இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல (4)

 Image result for gandhi
 காந்தி தேசவிடுதலைக்காக போராடினாலும், தேசத்தின் தந்தையாக அறியப்பட்டாலும் அவர் மக்கள் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒரு தேசிய இனமாய் தொகுக்கப்பட வேண்டும் என விரும்பவில்லை. இந்தியாவும் இந்திய பண்பாடும் இம்மக்களும் பன்மைத்துவம் கொண்டவர்கள், நெகிழ்வானவர்கள், மற்றமையை தமது வாழ்வின் ஒரு பகுதியாய் ஏற்று இணங்கி செல்லக் கூடியவர்கள் என அவர் நினைத்தார். அதனாலே யாரையும் எதையும் வெறுக்க வேண்டியதில்லை என்றார். இந்தியா ஒரு தேசமாய் சுயாட்சி பெற வேண்டும் என்பதை விட ஆன்மீக ரீதியாய் தன்னிறைவு பெற்ற, வறுமை நீங்கி கல்வி பெற்ற நாடாக வேண்டும் என்றே காந்தி நம்பினார். அந்த நிலைக்கு நம்மை எடுத்துப் போக ஆங்கிலேயரால் முடியுமெனில் அவர்களே ஆளட்டுமே என அவர் கூறினார்.

 ஜாலியன் வாலாபாக் படுகொலை தான்வெள்ளையர் அத்தகுதியை இழந்து விட்டனர்என காந்தியை அவநம்பிக்கை கொள்ள வைத்தது. தேச விடுதலைக்குப் பிறகு காங்கிஸர் கலைக்கப்பட வேண்டும் என அவர் கோரியது, ஆட்சிப் பொறுப்பேற்க மறுத்தது ஆகிய நடவடிக்கைகள் அவர் ஐரோப்பிய வரையறைக்கு உட்பட்ட நவீன தேசிய அமைப்பில் நம்பிக்கை அற்றவர் என்பதைக் காட்டியது.
மேலும் நவீன தேசங்கள் நகரங்களை மையமிட்டவை. நவீன வளர்ச்சியை மைய விசையாய் கொள்பவை. ஆனால் காந்தியோ இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்றார். எந்திரமயமாக்கல் இந்தியாவுக்கு ஊறு விளைவிக்கும் என்றார். காந்தியால் தேசம் எனும் கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்க முடியாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாய் இருந்திருக்கலாம்.
காந்தி இந்து மதத்தை அவ்வளவு தீவிரமாய் முன்னெடுத்து, ஒரு துறவி போன்றே தன்னைக் காட்டிக் கொண்டார் என்றால் அக்காலத்தைய இந்துத்துவர்கள் நவீனர்களாய், ஐரோப்பிய சாயல் கொண்டவர்களாய், பழமையான இந்து மத சடங்குகளில் நம்பிக்கை அற்றவர்களாய், நாத்திகர்களாய் அல்லது மதசீர்திருத்தவாதிகளாய் இருந்தனர். அவர்கள் நகரங்களின் மைந்தர்களாய், கிராமங்களுடன் தொடர்பற்றவர்களாய் இருந்தனர். காந்தி மக்களை நோக்கிநாம் கிராமங்களை நோக்கி செல்வோம்என்றால், இந்துத்துவர்களோநாம் நகரங்களை நோக்கி நகர்வோம், அங்கே வளர்ச்சி சாத்தியம், அதுவே முன்னேற்றம்என்றனர்.
இந்திய நகரமயமாக்கல் எனும் தனது பிஞ்சு பாதங்களை பதித்து நடக்கத் தொடங்கிய காலம் அது. அப்போது நகரம் சார்ந்த படித்த மத்திய, மேல்மத்திய வர்க்க இந்துக்களுக்கு ஒற்றைபட்டையான ஒரு இந்து மதம் தேவைப்பட்டது. ஆயிரக்கணக்கான கடவுளர்களும் பல்லாயிரம் சடங்குகளும் இல்லாத (கிறித்துவம் போன்ற) எளிமையாக்கப்பட்ட ஒரே கடவுள், ஒரே வேதபுத்தகம் கொண்ட ஒரு இந்து மதம் அவர்களுக்கு தேவைப்பட்டது. அந்த ஒற்றை பட்டையான இந்து எனும் அடையாளத்தின் கீழ் படித்த மேற்தட்ட இந்துக்கள் திரள விரும்பினர். அத்தகைய ஒரு சித்தாந்தத்தை அவர்களுக்காக அன்று உருவாக்கி அளித்தவரே சாவார்க்கர். ஆனால் அச்சித்தாந்தம் மக்களால் முழுக்க ஏற்கப்பட்டு பரவலாக ஒரு அரசியல் விசையாக மாறுவதற்கு அரை நூற்றாண்டுக்கு மேல் தேவைப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்தியா சுதந்திரம் பெறத் தயாராகி வந்த காலகட்டத்தில், நகரமயமாக்கலின் முதல் கட்டத்தில் இருந்த இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சமூக அழுத்தத்தின், தேசியமாக்கல் இச்சையின் முகம் தான் சாவார்க்கர் என்கிறார் ஆஷிஸ் நந்தி. மோடியின் ஆட்சியின் கீழ் இன்று வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதாரம் ஆகிய கோஷங்களின் அடிப்படையில் இந்துத்துவா கொடி பறப்பது எதேச்சையானது அல்ல. இதன் வேர் 1930களிலேயே ஆழ இறங்கி பதிந்து விட்டது. மதம் அன்றும் இன்றும் இந்துத்துவர்களுக்கு மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு சாக்குபோக்கு மட்டும் தான், உணர்ச்சிகரமாய் தந்திரம் மட்டும் தான். தேசிய அடையாளத்தின் கீழ், நகரமயமாக்கலையும் முதலாளித்துவ பாய்ச்சலையும் முன்னெடுத்து மக்களை திரட்டுவதே அவர்களின் பிரதான அஜெண்டா.

Comments