இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல: சாவார்க்கரில் இருந்து மோடி வரை (2)

 Image result for savarkar
 எந்த தேசியவாதிக்கும் மற்றமையாக காணத்தக்க எதிரிகள் அவசியம் என ஆஷிஸ் நந்தி அவதானிக்கிறார். ஒருவனை சுட்டிக் காட்டி இவன் நம்மில் இருந்து வேறுபட்டவன் என அறைகூவாமல் நீங்கள் உங்களை யாரென அடையாளப்படுத்த முடியாது. நான் சிவப்பென பெருமை கொள்ள என் பக்கத்தில் ஒருவன் கறுப்பாய் இருக்க வேண்டுமே! (ஹெகல் இதை dialectics [இணைமுரணியல்] என்றார்.) பிராமணர்கள் இராவிட்டால் திராவிடம் எனும் கோட்பாட்டை பெரியாரால் கட்டி எழுப்பி இருக்க முடிந்திருக்காது.

 ஐரோப்பாவிலும் தேசங்கள் உருவான காலங்களில் இது போல் பொது எதிரிகள், இன எதிரிகள், மத எதிரிகள் மற்றமையாக அடையாளம் காணப்பட்டு கடுமையாய் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள்; லட்சக்கணக்கான மற்றமையரின் மரணத்தின் மீது தான் ஐரோப்பிய தேசங்கள் கட்டி எழுப்பப்பட்டன என்கிறார் ஆஷிஸ் நந்தி. சிலுவைப் போர்களில் இருந்து காலனியம் வரை கிறித்துவர் அல்லாத பழங்குடிகளை, “பண்பாடற்ற பிற்போக்காளர்களை” கைப்படுத்தி அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து தேசியத்தை பரப்ப வேண்டும் எனும் நோக்கம் ஆங்கிலேயருக்கு இருந்தத்து. Pagan என ஒரு மற்றமையை உருவாக்காமல் பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை அவர்களால் கற்பனையே செய்திருக்க முடியாது. நவீன ஜெர்மனியின் உருவாக்கத்தில் யூத வெறுப்பும் அவ்வாறே பயன்பட்டது.
சாவார்க்கர் பேகன்களின், யூதர்களின் இடத்தில் இஸ்லாமியரை பொருத்தினார். இந்துத்துவாவை கட்டமைத்தார். ஆனால் இந்துமத பெருமிதம் இல்லாத சாவார்க்கர் ஏன் இஸ்லாமியரை வெறுத்தார்?
இதற்கு ஆஷிஸ் நந்தி கூறும் காரணம் சுவாரஸ்யமானது. ஒரு இளைஞராய் பிரிட்டீஷ் அரசாங்கத்தை ஆயுதத் தாக்குதல் மூலம் விரட்டி இந்தியாவை விடுவிக்க எண்ணின சாவார்க்கர் பின்னர் (1910ஆம் ஆண்டு) கைது செய்யப்பட்டு (1911இல்) அந்தமான சிறைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனுப்பப்பட்டார். அவரது குடும்ப சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது இளங்கலை பட்டம் ரத்து செய்யப்பட்டது. 27 வயதில் சாவார்க்கரின் வாழ்க்கை ஒரு கொடூரமான முடிவுக்கு வந்தது எனலாம். ஏனென்றால், பின்னர் அவரே ஒரு குறிப்பில் சொன்னது போல், “அந்தமான சிறைக்கு சென்ற ஆயிரக்கணக்கானோரில் பத்து பேர் கூட இந்தியாவுக்கு மீண்டதில்லை”.
Image result for savarkar prison
 Cellular Jail எனப்பட்ட அந்த சிறையில் தினம் தினம் சித்திரவதை. ஆறுமாதங்கள் தனிச்சிறை. ஏழு நாட்கள் கைவிலங்குடன் நின்று கொண்டே இருக்கும் தண்டனை. இன்னும் பத்து நாட்கள் கால் முட்டியை மடிக்க முடியாதபடி குறுக்குச் சட்ட சங்கிலியால் அவர் பிணைக்கப்பட்டிருப்பார். அவரையும் இந்து பூஷன் ராய் மற்றும் உல்லஸ்கார் தத் எனும் விடுதலைப் போராளிகளையும் எண்ணெய் செக்கில் மாட்டி நடக்க விடுகிறார்கள். இந்த வதையும் அவமதிப்பும் தாள முடியாமல் ராய் தற்கொலை செய்கிறார்; தத்துக்கு பைத்தியம் பிடிக்கிறது. அது மட்டுமல்ல, இரவில் சிறைக்கைதிகள் கக்கூஸுக்கு போக முடியாது. அதனால் அவர்கள் படுக்கும் இடத்திலேயே ஒன்றுக்கும் ரெண்டுக்கும் போய் விட்டு மூக்கைப் பொத்திக் கொண்டு தூங்க வேண்டும். இரவில் மலவாடையுடன் தூங்கும் கொடுமை தான் சாவார்க்கருக்கு தாள முடியாததாக இருக்கிறது. இது போக ஜெயிலர்கள் அவரை ஆசனவாய் புணர்ச்சியில் ஈடுபட வற்புறுத்துகிறார்கள். இந்த காலத்தில் எப்போது வேண்டுமெனிலும் தன் சித்தம் கலங்கி விடக் கூடும் எனும் நிலையில் தான் இருந்ததாய் சாவார்க்கர் எழுதுகிறார். ஆக, சுயபாதுகாப்புக்காக அவர் ஆங்கிலேயருக்கு இணக்கமாய் செல்ல வேண்டும் என முடிவெடுக்கிறார்.
சாவார்க்கர் அக்காலத்தில் தன் சிறைக்காலத்தை குறைக்கும்படி தொடர்ந்து ஆங்கிலேய மேலதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பினபடி இருந்தார். தந்திரமும் தேவைக்கு ஏற்ப அதிகார வர்க்கத்தின் முன் பணிந்து போகும் பண்பும் சாவார்க்கருக்கரிடம் இயல்பாக இருந்தன. பதுங்க வேண்டிய போது பதுங்கினாலே பிழைக்க முடியும் என அவர் நம்பினார். இந்த மேக்கியாவல்லி பாணி அணுகுமுறையை ஒரு முக்கிய அரசியல் யுக்தியாக அவர் கருதினார். ஒரு நம்பிக்கையின் மீது உணர்வுரீதியாய் பிடிப்பு கொள்ளக் கூடாது. மாறாக, லட்சியத்தை நிறைவேற்ற பிறரது நம்பிக்கைகளை நம் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம் என அவர் நம்பினார்.
(சாவார்க்கரின் இந்த உளவியல் பின்னர் பா.ஜ.கவின் பொது உளவியலாக மாறியது. பா.ஜ.கவினருக்கு கடவுள் நம்பிக்கையை விட அந்நம்பிக்கையின் பெயரில் இந்துக்களை ஒன்று திரட்டுவது முக்கியம். பசுவின் புனிதத்தை விட அந்த செண்டிமெண்டின் அடிப்படையில் மக்களை உணர்வுரீதியாய் தூண்டி, இஸ்லாமியரோடு மோத வைத்து அரசியல் செய்வது முக்கியம்.)
ஆக, சாவார்க்கர் பிரிட்டீஷார் பக்கம் சேர்ந்து கொண்டார். இனி ஆங்கிலேய அரசை எதிர்க்கக் கூடாது என முடிவெடுத்தார். பதிலுக்கு, ஆங்கிலேய அரசை பயன்படுத்தி இஸ்லாமியரை இந்தியாவில் இருந்து அழித்து ஒழிக்க வேண்டும் என நினைத்தார். ஜெயில் அவருக்கு ஒரு கொடுங்கனவாக மாறியது. தான் உளப்பூர்வமாய் வெறுத்த ஆங்கிலேயரை கடவுளாய் வழிபட தூண்டியது. ஆனால் வெறுப்புக்கு முகம் கொடுக்க அவருக்கு இன்னொரு தரப்பு தேவைப்பட்டது (தேசியவாதத்துக்கு எப்போதுமே மற்றமை தேவை என்பதை நினைவில் கூரவும்). அதுவே இஸ்லாமியர். சட்டென காலியான வெற்றிடத்தில் – ஒரு மற்றமையாக – ஆங்கிலேயரின் இடத்தில் - அவர் இஸ்லாமியரை பொருத்தினார். அதன் மூலம் ஒரு புது தேசியவாதத்தை கட்டமைத்தார். இஸ்லாமிய எதிர்ப்பின் மூலம் உருவாகும் இந்து தேசியவாதம். தனது வாழ்வின் பாக்கி காலத்தை ஆங்கிலேயரை எதிர்க்காமல் இஸ்லாமியரை எதிர்ப்பதில் செலவழிப்பது என அவர் தந்திரமாக ஒரு முடிவெடுத்தார்.
இதை உணர்ந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவருக்கு சிறையில் பதவி உயர்வு அளித்தனர் - மேல்முறையாள் பொறுப்பை அளித்தனர். அவரது தண்டனையை 50 வருடங்களில் இருந்து 10 வருடங்களாய் குறைத்தனர். ஆனாலும் அவரை கண்காணிப்பதற்காய் இந்தியாவில் ரத்னகிரி சிறையில் மூன்று வருடங்கள் வைத்தனர். அங்கு தனக்கு தற்கொலை எண்ணம் தீவிரமாய் உருவாகியதாய் சாவார்க்கர் கூறுகிறார். இந்திய விடுதலைக்காய் உயிரை துச்சமாய் கருதி செயல்பட்ட சாவார்க்கர் இப்போது சிறை என்றாலே அஞ்சி நடுங்கும், உளவியல் ரீதியாய் சிதைந்து போன மனிதராய் மாறி இருந்தார். அதனாலே இனிமேல் சிறைக்கு செல்லும்படி எந்த ஆபத்திலும் ஈடுபடக் கூடாது என உறுதி பூண்டார்.
கோட்சே பின்னர் காந்தியை படுகொலை செய்த வழக்கிலும் சாவார்க்கர் தான் மாட்டிக் கொள்ளாதபடி எந்த தடயங்களையும் விட்டு வைக்காமல் பார்த்துக் கொண்டார். வழக்கின் போது எந்த கட்டத்திலும் கோட்சேவை ஆதரிக்கவோ அவரிடம் ஒரு ஆறுதல் சொல் சொல்லவோ கூட அவர் முன்வரவில்லை. இது கோட்சேவை கடுமையாய் காயப்படுத்தியதாய் அவரது வழக்கறிஞர் இமாம்தர் கூறுகிறார். கோட்சேவும் சக்காக்களும் என்னாவாவார்கள் என சாவார்க்கர் கவலைப்படவே இல்லை என்றும், தான் விடுதலையாவோமா என்பதை மட்டுமே மீளமீள கேட்டதாகவும் இமாம்தர் குறிப்பிடுகிறார். ஏனென்றால் சிறை ஒரு மனிதனை எப்படியெல்லாம் உருக்குலைய செய்யும் என அவர் ஏற்கனவே அனுபவம் மூலம் கண்டிருந்தார். அவர் கோட்சேவை போன்று களங்கப்படாத பிள்ளைப்பூச்சி லட்சியவாதி அல்ல. அவர் கடும் அனுபவங்களால் மனம் கரடுதட்டிப் போன ஒரு பச்சோந்தி லட்சியவாதி.

(தொடரும்)

Comments

P Vinayagam said…
//...ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரின் வாசகர்கள் ஏனிப்படி இல்லை என்று கேட்க வேண்டும். பின்னவர்கள் வெறும் வாசகர்களாக மட்டுமே – அறிவார்ந்த, கலாச்சார தளத்தில் – ஜெ.மோ அல்லது எஸ்.ராவை அணுகுகிறாரக்ள்...//

இராமகிருஸ்ணனைப்பற்றித் தெரியாது. ஜயமோஹனைப்பொறுத்தவரை, அவர் வாசகர்களை நீங்கள் சொல்வது மாதிரி எடுக்க முடியாது. முதல் வாசிப்பில் அப்படி இருக்கலாம். தொடர் வாசிப்பில் அவர்களும் அடிமையாகிறார்கள். பின்னர் அவர் எதை எழுதினாலும் ஒரு வெறியோடு வாசிப்பவர்களாகிறார்கள். ஒரு சினிமா நாயகனை அவன் இரசிகர்கள் அவர் குப்பை படத்தில் குப்பையாக நடித்தாலும் பாலாபிஷேகம் செய்வதைப்போல.
கிட்டத்தட்ட அறிவழகனின் வாசகர் குழுவைப்போலத்தான். ஒரேயொரு வேறுபாடு; கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். ஜயமோஹனின் பிராமண கரிசனம்; இந்துத்வா கொள்கை ஈடுபாடு; திராவிட இயக்கத்து வெறுப்பு - இவை போன்றவை அவர் வாசகர் குழுவுக்கு போதை வஸ்து போல: மெல்லமெல்ல அடிமையாகிறார்கள்.

அறிவார்ந்த தளம் என்று தமிழகத்தில் இன்றில்லை. முதலில் அப்படியொரு தோற்றம்; பின்னர் குழுவெறியே. அறிவழகனும் ஜயமோஹனும் வெறும் எழுத்தாளர்களாக - அதாவது கற்பனை இலக்கியம் மட்டுமே - இல்லாமல் அரசியல், சமூகம் மேல் வைக்கும் கருத்துக்களால் - ஒரு குறிப்பிட்ட வாசகர் கூட்டம் வசப்படுகிறது. முற்காலத்தில் எழுத்தாளர்கள் இப்படி ஆகாமலிருப்பதற்கு அப்போது இணையதளங்கள் இல்லை. இன்றிருப்பதால் இவர்கள் விரைவில் வீழும் வாசகர் கூட்டத்தைப் பெருக்க, தக்க வைக்க, வசப்படுத்த முடிகிறது.

சுருக்கமாக, ஜயமோஹனும் அறிவழகனும் ஒன்றே.