விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருது (2017) நிகழ்வு - (1)


விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருது வழங்குவதை ஒட்டி நடந்த இருநாள் இலக்கிய நிகழ்வில் கலந்து விட்டு இப்போது தான் ஊருக்குத் திரும்புகிறேன் உற்சாகமாய், நிறைவாய், இனிய நினைவுகளுடன்.
பொதுவாக இலக்கிய கருத்தரங்குகளில் உரையாற்றி ஆற்றியே கொன்று விடுவார்கள். ஆனால் இந்த நிகழ்வில் அரங்குகளை உரையாடல் வடிவில் அமைத்திருந்தார்கள். வாசகர்களின் கேள்விகளுக்கு படைப்பாளிகள் பதிலளித்தார்கள். அதை ஒட்டின சிறு விவாதங்கள் நடந்தன. சரியான நேரத்தில் ஆரம்பித்து துல்லியமாய் அளிக்கப்பட்ட நேரத்தில் முடித்தார்கள். உணவு, உபசரிப்பு, சூழல், ஒழுங்கு அனைத்துமே பாராட்டடத்தக்க வகையில் இருந்தன. ஒருவிதத்தில் சிறுபத்திரிகை சூழலுக்கு அந்நியமாயும் இருந்தன. (அதைப் பற்றி பிற்பாடு கூடுதலா சொல்கிறேன்.)

ஜேனிஸ் எனும் மேகாலய படைப்பாளியை நிகழ்ச்சிக்கு அழைத்து உரையாட வைத்தது ஒரு முக்கியமான முயற்சி. ஜெ.மோ கேரள, கர்நாடக படைப்பாளிகளை அவர் ஏற்கனவே அழைத்து வந்திருக்கிறார். இப்போது அவருக்கு முற்றிலும் தொடர்பற்ற ஒரு உலகில் இருந்து ஒரு படைப்பாளியை கொண்டு வந்திருக்கிறார். இதன் நீட்சியாக நம் இலக்கிய கூட்டங்களில் வேற்று மொழி சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்பதும், அவர்களின் படைப்புகளை இங்கே மொழியாக்கி வெளியிட்டு விவாதிப்பதும் பரவலாய் நடக்க வேண்டும். நம் அறிவுப் பரப்பை விரிவாக்க, தொடர்புகளை உருவாக்க நிச்சயம் இது உதவும்.
கெ.ஜெ அசோக்குமார், தூயன், விஷால் ராஜா, போகன், நான் உள்ளிட்ட இளம் படைப்பாளிளும், நவீன் உள்ளிட்ட மலேசிய படைப்பாளிகளும், மூத்த படைப்பாளி பி.ஏ கிருஷ்ணனும் இவ்வாறு வாசகர்களுடன் உரையாடினோம். இதில் மிக சமீபமாய் நூல் வெளியிட்டு கவனம் பெறத் துவங்கி இருப்பவர்களுக்கு இத்தகைய ஒரு மேடையை ஜெயமோகன் அளித்துக் கொடுத்திருப்பது எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்த வாசகர்களும் வித்தியாசமானவர்கள். பெரும்பாலானோர் வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள். இத்தனை பேர்களை ஒரு இடத்தில் கூட்டி தொடர்ந்து கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்ததே ஒரு தனி சாதனை. சென்னையில் 100 பேரை வரவழைக்கவே படாத பாடு பட வேண்டும். ஆனால் இக்கூட்டத்துக்கு பெரிய விளம்பரங்கள் இன்றியே 300 பேர் தோராயமாய் வந்திருந்தார்கள்.
 இன்னொரு ஆச்சரியம் இவர்களில் ஒரு பகுதியினர் விவாதிக்கப்பட்ட படைப்பாளிகளின் நூல்களை ஏற்கனவே படித்திருந்தார்கள் என்பது. 2017 விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற சீ.முத்துசாமி மற்றும் ஜேனிஸின் நூல்களைப் பற்றி  அலசி ஆராய்ந்து பல கேள்விகளை இவர்கள் கேட்து உண்மையிலேயே என்னை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் இலக்கியம் படிக்கும் என் மாணவர்கள் கூட வகுப்பில் இவ்வளவு தயாரிப்புடன் வருவதில்லை. ஜெயமோகன் தான் இவ்வாறு இவர்களை படித்து தயாராய் வர வைக்கிறார் என சுலபத்தில் ஊகித்தேன். ஏனெனில் 98இல் மு.தளையசிங்கம் பற்றி ஊட்டியில் ஒரு கருத்தரங்கை அவர் நடத்தின போது அவரது சிறுகதைகளின் பிரதிகளை எங்களுக்கு அளித்து படிக்குமாறு ஊக்குவித்து அதன் பின்னரே நாங்கள் விவாதங்களில் பார்வையாளராய் அவர் அமரச் செய்வது நினைவுள்ளது.
இதை நான் இருவிதங்களில் பார்க்கிறேன்.
ஒழுங்குடன் நேர்த்தியுடன் வாசிப்பது குறைந்தபட்ச அறிவுக்கும் வாசிப்பு தர்க்கத்துக்கும் நல்லதே. ஆனால் சொந்தமாய் ஒரு வாசிப்பு நுணுக்கத்தை, பார்வையை, தரப்பை, புரிதலை, தர்க்கத்தை உருவாக்க மனம் போனபடி படிப்பது அவசியம். ராணுவ ஒழுங்குடன் படிக்கையில் நாம் அனைவரும் ஒரே வாசிப்பு மனநிலைக்கு போய் சேரும் ஆபத்து உள்ளது. ஜெயமோகன் என்ன தான் மாற்றுப்பார்வைகளை அனுமதித்தாலும், அவர் தன்னையறியாமலும் அறிந்தும் தன் வாசிப்பு அணுகுமுறையை போதித்து பிறர் மீது நிறுவக் கூடியவர். ஜெயமோகனை தொடர்ந்து வாசிப்பவர்கள் அனைவரும் அவரது இலக்கிய நம்பிக்கைகளை மறு ஒலிபரப்பு செய்யக் கூடியவர்களாய் உடனடியாய் மாறுவார்கள். இந்த அபாயத்தை நாம் கவனமாய் கடந்து செல்ல வேண்டும்.
விஷ்ணுபுரம் வட்ட வாசகர்களுக்கு தனிப்பட்ட ரசனைகளும் பார்வைகளும் உண்டு என்பதை தனிப்பட்ட அவதானிப்பில் கண்டு கொன்டேன். ஆனால் இந்த மாறுபட்ட தன்மைகளை முன்னிலைப்படுத்தி, சதா எதிர்க்கருத்துக்களை பேசி முரண்பட்டு விவாதிக்கும் குணத்தை இவ்வாசகர்களிடம் ஆச்சரியமாய் நான் காணவில்லை. ஒரு கலைச்சொல்லைக் கூட இவர்கள் இந்த இருநாட்களில் பேசிக் கேட்கவில்லை என்பதும் மிகுந்த வியப்பேற்படுத்தியது. எந்த விமர்சன மரபையும் சாராமல் முழுக்க முழுக்க ஒரு பிரதியை ரசனை அடிப்படையில் பேசுபொருள், விவரணை, பாத்திர அமைப்பு, சித்தரிப்பு, நிலவியல் விவரணை எனும் சொற்களுக்குள்ளே மீண்டும் மீண்டும் புழங்கினார்கள்.
இப்படி வாசிப்பது தவறென்பது என் தரப்பல்ல. ஆனால் கோட்பாட்டு மொழி ஒரு பிரதியை தாண்டி தத்துவார்த்த அளவில் மிக நுணுக்கமான சிக்கலான வாதங்களை உருவாக்க உங்களுக்கு மிகவும் உதவும். மனித இருப்பு, உளவியல், மொழிக்குள் உண்மை கட்டமைக்கப்படும் விதம் போன்ற பல விசயங்களை நீங்கள் ஒரு படைப்பை முன்வைத்து பேச முடியும். இவ்வளவு படிக்கிறவர்களுக்கு அடுத்த கட்ட விவாதங்களுக்குள் போக திறன் இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். இவர்கள் என்னை விட பல மடங்கு அதிகமாய் அறிவும் வாசிப்பு பழக்கமும் கொண்டவர்கள். ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம், குழப்பம், கோட்பாட்டு பரிச்சயமின்மை, சிறுபத்திரிகை உலகில் நாம் காணும் உக்கிரமான விவாத விழைவு இல்லாமை இவர்களைத் தடுக்கிறது என நினைக்கிறேன்.
ஒருவேளை, ஜெயமோகனைப் போன்றே சிந்திக்க முயன்று திக்கித்து நிற்கிறார்களா? ஜெயமோகனின் ஆகிருதி இவர்கள் மாற்று கோணங்களில் சிந்திக்க தடையாக அமைகிறதா? அல்லது  ஜெயமோகனை எதிர்கொண்டு தன்னை வலுவாக அவருக்கு நேர் எதிராய் முன்வைக்கும் திராணி இவர்களுக்கு இல்லையா? அல்லது இவர்களே நடத்தும் கூட்டம் என்பதால் அடக்கி வாசிக்கிறார்களா?
வெய்யிலின் அரங்கில் அவரது கவிதைகளின் அரசியல் ஒரு பிரச்சார கட்சி அரசியலா அல்லது அவர் மாறுபட்ட, அரசியல் இல்லாத கவிதைகள் எழுதுகிறாரா எனும் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப் பட்டது. வெய்யிலும் தான் அரசியல் கவிதை மட்டுமே எழுதவில்லை, காதல் கவிதைகளும் தான் எழுதுகிறேன், ஆனால் அரசியல் கவிஞன் எனும் தேவையற்ற மிகைச்சித்திரம் தன்னைப் பற்றி இலக்கிய உலகில் எழுகிறது என வருத்தம் தெரிவித்தார். அதேவேளை தன் அனைத்துக் கவிதைகளிலும் அரசியல் உள்ளதென்பதையும் வலியுறுத்தினார். கவிதையில் அரசியல் சரியா, அது வேண்டுமா என்கிற ரீதியில் விவாதம் சற்று நேரம் நடந்தது.
 அரசியல் உள்ளதா இல்லையா? ஏனிந்த குழப்பம்? ஏன் வெய்யில் முரண்படுகிறார்? இக்கேள்வியை நோக்கியே விவாதம் சென்றிருக்க வேண்டும். முக்கியமாய், வெய்யில் அரசியல் என்பதை எப்படி விளக்குகிறார் எனும் கேள்வியை கேட்டிருக்க வேண்டும். அவர் அரசியல் என்ற போது நுண் அரசியலை, அதிகார அரசியலையே குறிப்பிடுகிறார் என எனக்குப் புரிந்தது. இது சரி என்றால் வெய்யில் என்னவிதமான அதிகார அரசியல் சமிக்ஞைகளை, குறியீடுகளை தன் கவிதைகளில் அடையாளம் காண்கிறார் என்கிற ரீதியில் விவாதம் சென்றிருக்க வேண்டும். அப்படி நிகழவில்லை. ஏனெனில் நவீன விமர்சன மரபின் மிக முக்கிய சொல்லானஅதிகாரம்என்பதையே அங்கு யாரும் உச்சரிக்கவில்லை. ஜேனிஸ் மட்டுமே power structures என வேறொரு சந்தர்பத்தில் தன் பேச்சிடையே ஒருமுறை குறிப்பிட்டார். ஆனால் அது வெய்யிலின் கவிதை விவாதத்தில் அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய சொல். ஆனால் நிகழவில்லை. சொல்லப் போனால், கடந்த இரு பத்தாண்டுகளில்அதிகாரம்”, “அரசியல்எனும் சொற்கள் பேசப்படாத முதல் இலக்கியக் கூட்டம் இதுவாகத் தான் இருக்கும் என எனக்குத் தோன்றியது.
பூக்கோவை பேசித் தான் ஆக வேண்டியதில்லை. ஆனால் அதற்குத் தோதான இத்தகைய சந்தர்ப்பம் ஏற்படும் போது எந்த சிறுபத்திரிகை வாசகர்களும் அதை இதுவரை தவற விட்டிருக்க மாட்டார்கள்

ஒருவேளை சி.சு செல்லப்பா, வெங்கட் சாமிநாதன் காலத்தில்கலை கலைக்காகவேபாணியிலான விவாதங்கள் நடந்திருக்கலாம். ஆனால் தொண்ணூறுகளுக்குப் பிறகு தூய இலக்கிய விவாதங்கள் தமிழில் சாத்தியமே இல்லை என நம்பி இருந்த எனக்கு இது பெரும் வியப்பாக இருந்தது.
இதைத் தொடர்ந்து இடைவேளையின் போது ஒரு தோழி வெயில், நான் உள்ளிட்ட நண்பர்களிடம் இது சம்மந்தமாய் சற்றே கொந்தளிப்பாய் உரையாடினார். பிரச்சார அரசியல் கவிதை எழுதுவது, போராட்டக் கருவியாய் கவிதையை பயன்படுத்துவதில் தவறில்லை, அதற்காய் மன்னிப்பு கேட்கும் தொனியில் வெய்யில் பேச வேண்டியிருக்கவில்லை என அவர் சொன்னார். எனக்கு அத்தோழியின் கருத்துடன் உடன்பாடில்லை. ஆனாலும் அவர் தனது இந்த ஆவேசமான நிலைப்பாட்டை ஏன் விவாதத்தில் வெளிப்படுத்தவில்லை எனக் கேட்டேன். அவர் உடனேநான் ஜெயமோகனை காயப்படுத்த விரும்ப வில்லைஎன திரும்பத் திரும்ப சொன்னார். எனக்கு அதைக் கேட்க இன்னும் விசித்திரமாய் இருந்தது.
முதலில், அன்றைய கூட்டத்தில் ஜெயமோகன் யாருடைய விவாத சுதந்திரத்தையும் தடுக்கவில்லை. சொல்லப் போனால் அவருக்கு உடன்பாடில்லாத கருத்துக்கள் பல பேசப்பட்ட போது அவர் அமைதியாக இருந்து அனுமதிக்கவே செய்தார். இடையிடையே அவர் தனது எதிர்வினையை நக்கலாய், பகடியாய் தெரிவித்தார். ஒரு கேள்வி பல கேள்விகளாய் பிரிந்து ஒரு வாதம் நீடிக்கும் தருவாய் ஏற்படும் போதெல்லாம் அவர் இடையிட்டு புதுக் கேள்விகளை நோக்கி விவாதத்தை திருப்பினார். அதாவது அவர் சுதந்திரத்தை அனுமதித்தார், ஆனால் ஒரு கோட்டை வரைந்து அதற்குள் அந்த சுதந்திரம் இயங்க வேண்டும் என உணர்த்தினார். இது ஒருவித மனத்தடையை அங்கு பலருக்கும் ஏற்படுத்தியதா?
 அத்தோழி அன்று தன் கடும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தாலும் ஜெயமோகன் புண்பட்டிருக்க மாட்டார் என எனக்கு உறுதியாகத் தெரியும். ஏனெனில் நான் அவரை இரு பத்தாண்டுகளாக அறிவேன். நான் அவரை சந்தித்த நாள் முதலே அவரை மறுத்துப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தேன். அதை அவர் அனுமதித்தார். ஆனால் அதேவேளை ஏன் என்னை ஏற்கவில்லை என்பதை மிக வலுவாய், மண்டையில் தட்டாமல் தட்டி புரிய வைக்கவும் முயல்வார். அவர் என் போக்கில் என்னை சிந்திக்க அனுமதிப்பார், ஆனால் என் பார்வை தவறானது என உணர்த்தவும் செய்வார். ஓடினால் குழந்தை விழுந்து விடும் என கூடவே ஓடி வரும் தகப்பனைப் போன்றவர் அவர். சில குழந்தைகள் ஐயோ அப்பா கூடவே இனி ஓடி வருவாரே என பயந்து ஓடாமலே நின்று விடும். அக்கூட்டத்தில் பலரும் அக்குழந்தை போன்றே சிந்தித்தார்கள்.
அதாவது, இரு எதிர் போக்குகள், சிந்தனைகள் ஒன்றிணைந்து மோதும் போதே புதிய சிந்தனை, படைப்பாக்கம், சமூக மாற்றம் நிகழ முடியும் என்றார் ஹெகல். இதுவே முரணியக்க தர்க்கம். இதுவே ஜெயமோகனின் சிந்தனையின் அடிப்படை. இதை அவர் மார்க்ஸியத்தில் இருந்து பெற்றுக் கொண்டார். அதனாலே அவர் அந்த இருநாள் இலக்கிய அரங்குகளில் தொடர்ந்துஇது உங்கள் இயல்பான குறைபாடு, இதை எப்படி கடந்து வரப் போகிறீர்கள்?” என ஒவ்வொரு எழுத்தாளனிடமும் வினவினார். சீ. முத்துசாமிக்கு விருது அளிக்கும் முன்னர்இது உங்கள் சாதனை, இது உங்கள் குறை. இரண்டும் சேர்ந்தவரே நீங்கள். இனி பிடியுங்கள் உங்கள் விருதைஎன்று சொல்லியே ஜெயமோகன் கொடுத்தார்.
 சீ.முத்துசாமியால் இயன்றதற்கும் இயலாததற்கும் இடையில் ஒரு போராட்டம் உள்ளது. அதுவே அவரது படைப்பாக்கத்தின் அடிப்படை என ஜெயமோகன் நம்புகிறார். சீ.முத்துசாமியின் குறையாக அவர் நீண்ட காலம், தன் நடைமுறைத் தேவைகளின் பொருட்டு, நீண்ட காலம் இலக்கியத்தில் இருந்து விலகி இருந்ததை, இதன் மூலம் மலேசிய இலக்கியத்துக்கு சேவை செய்யும் தியாக மனப்பான்மையற்று இருந்ததை குறிப்பிட்டார். இதற்கு மாற்று உதாரணமாய் அவர் புதுமைப்பித்தனை வைத்தார். புதுமைப்பித்தன் தன் நடைமுறைத்தேவைகளை உதாசீனித்து, உணவும் மருந்தும் இன்றி தன்னை அழித்து தமிழ் நவீன இலக்கியத்துக்கான தடத்தை வளர்த்தார். இதன் பொருள் சீ.முத்துசாமி தவறிழைத்து விட்டார், மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதல்ல. அவரும் பு.பியை போல் பட்டினி கிடக்க வேண்டும் என்பதல்ல. அவரது அடிப்படையான குறை நடைமுறை வாழ்க்கையின் சஞ்சலங்களுக்கு உட்படுவது. இந்த குறையுடன் அவர் தொடர்ந்து மோதி, அந்த மோதலினால் தனக்குக் கிடைக்கும் ஆற்றலுடன் அவர் மேலும் மேம்பட வேண்டும் என்பது தான் ஜெயமோகனின் தரப்பு.
இந்த இடத்தில் பு.பியை உச்சி முகந்த ஜெ.மோ அவரை பற்றி வேறொரு தருணத்தில் எழுதும் போது பு.பி உடல் நலமின்மை ஏற்படுத்திய ஆற்றலின்மையினால் தன் சிறுகதைகளை முழுமையற்று முடித்தார் எனச் சொல்கிறார். இது பு.பியின் குறை. இதனுடன் அவர் மோதி இருக்க வேண்டும்.
வாசகருடனான உரையாடல் அமர்வின் போது என்னிடமும் ஜெ.மோ குறிப்பிட்டார்: “உன் படைப்புலகின் நிலவியல் வர்ணனைகள் குறைவு. கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். இதைக் கடந்து வர என்ன செய்யப் போகிறாய்?” இதன் பொருள் உனக்கு எழுதவே தெரியவில்லையே என்பதல்ல. அவர் என்ன சொல்ல வருகிறார் என நான் புரிந்து கொண்டேன். நான் இந்த lack உடன் முரண்பட்டு பட்டு அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.
ஜெ.மோவின் முரணியக்க அளவுகோலின் முன் கடவுள் கூட தப்ப முடியாது.
ஒரு கொசு, ஒரு அப்பாவிக் கொசு, தெரியாமல், ஜெ.மோவின் முழங்கையில் அமர்ந்து ரத்தத்தை உறிஞ்சத் துவங்குகிறது. ஜெயமோகன் அக்கொசுவிடம் சொல்வார், “மனிதனால் முடியாத ஒன்று உனக்கு முடிகிறது. காற்றில் விருட்டென பறந்தெழுந்து எங்கும் அலைய முடிகிறது. ஆனால் அதேவேளை மனிதனின் ரத்தத்தை குடிக்காமல் உன்னால் கருத்தரிக்க முடியாது. இந்த கீழான தேவை காரணமாய் நீ உயிரிழக்க நேரிடுகிறது பார். உனது இந்த போதாமையுடன் தொடர்ந்து மோதி நீ உன்னை மேம்படுத்த வேண்டும். அதுவே உன் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத விதி”. அடுத்து படார் என அடித்து அதைக் கொன்று விடுவார்.
நான் பழகியுள்ள மார்க்ஸிய தோழர்களும் இப்படியே சிந்திப்பார்கள். ஆனால் ஒரே வித்தியாசம் ஜெ.மோ அவர்களை விட ஆவேசமாய் அழுத்தமாய் கருத்துக்களை  முன்வைப்பார். அதைக் கேட்கிறவர்கள் சற்றே பதறிப் போவார்கள். சீ.முத்துசாமியும் அவ்வாறு தான் பதறி விட்டார் என்பதை அவரது பரிசு ஏற்புரையில் கவனித்தேன். ஜெ.மோவை அவரது உணர்ச்சிவயப்பட்ட தழுதழுப்பான அழுத்தமான பேச்சைக் கடந்து எதிர்கொள்ள வேண்டும்.
உதாரணமாய், ஜெ.மோ ஒரு கருத்தைக் கூறினால் அது thesis. அதற்கு நீங்கள் ஒரு antithesisஐ முன்வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அப்படி வைத்தால் அதை கடுமையாய் எதிர்த்து வாதிடுவார். அதை நீங்கள் செய்தாலே அங்கே ஒரு விவாதம் நடந்து அது synthesis ஆகும். அப்படி செய்யாவிட்டால் நீங்கள் அவரிடம் இருந்து எதையும் பெற முடியாது.
நான் மேலே குறிப்பிட்ட அத்தோழி தன் மாற்றுப்பார்வையை ஆவேசமாய் வைத்திருந்தால் ஜெயமோகன் நிச்சயம் புண்பட்டிருக்க மாட்டார். ஆனால் ஏதாவது பேசப் போய் அது அவருக்கு உவப்பாய் இராதோ எனும் உணர்வு, பிம்பம் அங்கு ஏற்பட்டுள்ளது. அது தான் அத்தோழியை தடுக்கிறது. அதாவது அங்கு தடை ஏதும் மறைமுகமாகவே நேரடியாகவோ இல்லை; ஆனாலும் ஏதோ புலப்படாத தடை ஒன்று மொத்த இடத்தையும் ஆக்கிரமித்து நிற்கிறது
இது வாசகர் வட்டத்தின் பிரத்யேகமான கலாச்சார பிரச்சனையா அல்லது இன்றைய சூழலில் நாம் அடுத்தவர் மனதை புண்படுத்தி விடக் கூடாதே எனும் மிகை அச்சத்தில் விலகி விலகி ஓடுகிறோமா?
எப்படியோ, அந்த ஏதோ ஒன்றை அடுத்தடுத்த கூட்டங்களில் வாசகர் வட்ட நண்பர்களும் ஜெயமோகனும் அங்கிருந்து அகற்ற வேண்டும். விவாதங்கள் இன்னும் உக்கிரமாக, படைப்பூக்கத்துடன் நிகழ யாரும் எதையும் யாரையும் எதிர்த்து எதுவொன்றையும் பேசும் துணிச்சலான சூழல் அவசியம்.
Comments

காளி said…
அன்புள்ள அபிலாஷ்,

நீங்கள் குறிப்பிட்டுள்ள தளையசிங்கம் உரையாடல் ஊட்டி கலந்துரையாடலை போல ஒன்று எனக் கருதுகிறேன். அங்குதான் அந்த 'சிலபஸ்' அளித்து படித்துவரும் வழக்கம் உண்டு. இந்த கதை இந்த கவிதை என்று மட்டுமே அது நிகழும். அந்த ராணுவ கட்டுப்பாடுகளும் அங்குதான் :-) அங்கு குருகுலத்தின் இடவசதி காரணமாக ஐம்பது பேர்வரை மட்டுமே கலந்துகொள்வர்.

ஆனால் இந்த கூட்டம் பொது வாசகர்களுக்கானது.இங்கிருப்பது பொதுவாக ஒரு கொண்டாட்ட மனநிலை. இதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.நல்ல சுவாரசியமான உரையாடல்கள் இன்ஃபார்மலாக நிகழும்.. முன்புவரை இது எழுத்தாளர்களை சூழ்ந்து அமர்ந்து விவாதிக்கும் முறை இருந்த்து.
முன்பு ஜோடிகுரூஸ் பின் ஹெச்.எஸ் சிவபிரகாஷ் ஆகியோரது்உரையாடல்கள் அங்ஙனம் நிகழ்ந்தன.இவ்வருடம் வெயில் மிக வெளிப்படையாகவே பேசினார். அவர் கருத்திலிருந்து அவர் இறுதிவரை பின்வாங்கவும் இல்லை. நான் மிக நெகிழ்வாக உணரந்த்து சீனு கேள்விக்கு இவர் பதில் குறித்தே.

போனவருடம்முதல் எழுத்தாளர்கள் மேடையில் அமர்ந்து உரையாற்றும் ஒரு மணி நேர கலந்துரையாடல் வடிவமைக்கப்பட்டது. யார் கலந்துகொள்கிறார்கள் அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என்பதை முன்பே தளத்தில் வெளியிடுவார்.இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்பொருட்டே. ஆனால இது 'சிலபஸ்'அல்ல.
இதை மட்டும் குறிப்பிடத்தோன்றியதால் எழுதுகிறேன். நீங்கள் இதைஒருஊட்டி கூட்டமாக்க விரும்புவது நிகழ்ந்தால் பல வெர்ஜின் பசங்க சாபத்துக்கு ஆளாவீர்.

சுவாரசியமான உரையாடல்கள் நிகழ்ந்தன.உங்களிடம் ரசித்தது நான் அனைவரையும் புரிந்துகொள்கிறேன என்ற என்ற உங்கள் வரிகள்.

*எல்லாவற்றையும் புரிந்துகொள்பவரைத்தான்
இன்னும் கொஞ்சம் புரிந்துகொள்ளும்படி வற்புறுத்துகின்றோம்
அவர் எப்போதும் புரிந்துகொள்பவராக இருப்பது குறித்து சில நேரம் களைத்துப்போகிறார்
அப்போது புரிந்து கொள்பவராக இருப்பதன் உன்னதம் பற்றி
அவருக்கு மேலும் கற்றுத்தருகிறோம்.*

என்ற மனுஷ் வரிகளை உங்களுக்கு நைசாக சமர்ப்பிக்கிறேன்:-)))
நன்றி காளி. உங்கள் பின்னோட்டத்தை வெகுவாக ரசித்தேன்