ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)


வன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும்
ஆணில் பாலியலுக்குள்முள்ளைதைக்க வைப்பது வன்முறை அல்லவா? இதனாலே சாருவின் உலகில் பெண்கள் மறைமுக வன்முறையாளர்களாய் தோன்றுகிறார்கள். சாருவின் நாவல்களில் வன்முறையை ஒரு மையமாய் கொண்ட நாவல்தேகம்”.
 “தேகம்நாவலின் மைய பாத்திரம் பாலியல் குற்றவாளிகளை வதை செய்யும் ஒரு வல்லுநன். வதையை ஒரு கலையாக மாற்றியவன். அவனது மனைவியாக வரும் பெண்ணோ ஒரு எறும்பைக் கொல்வதைக் கூட ஏற்காதவள். கடுமையான அஹிம்சாவாதி. ஆனால் அவள் அவனை தொடர்ந்து உளவியல்ரீதியாய் வதைத்துக் கொண்டிருப்பாள். அவள் செலுத்தும் வன்மத்தின் முன் அவன் சிறுத்துப் போவான். அவனை விட ஆகப்பெரிய வதையாலள் அவளே என சாரு முத்தாய்ப்பாய் முடிப்பார். சாருவின் ஆண்களிடம் இந்த முரண்-எதிர்வு தொடர்ந்து வரும். சாருவின் ஆண் பாத்திரங்கள் அடாவடித்தனம் பண்ணுவார்கள். ஆதிக்கமாய் தெரிவார்கள். இன்னொரு புறம் பெண்களிடம் புள்ளப்பூச்சியாகி விடுவார்கள். அவர்கள் சதா பாலுறவு கொண்டாட்டங்களில் திளைப்பார்கள். இன்னொரு புறம் பாலியல் போதாமல் வறட்சியாக இருப்பார்கள். இதுவே அவர்களை புள்ளப்பூச்சியாக மாற்றுகிறது. இந்த போதாமை ஏன் ஏற்படுகிறது என்கிற கேள்விக்குள் சாரு அதிகம் போவதில்லை. பெண்களின் வன்முறையை லேசாய் தொட்டுக் காட்டுவதோடு நின்று கொள்கிறார். ஆதவன் மேற்சொன்ன நாவலில் இதைப் பற்றி சற்று விரிவாக பேசுகிறார்.

ஆதவனின் ஆண்கள் பாலுறவில் தாகம் தணியாதவர்கள். பெண்கள் அவர்களுக்கு தண்ணீர் காட்டி விட்டு தாகம் தணியும் வேளை வந்ததும் பிடித்து தொழுவத்தில் கட்டி விடுகிறார்கள். ராமசேஷனின் வீட்டில் அத்தைக்கும் அம்மாவுக்கும் அதிகாரப் போட்டி. போட்டியில் வெல்லும் பொருட்டு அம்மா செக்ஸை ஒரு ஆயுதமாய் பயன்படுத்தி அப்பாவை தன் கட்டுக்குள் வைக்கிறார். அப்பா அம்மாவுக்கு அடிமையாகிறார். ஆனால் முழுமையான சம்போகம் அதிகார இச்சையை குறைத்து ஆணையும் பெண்ணையும் அமைதிப்படுத்தும். ராமசேஷனின் வீட்டிலோ அது நடப்பதில்லை. அப்பா தாகம் தணியாக கன்றாகஅம்மாவின் அடிமையாகதவிக்கிறார். இது அம்மாவின் தவறு அல்ல என நாவலை ஆழமாய் வாசிக்கையில் நமக்குப் புரியும்.
அம்மாவால் அப்பாவை ஒரு போதும் முழுமையாய் தணிய வைக்க முடிக்காது. ஏனெனில் அப்பாவின் பாலியல் தேவைகள் மிகச்சிக்கலானவை. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் தாய் மீதான இச்சை ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. ஒரு பெண்ணை படுக்கையில் சந்திக்கையில் தாய் பிம்பம் இருவருக்கும் குறுக்கே வந்து விடுகிறது.
இதுவே இருவரின் நாவல்களிலும் ஆண்களை பலவீனர்களாய் மாற்றுகிறது. ஆனால் மாறாக பெண்களோ கட்டற்ற பாலியல் கொண்டவர்களாய் பலம் பொருந்தியவர்களாய் இருக்கிறார்கள்.
ஈடிபல் காம்பிளக்ஸை இருவிதமாய் எதிர்கொண்ட எழுத்தாளர்கள்
மேற்சொன்ன சிக்கலை விரிவாக தீவிரமாய் விவாதித்தவர் உளவியலாளர் சிக்மண்ட் பிராயிட். அவர் இதற்கு ஈடிபல் காம்பிளக்ஸ் என பெயரிட்டார். ஈடிபஸ் ஒரு கிரேக்க மன்னன். அவன் எதேச்சையாய் தன் அப்பாவைக் கொன்று விட்டு அம்மாவை மணக்கிறான். ஒருநாள் உண்மை தெரிய வர, அவன் குற்றவுணர்வில் மனம் உடைந்து இறக்கிறான். “அம்மாவை மணப்பதுஎன்பதை பிராயிட் ஒரு உருவகமாகவே பயன்படுத்துகிறார். (சொல்லப் போனால், தாய், தாய்மை என்பவை கூட பிராயிடை பொறுத்த மட்டில் குறியீடுகள் தாம். நாம் அதற்குள் இப்போது போக வேண்டாம்.) ஒவ்வொரு ஆணும் தான் எதிர்கொள்ளும் பெண்ணில் தன் தாயின் ஆடி பிம்பத்தையே கண்டு திகைக்கிறான்; அவனுக்குள் ஈர்ப்பும் வெறுப்பும் ஒரே சமயம் எழுகிறது என்கிறார் பிராயிட்.
இந்த ஈடிபல் காம்பிளக்ஸ் கதைச்சரடை கொண்டெழுதியவர்களில் வெகுபிரசித்தமான ஒருவர் உண்டு. தி.ஜா. அவரதுமோகமுள்நாவலை அநேகமாய் எல்லாரும் படித்திருப்பீர்கள். தி.ஜாவின் ஆண்களுக்கும் ஆதவன், சாருவின் ஆண்களுக்கும் ஒற்றுமை அவர்களுக்கு தாய் மீது ஏற்படும் இச்சையும், அது பின்னர் வயது மூத்த பெண்கள் மீதான காமமாய் உருமாறுவதும் அது இந்த ஆண்களின் வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கலுமே. ஆனால் இந்த எழுத்தாளர்களுக்கு இடையில் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு.
ஆதவன் மற்றும் சாருவின் ஆண்களுக்கு தாயுடல் மீதுள்ள வெறுப்பு தி.ஜாவின் ஆண்களுக்கு இல்லை. தி.ஜாவின் ஆண்கள் பெண்ணுடலை உபாசிப்பவர்கள். தாயுடலை அடைய முடியாத சஞ்சலத்தை, தவிப்பை, உக்கிர இச்சையை இசையாக, ஆன்மீகமாய் மடைமாற்றி உன்னதம் நோக்கி பாய்பவர்கள். இந்த வித்தியாசத்துக்கு ஒரு காரணம் உண்டு.
உன்னதம் என்பது நவீனத்துவ எழுத்தின் அடிப்படை பண்பு. உன்னதம் என்பது லட்சியவாதத்தில் வேர்விட்டு பூ பூத்த செடி. லட்சியங்களை வழிபட்டவர்கள் தமிழில் உன்னதத்தை பிரதானமாய் கருதினார்கள். புதுமைப்பித்தன், லா..ரா, மௌனி என பல நவீனத்துவ முன்னோடிகளும் உன்னதத்தை பேசுகிறார்கள். ஆனால் ஆதவன் பின்நவீனத்துவ புனைவின் முன்னோடியாக திகழ்ந்தவர் (அவரிடம் பல நவீனத்துவ பண்புகள் உண்டெனினும்). ஆதவனைப் போன்றோர் எந்த லட்சியத்தையும் ஒரு போலித்தனமாய் கருதினார்கள். அதனால் அவர்களின் எழுத்தில் உன்னதத்துக்கு எந்த இடமும் இல்லை.
 ஒரு மனிதன் தன் சிறுமைகளை சந்திக்க விரும்பாமல் தப்பித்து ஓடுவதற்கான தந்திரமாக மட்டுமே உன்னதம் பயன்படுகிறது என்பார் ஆதவன். வாழ்வில் எதையும் பொருட்படுத்த முடியாத, எதையும் பரிகசித்து கடந்து போகிற, எந்த உன்னதத்துடனும் ஒட்டாத பின்நவீனத்துவ விட்டேந்தித்தனத்தை நாம் ஆதவனிடம் காண்கிறோம்.
ராமசேஷனைப் போல் தன் தாயின் பாலியல் பிறழ்வை, தன் தாயின் இடத்தில் வைக்கப்பட்ட மாலாவின் தாயின் இச்சையை எந்த விமர்சனமும் அற்று எதிர்கொள்ளும் ஆண்களை ஆதவனைப் போல் சித்தரித்தவர்கள் அவர் காலத்தில் இல்லை. இதுவே ஆதவனுடன் சாரு நிவேதிதாவின் எழுத்தை பிணைக்க நம்மைத் தூண்டுகிறது.

(தொடரும்)

Comments