கு ஒரு சாக்குபோக்கு மட்டுமே.
சாவார்க்கருக்கு ஐரோப்பிய நவீனத்துவ தேசியவாதத்தை இந்தியாவில் நுழைப்பது அஜெண்டாவாக இருந்தது என்றால் நவமுதலாளித்துவத்தையும் தாராளமயமாக்கலையும் நகரமயமாக்கலின் வடிவில் இந்தியர்களுக்கு விற்க வேண்டும் என்பதே இன்றைய இந்துத்துவர்களின் பிரதான கனவு. இஸ்லாமிய வெறுப்பு, பசு நேசம், இந்து மத பிரச்சாரம், கார்ப்பரேட் சாமியார்களை முன்னெடுப்பது எல்லாம் பாசாங்கு மட்டுமே.
இந்துத்துவாவை எதிர்க்க சிறந்த வழி இந்து மதத்தை எதிர்ப்பதல்ல. சரியான தீர்வு நெகிழ்வை, பன்மைத்துவத்தை, பூர்வீக இந்திய சகிப்புத்தன்மையை கொண்டாடுவது. எல்லா தளங்களிலும் இணைமுரணியலை எதிர்ப்பது. நகரமயமாக்கலையும், அறிவியலையும் கண்ணை மூடி ஆதரிக்காமல் இருப்பது. நமது பூர்வீக மரபை சகிப்புணர்வுடன் மீட்டெடுப்பது. கிராமியம் சார்ந்த மதச்சடங்குகளை மீட்டெடுத்து அதை நம் அரசியல் பரப்புரையின் கருவிகளாய் மாற்றுவது. இந்துத்துவாவை சிறு மற்றும் பெரு இந்து மதங்கள் கொண்டு, அவற்றின் குறியீடுகளைக் கொண்டு எதிர்ப்பது. இன்னொரு பக்கம், இஸ்லாமியர் இந்திய இஸ்லாத்தையும், கிறித்துவர்கள் இந்திய கிறித்துவத்தையும் மேலெடுத்து அவற்றை தம் அடையாளமாய் பறைசாற்றுவது. அனைத்து வித தேசியவாதங்களையும் இவ்வழியே மறுப்பது. காந்தியை நம்மால் முழுக்க ஏற்க முடிவதில்லை என்பதால் காந்தியத்தின் சாரத்தை மட்டும் எடுத்து அதைக் கொண்டு மோடியை எதிர்ப்பது.
மேற்குலகுக்கு இணையாக இந்தியா முழுக்க நகரமயமாக்கலை அடையும் நாளில் நீங்கள் இந்துத்துவாவுக்கு எதிராய் எறிய ஒரு சிறு கல்லைக் கூட தூக்க முடியாது.
(முற்றும்)Comments

Anonymous said…
Idhil Dravida Arasiyal Patriyum villakkalam.