என்னாச்சு?


நண்பர் ஆஸாத் ஒரு மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருந்தார்: “உடம்புக்கு ஒன்றுமில்லையே?” நான் பிளாகை அப்டேட் செய்து ரெண்டு வாரம் ஆகிறது. அதனால் தான்.

Dear Abilash,

How are you and your family ?

We all are okay and experienced with mild earth quake.

Past two weeks there is no new addition found in your web site.

Any health issue ? I think you are busy in mid exams.

Take care.

With Regards,

M.AZAD,
Kuwait.

 உடம்பு சௌக்கியமாக இருக்கிறது. காலைத் தவிர. இரு வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து சென்னைக்கு வர பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தேன். ஆட்டோவில் போகும் போது எனக்கு ஒரு கெட்டப் பழக்கம்: ஓரமாய் சாய்ந்து அமர்வேன். ஆடுகிற ஆட்டத்தில் என்னை சமனம் செய்து கொள்ள் அப்படி ஒரு ஏற்பாடு. அப்படி அமர்கையில் சிலநேரம் கால் கொஞ்சம் வெளியே நீட்டிக் கொள்ளும். ஏதாவது வண்டி வருவது கண்டால் உடனே உள்ளிழுத்துக் கொள்வேன். இம்முறையும் அப்படியே. ஆட்டோக்காரர் ஓவர் துடிப்பான ஆசாமி. விர்விர்ரென போய்க் கொண்டிருந்தார். சாலை நடுவே ரெண்டு அரைத்தூண்கள். நான் என்னவென்றே கணிக்கும் முன் அவர் இரண்டுக்கும் இடையில் ஆட்டோவை நுழைத்து, தமன்னாவின் இடையை தழுவுவது போல் வளைந்து வெளி வந்தார். வெளியே லேசாய் நீட்டியிருந்த இடதுகால் பாதம் தூணில் மோதி வலி தலையில் மின் அதிர்ச்சி போல் சொடுக்கியது. ஏதோ பெரிய பிரச்சனை தான் என அந்த நொடியே உணர்ந்து கொண்டேன்.
கடுமையான வலி. தலைகுனிந்து சில நிமிடங்கள் முனகி அழுத பின் தான் நிலைப்பெற்றேன். ஆட்டோக்காரர் தண்ணீர் எல்லாம் தந்து உபசரித்தார். ஆனால் “பேருந்து நிலையம் வேண்டாம், ஆஸ்பத்திரி போங்க” என்றேன். அவர் இன்னும் அதிக வேகத்தில் ரேஸ் விட்டார். அவரை அமைதிப்படுத்தி அலுங்காமல் குலுங்காமல் ஆஸ்பத்திரியை வந்தடைய படாதபாடு பட்டேன்.
ஆஸ்பத்திரியில் கால் எலும்பில் மெல்லிதாய் ஒரு கீறல் ஏற்பட்டுள்ளது என்றார்கள். மாத்திரை கொடுத்தார்கள். ஊசி போட்டார்கள். வலி குறைந்தது. ஆனால் பயம் என்னை அனகோண்டா போல் கவ்வியது. பெங்களூருக்கு வந்து தனியாய் வீடு எடுத்து தங்கிய பின் முதன்முதலாய் இப்போது தான் காயம் ஏற்படுகிறது. உதவிக்கு யாரும் இல்லை. சென்னையில் மனைவிக்கும் உடல் நலமில்லாமல் இருந்தது. ஊரில் என் பாட்டியை என் அம்மாவின் பொறுப்பில் விட்டிருந்தார்கள். அவராலும் என்னை பார்த்துக் கொள்ள வர முடியாது. ஞாயிறும் திங்களும் விடுமுறை. சாப்பிட வெளியே போக முடியாது. சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். வலி அடுத்த நாள் கடுமையானால் என்னால் தனியாக வீட்டு வேலைகளை கவனிக்க முடியுமா? செவ்வாய் கிழமையில் இருந்து கல்லூரிக்கு போக முடியுமா?
 கூட பணி புரியும் நண்பர் ரத்னமணி தான் உதவினார். காய்கறி, உணவு, மருந்து என எல்லாம் வாங்கிக் கொடுத்தார். இரண்டு நாட்களும் வந்து விசாரித்துப் போனார். ஒருவழியாய் சமாளித்தேன். என் அதிர்ஷ்டம் வலியும் வெகுவாய் குறைந்து வந்தது. இப்போது வகுப்பில் நின்று பேச முடிகிறது.
இந்த விபத்து என் கவனத்தை தடம் மாற்றி விட்டது.
 இன்னொரு பக்கம், என் வகுப்புகள். இந்த செமஸ்டரில் நான் முதன்முறையாய் ஒரு core paper கற்பிக்கிறேன். இலக்கிய கோட்பாடுகள். அடுத்த வருடம் வரை பொது ஆங்கிலம் மட்டுமே கற்பிக்க வாய்ப்பளிப்பார்கள் என்றே நினைத்தேன். ஆனால் இன்ப அதிர்ச்சியாய் இப்போதே ஒரு பிரதானமான பாடத்தை எடுக்கத் தந்து விட்டார்கள். அதற்கான வாசிப்பு, தயாரிப்பு ஆகியவை என் கணிசமான ஓய்வு நேரத்தை எடுத்துக் கொண்டன.
முதலில் அமைப்பியல் பற்றி விவாதித்தேன். அமைப்பியலை சுலபமாய் புரிந்து கொள்ளும் வண்ணம் சினிமா காட்சிகள், டிவி விளம்பரங்கள் என பல பண்பாட்டுப் பிரதிகளை வகுப்பில் காட்டி அமைப்பியலைக் கொண்டு அவற்றை அலச முயன்றேன். இன்றைய வகுப்பில் மோடி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகிய தலைவர்கள் தம் தோற்றத்தை எப்படி கட்டமைத்தார்கள்; அதிலுள்ள வேறுபாடுகள் என்ன, இந்த பிம்பங்களின் பின்னால் சமூக பண்பாட்டு, சித்தாந்த கட்டமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என விவாதித்தோம். இன்னொரு வகுப்பில் அந்நியன் படத்தில் எப்படி வர்ணம் பற்றின நம்பிக்கை அம்பி அந்நியனாய் உருமாறுவதை நியாயப்படுத்த, நம்ப வைக்க உதவுகிறது என பேசினோம். 90களில் கோக் விளம்பரங்கள், பேட்மேன் படத்தில் வரும் விவிலிய கட்டமைப்புகள் என விவாதித்து விவாதித்து கடந்த இரு வாரங்களில் நானே நிறைய விசயங்களை புதுசாய் கற்றுக் கொண்டேன்.
கடந்த சில வருடங்களாய் எனக்கு பாடம் எடுப்பதில் அலுப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கு பல காரணங்களை கற்பித்திருந்தேன். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி விட்டன இந்த கோட்பாட்டு வகுப்புகள். நான் இதுவரை இவ்வளவு ஆர்வமாய், மனம் ஊன்றிப் போய் பாடம் எடுத்ததில்லை. நான் எந்தளவுக்கு லயித்துப் போயிருக்கிறேன் என்றால் எழுதுவதையே மறந்து விட்டேன்.
இரண்டு கட்டுரை நூல்களை தொகுக்கும் பணியும் நடந்தது. ”தொண்ணூறுகளின் சினிமா” மற்றும் “பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா?” இரண்டாவது, கடந்த எட்டு வருடங்களில் பெண்களின் உளவியல் பற்றி நான் எழுதின கட்டுரைகளின் தொகுப்பு. இந்த பணியும் என்னை முழுக்க இழுத்துக் கொண்டது.
ஆஸாத்தின் மின்னஞ்சலைக் கண்ட போது தான் “அடடே நம்  பிளாகையே மறந்து விட்டோமே” என நினைத்துக் கொண்டேன். உடனே ஒரு கட்டுரையை பதிவேற்றி விட்டு இப்போது இந்த குறிப்பை எழுதுகிறேன்.

தோசைக்கல் சூடாகி, மாவும் ரெடியாகி விட்டது. இனி தினமும் தோசை வரும்!

Comments

ஜீவி said…
குமுதத்தில் என்று நினைக்கிறேன். பார்த்தேனே, உங்களை?..
premkumar said…
Take care your health Sir
Sendhilkumar AV said…
Abilash..Take care !!!
ஒரு சந்தேகம் அந்த சிறு விபத்துக்கும் ...இந்த அமைப்பியல் தத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் ?
Senthil Prabu said…
Happy that you're back!!