ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)


 Image result for charu niveditaImage result for writer aadhavan
சாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை. அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்னெடுப்பதில்லை. ஆக எந்த நிலைப்பாடுகளுடனும் முரண்படுவதில்லை. அவர்கள் எதையும் பிரநுத்துவப்படுத்தவதில்லை. மேலும், சாரு ஒரு எதிர்க்கலாச்சார நிலைப்பாட்டை தெளிவாகவே முன்வைக்கிறார். ஒழுக்கமீறலே தன் ஒழுக்கம் என்கிறார். ஆதவனின் ஆண் பாத்திரங்கள் வெளிப்படையாய் ஒரு ஒழுக்கவியல் நிலைப்பாட்டை எடுப்பதாய் தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல.
அம்மா--மாமிகள்--மாமிகள்--இளம்பெண்கள்--மாமிகள்
ராமசேஷன் சிறுவயதில் இருந்தே தன் வயதை ஒத்த பெண்களிடம் பழகினவன் அல்ல. அவன் மாமிகளின் மடியில் புழங்கியே வளர்கிறான். பாலியல் ஜோக் சொல்லி அவர்களை சிரிக்க வைப்பது, சினிமா வசனங்களை பேசியும், அடுத்த வீட்டு மாமிகளையும் போல செய்தும் அவர்களை குஷிப்படுத்துவது என அவன் வளர்கிறான். இப்படியான மாமிகளின் வாசம் தான் தனது பிரதான குறை என அவன் தன் அம்மா மற்றும் தங்கையிடம் புலம்புகிறான். தன் வயதை ஒத்த பெண்களிடம் பழக நேரும் போது தான் என்ன செய்வதென்றே அறியாமல் தவித்துப் போவதாக சொல்கிறான்.

 மாமிகளின் அவன் ஈர்க்கப்படுவதற்கு ஒரு பிரதான காரணம் தன் தாய் மீது அவனுக்குள் இருக்கும் முளைவிடாத இச்சை. அவன் அம்மா ஆடை மாற்றும் போது பேச்சுத் துணைக்கு அவனை அழைக்கிறாள். ரவிக்கையின் கொக்கியை மாட்டியபடியே அவனிடம் அளவளாவுகிறாள். அவன் மனம் இச்சையில் ததும்புகிறது. இன்னொரு புறம் குற்றவுணர்வில் தவிக்கிறது.
இக்குற்றவுணர்வு அம்மா மீதான கசப்பாக மாறுகிறது. இக்கசப்பு அவனை அம்மாவிடம் இருந்து மாமிகளை நோக்கிச் செலுத்துகிறது. மாமிகள் அம்மாவின் ஆடி பிம்பங்கள் ஆகிறார்கள். இம்மாமிகளுக்கும் அவனுடனான எல்லை மீறாத பாலியல் விளையாடுகள் ஒரு மனவிடுதலையை அளிக்கின்றன. இவர்களில் பங்கஜம் மாமி இந்த விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த நினைக்கிறாள்.
 பங்கஜம் மாமிக்கு கணவன் இல்லை. அவளது பாலியல் வறட்சி பாலைவனம் போன்றது. அவள் ராமசேஷனை அணைத்துக் கொள்கிறாள். முத்தமிடுகிறாள். இந்த மீறல் ராமசேஷனுக்குள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அவள் விளையாட்டின் விதிகளை மீறி விட்டாள். மீறி அவள் அவனது அம்மாவை இப்போது நினைவுபடுத்துகிறாள். அவன் எதைப் பார்க்கக் கூடாதோ அதை அவனுக்கு ரொம்ப துலக்கமாய் காண்பிக்கிறாள். அவன் அவளிடம் இருந்து தப்பி ஓடுகிறான்.
அம்மாவிடம் இருந்து மாமிகளிடம், பங்கஜம் மாமியிடம் இருந்து எங்கு போவான் அவன்? இனி மாமி விளையாட்டே வேண்டாம் என அவன் தன்னை விட இளையவளான ஒரு பெண்ணிடம் போகிறான். அவள் மாலா. அவனது பணக்கார நண்பன் ராவின் தங்கை.
 மாலாவிடமும் அவன் நிம்மதியாய் இல்லை. ஏனெனில் அவளது சிருங்காரங்கள், பாலியல் பாவனைகள், அகந்தை, அவனை சதா மட்டம் தட்டும் அவளது போக்கு, அவளது அதிகார மமதை அவனுக்குத் தன் அம்மாவின் இயல்புகளை நினைவுபடுத்துகின்றன. தன் அம்மா அப்பாவை நடத்துவது போன்றே இவளும் தன்னை நடத்துவதாய் எண்ணுகிறான். இது மாலவுக்கும் அவனுக்கும் இடையிலான உடலுறவில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
உறவின் போது முதன்முறை அவர்கள் ஆணுறை பயன்படுத்தவில்லை. இந்த அச்சம் அவனை அலைகழிக்கிறது. இதனால் அவனால் அடுத்தடுத்த உறவுகளின் போது சரிவர போது நடந்து கொள்ள முடிவதில்லை அவனுக்கு ஆண்மை போதவில்லை என மாலா அவனை பரிகசிக்கிறாள். அடுத்த முறை பயன்படுத்த உறை வாங்க மருந்துக் கடைக்குப் போய் துணிச்சலின்றி பல முறை திரும்ப வருகிறான். உறை இல்லை என்பதால் மாலாவை சந்திப்பதை தவிர்க்கிறான். ஆனால் மாலாவோ தன் அம்மாவின் கண்ணாடியையும் விக்கையும் அணிந்து மருந்துக்கடைக்கு துணிச்சலாய் சென்று ஆணுறை வாங்கி அதை ராமசேஷனிடம் பந்தாவாய் காண்பிக்கிறாள். ஆணுறை பயன்படுத்திய பின் ஒரே மாதத்தில் பத்து முறை அவளுடன் உறவு கொள்கிறான். ஆனாலும் அவன் திருப்தியாக இல்லை. இருவருக்கும் சண்டை மூள்கிறது. பிரிகிறார்கள். அவன் வீட்டுக்கு வருகிறான். பங்கஜம் மாமியை தேடிச் செல்கிறான். அங்கே அவளது வீட்டில் ஏதோ விசேஷம். மாமி தனியாக இல்லை. அவனுக்கு அவளது இதமான அணைப்பும் அதன் ஆறுதலும் மட்டும் போதும். ஆனால் அது கூட கிடைக்கவில்லை. அவனுக்கு ஆணுறை வாங்க ஏற்பட்ட தயக்கமும், பங்கஜம் மாமியிடம் ஏற்பட்ட அசூயையும் கூட சல்ஜாப்புகளே என்பதை இச்சம்பவங்கள் காட்டுகின்றன.
 பெண்ணுடலை அவனால் தன் அம்மா மீதான் இச்சை வழியாக அன்றி வேறுவகையில் பார்க்க முடியவில்லை. இது ஏற்படுத்தும் சுயவெறுப்பு அனைத்து பெண்களுடனான அவனது உறவுகளையும் பாதிக்கிறது. மாமிகளுக்கும் இளம்பெண்களுக்கும் நடுவில் டென்னிஸ் பந்தாக அவன் குறுக்குமறுக்குமாய் அடிக்கப்படுகிறான்.
மாலாவின் குடும்பத்தினருடன் திரையரங்குக்கு சென்று அவளுடன் அருகருகே அமர நேரும் போதும், பின்னர் அவன் அவளது வீட்டு புழக்கடையில் அவளுக்கு தனியே சைக்கிள் விட சொல்லித் தரும் போதும் இருவருக்கும் இடையிலான ஈர்ப்பு மொட்டு விடுகிறது. இதை மாலாவின் அம்மா கவனிக்கிறாள். அவள் அவனை எச்சரிப்பதற்காய் வீட்டுக்கு அழைக்கிறாள். அங்கு அவன் அவளை தனியாய் சந்திக்கிறான். கொடுமை என்னவென்றால் அவளும் அவன் அம்மாவைப் போன்றே ஆடை மாற்றியவாறே அவனிடம் அளவளாவுகிறாள். மாலா பற்றின விசயத்துக்கு நேரடியாய் வராமல் கண்ணாமூச்சி ஆடுகிறாள் அவள் அம்மா. பேச்சினிடையே அவன் தும்ம அவள் அவன் மாரில் மருந்து தேய்க்கிறாள். அவன் அப்போது அவள் மார்பில் சாய்கிறான். அவளது முதுகை வருடுகிறான். அவள் அதற்கு அனுமதிக்கிறாள். ஆனால் அவன் அவளது ஜாக்கெட் கொக்கியை அவிழ்க்கும் போது அவள் சட்டென சீறுகிறாள். அவனை அவமானப்படுத்தி, இனி தன் மகளை நெருங்க முயலக் கூடாது என எச்சரித்து அனுப்புகிறாள்.
ராமசேஷன் தன் வீட்டுக்கு திரும்ப சென்றதும் மாலாவின் அம்மாவை நினைத்துப் பொருமுகிறான். ஒரு காகிதத்தில் bitch என திரும்பத் திரும்ப எழுதுகிறான்.
 ராவின் அடிமை போன்றவன் மூர்த்தி. அவன் இவர்களின் வகுப்புத் தோழன். ராவின் அடிமை எனும் முறையில் மூர்த்தி தன்னை ராவின் நிழலாக பாவிக்கிறான். ராவின் அம்மாவை தன் அம்மாவாக பாவிக்கிறான். ராவ் தன் அம்மாவின் சுதந்திர பாலியலை எதிர்கொள்ள முடியாமல் அதில் இருந்து தப்பித்து ஓடுகிறான். மூர்த்தி நிழல் மகனாய் அக்குடும்பத்தில் தன்னை நிலைப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து ராவின் அம்மா பற்றின புரளிகளை கிளப்புகிறான். அவன் ஏன் அப்படி செய்ய வேண்டும்? இது விசித்திரம் தான், ஆனால் இதன் பின்னும் ஒரு லாஜிக் உள்ளது: அதாவது அவனும் அவளை தன் மறைமுக தாயாக கருதுகிறான். அவள் மீது மறைமுகமாய் இச்சை கொள்கிறான். இது அவனை அவளது நடத்தையை விமர்சிக்கவும், அவளை பழிக்கவும் தூண்டுகிறது.
 மூர்த்தி ராமசேஷனிடம் வந்து ராவின் அம்மா நடத்தை கெட்டவள் என்கிறான். மூர்த்தி அவள் ஒரு bitch என அதே வார்த்தையை சொல்கிறான். அடுத்த நாள் அவனை மூர்த்தி ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் வரவேற்பறைக்கு அழைத்துப் போய் அங்கு ஒரு இயக்குநர் ராவின் அம்மாவின் இடையை அணைத்தபடி நடந்து போவதை காட்டி தன் கூற்றை நிரூபிக்கிறான். இந்த இடம் நாவலில் முக்கியமானது. இருவரும் அப்போது அவளை பழிப்பதில்லை. ஒழுக்கவாதம் பேசுவதில்லை. அவளது ஒழுக்கமீறலை ரசிக்கிறார்கள். அவள் bitch ஆக இருப்பது அவர்களை கிளுகிளுப்பூட்டுகிறது. ஆதவனும் சாருவும் இணையும் புள்ளி இது.

சாருவின் ஆண் பாத்திரங்கள் ராமசேஷனின் சற்றே முதிர்ந்த நிலை எனலாம். இதனாலே அம்மாவின் பாத்திரம் நேரடியாய் சாருவின் நாவல்களில் தோன்றுவதில்லை. சாருவின் ஆண் பாத்திரங்களின் ஆழ்மனதில் அம்மா உறைந்து போயிருக்கிறாள். தொடர்ந்து பெண்ணுடல்களின் கடலில் நீந்திக் கடந்து தமக்குள் உறைந்த அம்மாவின் சித்திரத்தை மீறிச் செல்ல அவர்கள் முயல்கிறார்கள். ஆனாலும் இந்த பாத்திரங்களின் ஆதி பிம்பத்தை நீங்கள் அவரதுமுள்எனும் பிரசித்தியான கதையில் காணலாம். இக்கதையில் ஒருவன் தனது அத்தை மீது இச்சை கொள்கிறான். அது அவனுக்குள் ஒரு முள் போல் தைத்திருந்து வேதனை தருகிறது
(தொடரும்)

Comments