நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி

அஸீஸ் இப்ராஹிம் ஒரு சமகால மலையாள கவிஞர். எனது சக ஆசிரியரின் நண்பர். அவர் மூலமாய் ” நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி” தொகுப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. ஆனால் கேட்டால் புரியும். சில மலையாளி நண்பர்கள் வாசித்துக் காட்ட ரசித்துக் கேட்டேன். வழக்கமான மலையாள கவிதைகளின் இசை ஒழுக்கு, தேன் சொட்டும் அனுபவம். அது, போக இக்கவிதைகளின் தொனி, அது வெளிக்காட்டும் இழப்புணர்வு, எனக்கு பிடித்திருந்தது. ஆஸிஸின் தொனி அச்சுதன் தீக்குன்னியை நினைவுபடுத்துகின்றன (என்.டி ராஜ்குமார் தமிழில் மொழியாக்கியிருக்கிறார்.).

ஆஸிஸின் நீண்ட கதைக் கவிதைகள் எனக்கு அதிகம் பிடித்திருந்தன. ”நீலக்குறிஞ்ஞி” என்றொரு கவிதை காதலின் வீரியத்தை, ஆழத்தை அறிய அதை இழக்க வேண்டும். பின் நீண்ட காலம் அதைப் பிரிந்து பாலைவனங்களில் அலைய வேண்டும். நீலக்குறிஞ்சி பூப்பதற்கான கால அளவு காத்திருக்க வேண்டும் என்கிறார். இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜெயமோகனின் “காடு” நாவலில் குறிஞ்சிப் பூவை தேடி மலையேறிச் செல்லும் காதலர்களின் சித்தரிப்பு வரும். அதில் காதலின் மகத்துவம், அதன் சாதாரணத் தன்மை இரண்டையும் சுட்டியிருப்பார். இக்கவிதை குறிஞ்சி எனும் உருவகத்தை நேர்மாறாய் கையாள்கிறது. காதலையும் குறிஞ்சியின் மலர்ச்சியையும் ஆன்மீக தளத்துக்கு நகர்த்துகிறது.
“சக்க” (பலாப்பழம்) என்று இன்னொரு கவிதையும் என்னைக் கவர்ந்தது. கவிதைசொல்லி ஒரு பள்ளி மாணவனாய் இருந்து தன் ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்கப் போராடும் காலகட்டத்தில் கவிதை துவங்குகிறது. எப்படி முயன்றாலும் எப்போதும் அவன் ஒரு படி பின்னாலே இருக்கிறான். அவனைத் தாண்டி பிறர் ஏறிச் சென்றபடி இருக்கிறார்கள். ஆசிரியரும் அவனைப் பாராட்டி ஏற்பதில்லை. சிறுவயதில் அவன் நோட்டு புத்தகத்தை ஆசிரியர் திருத்தி முட்டை மதிப்பெண் அளிக்கிறார். இது அவனுக்கு தன் பக்கத்து வீட்டு மரங்களில் தொங்கும் பலாப்பழத்தை நினைவூட்டுகிறது. அதை திருடி வேகவைத்து தின்றே அவன் பசி அடங்குகிறது. சில நாட்கள் பசித்த வயிற்றுடன் வகுப்பில் இருக்கும் அவனால் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனாலே அவன் முட்டை (சக்க) வாங்குகிறான். என்றாவது ஒருநாள் ஆசிரியரின் தோப்பிலுள்ள சுவையான நல்ல சக்கையை தான் சுவைக்க வேண்டும் என ஏங்குகிறான் (இங்கு பலாப்பழம் சமமாய் நடத்தப்படுவதன் குறியீடு). அவன் வளர்ந்து பல்கலைக்கழகம் செல்கிறான். அப்போது ஆசிரியர் தன் மகளுக்கு இடம் வாங்க அங்கு வருகிறார். அப்போது அவர் முதன்முதலாய் தன் தோப்பில் விளைந்த பலாத் துண்டு ஒன்றை அவனுக்கு அளிக்கிறார். ஆசிரியர் கையால் பிரியத்தை சுவைக்க வேண்டும், ஏற்கப்பட வேண்டும் என அவனது ஏக்கம் எதேச்சையாய் நிறைவேறுகிறது.
இக்கவிதையில் எனக்கு பிடித்தது இரண்டு விசயங்கள். பலாப்பழத்தை ஒரு சமூக மேல்நிலையாக்க குறியீடாய் பயன்படுத்தி உள்ள விதம். வாழ்க்கையில் நம்மில் மேலாய் உள்ள மனிதர்கள் சட்டென ஒருநாள் நமக்கு இணையாக ஆகும் விசித்திரம், அதன் அபத்தம்.
இத்தொகுப்பின் குறைகள் இவை எனத் தோன்றுகின்றன:
1)   நிறைய குட்டிக் கவிதைகள் வருகின்றன. அவை கவிதையாகவில்லை.
2)   அரசியல் கவிதைகள் பேஸ்புக் ஸ்டேட்டஸ் போல் உள்ளன.

3)   இஸ்லாமிய பின்புலம், அதன் கலாச்சார நுணுக்கங்கள் இல்லை. கவிதைகள் ரொம்ப “மதசார்பற்றவையாய்” உள்ளன.

Comments