Monday, November 27, 2017

சிகரெட் புடிங்க மாமா!

Image result for rasi ajith smokes

அஜித் மற்றும் ரம்பா நடித்த ராசிடிவியில் ஓடிக் கொண்டிருந்தது. தாய் மாமன்அவரை உயிருக்குயிராய் நேசிக்கும் மாமா மகள்குடும்பத் தகராறு, ஈகோ என பாரதிராஜா பாணியிலான படம். ஒரு காட்சியில் அஜித்தை அவரது ரம்பாவின் அப்பா அவமதித்து விட, அஜித் துண்டை உதறி வீட்டை விட்டு வெளியேற அவருக்குப் பின்னால் ஓடிப் போய் அமைதிப்படுத்த முயல்கிறார் ரம்பா. ஆற்றுப்படுத்தும் நோக்கில் ரம்பா அவருக்கு சிகரெட்டுகள் நீட்டுகிறார். சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என அஜித் மறுக்கிறார். உடனே ரம்பாஇல்லை மாமா ஆம்பளைன்னா ஒரு நாளைக்கு நான்கு சிக்ரெட்டாவது புகைக்கணும்என்று கெஞ்சுகிறார். அஜித்தும் நெகிழ்ந்து சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து ஊத முயன்று இருமி சிரமப்படுகிறார். அடுத்து ஒரு அழகான பிம்பம் வருகிறது. அஜித் தன் வாயில் இருந்து புகையை ரம்பாவின் முகத்தில் ஊதுகிறார். ரம்பா சிலித்து கிளர்ந்து நெளிகிறார். தமிழின் ஆக செக்ஸியான காட்சிகளில் ஒன்று இது எனத் தோன்றுகிறது.


Image result for rasi ajith movie

இதற்கு முன் இத்தகைய ஒரு ஆண்மையை வெளிப்படுத்திய நாயகன் எம்.ஜி.ஆர் ஒருவர் தான். அது போகட்டும்ரம்பா ஏன் ஆம்பளைன்னா சிகரெட் புகைக்கணும் என்கிறார்?
சிகரெட்டுக்கும் ஆண்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதாவது அறிவியல் ரீதியாய். ஆனால் சிகரெட் நிறுவனங்கள் ஆரம்பத்தில் இருந்தே சிகரெட்டை ஆண்மையின் குறியீடாகத் தான் விளம்பரங்கள் வழி கட்டமைத்தார்கள். அதுவும் சமூகத்தில் ஊருக்கு அடங்காத காளையாக திரியும் முரட்டு ஆண் தான் சிகரெட் புகைப்பான் எனும் சித்திரத்தை வெற்றிகரமாய் நிறுவினார்கள். சிகரெட் ஒரு எதிர்க்கலாச்சார சின்னமாகியது. அவ்வாறு தான் அது மைய நீரோட்ட கலாச்சாரத்தில் ஒரு முக்கிய இடம் பிடித்தது.
இப்படத்தில் அஜித் ஒரு அழகான ஆனால் களங்கமற்ற ஆண். அவரை சிகரெட் மூலம் ஆண்மை மிக்கவராக்க முயல்கிறார். பொதுவாக பெண்களுக்கு சிகரெட் வாசம் பிடிக்காது என்பார்கள், இப்படத்தில் ரம்பா தன்னை சிகரெட் வாசனை கிளர்ச்சி அடைய வைக்கிறது என சொல்கிறார். அந்த வசனத்தை நான் மிகவும் ரசித்தேன்.
ரம்பா இப்படி சிந்திப்பதற்கு மற்றொரு காரணம் உள்ளது:அஜித்துடன் சதா முறைக்கும் ரம்பாவின் அப்பா ஒரு காட்சியில் சுருட்டுப் பிடிக்கிறார். சுருட்டு ஒரு மிகு ஆண்மைக் குறியீடு. தனக்கு வாய்க்கும் காதலன் தன் அப்பாவைப் போன்றே ஆண்மையாய், ஆனால் சற்றே மிதமாய் இருக்க வேண்டும் என ரம்பா விரும்புகிறார். அதனாலே சுருட்டு கொடுக்காமல் சிகரெட் கொடுக்கிறார்.
இந்த பெண்மை சித்தரிப்பு எவ்வளவு பாசாங்கற்றதாய், ரத்தமும் நிணமுமாய் உள்ளது பாருங்கள். இப்போதெல்லாம் இப்படியான பெண் பாத்திரங்கள் நம் சினிமாவில் வருவதில்லை. இப்போது அரசியல் சரித்தன்மையை இயக்குநர்கள் மிக முக்கியமாய் நினைக்கிறார்கள். ஆக, நம் படங்களில் பெண்கள், தலித்துகள், ஊனமுற்றவர்கள், இஸ்லாமியர், ஆண்கள், அப்பா, தாத்தா, முதியோர், அம்மா, அத்தை, பாட்டி என யாருமே அசௌகரியமாய் உணராதபடி பார்த்துக் கொள்கிறார்கள். விளைவாக இப்போது வரும் மனிதர்கள் சுதந்திர தின ராணுவ அணிவகுப்பில் மிடுக்காய் வரும் சிப்பாய்கள் போல் இருக்கிறார்கள். இன்றைய படங்களில் நாயகன் பதற்றமாய் இருந்தால் மட்டும் சிகரெட் பிடிக்கிறான். காதலி ஏமாற்றினால் மட்டும் தண்ணி அடிக்கிறான். சிகரெட்டையும் மதுவையும் ஒருவித உதிரி தேவைகளாய் இன்றைய படங்கள் சித்தரிக்கின்றன. இது ஒரு போலித்தனம்.

 “ராசிமாதிரியான கலப்படமில்லாத தமிழ் மனம் தெரிகிறது. இம்மாதிரி படங்களை இப்போது மிஸ் பண்ணுகிறேன்!

No comments: