இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல (3)

Image result for savarkar
1924இல் சாவார்க்கர் ரத்னகிரி மாநிலத்துக்கு அவர் அனுப்பப்படுகிறார். அவர் அம்மாநிலத்தை விட்டு போகக் கூடாது என்றும், ஆங்கிலேய அரசுக்கு எதிராய் செயல்படக் கூடாது என்றும் எழுத்து மூலம் ஒப்புதல் அளித்த பின்னரே அவர் விடுவிக்கப்படுகிறார். இறுதி வரை இந்த ஒப்பந்தத்தை அவர் மீறவில்லை.

இப்போது, சாவார்க்கர் தனது போராட்டமும், சிறைத் தண்டனையும் தியாகமும் முழுக்க வீணாகி விட்டதை உணர்ந்தார். யாரும் அவரை பொருட்படுத்தவில்லை. மாறாக, காந்தி ஒரு கடவுளாய் மக்கள் மத்தியில் திகழ்ந்தார். இந்திய விடுதலை விரைவில் நிகழும் எனும் நம்பிக்கை பரவலாக நிலவியது. ஆக, சாவார்க்கரே விரும்பியிருந்தாலும் கூட அவர் ஒரு விடுதலைப்போராளியாக தன்னை மீட்டிருக்க முடியாது. அந்த இடம் காலியாகி விட்டது. (இது அவரது இஸ்லாமிய வெறுப்புரசியலின் இரண்டாவது காரணம்.)
 ஆனால் சாவார்க்கருக்கு ஆங்கிலேய வெறுப்பு பிரதானம் அல்ல. அவருக்கு இஸ்லாமிய வெறுப்பும் முக்கியம் அல்ல. அவர் அடிப்படையில் ஒரு தேசியவாதி. சிறைக்கு முன்பு அவர் ஆங்கிலேயரை பொது எதிரியாய் முன்வைத்து மக்களை ஒரு தேசிய சமூகமாய் திரட்ட முயன்றார். இப்போது அதையே அவர் இஸ்லாமியரை பொது எதிரியாய் வைத்து செய்ய முயன்றார். 1857 சிப்பாய் கலகத்தை இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டமாய் கொண்டாடி சாவார்க்கர் தன் முதல் புத்தகத்தை, சிறை செல்லும் முன், எழுதினார். ஆனால் சிறை விடுதலைக்கு பின், அவர் 1923இல்ஹிந்துத்துவாஎனும் நூலை எழுதினார். இந்த தடமாற்றம் முக்கியம்.
 இதைத் தொடர்ந்து அவர் இஸ்லாமிய வெறுப்பை நெருப்பாய் வளர்த்து தனது தேசியவாத யாகத்தை நடத்தத் துவங்கினார். இந்த யாகத்தீயில் பலியிடப்பட்ட ஒரு ஆடு தான் கோட்ஸே.
இந்துத்துவாவுக்கு இஸ்லாமியர் ஒரு மற்றமையாக, பொது வில்லனாய் அமைந்தது எதேச்சையானது தான் என்கிறார் ஆஷிஸ் நந்தி. ஏன் கிறித்துவர்கள் அந்த இடத்தில் இல்லை?
 ஏன் என்றால் இந்துத்துவர்கள் ஐரோப்பிய கிறுத்துவக் கல்வி மூலம் தான் வளர்ந்து வந்தார்கள். அக்கல்வி மூலம் தான் இணைமுரணியல் சித்தாந்தம் அவர்களின் ரத்தத்தில் மருந்து போல் இறங்கியது. சிலுவைப் போரில் எப்படி இஸ்லாமியர் மற்றமையாக ஆனார்களோ அதே போல் இந்துத்துவப் போரிலும் ஆனார்கள். (சிலுவைப் போரில் கிறித்துவர்கள் செய்த பணியை இப்போது இந்துக்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.) கிறுத்துவர்களுக்கு இணக்கமாய் அவர் தன்னை கருத வேறு காரணங்களும் உண்டு.
 கிறித்துவ மிஷினரிகளைப் போன்றே இந்துத்துவர்கள் இந்தியர்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் குற்றங்களுக்கும் மற்றமையான இஸ்லாமியரை பிரதான காரணமாய் (சாத்தானாய்) முன்னிறுத்தினர். கிறித்துவர்கள் ஒரே வேத நூலை, ஒரே இறைவனை முன்னிறுத்தியது போல் இந்துத்துவர்களும் ஒற்றை இந்து மதத்தை முன்வைத்தனர். இந்துத்துவர்கள் தம் சித்தாந்த்ததை பரப்ப மேற்கொள்ளும் முயற்சிகளும் மிஷினரிகளுக்கு வெகு அருகில் அவர்களைக் கொண்டு செல்கின்றன. ஆரம்ப கால இந்துத்துவர்களுக்கு கிடைத்த மேற்கத்திய கல்வி முறையும், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அணுக்கமாய் செல்ல விரும்பியதும் அவர்களுக்கு கிறித்துவர்கள் மீது அதிக வெறுப்பு ஏற்படாமல் பண்ணி இருக்கலாம். (பிற்கால இந்துத்துவர்கள் கிறுத்துவ விரோதிகளாய் மாறியது வேறு விசயம்.) இஸ்லாமியரை எதிரிகளாய் முன்னிறுத்துவதற்கு சாவார்க்கருக்கு வரலாற்றுக் காரணங்களும் (முகலாய படையெடுப்பு முதல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை கலவரங்கள் வரை) வசதியாக இருந்தது வேறு விசயம்.

தேசியவாதத்தை கட்டமைக்க சாவார்க்கருக்கும் பிற தேசியவாதிகளுக்கும் மற்றமை ஒரு முக்கிய தேவையாக இருந்தது என சொன்னேன் அல்லவா. அப்படி எனில் காந்தி ஏன் பிரிட்டீஷாரையும் இஸ்லாமியரையும் வெறுக்கவில்லை? ஏனெனில் காந்தி ஒரு தேசியவாதி அல்ல. (அவரை தேசத் தந்தை என அழைப்பவர்களுக்கு இது சற்று அதிர்ச்சியாகத் தான் இருக்கும்!)

Comments