மிஷ்கினை துப்பறிவோம் (2)

Image result for thupparivalan
துப்பறிவாளனில்தன்னிடம் வேலை கேட்டு தொந்தரவு செய்யும் மல்லிகாவை கணியன் பூங்குன்றன் ஏற்கும் காட்சி சற்று விசித்திரமாக இருக்கும். அவள் கையில் துடைப்பட்டக் கட்டையை கொடுத்து வீட்டுக்குள் பிடித்துத் தள்ளுவான். தரையில் விழுந்து கிடக்கும் அவள் முகம் மலர்ந்து சிரிப்பாள். ஏன் இந்த வன்மம்? அவள் ஏன் இதற்கு அகம் மலர்கிறாள்? இதை பெண்ணிய கண்ணாடி வழி மொட்டையாய் பார்த்தால் உங்களுக்கு மிஷ்கினை நோக்கிஏன் ஆணாதிக்கவாதியேஎன சாமியாடத் தோன்றும். ஆனால் இக்காட்சியில் ஒவ்வொன்றும் ஒரு உருவகம்.

நான் ஒருமுறை மிஷ்கினை சந்திக்க சென்றேன். அவரிடம் ஒரு தமிழ் புத்தகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் உடனே தன் உதவி இயக்குநரை அழைத்து அந்நூலை அப்போதே வாங்கி வரச் சொன்னார். அப்போது மாலை தாமதமாகி விட்டது. இன்னும் ஒருமணியில் புத்தகக் கடைகள் மூடி விடும் என்றும், அவருக்கு புத்தகம் நிச்சயம் கிடைக்காது என்றும் எனக்குத் தெரியும். அந்த உதவி இயக்குநர் உடனே பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அவர் தேவையின்றி இரண்டு மணிநேரங்கள் சாலையில் அலைந்து விட்டு வெறுங்கையாய் திரும்பப் போகிறார் என ஊகித்தேன். அவ்வாறே நடந்தது. மிஷ்கின் அவரை ஏனிப்படி அலைகழிக்கிறார்?
மிஷ்கின் தன் உதவி இயக்குநர்களை நண்பர்களாய் அல்ல தன் பிள்ளைகளை போல் நடத்துகிறார். ஒருவித முரட்டுத்தனமான கண்மூடித்தனமான அன்பை அவர்கள் மீது பிரயோகிக்கிறார். கணியன் மல்லிகாவை நடத்துவது போன்றே அவர்களை நடத்துகிறார். ஏனெனில் அன்பு அதர்க்கமாய், பகுத்தறிவை மீறியதாய், ஆவேசமாய் இருக்க வேண்டும் என அவர் நம்புகிறார். எதையும் யோசிக்காமல் புத்தகம் வாங்க அவன் செல்லும் அவனது அந்த அர்ப்பணிப்பு, சிந்தனையற்ற உணர்வுநிலையே அவருக்கு முக்கியம்புத்தகம் அல்ல (பகுத்தறிவாதம், தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய விழுமியங்களை போற்றுகிறவர்களால் இந்த அணுகுமுறையை ஒருநாளும் புரிந்து கொள்ள இயலாது.).
இந்த மூர்க்கமான அன்பும் கோபமும் தான் மிஷ்கின். அவர் அடுத்தவரையும் தண்டிப்பார்; தன்னையும் தண்டிப்பார். “நந்தலாலாபடப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் பற்றி ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். அப்படம் மிகுந்த நெருக்கடிகளின் மத்தியில் எடுக்கப்படுகிறது. உதவி இயக்குநர்களுக்கு இரவு பகலான வேலை. இயல்பாகவே அவர்களிடம் சுணக்கமும் தோய்வும் தெரிகிறது. இதை மிஷ்கின்நீங்கள் என்னிடம் ப்ரியம் காட்டவில்லை; என்னிடமும் என் படத்தின் மீதும் கருணையின்றி இருக்கிறீர்கள்என புரிந்து கொள்கிறார். எடிட்டிங் உட்பட்ட படத்தின் இறுதிக் கட்ட பணிகளுக்கு எந்த உதவியாளரும் தேவையில்லை என அவர்களை திரும்ப அனுப்பி விடுகிறார். தனியாக அத்தனை வேலைகளையும் பண்ணி முடிக்கிறார். (ஆனால் படம் முடிந்த பின் அதே உதவி இயக்குநர்களை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறார்.)
அன்புக்காக வேலை செய்யும் போது சுணக்கம் இராது. அப்படியெனில் உங்களுக்கு என் மீது அன்பு இல்லையா என்பதே மிஷ்கினின் தரப்பு. பகுத்தறிவை வழிபடுபவர்களுக்கு மிஷ்கினின் இந்த அணுகுமுறை அபத்தமாய், மூர்க்கமாய், பண்பற்றதாய் தெரியும். ஆனால் பகுத்தறிவு அழியும் போதே அன்பும் கருணையும் நம்மில் இருந்து பீறிடும் என மிஷ்கின் நினைக்கிறார். அவரிடம் பணி புரிபவர்களுக்கு திரை நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பதுடன் இந்த மனத்திறப்பையும் சேர்த்தே அவர் முன்வைக்கிறார்.
 “துப்பறிவாளனில்கணியன் மல்லிகாவை நடத்தும் காட்சிகளின் மூலம் மிஷ்கின் தான் தன் நண்பர்களை, உதவியாளர்களை, தனக்கு நெருக்கமானவர்களை எப்படி பார்க்கிறேன் என பார்வையாளர்களுக்கு உணர்த்த முயல்வதாகவே எனக்குப் பட்டது.
மேற்குறிப்பிட்ட காட்சியில் கணியனிடம் வெளிப்படும் அந்த மிதமிஞ்சிய வன்மம் அவனது மிதமிஞ்சிய அன்பை, கருணையைக் காட்டுகிறது. அதனாலே அப்பெண் முகம் மலர்கிறாள். ஏன் துடைப்பம்? ஏன் ஒரு அறிவார்ந்த வேலையை கொடுக்கவில்லை? புத்திக்கு தேவையில்லாத எளிய அன்றாட வேலைகளே ஆன்மீக மலர்ச்சிக்கு மேலானது. அதனால் தான். புத்தி இங்கு தீமையின் உருவகம்.

அப்படியெனில் அதிபுத்திசாலியான கணியன் தீயவனா? ஆம். ஆனால் அவன் தீமைப் படிநிலையில் நடுவே இருப்பவன். அவன் ஹீரோ அல்லவா? மிஷ்கினின் பார்வையின்படி தீமை என்பது குற்றம் செய்வதல்ல. கருணையின்றி இருப்பது. கணியனிடம் கருணை உண்டு. ஆனால் தன்னை பிறருக்காக ஒப்புக் கொடுக்கும் அளவுஅடித்தட்டை சேர்ந்த மல்லிகாவிடம் உள்ளமட்டற்ற கருணை அவனிடம் இல்லை. அவன் இறுக்கமானவனாய், தன்னுணர்வு மிக்கவனாய்த் தான் இறுதி வரை இருக்கிறான். மல்லிகா ஒரு திருடியாய் மாறுவது தனக்காக அல்ல. அவள் ஒரு திருடியாய் தன்னை பிறருக்காய் தியாகம் செய்கிறாள் (தஸ்தாவஸ்கியின் சோனியாவைப் போல). இறுதிக் காட்சியில் தன் உயிர்போகும் போதும் தான் நேசிக்கும் கணியனுக்காக முக்கியமான ஆதாரம் ஒன்றை திருடி அளிக்கிறாள். மல்லிகாவின் மரணம் ஒருவிதத்தில் ஒரு தெய்வத்தின் மரணம் (கர்த்தரின் சிலுவையேற்றம்). “யுத்தம் செய்யில்டாக்டர் புருஷோத்தமனும் அவரது மனைவியும் தம் மகளைப் பழிவாங்க கொலைகள் செய்தாலும், கிளைமேக்ஸில் சாருவில் தம் இறந்து போன மகளைக் காண்கிறார்கள். அவளைக் காப்பாற்றுவதற்காய் தம்முயிரை தியாகம் செய்கிறார்கள். வில்லனைக் கொல்ல வேண்டும் எனும் வெறியை துறக்கிறார்கள். இந்த இடத்தில் இவர்கள் மல்லிகாவைப் போல் தெய்வமாகிறார்கள்.
மிஷ்கின் இப்படியான உணர்ச்சிகரமான சுய அழிப்பை ஒரு உயர் பிரக்ஞை நிலையாக, சுயவிடுதலையாக தன் படங்களில் முன்வைக்கிறார். இது புத்திசாலித்தனம் அற்ற எளிய மனிதர்களுக்கும் (படிநிலையில் மூன்றாவது வரும் வில்லகளுக்கு), புத்திசாலித்தனம் இருந்தும் உணர்ச்சிமேலிடலால் அதைக் கடந்து கருணையால் செயல்படும் மல்லிகா, புருஷோத்தமன் தம்பதிகள் போன்றோருக்கும் சாத்தியமாகிறது. ஆனால் கணியன், ஜெ.கெ போன்ற இடைநிலை பாத்திரங்களுக்கு சாத்தியமாவதில்லை. அவர்களின் கருணை எல்லைக்குட்பட்டது. அதனாலே அவர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் வசிக்கிறார்கள்.
இயக்குநர் மிஷ்கினும் தன்னை இந்த இடைநிலையை சேர்ந்தவராகவே கருதுகிறார் என ஊகிக்கிறேன். அதனாலே அவரது படங்கள் இத்தகையோரின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்லப்படுகின்றன.
மிஷ்கினின் படங்களில் நன்மை-தீமைக்கு நடுவிலான வேறுபாடுகள் இல்லை. நாயகனும் வில்லனும் கிட்டத்தட்ட ஒரே தடத்திலே பயணிக்கிறார்கள். ஏனெனில் அவரது படங்கள் குற்றங்கள் தீமையை தீர்மானிப்பதில்லை. இதுவே வழக்கமான குற்றவிசாரணைப் படங்களில் இருந்து மிஷ்கினின் neo noir படங்களை பல மடங்கு உயர்த்துகிறது. தன்னுணர்வால் பீடிக்கப்பட்டு, தன் சகோதரனின் துன்பத்தை கண்ணெடுத்து பார்க்க தலைப்படாதகுருடர்களேதீயவர்கள் என அவர் மீள மீள சொல்கிறார்.
இதை மிகச்சுருக்கமான மொண்டாஜ் ஷாட்களின் மூலம்துப்பறிவாளனில்மிஷ்கின் போகிற போக்கில் அற்புதமாய் காட்டுகிறார். அங்கிள் எனப்படும் வயதான வில்லன் பாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருக்கிறார். தொழிலதிபர் ராம்பிரசாத்தை கொலை செய்ய அவரது காரின் ஏர் பிரஷ்னர் கருவியில் நைட்ரஸ் ஆக்ஸைடை வில்லன்கள் கலந்து விடுவார்கள். இது கட்டுபாடற்று மனிதனை சிரிக்கத் தூண்டும் வாயு. விளைவாக ராம்பிரசாத்தும் அவரது ஓட்டுநரும் காரில் சிரித்தபடியே கோரமான விபத்தில் மாட்டில் இறந்து போவார்கள். இதற்கு முன் இந்த வாயுவை ஏற்றுவதற்கு அவகாசம் பெறும் பொருட்டு அங்கிள் கார் ஓட்டுநருக்கு முன்பாக தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாய் நடிப்பார். ஓட்டுநர் ஓடிப் போய் அவருக்கு உதவுவான். அவருக்காய் உண்மையிலேயே அவன் பதறிப் போவான். அவன் கருணையே வடிவாகுவான். (தன்னைக் கொல்லப் போகும் ஒருவருக்காக இதையெல்லாம் செய்கிறான் என்பதே இங்கு நகைமுரண்.) வேலை முடிந்ததும் அங்கிள் தனக்கு நெஞ்சு வலி சரியாகி விட்டதாய் சொல்லி அங்கிருந்து அகல்வார். அப்போதும் அந்த ஓட்டுநர் அவர் மீது பரிவுடனே கவனிப்பான். இதைத் தொடர்ந்து வரும் காட்சிகளில் ஒன்றில் கணியனும் போலீஸும் அங்கிளின் அடையாளத்தைக் கண்டு பிடித்து அவர் வீடு தேடி வருவார்கள். அவர்கள் வருவார்கள் என்பது யூகிக்கும் டெவில் அங்கிள் மூலமாய் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது எனும் நோக்கில் அங்கிளைக் கொல்வதற்காக அவரது வீட்டுக்குச் செல்வான். அப்போது தான் அங்கிளின் அன்றாட வாழ்வின் அவலங்களை நாம் காண்போம். அவரும் மனைவியும் தனியாக வசிக்கிறார்கள். மனைவி உடல் தளர்ந்த நிலையில் படுத்தபடுக்கையில் இருக்கிறார். முழுக்க கணவனின் உதவிகளை நம்பி வாழ்கிறார். டெவில் அங்கிளை எதிர்கொண்டு அவரை கத்தியால் குத்தி விட்டு அவர் கொடுத்த காப்பியை அமர்ந்து ரசித்துக் குடிக்கிறான். ரத்தம் பீறிட அங்கிள் தரையில் பல்லி போல் ஊர்கிறார். அந்த பரிதாபமான காட்சியை எந்த உணர்ச்சியும் இன்றி டெவில் வேடிக்கை பார்க்கிறான். அப்போது அங்கிளுக்கு தனக்காய் பாய்ந்து வந்து உதவிய அந்த வெள்ளாந்தியான கார் ஓட்டுநர் நினைவுக்கு வருகிறான். கருணை மறுக்கப்படுதே ஆகப்பெரிய அவலம் என்பதை உணர்கிறார். (டெவிலின் பிரச்சனை அவன் கொடூரமான கொலைகள் செய்கிறான். என்பதல்ல. அவன் இதயம் கல்லால் ஆனது என்பதே. அவன் மூளையால் மட்டுமே உலகை அணுகுகிறான், அவனிடம் கிஞ்சித்தும் கருணை இல்லை என்பது.)
பிறகு அங்கிள் அப்படியே ஊர்ந்து சென்று அவர் தன் மனைவியை தலையணையால் அழுத்திக் கொல்கிறார். கருணைக் கொலை செய்கிறார். ஏனெனில் அவர் இன்றி இந்த உலகில் அவள் சிறுக சிறுக வதைபட்டு சாவதை அவர் விரும்பவில்லை.
இந்த மாண்டேஜ் காட்சிகளின் மூலம் சில நொடிகள் மிஷ்கின் தன் படத்தை மையத்தை உணர்த்தி விடுகிறார். பின்னணிக் குரலோ விளக்கவுரையோ அவருக்கு தேவையிருப்பதில்லை. இதுவே அவரது மேதைமை!Comments

Janakiraman said…
அருமையான உளவியல் துப்பறிவு
Sendhilkumar AV said…
பல கொலைகளை செய்தவனும் கடைசியில் கொஞ்சம் ஈரமாகத்தான் உள்ளான் என நிறுவது இலக்கியத்தை சார்ந்ததா?