எங்க கடை பொருளை வாங்காதீங்க ப்ளீஸ்! (1)


Image result for chaplin modern times

சாப்ளினின் “மாடர்ன் டைம்ஸ்” தொழிற் புரட்சி உச்சம் பெற்ற காலத்தைப் பற்றின ஒரு பகடி.
வேலையில்லாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்; தொழிற்சாலை முகப்பில் கூட்டமாய் சூழ்ந்து நின்று வேலைக்காய் இறைஞ்சும் மக்கள்; எந்த வேலை செய்யவும் தயாராக உள்ள மக்கள். இம்மக்களை தொழிற்சாலைகள் கச்சாப்பொருளைப் போன்று நடத்துகின்றன. யாருக்கும் எந்த தனித்திறனும் தேவையில்லை. யாரும் எந்த வேலையும் செய்யலாம்.

 சாப்ளின் ஒரு ஓட்டலில் சிப்பந்தியாக வேலைக்கு போகிறார். முதலாளி “உனக்கு வேலை வேண்டுமென்றால் நீ பாட வேண்டும்” என்கிறார். சாப்ளினுக்கு பாட வராது. ஆனால் அங்கு வேலை செய்யும் அவரது காதலி அவரை பொய் சொல்லி வேலையை அடையும் படி தூண்டுகிறாள். அப்படி வேலையை பெறும் அவர் தனக்குத் தெரியாத, வராத விசயங்களை எல்லாம் பண்ணி வேலையை தக்க வைக்கும் காட்சிகள் அபாரமானவை.
எனக்கு இக்காட்சிகளை கண்ட போது அவை இன்றைய சூழலுக்கு எவ்வளவு நெருக்கமாய் அவை உள்ளன என தோன்றியது. இன்று உங்கள் படிப்புக்கும், திறனுக்கும், இயல்புக்கும், விருப்பத்துக்கும் நீங்கள் செய்யும் வேலைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை. நான் கல்லூரியில் சந்திக்கும் நிறைய மாணவர்களுக்கும் தாம் அடுத்து என்ன வேலை செய்யப் போகிறோம் என்பது குறித்து குழப்பங்கள் உள்ளன.
ஆட்டோமேஷன் எல்லா தொழில்களிலும் தன் கால்களைப் பரப்பும் இக்காலத்தில் வேலையிழப்பை விட வேலையில் பிடிப்பின்மையும் தனிமனிதனுக்கான மதிப்பின்மையும் தான் பிரதான பிரச்சனைகளாக இருக்கப் போகின்றன. ஒரு மென்பொருள் உங்கள் வேலையை எடுப்பதை விட ஒரு மென்பொருளுக்கு நீங்கள் அடிமையாக ஆகப் போகிறீர்கள் என்பதே நெருக்கடியாகப் போகிறது. வேலைக்கும் உங்களுக்கும் இடைவெளி இனி பெருமளவில் அதிகரிக்கப் போகிறது. வேலையில் இருந்து நீங்கள் மேலும் மேலும் அந்நியமாகப் போகிறீர்கள். இது குறித்து கார்ல் மார்க்ஸ் அன்றே எச்சரித்தார். இன்று இந்த அந்நியமாதல் மேலும் மேலும் உக்கிரமாகிக் கொண்டே போகிறது.
நான் இதை அனுபவரீதியாக எதிர்கொண்டேன்.
நான் முனைவர் பட்ட ஆய்வை முடித்து விட்டு கல்லூரி வேலைக்கு திரும்பும் முன்பான இடைவேளியில் ஒரு மின்பதிப்பு (ஈபப்ளிஷிங்) நிறுவனத்தில் பணி செய்தேன். புத்தகங்களை படித்து இலக்கண, வாக்கியப் பிழைகளை திருத்தும் வேலை. பல அற்புதமான ஆய்வு நூல்களை அக்காலத்தில் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் அவ்வேலையை மிகவும் ரசித்தேன். ஒருநாள் நிர்வாகம் ஒரு புது மென்பொருளை அறிமுகப்படுத்தியது. அதுவரையில் எங்கள் மேலாளர் எங்களது தனித்திறன், ஆர்வம், பின்னணி ஆகியவற்றை கருதி புத்தகங்களை தேர்ந்து தருவார். நூலின் தரம், சவால்கள் பொறுத்து அன்றன்றைக்கான எடிட் செய்ய வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையை (production) தீர்மானிப்பார்.
 ஆனால் ஒரு நாள் மாற்றம் வந்தது. அட்டொமேஷன் காலடி எடுத்து வைத்தது. இனிமேல் மென்பொருளே எங்களுக்கான புத்தகத்தை, எங்களுக்கான புரொடக்‌ஷனை முடிவெடுக்கும் என்றார்கள். அது மட்டுமல்ல, இனிமேல் எடிட்டிங்குக்கு என்று தனியாக ஒரு துறை இருக்காது. புத்தக தயாரிப்புடன் சம்மந்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வேலையை செய்வார்கள் என்றார்கள். அதாவது ஒரு கோப்பை க்ளீன் செய்து, வடிவமைத்து, படங்களை சரி பார்த்து, வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொண்டு ஐயங்களை தீர்த்து, எடிட் செய்து, இறுதியான சரிபார்ப்புகளை (final proofing) செய்து புத்தகத்தை ஈபுத்தகமாக பதிவேற்றுவது வரை ஒரு ஆளே செய்ய வேண்டும். இதுவரை ஐந்து ஆட்கள் ஒரு நூலில் வேலை செய்தார்கள் என்றால் இனி அதை ஒரே ஆள் செய்ய வேண்டும்.
மிச்ச நான்கு ஆட்களை வேலையில் இருந்து தூக்குவார்களா? அது நிறுவனத்துக்கு கிடைக்கும் பிராஜெக்டுகளை பொறுத்தது. அவர்களை இருக்கிற வேறு வேலைகளில் குடிபெயர்த்துவார்கள். வேலைகள் இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
தெரியாத வேலையை எப்படி நாங்கள் செய்வது என கேட்டோம். நிர்வாகம் சொன்னது, “நீங்கள் செய்ய வேண்டாம், அதை மென்பொருளே பார்த்துக் கொள்ளும்.” ஆனால் மென்பொருள் அவ்வேலைகளை ஒழுங்காய் செய்துள்ளதா என சோதிக்க எங்களுக்கு பயிற்சி தேவை. ஒரு வாரப் பயிற்சி கொடுத்தார்கள். அப்போது தான் மென்பொருள் ஏற்படுத்தும் குழப்படிகள் தெரிய வந்தது. அக்குழப்படிகளை நாங்கள் சரி செய்ய பல மடங்கு நேரம் அதிக வேலை செய்ய வேண்டி வந்தது.
நாங்கள் அப்போது ஜோக் அடிப்போம்: “நாளை செக்யூரிட்டியை வீட்டுக்கு அனுப்பி விட்டு நம்மை அழைத்து ஆளுக்கு ஒரு மணிநேரம் செக்யூரிட்டி வேலையும், பாத்ரூம் கழுவுகிற வேலையும் நமக்கு கொடுப்பார்கள்.”
எனக்கு அதிக வேலை செய்வதை விட ஆர்வமற்ற, பரிச்சயமற்ற, அந்நியமான வேலைகளை செய்வது தான் பிரச்சனையாக இருந்தது. நான் அதுவரையில் மிகவும் ரசித்து ஈடுபட்டு எடிட் செய்து வந்தேன். ஆனால் இந்த மென்பொருள் எனது ஈடுபாட்டுக்கு, மனமொன்றிய ரசனைக்கு உலை வைத்தது. “நீ யார் என்பது எங்களுக்கு பொருட்டில்லை; உனக்கு விருப்பமுள்ள வேலையை நீ செய்ய வேண்டியதில்லை. எல்லாவற்றையும் மூளையால் செய்யப் பழகு. உன் மனதுக்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லை.” என்றது.

நான் அந்த வேலையில் இருந்து நீங்கினேன். 

Comments