இலக்கிய நிகழ்வுகளில் கருத்து மோதல்கள் அவசியமா? (2)

Image result for jeyamohan

விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வை ஒட்டி எனக்கும் ராஜகோபாலுக்குமான விவாதத்தின் தொடர்ச்சி இது. தன் பின்னூட்டத்தில் அவர் சொல்கிறார்.
// இந்த உரையாடல்கள் ஒரு எழுத்தாளரை கௌரவிக்கும் நிகழ்வு.//

இந்த கூற்றும் விசித்திரமாய் உள்ளது. கௌரவிக்கும் நிகழ்வுகளை நான் கண்டிருக்கிறேன். இந்நிகழ்வுகளில் எழுத்தாளரைப் பற்றி விமர்சகர்களோ வாசகர்களோ போற்றிப் பேசுவார்கள். ஆனால் உங்கள் நிகழ்ச்சிகள் வாசகர் கேள்விகளுக்கு எழுத்தாளன் பதிலளிக்கும் நிகழ்வுகள். சொல்லப் போனால், உங்கள் நிகழ்ச்சியில் தான் கடுமையான சிக்கலான கேள்விகளை நான் எதிர்கொண்டேன். வேறு எழுத்தாளர்களும் அவ்வாறே உணர்ந்திருப்பார்கள் என புரிந்து கொள்கிறேன். என் பிரச்சனை அது அல்ல. இக்கேள்விகளை ஜெயமோகன் மட்டுமே எழுப்பினார் என்பதே என் பிரச்சனை. அவர் மட்டுமே ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் முழுமையான பங்கேற்பாளராய் இருந்தார். பிறர் விலகி நின்று கவனித்தனர். நீங்கள் ஏன் ஜெ.மோவைப் போன்று கடும் வினாக்களை எழுத்தாளனை நோக்கி எழுப்பவில்லை, இவ்வினாக்கள் உருவாக்கிய கருத்துக்களை ஒட்டி விவாதங்கள் நிகழ்த்தவில்லை என்பதே என் ஒரே கேள்வி.


உங்கள் விழாவை விமர்சிப்பதல்ல, அதை அடுத்த கட்டத்துக்கு நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்துவதே என் நோக்கம்.

பழைய நிறப்பிரிகை இதழ்களில் விவாதம் என்றொரு பகுதி வரும். அறிவுஜீவிகளும் சிறுபத்திரிகையாளர்களும் கூடி விவாதித்து அதையே பிரசுரிப்பார்கள். அவ்விவாத கருத்துக்களே பின்பு ரவிக்குமாரும் அ.மார்க்ஸும் ரா. அழகரசனும் எழுதிய கட்டுரைகளும் நூல்களுமாய் மலர்ந்தன.
 ஒரு நிகழ்வில் இதை நூற்றுக்கணக்கானோர் செய்ய முடியாது என அறிவேன். ஆனால் ஜெயமோகனைத் தொடர்ந்து எதிர்கேள்விகளைக் கேட்கும் பத்து பேராவது உங்கள் அமைப்பில் வேண்டும். அவர்களை இரண்டாம் கட்ட தலைமை எனலாம். விவாதங்களை அவர்கள் பல கோணங்களிலாய் எடுத்துச் செல்ல முடியும். அரங்கின் பார்வையாளர்கள் அவர்களைக் கண்டு கற்றுக் கொள்ளும் விதம் அவர்கள் சர்ச்சிக்க வேண்டும். இரண்டாம் கட்டத் தலைமையைக் கண்டு தூண்டப்பட்டு பார்வையாளர்களில் மேலும் சிலர் மாற்றுக்கருத்துக்களை, கேள்விகளை எழுப்புவார்கள். அப்போது அவர்கள் மூன்றாம் கட்ட தலைமையாய் உருவாவாகக் கூடும். அப்படியே ஒரு அமைப்பு விரிவடைந்து வளர முடியும். ராணித்தேனீயை மையமாய் வைத்து நீங்கள் செயல்பட்டால் ஒரு இலக்கிய இயக்கமாய் நீங்கள் உன்னதமான, படைப்பூக்கமான எதையும் சாதிக்க முடியாது.
 ஒரு கதையில் இன்னின்ன சமாச்சாரங்கள் எதார்த்தமாய் இல்லை என யோசிப்பது மிக மிக எளிய நிலை அணுகுமுறை. பெரும்பாலானோர் இப்படியே யோசித்து கேள்விகளை எழுப்புதல் ஆரோக்கியமானது அல்ல. ஒரு பிரதியை நாம் வாசிப்பது அதை அறிய அல்ல. அதன் வழி உலகையும், மனித மனத்தையும், மனித இருப்பையும் அறிவதற்கே.
படைப்பாளியை கடந்து இவ்விசயங்களை சிந்திப்பதே வளரும் வாசகர்களின் பணி. நல்ல வாசகன் என்பவன் எழுத்தாளனைக் கடந்து யோசிப்பான். அதனாலே தீவிரமான வாசகர்கள் பலர் எழுத்தாளனை சந்திக்காமலே இருப்பதை நான் அறிவேன். ஆகையால்எழுத்தாளனை கௌரவிப்பதுஆகிய சொல்லாடல்களை நீங்கள் கடந்து வர வேண்டும் என்பது என் கோரிக்கை.
இந்த சொல்லாடலேவாசிப்பு என்பது பிரதியின் உள்ளிருந்து ஒரு கருத்தை எடுப்பதற்கான நடவடிக்கை; இலக்கியமே வாசிப்பின் இலக்குஎனும் தவறான புரிதலில் இருந்து வருகிறது என நினைக்கிறேன். ஆனால் இலக்கியம் என்றுமே வாசிப்பின் இலக்கு அல்ல; மனத்தையும் இருப்பையும் அணுகி நுணுகி ஆழமாய் அறிவதற்கான ஒரு கருவி மட்டுமே இலக்கியம். அதனாலே, நமது மரபு இலக்கியமும் பக்தியும் கடலை நோக்கிச் செல்லும் இரு ஆறுகள் என சித்தரிக்கிறது. நீங்கள் இலக்கிய வாசிப்பை ஒரு நவீன கார்ப்பரேட் வாடிக்கையாளர் அனுபவமாய் கருதக் கூடாது என வேண்டுகிறேன் (அந்த கடல் தான் நமது இருப்பின்மை எனும் இருப்பு. இதை நான் அல்ல, தத்துவஞானி ஹெய்டெக்கர் சொல்கிறார். அவர் இருப்பைப் பற்றி விவாதிக்க கவிதை விமர்சனத்தையே பயன்படுத்துகிறார்.).
சரி, அப்படி என்றால் ஒரு தத்துவக் கருத்து, அரசியல் பிரச்சனையை விவாதிப்பதற்கான ஒரு கருவி மட்டும் தான் இலக்கியமா? மார்க்ஸியம் என்ன சொல்கிறது என ஒரு கவிதையைக் கொண்டு விவாதிப்பது தான் வாசிப்பா? அல்ல.
அந்த தத்துவக் கருத்தும், அரசியல் பிரச்சனையும் கூட ஒரு கருவி மட்டுமே. இலக்கு என்பது நமது இருப்பை அறிவது மட்டுமே. இலக்கியம் ஒரு கை, அறிவுத்துறை அல்லது சமூக கருத்தியல் மற்றொரு கை. இக்கைகளில் பயணிந்து செல்லும் ஒரு தீப்பந்தமே அறிவுத் தேடல் / வாசிப்பு. வெளிச்சத்தின் பெருவெளியை அடைந்த பின் தீவட்டி தேவையிருக்காது. அதை வீசி விடுவோம். இருளும் ஒளியும் அற்ற அந்த இருமையற்ற வெளியில் நாம் தற்காலிகமாய் கலந்து நம்மை இழப்போம்.
இதுவே இலக்கிய வாசிப்பு பற்றின என் விளக்கம். இக்கதையில் இக்கதாபாத்திரம் ஏன் வெயில் காலத்தில் மழைக்கோட்டு அணிகிறார் என விசாரிப்பதல்ல. அது எல்.கே.ஜி பையன்களின் கேள்வி. வாசிப்பு அதையெல்லாம் தாண்டின ஒரு நடவடிக்கை.
// நாளை ஆங்கில இலக்கிய வகுப்பு நீங்கள் எடுக்கையில் சமூக அரசியல் ஆர்வக் கொந்தளிப்பு என தினம் உங்கள் மாணவர்கள் பொங்கினால் என்ன செய்வீர்கள்? இது கல்லூரி வகுப்பல்ல என சொல்லப்போகிறீர்களா?//
இதற்கும் நான் மேலே சொன்னது தான் பதில். இலக்கியம் என்றுமே வாசகனின் இலக்கு அல்ல.
மேலும், ஒரு இலக்கிய பிரதியை அதற்கு உள்ளாக மட்டுமே நீங்கள் வாசித்துப் புரிந்து கொள்ள இயலாது. வாசிப்பு முரணியக்க தன்மை கொண்டது. ஒன்றை ஒட்டி நின்றபடியே அதைக் கடந்து செல்ல எத்தனிப்பதே உன்னதமான வாசிப்பு. .தா, என் வகுப்பில் நான் வெர்ஜீனியா வூல்பின் ஒரு நாவலை விவாதிக்கிறேன். அப்போது ஒரு மாணவி எழுந்து அந்நாவல் தனக்கு நினைவூட்டும் ஒரு சமூக நிகழ்வைப் பற்றி பேச விரும்புகிறார். நான் அவரைப் பேச அனுமதிப்பேன். ஏனென்றால் ஒரு சமூக நிகழ்வை ஆவேசமாய் சர்ச்சிப்பதன் வழி அவர் அந்த பிரதியை இன்னும் ஆழமாய் உணர்ச்சிகரமாய் அந்தரங்கமாய் அணுகப் போகிறார் என்றால் அது அவர் வாசிப்பை இன்னும் மேலானதாக அல்லவா ஆக்கப் போகிறது? மேலும் இன்றைய காலத்தில் இலக்கியத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் தனித்து பார்ப்பது கிட்டத்தட்ட அசாத்தியம் என்றே எண்ணுகிறேன்.
இதனால் விவாதம் திசை மாறிச் செல்லாதா?
ஒரு விவாதத்தின் நோக்கம் முரண்படலின் வழி அறிவை அடைவது என புரிந்து கொள்வோம். அப்போது, அறிதல் என்பது தனி மனித செயல்பாடாக மட்டுமே இருக்கிறது. கூட்டு செயல்பாடாக அல்ல. ஒருவர் பேச இன்னொருவர் கேட்டு அறிவது அல்ல அறிதல். (அதைவிக்கிப்பீடியா அறிதல்என வேண்டுமென்றால் கூறலாம்).
 ஒரு கூட்டம் மிகக் கச்சிதமாய் கராறாய், எந்த திசை மாற்றமும் இன்றி நடத்தப்படுகிறது என்றால் அதனால் பார்வையாளர்கள் மேம்படுவார்கள் என எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் அறிவு ஒரு பண்டம் அல்ல; அதை வாங்கி புசிக்க முடியாது. காலை 9 மணி முதல் இரவு 9 வரை ஒரே இடத்தில் ஒழுக்கமாய் இருந்தால் அது கிடைக்காது.
 ஆக விவாதம் ஒரு வரையறைக்குள் நடக்கிறதா, வரையறையை மீறிச் செல்கிறதா என்பது பொருட்டே அல்ல.
 வரையறையை மீறி நடக்கும் ஒரு உக்கிரமான, நாணயமான விவாதத்தின் வழி நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்றை அடைய முடியும். நான் அப்படியே அடைந்திருக்கிறேன். இதையும் நம் இந்திய மரபே தொடர்ந்து வலியுறுத்துகிறது. .தா, மகாபாரதப் போர் நடக்கப் போகிறது. அனைவரும் ஆயுதங்கள், வியூகங்கள் மற்றும் பெரும் படைகளுடன் தயாராக இருக்கிறார்கள். அப்போது அர்ஜுனன் மட்டுமே ஆயுதங்களை கீழே வைத்து போரிட மறுக்கிறான். அதாவது தனக்கு அளிக்கப்பட்ட வரையறையை அவன் கடக்கிறான். மீறுகிறான். போர்க்கள ஒழுங்கை மறுக்கிறான். அவன் போரிடாமல் கண்ணனுடன் விவாதிக்கிறான். அப்படித் தான் கீதை உபதேசிக்கப்படுகிறது. அதன் வழி அர்ஜுனன் ஞானம் பெறுகிறான். நீங்கள் கோருவதைப் போல்ஐயோ இது நமக்கு இப்போதைக்கு விதிக்கப்பட்ட வேலை அல்ல. நம்மிடம் இந்த இடத்தில் நமக்கு அளிக்கப்பட்ட விதிமுறைகள் படி நாம் சண்டை இட வேண்டுமே ஒழிய விவாதிக்கக் கூடாது.” என்றெல்லாம் யோசித்து கடமையே என அர்ஜுனன் சண்டையிட்டிருந்தால் பகவத் கீதை நமக்கு கிடைத்திருக்காது. இப்படி நான் நமது மரபில் இருந்து நூறு உதாரணங்களைத் தர முடியும்.
நான் இப்போது நிற்கும் புள்ளியை நோக்கி வந்து, என்னுடன் முரண்பட்டு, என்னை கடுமையாய் மறுத்து, கடைசியில் அதே புள்ளிக்கு உங்களில் சிலர் என்றாவது ஒருநாள் வந்து சேர்வீர்கள் என நம்புகிறேன். நான் ஜெயமோகனின் ஊட்டிக் கருத்தரங்கில் கலந்து கொண்டு இரு பத்தாண்டுகள் இருக்கும். அன்று என்னுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் நான் மட்டுமே எழுத்தாளனாய் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து இருக்கிறேன். யாரோடும் எதனோடும் மோதாமல் முந்தானை விலகாத பத்தினிப் பெண் போல் இருந்தவர்கள் பின்னடைந்து காணாமல் சென்றார்கள். இக்கூட்டத்திலும் அப்படி பலர் இருட்டுக்குள் மறைவார்கள். புதுப்புது ஆட்கள் தொடர்ந்து வருவார்கள். இரு பத்தாண்டுகள் கழித்து உங்களில் சிலருடன் நானும் இருப்பேன் என நம்புகிறேன். அன்று மீண்டும் இது பற்றி உரையாடுவோம்.
பின்குறிப்பு: மறுத்து முன்னகர்தல் என்பது கருத்தளவில் தான் நிகழ வேண்டுமென்பதில்லை. புனைவுத்தளத்திலும், கவிதைக்குள்ளும் நிகழலாம். ஆனால் முரண்பட்டு எல்லைகளை மீறிச் செல்லும் எல்லாவற்றுக்கும் அடிப்படையே. எல்லாருடனும் ஒத்துப் போகிறவர்கள் எழுதவே இயலாது. வண்ணதாசன் என்பவர் சு.ராவை (மௌனமாய்) மறுத்தே நிலை கொள்கிறார். சு.ராவின் பாணியை அவர் மறுக்காமல் ஏற்றிருந்தால் அவரே இல்லை. இங்கே நாம் தர்க்க விவாதங்களைப் பற்றி பேசியதாலே நான் புனைவு வெளியில் நிகழும் மறுத்து முன்னகரும் விசயத்தை பெரிதாய் வலியுறுத்தவில்லை.


Comments