விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருது (2017) நிகழ்வு - (2)


முதல் பதிவில் நான் குறிப்பிட்டவற்றை ஒட்டி மேலும் சில பரிந்துரைகளை கீழே தருகிறேன்.
சமூக அரசியல் பார்வையை முன்னிறுத்தாமல் இலக்கியப் பிரதியை அதுவாக மட்டுமே அலச முடியும். ஆனால் இன்றுள்ள சூழலில் எல்லா வகையான பேச்சுகளுக்கும் பிரதிகளுக்கும் இலக்கிய சூழலில் முக்கியத்துவம் பெறுகின்றன. சென்னை பல்கலையில் ஒரு மாணவி சேலைகளின் டிசைனை கூட ஒரு பிரதியாகக் கண்டு அலசி முனைவர் பட்டம் வாங்கினார். .தா ஒரு ஆன்மீகச் சொற்பொழிவில் என்ன மாதிரியான சொற்கள், எந்த விதமான வாக்கிய அமைப்புகள் பயன்படுகின்றன, அவை சமூகத்தின் கூட்டுமனதில் எப்படியான அர்த்தங்களை உருவாக்குகின்றன என்றெல்லாம் இன்றொரு இலக்கிய விவாதத்தில் பேச வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

பெரும் அதிகார அமைப்புகள் நம் மீது செலுத்தும் தாக்கத்தை அறிய இந்த அலசல்கள் நமக்கு பயன்படும்; இந்நுணுக்கங்களை நாம் ஒரு கதையாக எழுதியும் பரிசீலிக்க முடியும். ரொலான்ட் பார்த் striptease கிளப்புகளுக்கு சென்று அந்த நடனங்களை ஆராய்ந்து எப்படி நிர்வாணம் ஒரு ஆடையாக திகழ்கிறது என தன் Mythologies நூலில் ஒரு கட்டுரையில் விளக்குகிறார். ஒரு இலக்கிய பிரதியில் இல்லாத ஒன்று எப்படி இருப்பதாய் மாறுகிறது, எப்படி கலாச்சார குறியீடுகள் செயல்படுகின்றன என அறிய இத்தகைய ஆய்வு உதவும். அதாவது, நாம் இலக்கிய பிரதியை அதனளவில் மட்டும் அணுகினால் போதாது. வாழ்வில் இருந்து, குறியீடுகள் புழுங்கும் எல்லா தளங்களில் இருந்தும் அணுக வேண்டும். பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில், டிவியில், செய்தித்தாள்களில், அரசியல் பிரகடனங்களில் மொழி எப்படி செயல்படுகிறது, அதன் முரண்கள் என்ன என்று விவாதிக்க வேண்டும்.

அங்கிருந்து இலக்கிய பிரதிக்கு சென்றால் புதிய திறப்புகள் கிடைக்கும்.
இன்னொரு பக்கம், சமூக அரசியல் ஈடுபாடும் இலக்கிய பிரதியை உணர்ச்சிகரமாய், அர்ப்பணிப்புணர்வுடன், மேலதிக பொறுப்புடன் அணுக நமக்கு உதவும். வாசகர் வட்ட நண்பர்கள் பலருக்கும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் ஆர்வம் உள்ளது என்பதை நான் கவனித்தேன். ஆனால் ஜெ.மோ மீதான் அச்சத்தினால் அவர்கள் அரசியல் சமூக விழைவுகளை அடியாழத்தில் புதைத்து வைக்கிறார்கள்.
 இந்த ஆர்வம் நாம் இலக்கிய பிரதியில் காணும் உண்மையை மேலும் அணுக்கமாய், எதார்த்தமாய், மண்ணோடு பிணைந்ததாய் பார்க்க உதவும். இந்த அரசியல்இலக்கிய இணைப்பை கலை இலக்கிய பெருமன்ற விவாதங்களில் அருமையாய் நான் உணர்ந்துள்ளேன். ஆனால் இதை ஜெ.மோ கவனமாய் கத்தரிக்கிறார். வேண்டாம் என்கிறார். இலக்கிய விவாதத்தில் கவனச்சிதறல் வேண்டாமே என்கிறார். விவாதம் திசை திரும்பக் கூடாதே என்கிற அவரது அச்சமே இப்படி அவரை செய்யத் தூண்டுகிறது. வாசகர் வட்ட நண்பர்கள் தமது இயல்பான மனப்போக்குகளை இத்தருணத்தில் வலியுறுத்த வேண்டும். ஒன்றை நினைவில் வையுங்கள். ஜெ.மோ இடது பக்கம் கை காட்டினால் நீங்கள் வலது பக்கம் திரும்ப வேண்டும். அவருடன் மோதாமல் நீங்கள் எதையும் அடைய முடியாது.

இன்னொரு பரிந்துரை கூட்டங்களை மாலை ஐந்து மணிக்கு மேல் நடத்தாமல் இருப்பது. மாலை வேளையில் நண்பர்கள் ஒன்று கூடி அரட்டை அடிக்கவும் வெளியே செல்லவும் இது உதவும். இந்த கூடல்களில் தாம் உண்மையான இலக்கிய விவாதங்களும் கல்வியும் நிகழ்வதாய் என் நம்பிக்கை. நான் இலக்கியம் பற்றி அதிகம் கற்றது கருத்தரங்கிலோ கூட்டங்களிலோ அல்ல; தனிப்பட்ட அரட்டைகளில் தாம். இந்த அரட்டைகள் இலக்கிய கைகலப்புகளாய், மது விருந்துகளாய் போய் முடியும் என ஜெ.மோ அஞ்சுகிறார். அதனால் காலை 9 முதல் இரவு 9 வரை கூட்டங்கள் நடத்துகிறார்.
 ஆனால் இந்த கச்சிதமான திட்டமிடல், கராறான அட்டவணை, ஒழுக்க விதிமுறைகளினால் இவர்கள் நிறைய இழப்பதாகவே எனக்குப் படுகிறது. தமிழில் இன்று முன்னணி எழுத்தாளர்களாய் உள்ளவர்கள் இப்படியான அடிதடி அரட்டைகளின் வழி உருவாகி வந்தவர்களே. நான் மது விருந்துகளை ஆதரிக்கவில்லை என்றாலும், திட்டமிடாத அலைபாயும் அரட்டைகள், சர்ச்சைகள் இளம் எழுத்தாளனின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியம் என நினைக்கிறேன். ஒரு அமைப்பாளரிடம் இது பற்றி கேட்கும் போது ஒரு மணி நேரம் இடைவெளி விட்டாலே படைப்பாளிகள் கூட்டம் கூட்டமாய் பிரிந்து வெளியே போய் விடுகிறார்கள் என்றார். இதை ஏன் பிரச்சனையாக பார்க்கிறீர்கள் என கேட்க விரும்புகிறேன்.
முன்னூறு பேரை ஒரே இடத்தில் அமர வைத்து ஒரு சில உரையாடல்களை கேட்க வைப்பதன் மூலம் அவர்கள் அறிவையும் ஊக்கத்தையும் பெறுகிறார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அரங்கிற்கும் வெளியே அரட்டையில் ஈடுபடுவதன் வழி அவர்கள் அறிவை இழக்கிறார்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
இலக்கியத்தை பருப்பொருளாய் நாம் பார்க்க விரும்புவதன் ஒரு விளைவே இந்த ரீதியான அச்சங்கள். கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்வது இலக்கிய நுண்ணுணர்வுக்கும் பொருந்தும்அதை நீங்கள் பார்க்கவோ கேட்கவோ தொட்டுணரவோ அள்ளி பையில் போட்டுக் கொள்ளவோ முடியாது. அது விஷ்ணுபுரம் இலக்கிய அரங்கிலும் இல்லை, மது விருந்துகள், இலக்கிய சர்ச்சைகளிலும் இல்லை. எங்குமே இல்லாத ஒன்றை கட்டுப்பாடாய், தெளிவாய், தொலையாமல் விநியோகிக்க ஏன் இந்த ஆவேசம்?
ஜெயமோகனிடம் இது பற்றி பேசும் போது குற்றால இலக்கிய அரங்குகள் போல் விஷ்ணுபுர இலக்கிய நிகழ்வுகள் அழிந்து விடாமல் இருக்க வேண்டும் எனும் எச்சரிக்கையுணர்வே தன்னை இப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கச் செய்கிறது என்றார். ஆனால் குற்றால அரங்குகள் நடக்காததனால் இலக்கியத்துக்கு நட்டம் என ஜெ.மோவால் உறுதியாக நிறுவ முடியுமா? முடியாது. அது நடக்காவிட்டால் இன்னொன்று நடக்கும். விஷ்ணுபுரம் கூட்டங்களும் ஒரு பொருட்டு மட்டுமே. இலக்கிய நடவடிக்கைகள் யாராலும் ஆரம்பிக்கவோ தொடரவோ கட்டுப்படுத்தவோ அழிக்கவோ படுவதில்லை.
இன்னொரு கேள்வி: மாலையில் படைப்பாளிகள் சந்தித்தால் சுய அழிவில் தான் ஈடுபடுவார்கள் என ஜெ.மோவுக்கு எப்படி அவ்வளவு உறுதியாய் தெரியும்? காதல் தோல்வி உற்றவர்கள் இனி பெண் முகத்திலே விழிக்க மாட்டேன் என சபதமெடுப்பது போல் அல்லவா இது?
ஜெ.மோ கனிந்து மென்மையானவராய் மாறி விட்டார். இனி அவர் பிடிவாதங்களை தளர்த்தி, சற்றே லகுவானவராய் விட்டேந்தியாய் மாற வேண்டும். எப்போதும் கண்ணைத் திறந்து வைத்து விழிப்பாய் இல்லாமல் நெகிழ்வாய், பொறுமை மிக்கவராய் மாற வேண்டும். “போரும் வாழ்வும்குட்டுசோவ் போல் நெருக்கடியை போகிற போக்கில் கையாள்கிறவராய் மாற வேண்டும். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு மிக முக்கிய இலக்கிய அமைப்பாய், சமகால எழுத்துப் போக்கில் திருப்புமுனை காரியங்களை செய்யும் பாய்ச்சல் போக்காய் மாற வாய்ப்புள்ளது. வாழ்த்துக்கள்!
Comments

Anonymous said…
Dear Mr.Abhilash,

Your swift feedback on happenings -this despite your busy schedule- is much appreciated and we thank you for same.

Were 'Ad hominem' comments on Mr.Jeyamohan required at all ..in the garb of suggestions?

Like how we have 'Sparknotes' where summarization of even a lengthy novel is feasible, we should have a simple condensation possiblity on Mr.Jeyamohan's novel(s) such as Vishnupuram (His Magnum Opus) and I have not seen any such condensation (excepting one at SILICON SHELF TAMIL web but not an easy read again) so far . Not in Mr.Jeyamohan's website too( individual links of each of his novels). Wikipedia (Tamil/English) does not touch up the basics of novel (gyst/ summarization,etc.,)

If you've read extensively of Jeyamohan's Vishnupuram or Kottravai, would it work for you to bring aboard dissertation on same ? It will help immensely the readers.

Thanks aplenty.

Regardsவணக்கம்
ஜெயமோகனின் நாவல்கள் குறித்து விரிவாக எழுத எனக்கு ஆசை உண்டு. விரைவில் நடக்கும். உங்கள் தூண்டுதலுக்கு நன்றி!
rjgpal said…
அன்புள்ள அபிலாஷ்,
விழாவுக்கு வந்தது, கலந்துரையாடியது ஆகியவற்றுக்கு முதலில் நன்றி. உங்களது பார்வைக்கு சில பதில்கள் சொல்லலாம் என நினைத்தே இந்த பதிவு.

1. இடப்பக்கம் காண்பித்தால் வலப்பக்கம் போய்தான் முன்னேற முடியும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இந்த மறுத்து பேசி முன்னேறும் கதையை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு புதிதாய் வரும் வாசகருக்கு சொல்லப்போகிறோம்? மறுப்பதன் வழியே மட்டுமே முன்னேற முடியும் எனும் உயர் தத்துவம் இல்லாமலேயே ஒப்புக்கொண்டு மேலதிகமாக முன்னேற முடியாதா ?
2. இந்த உரையாடல்கள் ஒரு எழுத்தாளரை கௌரவிக்கும் நிகழ்வு. இது ஔ விமர்சன கூட்டமல்ல. மதிய சாப்பாடு கிடைக்கும் விடுதியில் இரவு சோறு கிடைக்காது. அதெல்லாம் இல்லை,மதியம் கொடுத்தியே ... போர்ட் வச்சிருக்கியே .. என்றால் அதை இலக்கிய யுகப் புரட்சியாக சொல்ல நான்கு பேர் இருக்கும்வரை இந்த மறுத்துப் பேசி முன்நகர்தல் தியரி வேலை செய்யும். நானறிந்தவரை இலக்கிய கூட்டங்கள் ஒன்று வெறும் பாராட்டு விழாக்கள் அல்லது வசைமாரி பொழிவுகள். இது ஒன்றாவது எழுத்தாளனுடன் வாசகன் உரையாடும் இடமாக இருக்கட்டுமே ? எல்லாமே பிரியாணிக் கடையா இருக்கணும்னா எப்டி ? ஒரு இட்லிக் கடைக்கும் வாய்ப்பு வழங்குங்கள் யுவர் ஆனர்...
3. அதென்னய்யா சமூக அரசியல் விவாதங்கள் ? இதில் ஆர்வம் உள்ளது உண்மை. ஏன் ஜெயமோகனே அதை செய்கிறார் ... ஆனால் எங்கு எதை எனும் வரையறை இருக்கிறதே ? ஜெயமோகனுக்கு பயந்து..... யப்பே ... உங்க அவதானிப்பு இருக்கே.... நாளை ஆங்கில இலக்கிய வகுப்பு நீங்கள் எடுக்கையில் சமூக அரசியல் ஆர்வக் கொந்தளிப்பு என தினம் உங்கள் மாணவர்கள் பொங்கினால் என்ன செய்வீர்கள்? இது கல்லூரி வகுப்பல்ல என சொல்லப்போகிறீர்களா? இந்த வரி எந்த அவைக்கும், எந்த கூடுகைக்கும் பொருந்தும். பேசுபொருள் தாண்டி உரையாடல் சென்றால் தனக்கு தெரிந்த விஷ்யங்களைஎல்லாம் பேச ஆரம்பிப்பதை பலமுறை கண்டிருக்கிறோம். இது ஜெ சொல்லி இருப்பதால் ஆணையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதிலிருக்கும் நியாயம் கருதி சுய மட்டுறுத்தலாகவே நண்பர்கள் கைக்கொள்கிறார்கள். இங்கு அல்ல, வேறெங்கு பேசினாலும் இப்படித்தான் பேசுவார்கள். சமூக, அரசியல் விவாதங்களில் போய் இலக்கிய நயம், படைப்பாளுமை மீது விமர்சனம் என்று பேசும் அபத்தத்தையும் நண்பர்கள் செய்ய மாட்டார்கள்.

இலக்கியவாதிகள் சண்டை போட்டுத்தான் இலக்கியம் வளர்க்க வேண்டும் என்பது சரியே. பகவத் கீதை உதாரணம் காட்டப்படவேண்டிய அளவு அது ஒரு உலகப் போரே. ஆனால் அதை இன்னொரு எழுத்தாளரின் பாராட்டுக் கூட்டத்தில்தான் வைத்துக் கொள்வேன் என்பதில் இருக்கும் உறுதி பாராட்டப்பட வேண்டியதே . 3௦.12.17 அன்று காலை கோவை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கிடையேயான போர் நிகழ இருக்கிறது. வாசகர்களாகிய நாங்கள் ஆம்புலன்ஸ், குளுக்கோஸ் சகிதம் மோதல் வழிக் கற்றல் எனும் நிகழ்வுக்கு தயாராக இருக்கிறோம். வாய்ப்பிருப்பின் நீங்களும் கலந்து கொள்ளலாம். ( நான்தான் நடுவர் அதாவது ஐ நா சபை) :)

அன்புடன்,
ராஜகோபாலன் ஜா, சென்னை