இலக்கிய நிகழ்வுகளில் கருத்து மோதல்கள் அவசியமா? (1)


 விஷ்ணுபுரம் இலக்கிய விழா பற்றின என் கட்டுரைக்கு நண்பர் ராஜகோபாலின் பின்னூட்டத்துக்கு எனது பதிலே இந்த பதிவு. முதலில் அந்த பின்னூட்டம்:
அன்புள்ள அபிலாஷ்,
விழாவுக்கு வந்தது, கலந்துரையாடியது ஆகியவற்றுக்கு முதலில் நன்றி. உங்களது பார்வைக்கு சில பதில்கள் சொல்லலாம் என நினைத்தே இந்த பதிவு.

1. இடப்பக்கம் காண்பித்தால் வலப்பக்கம் போய்தான் முன்னேற முடியும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இந்த மறுத்து பேசி முன்னேறும் கதையை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு புதிதாய் வரும் வாசகருக்கு சொல்லப்போகிறோம்? மறுப்பதன் வழியே மட்டுமே முன்னேற முடியும் எனும் உயர் தத்துவம் இல்லாமலேயே ஒப்புக்கொண்டு மேலதிகமாக முன்னேற முடியாதா ?

2. இந்த உரையாடல்கள் ஒரு எழுத்தாளரை கௌரவிக்கும் நிகழ்வு. இது ஔ விமர்சன கூட்டமல்ல. மதிய சாப்பாடு கிடைக்கும் விடுதியில் இரவு சோறு கிடைக்காது. அதெல்லாம் இல்லை,மதியம் கொடுத்தியே ... போர்ட் வச்சிருக்கியே .. என்றால் அதை இலக்கிய யுகப் புரட்சியாக சொல்ல நான்கு பேர் இருக்கும்வரை இந்த மறுத்துப் பேசி முன்நகர்தல் தியரி வேலை செய்யும். நானறிந்தவரை இலக்கிய கூட்டங்கள் ஒன்று வெறும் பாராட்டு விழாக்கள் அல்லது வசைமாரி பொழிவுகள். இது ஒன்றாவது எழுத்தாளனுடன் வாசகன் உரையாடும் இடமாக இருக்கட்டுமே ? எல்லாமே பிரியாணிக் கடையா இருக்கணும்னா எப்டி ? ஒரு இட்லிக் கடைக்கும் வாய்ப்பு வழங்குங்கள் யுவர் ஆனர்...
3. அதென்னய்யா சமூக அரசியல் விவாதங்கள் ? இதில் ஆர்வம் உள்ளது உண்மை. ஏன் ஜெயமோகனே அதை செய்கிறார் ... ஆனால் எங்கு எதை எனும் வரையறை இருக்கிறதே ? ஜெயமோகனுக்கு பயந்து..... யப்பே ... உங்க அவதானிப்பு இருக்கே.... நாளை ஆங்கில இலக்கிய வகுப்பு நீங்கள் எடுக்கையில் சமூக அரசியல் ஆர்வக் கொந்தளிப்பு என தினம் உங்கள் மாணவர்கள் பொங்கினால் என்ன செய்வீர்கள்? இது கல்லூரி வகுப்பல்ல என சொல்லப்போகிறீர்களா? இந்த வரி எந்த அவைக்கும், எந்த கூடுகைக்கும் பொருந்தும். பேசுபொருள் தாண்டி உரையாடல் சென்றால் தனக்கு தெரிந்த விஷ்யங்களைஎல்லாம் பேச ஆரம்பிப்பதை பலமுறை கண்டிருக்கிறோம். இது ஜெ சொல்லி இருப்பதால் ஆணையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதிலிருக்கும் நியாயம் கருதி சுய மட்டுறுத்தலாகவே நண்பர்கள் கைக்கொள்கிறார்கள். இங்கு அல்ல, வேறெங்கு பேசினாலும் இப்படித்தான் பேசுவார்கள். சமூக, அரசியல் விவாதங்களில் போய் இலக்கிய நயம், படைப்பாளுமை மீது விமர்சனம் என்று பேசும் அபத்தத்தையும் நண்பர்கள் செய்ய மாட்டார்கள். 

இலக்கியவாதிகள் சண்டை போட்டுத்தான் இலக்கியம் வளர்க்க வேண்டும் என்பது சரியே. பகவத் கீதை உதாரணம் காட்டப்படவேண்டிய அளவு அது ஒரு உலகப் போரே. ஆனால் அதை இன்னொரு எழுத்தாளரின் பாராட்டுக் கூட்டத்தில்தான் வைத்துக் கொள்வேன் என்பதில் இருக்கும் உறுதி பாராட்டப்பட வேண்டியதே . 3௦.12.17 அன்று காலை கோவை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கிடையேயான போர் நிகழ இருக்கிறது. வாசகர்களாகிய நாங்கள் ஆம்புலன்ஸ், குளுக்கோஸ் சகிதம் மோதல் வழிக் கற்றல் எனும் நிகழ்வுக்கு தயாராக இருக்கிறோம். வாய்ப்பிருப்பின் நீங்களும் கலந்து கொள்ளலாம். ( நான்தான் நடுவர் அதாவது ஐ நா சபை) :)

அன்புடன்,
ராஜகோபாலன் ஜா, சென்னை


அன்புள்ள ராஜகோபால்
உங்கள் வினாக்களுக்கும்மறுப்புகளுக்கும்என்னால் முடிந்தளவு எதிர்வினையாற்றுகிறேன்.
//1. இடப்பக்கம் காண்பித்தால் வலப்பக்கம் போய்தான் முன்னேற முடியும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?//
இது இன்றும் உலகம் முழுக்க அறிவியக்கங்களில் உள்ள நடைமுறை தான். நீங்கள் எந்த அறிவுத்துறையை எடுத்துக் கொண்டு படித்தாலும் அறிஞர்கள் எவ்வாறு தொடர்ந்து ஒருவர் பார்வையை மற்றொருவர் மறுத்து புது தர்க்கத்தையோ புரிதலையோ ஏற்படுத்தி அத்துறையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றார்கள் என்று அறியலாம். நமது இந்திய மரபில் இதற்கு மிக முக்கிய இடம் உள்ளது. சம்வாதம் என நம் மரபு இந்த எதிர்வாதங்கள் மோதி முயங்கி தரிசனத்துக்கு நம்மை எடுத்துச் செல்வதை குறிக்கிறது. ஒவ்வொரு கருத்துக்குள்ளும் நிரப்பப்படாத ஒரு வெற்றிடம் உள்ளது. அது இல்லாத ஒரு அறிவு வெளியோ இயக்கமோ இங்கு இல்லை. இதை ஆய்வு மொழியில் lacunae என்கிறார்கள். இந்த வெற்றிடத்தைக் கண்டறிந்து ஒருவர் நிரப்ப முயல்கையில் தான் அறிவே தோன்றுகிறது. அவரது கண்டுபிடிப்பில் இன்னொரு வெற்றிடம் உருவாகும். அதை அவருக்கு அடுத்து வருபவர் நிரப்புவார். இப்படி அறிவின் இட்டு நிரப்பும் பயணம் வரலாறு நெடுக தொடரும்.
 மறுக்காமல் அறிவு சாத்தியமில்லையா என நீங்கள் கேட்கிறீர்கள். இரண்டு வகையான அறிவு உண்டு. 1) படைப்பூக்கமான அறிவு (ஞானம்) 2) தகவல் அறிவு. மறுக்காமல் கிடைக்கும் அறிவு இரண்டாவது வகையானது. பள்ளி, கல்லூரிகளில் அதுவே பெரும்பாலும் கிடைக்கிறது. உங்கள் இலக்கிய விழாவில் ஒரு எழுத்தாளர் பேச நீங்கள் அமைதியாய் அதை கவனித்து, ஆனால் அதனுடன் உள்ளுக்குள்ளோ வெளியிலோ முரண்படாமல் அப்படியே உள்வாங்கும் போது ஒரு கருத்தை நீங்கள் ஒரு தகவலாய் உருமாற்றி உங்கள் மூளையின் அறைகளில் ஒன்று சேமிக்கிறீர்கள். அக்கருத்து சரி தானா, அதில் பிழையுள்ளதா என சிந்தித்து உரையாடி மற்றொரு புதுக்கருத்தை நீங்கள் அடையும் போதே அது அறிவாகிறது. இரண்டாவது வகை அறிவே மேலானது, நாம் அதை நோக்கியே செல்ல வேண்டும் என நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

இக்கேள்வியை நீங்கள் கேட்பதே எனக்கு ஒரு விதத்தில் வியப்பாக உள்ளது. உங்கள் ஆசானான ஜெயமோகன் சு.ராவையும் மார்க்ஸியவாதிகளையும் மறுத்து எத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதியுள்ளார் யோசியுங்கள். இது ஏன் அப்படியாக இருக்கக் கூடாது எனும் உந்துததலே அவரை ஜெயமோகன் ஆக்கியது. அல்லது அவர் சு.ராவின் நினைவுகளைத் தொகுத்து அதன் தாழ்வாரத்தில் ஓய்வு கொள்ளும் காலச்சுவடு சீடர்களில் ஒருவராய் மாறி இருப்பார். அவர் இத்தனைக் காலமாய் ஏற்படுத்திய சர்ச்சைகள் எல்லாம் மாற்று சிந்தனைகளின், தன் உள்ளுணர்வை நம்பி ஆதிக்கவாத சிந்தனைகளை எதிர்த்ததன் விளைவு தான். பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் இலக்கியம் அல்ல எனும் கருத்து அப்படியானது. “நீங்கள் அனைவரும் பெண் எழுத்தாளர்களைப் போற்றுகிறீர்கள். ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஏன் என்றால்…” என அவர் தன் தரப்பை வாதிட ஆரம்பிக்கிறார். அவரது வழியில் வருபவர்கள் விவாதங்களில் ஆர்வமாய் பங்கு பெறாதவர்களாய் இருப்பது அவர்கள் ஜெ.மோவிடம் இருந்து ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லை என்றே காட்டுகிறது.
(தொடரும்) 

Comments

P Vinayagam said…
''பெண் எழுத்தாளர்களில் படைப்புக்கள் இலக்கியம் அல்ல'' என்பது பெண்களுக்கு பேட்மின்டன் விளையாடத்தெரியாது என்பதைப்போல ஒரு கருத்து. உண்மை உங்களுக்கே தெரியும். அதே சமயம், தனக்குத் தெரிந்த பெண்ணொருத்திக்கு தெரியாதென்றால் சரி. இப்படி பெண் எழுத்தாள்ர் அல்லது எழுத்தாளர்களைக் குறிப்பிட்டுச் சொன்னால், நாமும் போய் அவர்கள் படைப்புக்களைப் படித்து இவர் சொன்னது சரிதானா என கணித்துக்கொள்ளலாம். எனவே எல்லாப் பெண்களின் படைப்புக்கள் இலக்கியம் அல்ல எனப்து அதிகப்பிரச்ங்கித்தன்ம். அவ்வையாரையும் நப்பசலையாரையும் உருவாக்கியது தமிழ்மண். இதை எப்படி சரியென்கிறீர்கள்? அவரிடம் விவாதம் பண்ணுவதற்கு அவர் அனுமதிப்பதில்லை. தன்னைச்சுற்றி ஒரு கூட்டத்தை வைத்து அவர்களிடமிருந்து எண்ணங்களை வாங்குவதிலேயே ஆசைப்படுகிறார். அவரிடமிருந்து எப்படி கற்றுக்கொள்ள முடிய்மென்கிறீர்கள்? என்ன கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறீர்கள்? இப்படிப்பட்ட அபத்தக்கருத்துக்களையா?

பொதுவாக கொஞ்சம் நாலுபேரிடம் கைதட்டல்கள் வாங்கிவிட்டால், ஈகோ வந்து எழுத்தாளனை அமுக்கிவிடுகிறது எனபது கண்கூடு. இதன் விளைவு என்னவென்றால், பிரபல எழுத்தாளர்கள் என்ற பிம்பங்கள் உருவாக்கப்பட்டு அவரகள் படைப்புக்களை வாசித்து அவரவர் கருத்துக்களை பொது வெளியில் வைக்கவே நடுங்குகிறார்கள். அண்மையில் ஒரு பதிவர் தன் பதிவில் ஜெயகாந்தனின் யுகசந்தியைப்போட்டார். அதன் மீது விமர்சனம் வைத்தால் அறிவு ஜீவி என்கிறார். இன்னொருவர் சொல்கிறார். சாருவின் கதையை விமர்சித்தால் அவர் இரசிகர்கள் உங்களைத் தாக்குவர என வருமுன் காக்கச்சொல்கிறார். இறுதியாக விவாதமென்பதே இல்லை. தமிழர்கள் எல்லாருக்கும் அடிமைகள்: அரசியல்வாதிகள்; நடிகர்கள்; இப்போது பிரபல எழுத்தாளர்கள். எல்லாரும் நடுங்குகிறார்கள்.

எனவே தனிக்கட்டுரையாகவே எழுதவேண்டியது. அதைக்கூட போடுவதற்கு பலர் மறுக்க ஒருவர் மட்டும் போட்டார். என் யுகசந்தி விமர்சனத்தை இங்கு காண்க. www.puthu.thinnai.com
அன்புள்ள விநாயகம்
நீங்கள் இவ்வளவு எதிர்மறையாக இதை அணுக வேண்டாம். ஜெயமோகன் தன் கருத்துக்கள் விவாதிக்கப்படுவதை விரும்புகிறவர் தான். ஆனால் எதையும் மிக ஆவேசமாய் பேசும் குணம் கொண்டவர் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு திட்டி விடுவார். இதைக் கண்டே சிலர் அஞ்சுகிறார்கள். ஆனால் உள்ளுக்குள் மாறுபட்ட கருத்துக்களை மதிப்பளித்து ஏற்பவரே அவர்.
மற்றபடி, இன்று அதிகமும் நாம் பாராட்டுக்களையே விரும்புகிறோம், மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிப்பதில்லை என்பது உண்மையே. இது சிக்கலானது, ஆரோக்கியமற்றது. மாறும் என நம்புவோம்.