இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல: சாவார்க்கரில் இருந்து மோடி வரை (1)

Image result for ashis nandy

இந்துத்துவாவை நான் எப்படி புரிந்து கொள்கிறேன்?
 மதவாதத்தின் அடிப்படையில் ஒற்றை பண்பாட்டு அடையாளத்தின் கீழ் இந்திய சமூகத்தை ஒரு பிராந்தியமாய் கண்டு, அவ்வாறே இந்துக்களை ஒன்று திரட்ட முயலும் ஒரு கருத்தாக்கம்.
 இந்துத்துவாவின் மையவிசையாக இந்து மத பெருமிதத்தை, பிராமணியத்தையே நான் கண்டு வந்துள்ளேன். சொல்லப் போனால் பசுத்தோல் போர்த்திய சாதியமாகக் கூட நான் இந்துத்துவாவை கண்டதுண்டு. பாபர் மசூதியும், காவி உடை தரித்த சாமியார் அரசியல் தலைவர்களும், அத்வானியின் ரத யாத்திரையும், மதத்தின் பெயரிலான படுகொலைகளும் என் கண்ணை விட்டு மறைவதில்லை. இந்த பிம்பங்களின் ஊடாகத் தான் நான் பா.ஜ.கவை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இத்தனை நாட்களாய் புரிந்து வந்திருக்கிறேன். தமிழகத்திலும் மதவெறி என்றதுமே நம் நாவில் உருண்டு வரும் சொல் பா.ஜ.க தானே!
 ஆனால் சமீபத்தில் நான் வாசித்த ஒரு கட்டுரை இந்த பார்வையை முழுக்க மாற்றி அமைத்தது எனலாம்.

 ஆஷிஸ் நந்தி எழுதிய “A Disowned Father of the Nation in India: Vinayak Damodar Savarkar and the Demonic and the Seductive in Indian Nationalism” (India and the Unthinkable எனும் நூலில் இடம்பெற்றது; Oxford பதிப்பக வெளியீடு). ஆய்வுக் கட்டுரை என்றாலும் வெகுசுவாரஸ்யமானது இது.
சாவார்க்கரை ஒரு தீவிர தேசியவாதியாக பார்க்க முயலும் ஆஷிஸ் நந்தி அவரது ஐரோப்பிய கல்வி, நம்பிக்கைகள், அணுகுமுறை, உளவியல் ஆகியவை எப்படி பிற்பாடு இந்து தேசியவாதம் தோன்ற காரணமாகியது, எப்படி நாம் இன்று காணும் இந்துத்துவாவில் சாவார்க்கரின் ஆளுமையின், உளவியலின் நிழல் விழுந்து கிடக்கிறது என விளக்குகிறார். சாவார்க்கரின் அந்த நம்பிக்கைகள், அணுகுமுறை தாம் என்ன?
முதலில், சாவார்க்கர் ஒரு மதநம்பிக்கையாளரோ இந்து மத வெறியரோ அல்ல. அவர் ஒரு நாத்திகர். மரணத்துக்கு பிறகு தனது ஈமச்சடங்குகளை இந்து முறைப்படி செய்ய வேண்டாம், மின்மயானத்துக்கு கொண்டு போய் தன்னை எரித்தால் போதும் என சொன்னவர் அவர். மோடி இன்று பல்லாயிரம் மக்கள் மத்தியில் நின்று யோகா செய்கிறார். நெற்றியில் குங்குமம் இட்டு காவி முண்டாசு கட்டி போஸ் கொடுக்கிறார். யோகி ஆத்யத்நாத் போன்ற ஒரு துறவியை உ.பி முதல்வராக்குகிறார். மோடியின் தலைமையில் இந்து மத பெருமிதத்தை முடிந்த இடங்களில் எல்லாம் முன்னெடுக்க பா.ஜ.க தலைவர்கள் முயல்கிறார்கள். ஆனால் சாவார்க்கர் இதையெல்லாம் செய்ய மாட்டார் என்று மட்டுமல்ல, அவருக்கு இந்து மத சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் கிஞ்சித்தும் ஆர்வமில்லை.
 பா.ஜ.க இன்று பசுவை புனிதமான உயிராக பார்க்கிறது. பசு பாதுகாவலர்களாய் ஒவ்வொரு காவி விசுவாசியும் செயல்படுகிறார்கள். ஆனால் சாவார்க்கர் பசுவை கசாப்பு செய்வது தப்பில்லை என அறிவித்தார். பசுவில் எந்த புனிதமும் இல்லை, அது ஒரு உதவாக்கரை மிருகம் என கூறினார். அது மட்டுமல்ல, இந்துக்கள் சைவ உணவுப் பழக்கத்தை விடுத்து, கறி, மீன், முட்டை ஆகியன உண்ண வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். காந்தி லண்டனில் சாவார்க்கரை அவரது இருப்பிடத்துக்கு சென்று சந்திக்கிறார். அப்போது சாவார்க்கர் இறால் சமைத்துக் கொண்டிருக்கிறார். காந்தி அவரிடம் எதையோ தீவிரமாய் உரையாட ஆரம்பிக்க சாவார்க்கர், வம்படியாக, “வாங்க முதலில் சாப்பிட்டுவிட்டு பேசுவோமே” என்கிறார். மீன் உணவைப் பார்த்த காந்தி சற்று தயங்குகிறார். உடனே சாவார்க்கர் “எங்களுடன் சாப்பிட நீங்கள் தயாராய் இல்லை என்றால் உங்களுடன் நாங்கள் எப்படி வேலை செய்ய முடியும்?” என்கிறார்.
 இந்த சந்திப்பு நிகழ்ந்த காலத்தில் சாவார்க்கர் இந்துத்துவாவை முன்னெடுக்கவில்லை. அவர் அப்போது ஆயுதப் போராட்டம் மூலம் இந்திய விடுதலையை முன்னெடுக்கும் ஒரு தீவிர தேசவிடுதலை போராளி. அப்போதே அவருக்கு காந்தியின் மென்மையான, கனிவான, அனைவரையும் அணைத்துப் போகும் அணுகுமுறை மீது கடும் கசப்பு இருந்தது. முக்கியமாய் காந்தியின் சைவ உணவுப் பழக்கம் சாவார்க்கருக்கு அருவருப்பாய் இருந்தது.
ஆய்வாளர் ஜி.பி தேஷ்பாண்டே சாவார்க்கரை ஒரு “மதசார்பற்ற வகுப்புவாதி” என அழைத்து, அவர் முன்னெடுத்தது ஒரு “மதம் கடந்த கொள்கை” என்கிறார். சாவார்க்கர் மட்டுமல்ல அவருக்கு முந்தைய இந்துத்துவர்களான கேஷவ் பலிராம் ஹெட்ஜ்வார் (ஆர்.எஸ்.எஸ்ஸின் முதல் தலைவர்) போன்றோர் ஐரோப்பிய தாக்கமும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டு இந்துமத சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர்கள்.
சாவார்க்கருக்கு காந்தி மீது இருந்த வெறுப்பு கலாச்சார ரீதியானது மட்டும் அல்ல. கருத்தியல்ரீதியாகவும் அவர் காந்திக்கு முழுக்க நேர் எதிரானவர். காந்தியின் அகிம்சை, உண்ணாநிலை போராட்டங்கள், பசுவின் மீதான அக்கறை ஆகியவற்றை சாவார்க்கர் “விஞ்ஞானத்துக்கு புறம்பானது”, “அறிவுக்கு புறம்பானது” என அழைத்தார். காந்தி கிராமிய வாழ்க்கையை உன்னதமாய் எண்ணினார் என்றால் சாவார்க்கர் நகரமயமாக்கலையும் அறிவியலையும் பகுத்தறிவையும் நவீன மாற்றங்களையும் கொண்டாடினார். (பெரியாரியவாதிகளுக்கு இதையெல்லாம் படிக்க நிச்சயம் அதிர்ச்சியாக இருக்கும் தான்.)
 நவீன அறிவியல் எந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்திய போது காந்தி ராட்டையை ஒரு குறியீடாய் கையில் எடுத்தார். நவீன ஐரோப்பா துப்பாக்கி, குண்டுகள், விமானங்கள், பீரங்கிகள் மூலம் உலகை ஆக்கிரமித்த போது காந்தி அதற்கு மாற்றாய் அகிம்சையை முன்னெடுத்தார். இந்த நடவடிக்கைகளை சாவார்க்கர் ”பிற்போக்கானவை” என்றார். நவீன அறிவியலையும் அரசியல் கோட்பாடுகளையும் அறிந்து பின்பற்றுவதே இந்தியா முன்னேற அவசியம் என சாவார்க்கர் கருதினார்.

இந்த நேர்கோட்டில் சாவார்க்கரும் பெரியாரும் கைகுலுக்குவதை நாம் கற்பனை செய்ய முடியும். (பெரியாரியவாதிகள் கொதிப்படையாதீர்கள். தொடர்ந்து படியுங்கள்!) இருவருமே மதத்தை பிற்போக்காய் கருதினர். ஐரோப்பிய பகுத்தறிவுவாதத்தை, அறிவியலை, முன்னேற்றத்தை வழிபட்டனர். இருவருமே தேசியவாதிகள். இருவருமே காந்தியை வெறுத்தார்கள். ஒரே வித்தியாசம் இருவருமே யாரை எந்த இனத்தவரை தம் கொள்கை விரோதிகளாய், மற்றமையாய் கண்டார்கள் என்பது தான். சாவார்க்கருக்கு இஸ்லாமியர் மற்றமை என்றால் பெரியாருக்கு பிராமணர்கள்.
(தொடரும்)

Comments