இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல 5

Related image
காந்தி இந்த தேசியவாத, முதலாளித்துவ நகரமயமாக்கல் அஜெண்டாவுக்கு குறுக்கே நின்றது தான் இந்துத்துவர்கள் அவர் மீது கொதிப்புற்றதற்கும் அவரை படுகொலை செய்ய முடிவெடுத்ததற்கும் உண்மையான காரணம். இந்திய விடுதலைக்குப் பின் காந்தி தேசபக்தி எழுச்சி அலையில் பங்கெடுக்க மறுத்தார். பிரிவினைக்கு முன்பாக இந்தியா பாகிஸ்தானுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை (75 கோடிகள்) அவர்களின் பங்காக அளிக்க வேண்டும் என ஒப்பந்தம் இருந்தது. ஆனால் பிரிவினையின் போது பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைமுகமாய் வன்முறையில் ஈடுபட்டது, காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது ஆகிய விசயங்கள் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கசப்பையும் உண்டு பண்ண, “நம் எதிரி தேசத்துக்கு அந்த ஒப்பந்த தொகையை கொடுக்கக் கூடாது” எனும் கோரிக்கை பரவலாய் எழுந்தது. பிரதமர் நேருவும் இதை ஏற்றுக் கொண்டார். இப்பணத்தை அளித்தால் பாகிஸ்தான் அதை இந்தியாவுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என இந்திய பாராளுமன்றமும் நம்பியது.

 ஆனால் காந்தி மட்டுமே அத்தொகையை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்தே ஆக வேண்டும் என வற்புறுத்தி உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டார். பாகிஸ்தான் வெறுப்பு எனும் கருத்தமைவு இந்தியா எனும் தேசம் புதிதாய் உருவான அன்றைய நிலையில் அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் தேவையிருந்தது. ஒரு தேசியவாத உணர்வுநிலையை, எழுச்சியை கட்டமைக்க அது அவசியப்பட்டது. ஆனால் காந்தியோ இந்த எழுச்சி மனநிலையை ஒரு பலூனை உடைப்பது போல் உடைக்க எத்தனித்தார்.
 நேரு, பட்டேல் உள்ளிட்ட தலைவர்களின் பாகிஸ்தான்-மற்றமை தேசியவாத கருத்தமைவுக்கு, அஜெண்டாவுக்கு, வெறுப்பரசியலுக்கு குறுக்கே நின்றார் காந்தி. மாறாக அந்த வெறுப்பை அன்பாக மாற்ற முனைந்தார்.
 மற்றமை மீதான வெறுப்பை அழிப்பது இந்திய தேசியவாதத்தை அழிப்பதற்கு சமானமானது. இந்தியா ஒரு இளம் தேசமாய் மொட்டு விடத் துவங்கிய அக்காலத்தில் பாகிஸ்தான் மீதான வெறுப்பரசியலே ஒரு தேசமாய் ஒற்றை அடையாளத்தின் கீழ் நம்மைத் திரட்டும், ஒன்றிணைக்கும், இயக்கும் விசையாக இருந்தது. காந்தி இந்த விசையை எதிர்த்து தனியாக நின்றார். நாம் ஒற்றை அடையாளத்தின் கீழ் இணையத் தேவையில்லை, பல்வேறு அடையாளங்களின் தொகுப்பாய் இருப்போம் என்றார். அன்றைய சூழலில் சாவார்க்கர் மட்டுமல்ல நேருவும் பட்டேலும் கூட காந்தியை உள்ளூர இதனாலே வெறுத்தனர்.
காந்தியின் அரசியல் ஒரு பக்கம் ஆளும் காங்கிரசுக்கு பாதத்தில் தைத்த முள்ளாக இருந்தது என்றால் இன்னொரு பக்கம் காங்கிரஸின் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபையினருக்கு காந்தியின் நிலைப்பாடு கடும் எரிச்சலையும் கொலை வெறியை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் சாவார்க்கர் இந்திய பிரிவினையை ஆதரித்தார். அப்படி இருக்க, ஏன் பிரிவினையை காரணமாய் காட்டி அவர் காந்தியை எதிர்த்தார்? பிரிவினையின் போதான வன்முறைகள் காரணமாய் இந்து பெரும்பான்மையினர் மத்தியில் இஸ்லாமியர் மீது கடும் வெறுப்பும் கசப்பும் கொழுந்து விட, அதை மேலும் வளர்த்து இந்து தேசியவாதத்தை ஒரு யாகமாய் எரிய விட சாவார்க்கர் விரும்பினார். சட்டென உயிர்பெற்ற அவர் இந்த பணியில் தன்னை மிக ஆர்வமாய், ஆவேசமாய் ஈடுபடுத்திக் கொண்டார். (இந்த கட்டத்தில் தான் கோட்சே அவரால் ஈர்க்கப்பட்டு, சதித்திட்டத்தில் இணைகிறான்.)
 ஆனால் காந்தி எனும் பேரலை தான் வளர்த்து எழுப்பும் வெறுப்புத் தீயை சுலபத்தில் அணைத்து விடலாம் என சாவார்க்கர் உணர்ந்தார். தன் வாழ்நாள் பூரா அவர் காந்தியால் இப்படி தோற்கடிக்கப்பட்டவர். ஆனால் இம்முறை அவர் தோற்க தயாராக இல்லை.
காந்தியின் உண்ணாநிலை போராட்டம் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல, இந்திய தேசியத்துக்கு எதிரானது என சாவார்க்கரும் அவரது சீடர்களும் உள்ளூர உணர்ந்து கொண்டார்கள். காந்தியின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, (முள் ஏற்படுத்திய வலியை தாங்க முடியாத கட்டத்தில்) உண்ணாநிலை போராட்டத்தை முடிக்கக் கோரி பிரதமர் நேரு ஒப்பந்த பணத்தை பாகிஸ்தானுக்கு அளிக்க ஒப்புக் கொண்டார். இந்த தருணத்தில் தான் “இனி காந்தி உயிருடன் இருக்க கூடாது” என கோட்சேவும் சகாக்களும் முடிவெடுக்கிறார்கள். ஏனெனில் காந்தி உயிருடன் இருந்தால் தேசியவாத வெறி திரண்டு ஒரு யாகமாய் வளர அவர் அனுமதிக்க மாட்டார் என அவர்கள் நம்பினர். காந்திக்கு எதிராய் காங்கிரஸார் ஆழ்மனதில் வளர்ந்து வந்த கசப்பை இந்துத்துவர்கள் அன்று “துணிச்சலாய்” வெளிப்படுத்தினர். ஏனெனில் ஆளும் காங்கிரஸ் அரசும் அவர்களுக்கு மறைமுக ஆதரவை அளித்தது.
அப்படித் தான் ஒரு “இந்துத் துறவியை” படுகொலை செய்யும் முடிவுக்கு இந்துத்துவர்கள் தள்ளப்பட்டனர்.
(தொடரும்)


Comments