மிஷ்கினை துப்பறிவோம் (1)

Image result for mysskin

இதுதுப்பறிவாளன்குறித்த என் விமர்சனம் அல்ல. அப்படத்தில் என்ன பிடித்தது, என்ன பிடிக்கவில்லை என்பதைப் பற்றி இன்னொரு சந்தர்பத்தில் எழுதுகிறேன். இப்பதிவு மிஷ்கின் துப்பறிவாளனில்தீமைக்கும் கருணைக்குமான தொடர்பு பற்றின ஒரு சித்திரத்தை எவ்வளவு துலக்கமாய் மிகக் குறைந்த நேரத்தில் நமக்கு அளிக்கிறார் என்பதைப் பற்றியது. அதே போன்று, மிஷ்கினின் பிரதான பாத்திரங்களின் சுபாவத்தில், செயல்பாட்டில் தெரியும் பித்தை, அதர்க்கத்தை எப்படி புரிந்து கொள்வது, அதைக் கொண்டு மிஷ்கின் எனும் மனிதனைப் புரிந்து கொள்ள முடியுமா என்றும் அலச முயன்றிருக்கிறேன்.
முதலில், மிஷ்கினின் இதுவரையிலான படங்களில் தீமை எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது எனப் பார்ப்போம்.

மிஷ்கினின் படங்களில் மனிதனை தீமையை நோக்கித் தள்ளுவது இச்சையும், பேராசையும் மட்டுமல்ல; ஒருவித சுயமோகமே பிரதானமாய் தீமையின் பள்ளத்தாக்குக்குள் மனிதனை இடறி விடுகிறது. ”அஞ்சாதேவில் பிரச்சன்னா, “யுத்தம் செய்யில் துரைப்பாண்டியும் அவரது நண்பர்களும் இதற்கு உதாரணங்கள்.
 எந்த தருணத்திலும் தன் நிதானத்தை பிரச்சனா இழப்பதில்லை. போலீஸ் துரத்தும் போதும் ஒரு புன்னகை; சாகும் முன்னரும் ஒரு புன்னகை. அவனுக்கு யார் மீதும் அக்கறை இல்லை, அவன் உலகில் வேறு மனிதர்களின் துயரங்களுக்கு இடமில்லை. தன் துய்ப்புக்கு யாரையும் பயன்படுத்தலாம் என்பதே அவன் கோட்பாடு. அவனால் ஒரு ஆமையை போல் தலையை தூக்கி தன்னில் இருந்து வெளிவந்து வெளி உலகை, வெளிமனிதர்களை கனிவுடன், கருணையுடன் பார்க்க முடிவதில்லை.
துரைப்பாண்டியும் இப்படியானவர் தான். அவரை மிஷ்கின் ஆண்மையற்றவராய் காட்டுவதும் ஒரு குறியீடு தான். அண்மையுள்ளவன் பாலுறவில் பெண்ணையும் பொருட்படுத்தி ஒரு பரஸ்பர பகிர்வில் ஈடுபடுவான். ஆனால்ஆண்மைஇல்லாதவனுக்கு ஒரு பெண்ணைத் தீண்ட அவசியம் இல்லை. அவன் உலகில் பெண்ணே இல்லை. அவன் பெண்ணின் பிம்பங்களை மட்டுமே புணர்ந்து தனக்குள் முயங்குபவன்.
 செக்ஸில் நீங்கள்உங்களைஇழக்கிறீர்கள். உங்கள் ஈகோ உடல் முயக்கத்தில் பனிக்கட்டியாய் உருகுகிறது. அப்போது எதிர்பாலினம் மீது கருணை ததும்புகிறது. ஆனால் துரைப்பாண்டிக்கும் அவரை ஒத்த வயதான நண்பர்களுக்கும் இது சாத்தியமாவதில்லை. பெண்களை கடத்தி வந்து பிற ஆண்களால் கற்பழிக்க வைத்து அதைக் காணும் peep ஷோவில் உச்சம் அடைகிறார்கள். அவர்கள் கருணையற்றவர்களாய் இருப்பது பிறரிடம் உறவாட முடியாமையினால் தான். தமக்குள் அன்றி பிறரில் எதையும் தேட முடியாததனால் தான். செக்ஸ் இங்கு சகமனிதனை உணர்ந்து ஏற்பதன் குறியீடு (தமிழ் சினிமாவில் வேறு எவரும் இது போல் செக்ஸை ஒரு சகமனித உறவாடலின் குறியீடாய் பயன்படுத்தியதில்லை.). இதனாலே படத்தின் இறுதியில் டாக்டர் புருஷோத்தமன் இவர்களை குருடர்களாக்குகிறார்கள். இதுவும் ஒரு குறியீடே. தம்மை அன்றி பிறரது இதயங்களைக் காண இயலாத இந்த மனக்குருடர்களை அவர் ஊன்-குருடர்களாக மாறுகிறார்.
மிஷ்கினின் படங்களில் தீயவர்களுக்கு என ஒரு படிநிலை உண்டு. மூன்று வகையான தீயவர்களை அவர் காட்டுகிறார். படிநிலையின் உச்சத்தில் முழுக்க முழுக்க சுயமோகத்தில், சுயதிளைப்பில் தன்னை இழந்த மேற்சொன்னவர்கள் வருகிறார்கள். முதல் நிலையில் இருக்கும் வில்லன்கள் தூய்மையான தீமையின் வடிவங்கள். “துப்பறிவாளனில்இத்தகைய வில்லனுக்கு மிஷ்கின் devil என்றே நேரடியாய் பெயர் சூட்டி அம்புக்குறி வரைகிறார்.
படிநிலையில் அடுத்து வருபவர்கள் தமது தீமை குறித்த நுண்ணுணர்வு கொண்ட ஆனால் இச்சையும் பேராசையும் காரணமாய் தம் ஆன்மாவை அடகு வைத்து குற்றம் புரிகிற இடைநிலைப்பட்டவர்கள். “யுத்தம் செய்யில் போலீஸ் அதிகாரி திரிசங்கு அப்படியானவர். அவர் பெயரே ஒரு உருவகம் தான். அவர் பூமிக்கும் சொர்க்கத்துக்கும் நடுவே மாட்டிக் கொண்டவர். அவர் தன் குற்றங்களின் சாட்சியான சாருவை (ஜெ.கெவின் தங்கை) கடத்தி ஒரு கூண்டில் சிறை வைக்கிறார். ஆனால் அவளைக் கொல்ல அவருக்கு மனம் வரவில்லை. அதேவேளை குற்றமன்னிப்பு கோரவும் அவரால் முடியாது. ஏனெனில் அவர் இரண்டுக்கும் இடைப்பட்டவர். “அஞ்சாதேவில் கிருபா (அஜ்மல்) இந்த திரிசங்கு சொர்க்கத்தை போய் சேர்ந்து இறுதியில் உயிர் விடுகிறான்.
படிநிலையில் இறுதியாக கீழ்நிலை குற்றவாளிகள் வருகிறார்கள். இவர்கள் பணத்துக்காக மட்டுமே குற்றம் புரிகிறவர்கள். இவர்களுக்கு இது தொழில் மட்டுமே என்பதால் தம்மை காப்பாற்றுவதற்காக யாரைக் கொல்லவும் துன்புறுத்தவும் தயாராகிறார்கள். இவர்களிடம் சுயமோகம் இல்லை. சற்றே வெள்ளாந்தியானவர்களாய் ஆனால் கொடூரமானவர்களாய் இவர்கள் வருகிறார்கள்.
ஆக, விவிலிய கருத்தமைவின் படி (1) சாத்தான், (2) சாத்தானால் தூண்டப்பட்டு ஆன்மாவை இழக்கும் புத்திசாலியான, சுயநேசத்தினால் கருணையை இழக்கும் மனிதர்கள், சாத்தானால் கறைபடுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படும் பாதி-சாத்தானான மனிதர்கள், (3) சுயதேவைக்காக தீமையின் சிலுவை சுமக்க நேரும் எளிய அப்பாவிகள் என மூன்று வகை மனிதர்கள்கிட்டத்தட்ட ஒரு கிறித்துவ morality நாடகங்களில் இருந்து உருவப்பட்டது போல்மிஷ்கினின் படங்களில் வருகிறார்கள்.
விவிலியம் அடிப்படையில் மனித அறிவை சாத்தானின் விஷமத்தனமாய் கருதுகிறது. அதனாலே அறிவின் குறியீடான ஆப்பிளைக் கடித்த பின் கடவுளை (பிதாவை) எதிர்த்து யோசிக்க தலைப்படும் ஏவாளும் ஆதாமும் பாவம் புரிந்தவர்கள் ஆகிறார்கள். அறிவின் பிரச்சனை அது நம்மை சுயபிரக்ஞையும் அகந்தையும் மிக்கவர்கள் ஆக்குகிறது என்பது. புத்தசாலிகளை விட கபடமற்ற பேதைகளே தம் அன்பினாலும் கருணையாலும் இறைவனை அடைய முடியும் என கர்த்தர் போதித்தார். தஸ்தாவஸ்கி இந்த கபடமற்ற தூய மனத்தை ரஷ்யாவின் ஏழை குடியானவர்களிடம் கண்டார். அதனாலேகுற்றமும் தண்டனையும்நாவலில் விலைமகளான சோனியாவை கர்த்தராகவே அவர் சித்தரித்தார். ஒரு விலைமகளாய் சோனியா பிறரது இச்சையின், பிறழ்வுகளின், வன்மத்தின் பாவங்களை தன் உடலில் சுமக்கிறாள். கர்த்தரைப் போன்று தன்னை மனித குலத்துக்கான பலியாடாக அவள் மாற்றிக் கொள்கிறாள். அது பற்றிய தன்னுணர்வற்று இருக்கிறாள்.
 குடியானவர்கள் பிரார்த்திக்க வேண்டியதோ விவிலியத்தை விவாதிக்க வேண்டியதோ இல்லை. அவர்கள் தமது இயல்பிலேயே இறைவனுக்கு வெகுஅருகில் இருக்கிறார்கள் என்றார் தஸ்தாவஸ்கி. தஸ்தாவஸ்கியின்பேதைநாவலில் மிஷ்கின் பாத்திரம் ஒரு படித்த இளைஞன் என்றாலும் ஒரு குடியானவனின் அப்பாவித்தனத்துடனும், உணர்வுரீதியாய் உலகை அணுகும் மனப்பான்மையுடன் இருக்கிறான். அவன் பேதையாய் இருப்பதே அவனது மீட்சிக்கு காரணம், தனக்கு தீங்கு விளைவிப்பவரையும் கூட அவனால் கருணையுடன் பார்க்க முடிவதற்கான காரணம் என தஸ்தாவஸ்கி முன்வைக்கிறார். இயக்குநர் மிஷ்கின் இந்த பாத்திரத்தின் பெயரை தனதாக எடுத்துக் கொண்டது உலகின் நன்மை-தீமை குறித்த அவரது அணுகுமுறையும் இதுவே என்பதால் தான்.
இயக்குநர் மிஷ்கின் ஒரு குடியானவர் அல்ல. அவர் படிக்காத பேதை அல்ல. அறிவின், நாகரித்தின்பாவங்களைசுமப்பவர். ஆனால், நான் அறிந்த வரையில், மிஷ்கின் தனது மிகை உணர்ச்சிகரமான, நாடகீயமான செயல்பாடுகள் மூலம் ஒருவித பேதைத்தனத்தை சிருஷ்டிக்கிறார். மிகுந்த கோபம், நொடியில் மனம் உருகி சற்று முன் வெறுத்தவரை ஆரத்தழுவும் சுபாவம் கொண்டு அவர் சதா ஒரு குழந்தைத்தனத்துடன் வாழ்கிறார். அடுத்தவர் அவரை - சோனியாவைப் போல் - கைப்பிடித்து எங்கும் அழைத்து செல்ல முடியும். தனது பிரியத்தைக் காட்ட எதிர்பாரா பராக்கிரமங்களை எல்லாம் செய்வார். இதன் மூலம் தன் சுயமோகத்தில் இருந்து விடுபட்டு கருணை மிக்க பிரகாசமான ஒரு உலகை அவர் கண்டடைகிறார்.
(தொடரும்)

நன்றி: உயிர்மை, நவம்பர் 2017

Comments