எங்க கடை பொருளை வாங்காதீங்க ப்ளீஸ்! (2)

தொழில் புரட்சியும் அந்நியமாதல் இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் துவங்கியது என்றாலும் இந்தியாவை ஒரு புயலாக அது தாக்குவது இப்போது தான்.
“மாடர்ன் டைம்ஸில்” பிரசித்தியான காட்சி அசெம்பிளி லைன் எந்திரத்தில் சாப்ளின் மாட்டிக் கொண்டு ஒரு பொருளைப் போல எந்திரத்தால் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப் படுவதும், அவர் இறுதியில் அதில் இருந்து வெளியேறுவதும். அதைப் பார்த்தால் வயிறு வலிக்க சிரிப்பீர்கள். அபாரமான அந்நியமாதல் சித்தரிப்பு அது.

அதை விட அபாரமான, முக்கியமான சில காட்சிகள் அப்படத்தில் உண்டு. வாடிக்கையாளன் எப்படி அந்நியமாகிறான் என ஒரு காட்சி காட்டுகிறது. ஒருவர் சாப்ளினின் ஓட்டலுக்கு வந்து வாத்து ரோஸ்ட் ஆர்டர் செய்கிறார். சாப்ளின் அதை தட்டில் ஏந்தி ஸ்டைலாய் நடந்து வருவார். அப்போது பார்த்து குழு நடனத்துக்கான இசையை ஒலிப்பார்கள். வாடிக்கையாளர்கள் கும்பலாய் நடனமாட எழுந்து வருவார்கள். அவர்கள் மத்தியில் சாப்ளின் மாட்டிக் கொள்வார். அலையில் காகிதக் கப்பல் போல் அவர்களின் நடன அசைவுகளின் போக்கில் சாப்ளின் அடித்து செல்லப்படுவார். ஒரு பக்கம் வாடிக்கையாளர் “என் வாத்து ரோஸ்ட் எங்கே?” என கத்திக் கொண்டிருப்பார். சாப்ளின் ரொம்ப போராடி வாத்து ரோஸ்டை அவர் அருகே கொணரும் போது நடனமாடும் வாடிக்கையாளர் கூட்டம் அவரை இன்னொரு பக்கம் இழுத்துச் செல்லும். அங்கே அஸெம்பிளி லைன் எந்திரம் என்றால் இங்கே மக்களே ஒரு பெரும் எந்திரம் போல் மாறுகிறார்கள்.
 இதனிடையே வாத்து ரோஸ்டை ரொம்ப உயரமாய் பாதுகாப்பாய் தூக்கிச் சென்றதில் அது விளக்குக் கொக்கியில் போய் மாட்டிக் கொள்ளும். இசை நிற்க மக்கள் கலைய “அப்பாடா” என சாப்ளின் வாடிக்கையாளரிடம் தட்டைக் கொண்டு வந்து தருவார். வாடிக்கையாளர் ருத்திர மூர்த்தியாகி “வாத்து எங்கய்யா?” என கூவுவார். சாப்ளின் தேடிச் சென்று வாத்தைக் கண்டுபிடித்து கொக்கியில் இருந்து மீட்டு தட்டில் வைத்து ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் அவரிடம் கொணர்வார்.
இன்னொரு காட்சியில் தொழிற்சாலையின் அசெம்பிளி லைனில் அதன் முதலாளியே மாட்டிக் கொள்வார். ஒவ்வொரு நிலையாக அவர் எடுத்துச் செல்லப்படுவார். சாப்ளின் அவரை காப்பாற்ற கடுமையாக முயல்வார். முதலாளியின் தலை மட்டும் எந்திரத்தில் இருந்து வெளித்தெரியும் நிலையில் மதிய உணவு இடைவேளை வந்து விடும். எந்திரம் தானே நின்று போகும். தொழிற்சாலையின் மொத்த இயக்கமும் centralize பண்ணப்பட்டுள்ளதால் இடைவேளை முடியும் வரை முதலாளியை வெளியே எடுக்க முடியாது. இதில் சுவாரஸ்யம் சாப்ளினின் நடவடிக்கை தான். அதுவரை முதலாளியை காப்பாற்ற அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தவர் ஸ்விட்சு போட்டாற் போல முதலாளியை விட்டு விட்டு சாப்பிட சென்று விடுவார். இப்போது சாப்ளினே கிட்டத்தட்ட ஒரு எந்திரம் தான். முதலாளி “என் சாப்பாட்டுப் பையையும் கொண்டு வா”. அவர் பையை எடுத்து வந்து முதலாளியின் வாயில் உணவை ஊட்டும் இடம் பிரமாதமாய் இருக்கும்.
இக்காட்சிகள் எனக்கு இரண்டு சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவுபடுத்தின. முன்பு லஸ் பகுதியில் வேலை செய்த போது இரவுணவுக்கு ஒரு சிற்றுண்டிக் கடைக்குப் போவேன். அங்கே குஷ்பு இட்லி கிடைக்கும். உப்பிப் போய் மிருதுவாய் (ஆப்பம் போல) சுவையாக இருக்கும். அந்த இட்லியும் அங்கு கிடைக்கும் கெட்டியான சாம்பாரும் அபாரமான காம்பினேஷன். அங்கு வரும் கணிசமான வாடிக்கையாளர்கள் குஷ்பு இட்லி தான் கேட்பார்கள். ஆனால் ஒரு பிரச்சனை: எட்டு மணிக்குள் இட்லி தீர்ந்து விடும். எனக்கு இது விசித்திரமாக இருக்கும். எட்டு மணிக்கு மேல் நான் அங்கு செல்லும் போது தொடர்ந்து யாராவது வந்து இட்லி கேட்பார்கள். “இவர்கள் தீர்ந்து விட்டது சார். தோசை சாப்பிடுங்களேன்” என்பார்கள். இட்லி 12 ரூபாய் என்றால் தோசை 18. நான்கு இட்லியாவது ஒரு சாப்பிடுகிறார் என்றால் 46 ரூபாய் வருகிறது. அதாவது தோசையை விட இதற்கு தேவையும் வருமானமும் அதிகமல்லவா! நான் அங்குள்ள சிப்பந்தியிடம் கேட்டேன், “ஏன் இங்கே தினமும் இட்லி எட்டு மணிக்கே தீர்ந்து விடுகிறது?”
அவர் சொன்னார், “நாங்க கம்மியா தான் தான் வாங்குறோம்.”
“ஏன் நிறைய வாங்கி வைக்கலாம் இல்லையா?”
“தோசை காலியாகாது சார். எல்லாரும் இட்லியே சாப்பிட்டால் எங்களுக்கு கட்டுப்படியாகாது.”
அப்போது தான் இட்லியை அவர்கள் வாங்கி விற்கிறார்கள் என்பது எனக்கு உறைத்தது.
ஒரு பொருளின் பயன்பாட்டை அதிகரிக்க அவர்கள் இன்னொரு பொருளின் கிடைக்குந்தகைமையை (availability) செயற்கையாக குறைக்கிறார்கள். தன் கடையில் அதிகம் விற்கும் பொருளையே வாடிக்கையாளர்கள் குறைவாக வாங்கத் தூண்டுகிறார்கள்.
ஒரு சின்ன சிற்றுண்டிக் கடையிலே இப்படி ஒன்றைப் பதுக்கி இன்னொன்றின் தேவையின் அதிகமாக்கும் தந்திரம் செயல்படுகிறதென்றால் பெரிய கடைகளில்?
நான் சமீபமாய் ஒரு எல்.ஸி.டி டிவி வாங்க சென்றேன். முன்பு மலிவான விலையில் டியூப் டிவி கிடைத்தது. ஆனால் அதிக துலக்கமும், பளிச்சென்ற வண்ணங்கள் கொண்ட டிவிகளே நமக்குத் தேவை எனும் பிரச்சாரத்தின் மூலம் அதை முழுக்க ஒழித்து எல்.சி.டி டிவிகளை எங்கும் நிறைத்து விட்டார்கள் (சமீபத்தில் ஒரு டெய்லரிங் கடையில் ஒரு டியூப் டிவி பார்த்தேன். அதில் வண்ணங்களும் துலக்கமும் எல்.ஸி.டிக்கு இணையாக உள்ளன.). அதிலும் 20 அங்குலத்துக்குக் கீழ் டிவி கிடைப்பதே இன்று சிரமம் என்றாகி விட்டது. நீங்கள் 32 அங்குலத்துக்குக் குறைவாக டிவியே வாங்கக் கூடாது எனும் முடிவுக்கு கடைக்காரர்கள் வந்து விடுகிறார்கள்.
 நான் ஒரு மலிவான டிவிக்காக இரண்டு மூன்று கடைகளுக்கு அலைந்து விட்டு கடைசியாய் ரிலையன்ஸ் ஷோரூமுக்கு போனேன். அங்கே போனதும் என்னை எல்.ஜி டிவிகளின் பக்கமாய் அழைத்துப் போனார்கள். எனக்கு விலை குறைவான டிவி காட்டுங்கள் என்றேன். அவர் என்னை ஒரு பரிதாபப் பார்வையுடன் அவர்களின் சொந்த நிறுவன உற்பத்தியான ரிலையன்ஸ் ரிடிரைக்ட் டிவிகளின் பகுதிக்கு அழைத்துப் போனார். அங்கு போய் டிவியை இயக்கி காட்டியபடி அதைப் பற்றி மிக தரக்குறைவாய், எதிர்மறையாய் பேச ஆரம்பித்தார். “இது டிவியே இல்லீங்க, வெறும் டப்பா” என்கிற கணக்கில் இருந்தது அவர் பேச்சு.
 “ஏங்க உங்க கம்பெனி டிவியை பற்றி நீங்களே இப்படி பேசலாமா?” என்றேன்.
அவர் “சார் உங்களுக்கு திருப்தி தரணுங்கறது தான் எங்க நோக்கம்” என்றார்.
அந்த டிவி எல்.இ.டி வகை. அதை எல்.ஜியுடன் ஒப்பிடுகையில் நிறங்கள் அவ்வளவு துல்லியமாய் இல்லை/ ஒலியின் தரமும் எல்.ஜி சற்று மேல் தான். ஒத்துக் கொள்கிறேன்! ஆனால் எட்டாயிரத்து சொச்சத்துக்கு அந்த ரிலையன்ஸ் டிவி ரொம்ப நல்ல டீல் என எனக்குப் பட்டது. நான் அதை வாங்க முடிவெடுத்தேன். அதை அறிந்த போது கடை விற்பனையாளர் மிகவும் ஏமாற்றமடைந்தார். அவர் திரும்ப திரும்ப என்னிடம் “இந்த டிவி வாங்காதீங்க” என்றார். அந்நிய ஜாதிப் பையனுக்கு பெண்ணை விருப்பமின்றி மணமுடித்துக் கொடுக்கும் மாமனார் போன்றே நடந்து கொண்டார். எனக்கு அவரது செயல்பாடுகள் ரொம்ப விசித்திரமாய் இருந்தது. (ஆனால் டிவி இன்று வரை சிறப்பாய் வேலை செய்கிறது.)
ரிலையன்ஸ் டிவி விற்பனையாவது அந்நிறுவனத்துக்கு நல்லதே. ஆனால் அக்கடையை பொறுத்த மட்டில் நாம் விலை அதிகமான (வேறு நிறுவன) டிவியை வாங்குவதே லாபகரமானது. ஏனெனில் எல்.ஜி விற்றால் தான் கமிஷன் அதிகம் கிடைக்கும். ஆக, தம் நிறுவனப் பண்டத்தையே யாரும் வாங்க விடாமல் பண்ணுகிறார்கள்.
பொதுவாக நாம் சந்தை என்பது தேவையின் பொருட்டு ஒரு பண்டத்தை அதிகம் கிடைக்க செய்யும் தன்மை கொண்டது என்கிறோம். ஆனால் உண்மை அது அல்ல. லாபத்தின் பொருட்டு சில பொருட்களை மட்டும் கிடைக்கச் செய்வதும், அவற்றின் மீதான இச்சையை மட்டும் மக்களிடம் தூண்ட முயல்வதுமே இன்றைய சந்தையின் இயல்பாக உள்ளது. இப்படி வாடிக்கையாளர்களை கருத்திற் கொள்ளாமல், ஒரு பண்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை புறக்கணித்து, லாபமே ஒரே நோக்கம் என செயல்படுகின்றன இன்றைய நிறுவனங்கள்.
 உற்பத்தி பண்ணுகிறவர், அதை துய்ப்பவர் இடையில் மனிதப் பண்புகள், இயல்புகள் இன்று பொருட்டே இல்லை. உற்பத்தியாளரோ வாடிக்கையாளரோ இன்று மனிதர்கள் அல்ல. உற்பத்தியாளருக்கு தன் பண்டம் பரவலாய் மக்களிடையே போய் சேர வேண்டும் என்பதை விட எப்படியாவது லாபம் சம்பாதிக்க வேண்டும் எனும் வெறியே அதிகமாக உள்ளது. ஒரு பண்பத்தில் இருந்து அதை உற்பத்தி செய்யும் நிறுவனமே இவ்வாறு தான் அந்நியமாகிறது!


Comments

gomathy said…
Very good writeup.
S.Selvaraj, Kolkata
Anonymous said…
https://www.investopedia.com/terms/s/scarcity-principle.asp