ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)

Image result for charu nivedita
சாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது. அவரது ஆளுமையின் நீட்சியே (அல்லது பகர்ப்பே) அவரது எழுத்து. சாரு தனித்துவமானவர், ஆக அவரது எழுத்தும் ஒரு அதிசயப் பிறவி என நினைத்து வந்தேன். கதைகளின் வடிவம், தொழில்நுட்பம் ஆகியவற்றை பொறுத்தமட்டில், மேற்கத்திய பின்நவீனத்துவ, எதிர்க்கலாச்சார எழுத்தாளர்களின் பாணியை அவர் பின்பற்றுகிறார் தான். ஆனால் அவர் எழுத்தின் தொனி, வாழ்க்கை நம்பிக்கைகள் (அல்லது நம்பிக்கையின்மை), அவரது குழந்தைமை, எதிலும் ஒட்டாத, விளிம்புநிலை சிந்தனை, status quoவை மறுப்பது, அல்லது அதை ஏற்று முன்னுக்கு பின்னாய் பேசி அதையே காலி செய்வது என பல விசயங்கள் சாருவின் இயல்பான ஆளுமைக் கூறுகள். இவையே அவரது எழுத்தின் பிரதான அம்சங்கள். ஆகஇப்படியே நான் சாருவை வகுத்துக் கொண்டிருந்தேன்.
சமீபத்தில் ஆதவனின்என் பெயர் ராமசேஷன்படித்துக் கொண்டிருக்கையில் சட்டென பொறி தட்டியது. ஆம் சாரு தன் பாணியை ஆதவனிடம் இருந்து தான் வரித்துக் கொண்டிருக்கிறார். “என் பெயர் ராமசேஷன்நாவலின் மனநிலை, வடிவம், நுண்ணுணர்வு ஆகியவற்றை தான் சாரு தனது ஆளுமை வழி தன் எழுத்தில் மீள்நிகழ்த்துகிறார்.
ராமசேஷன் மத்திய வர்க்க வாழ்வை சேர்ந்தவன். அவன் அதை வெறுக்கிறான். சதா பழிக்கிறான். மேற்கத்திய நண்பர்களை அமைத்துக் கொள்கிறான். மேற்தட்டு வாழ்வின் பல்வேறு சாத்தியங்கள், சுதந்திரங்கள், களிப்பு அவனை ஈர்க்கிறது. சாருவின் பெரும்பாலான நாவல்களில் கதைசொல்லி இப்படித் தான் இருக்கிறான். அவனது மேற்தட்டு, எலைட் நண்பர்களுடனான சந்திப்புகளும் சின்ன சின்ன விபத்துகளும் தாம் சாரு நாவல்களின் களன்.

 சாருவின் கதைசொல்லி ஒரு நாடக மேடையில் இருக்கிறான் என வையுங்கள். ஒவ்வொரு புது ஆளாக மேடையில் ஏறி அவனிடம் உரையாடுகிறார்கள். அப்போது விளையும் விசயங்களே கதையை நகர்த்தும். கதைசொல்லிக்கு என்று ஒரிஜினலாக கதை ஒன்றும் இருக்காது.
இந்த கதைசொல்லிக்கு என்று சொந்தமாய் நம்பிக்கைளும் உணர்வுகளும் இருக்காது. ராமசேஷனுக்கும் அப்படித் தான். அவன் மத்திய வர்க்க வாழ்க்கையில் உழலும் போது அதை பழித்து வெறுக்கிறான். தன் சொந்த அம்மா, அப்பா, அக்கா பண்ணுவதெல்லாம் அவனுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் பண்ணுவது போல் இருக்கிறது. அவர்களுக்கும் தனக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்பது போல் அவன் இருக்கிறான். அவன் அடுத்து எலைட் வாழ்க்கைக்குள் நுழைந்து எட்டிப் பார்க்கிறான். அங்கும் அவன் ஒட்டுவதில்லை. அங்கு மனம் திளைக்கும் போதும் அது தன் வாழ்க்கையல்ல என உணர்கிறான். அவ்வாழ்க்கை மற்றும் அதிலுள்ள மனிதர்கள் மீதும் அவனுக்கு விமர்சனங்களும் எரிச்சலும் ஏமாற்றங்களும் உண்டாகின்றன. அப்படி என்றால் அவனுக்கான உன்னத வாழ்க்கை எது? அவன் எதை நோக்கி செல்ல விரும்புகிறான்? அவனது லட்சியம் என்ன?
எதுவுமில்லை. அவன் மனம் இன்பத்தை நோக்கித் தாவுகிறது. ஆனால் இன்பமயமான இடங்களிலும் அவன் தாமரை இலை நீர்த்துளி போலே இருக்கிறான். ஏன்?
இதற்கான நேரடியான விடையை ஆதவன் அளிப்பதில்லை. ஆனால் ராமசேஷனின் அப்பாவின் மத்திய வர்க்க அடிமை வாழ்க்கை, அம்மாவின் ஆதிக்கம், அம்மாவின் மீதும், அம்மா வயதொத்த பெண்களின் மீதும் அவன் கொள்ளும் ஈர்ப்பில் இதற்கு ஒரு விடை இருக்கலாம்.
 ராமசேஷனின் இயல்பான ஆளுமையே அப்படி எதனோடும் ஒட்ட முடியாத விட்டேந்தியானதாக இருக்கலாம். அவன் வாழும் எண்பதுகள் அப்படி லட்சியங்கள் குழிதோண்டி புதைக்கப்பட்ட, அமெரிக்க ஹிப்பி பண்பாட்டின் மீதும், இன்னொரு புறம் சிவப்பு நக்ஸலிய சிந்தனைகளின் பாலும் இளைஞர்கள் ஈர்க்கப்பட்ட காலம் என்பது இதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம் (”என் பெயர் ராமசேஷன்நாவலில் தொடர்ந்து மார்க்ஸியமும் எலைட் கொண்டாட்ட வாழ்க்கையும் மத்திய வர்க்க வாழ்வின் அபத்தமும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் எது ஒருவர் பின்பற்றத் தக்கது எனும் தெளிவின்றி, அனைத்தையும் நிராகரிக்கும் மனநிலையில் இவை விவாதிக்கப்படுகின்றன.).
செக்ஸ் திளைப்பும் ஒட்டாமையும்
சாருவின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்நாவலின் துவக்கத்தில் கதைசொல்லி தனியாக, சரியான உணவோ பராமரிப்போ இன்றி இருப்பான். அதற்காக அவன் வறுமையில் இருக்கிறான் என்றில்லை. அவன் வறுமையை பழிப்பதோ வறுமைக்குக் காரணமான சமூகக் காரணிகளை அலசுவதோ, அதன் தீர்வு நோக்கி அவன் நகர்வதோ இல்லை. ஏனென்றால் அவ்வறுமைதனதானதுஅல்ல என அவன் நினைக்கிறான். அவன் வறுமைக்குள் பிறக்கவில்லை. வேறுவழியின்றி வறுமையில் இல்லை அவன். மாறாக, அவன் வறுமையை தற்காலிகமாய் தேர்ந்திருக்கிறான். (வறுமை அவனை தேர்ந்தெடுக்கவில்லை.) அவன் வறுமையில் இருக்கிறான்”. ஒரு கண்ணாடிக் கோப்பையில் சிவப்பு வைன் போல வறுமை அவனுள் இருக்கிறது. ஆனால் வறுமையின் சிவப்பு நிறம் தனதல்ல எனும் உணர்வு அவனுக்கு உண்டு. ஒரு துறவி வனாந்தரத்தில் இருப்பது போல் அவன் தனியாய் ஒரு அறையில் சில ரொட்டித் துண்டுகளை மட்டும் தின்று நொடிந்து போய் இருக்கிறான்.
பெண்கள் உடனான அவன் உறவும் இதே போலத் தான். தில்லி பேருந்துகளில் கையில்லாத ரவிக்கை அணிந்த பெண்கள் அவனுக்கு ஆசூயை ஏற்படுத்துகிறார்கள். ஏன்? அவர்கள் பேருந்துக் கம்பியை பிடிக்க கையை தூக்கும் போது அவர்களின் மயிரடர்ந்த அக்குள் அவன் பார்வையில் படுகிறது. அவனுக்கு அது பெண்குறியை நினைவுபடுத்துகிறது. அவனுக்கு அருவருப்பு ஏற்படுகிறது.
 பெண்குறியில் அருவருப்பாய் ஒன்றுமில்லையே! அவன் பெண்ணுடலை, பாலுறவை கொண்டாடுபவன் தான். அதில் திளைப்பவன் தான். ஆனாலும் அதன் மீது அவனுக்கு அசூயையும் ஏற்படுகிறது. ஏனென்றால் பெண்ணின் பாலியலுடன் அவன் தன்னை அடையாளப்படுத்துவதில்லை. பெண்ணுடன் சல்லாபிக்கையில் தான்அங்குஉண்மையில் இல்லை எனும் உணர்வு அவனுக்கு ஏற்படுகிறது.
 இதை சாருவின் அத்தனை ஆண் பாத்திரங்களுக்கும் பொதுவான மனநிலை எனலாம். இந்த விலகல் மனநிலை அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமது உண்மையான பாலியல் அடையாளம் என்ன, எது தம்மை முழுமையான மகிழ்ச்சிக்கு நோக்கி செலுத்தும், தாம் ஈர்க்கப்படும் உடல்கள் மீதும் ஏன் ஈர்ப்பின்மையும் ஒரே சமயம் ஏற்படுகிறது என பல கேள்விகள் எழுகின்றன.
 இந்த அகச்சிக்கல் சாருவின் ஆண் பாத்திரங்களை சிலநேரம் பெண்களை வெறுக்கவும் பழிக்கவும் வைக்கிறது. பெண்களைப் பற்றி சதா கனவுலகில் திளைக்கவும் மிகை கற்பிதங்களில் மூழ்கவும் செய்கிறது. அக்குள் பெண்குறியாய் தெரிவதும் (விசித்திர கற்பிதம்), இதனாலே பெண்குறி மீது கசப்பு ஏற்படுவதும் நிகழ்கிறது. அதாவது பெண் குறி மீதான ஆதி கசப்பு அக்குள் மீது ஏற்றப்படுகிறது. இப்பெண்கள் ஏன் சதா தம் மழிக்கப்படாத அக்குளை காட்ட பிரயத்தனிக்கிறார்கள் எனஎக்ஸிஸ்டென்ஷியலிசமும்…” நாவலின் கதைசொல்லி விசனிக்கிறான். இதை இப்பெண்கள் ஏன் தமது பாலியலை பிரகடனப்படுத்த எத்தனிக்கிறார்கள் என இன்னும் எளிமையாக்கலாம்.
இப்பெண்கள் எனப்படுபவர்கள் 30-40 வரையிலான வயதுக்குட்பட்ட பெண்கள். ராமசேஷனின் மொழியில் அக்கிரகாரத்துமாமிகள்மற்றும் ராவ் போன்ற பணக்கார வர்க்க ஆண்களின் தாய்கள். சாருவின் கதைசொல்லிக்கு தில்லியின் படித்த, மேல்மத்திய வர்க்க சுதந்திரப் பெண்கள்.
இப்பெண்கள் தம் பாலுடலை வெளிக்காட்டுவது இந்த ஆண்களுக்கு ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்குகிறது? ஒழுக்க மனநிலையா? இல்லை.

(தொடரும்)

Comments