குருட்டு நம்பிக்கையின் அவசியம்

Image result for dark alleyway

பெங்களூரின் புறநகர்ப் பகுதி. குப்பை மேட்டை ஒட்டி வளைந்து திரும்பும் ஒரு குறுகலான தெரு. ஒரு இளம்பெண்ணை மற்றொரு சற்று வயது முதிர்ந்த பெண் கையைப் பற்றி அழைத்துப் போகிறாள். இளம்பெண் பார்வையற்றவள்.
 நான் சென்னையில் பார்த்துள்ள பல பார்வையற்றவர்கள் யார் துணையுமின்றி நடந்து போவார்கள். ஆனால் இப்பெண் அப்பகுதிக்கு புதியவள்; அவளுக்கு அந்த பாதை இன்னும் முழுக்கப் பழகவில்லை. வழிகாட்ட ஒரு கரம் துணைக்கு தேவையுள்ளது என ஊகித்தேன்.
 சந்தின் துவக்கத்தில் இவளை விட்டு விட்டு அவள் இவள் போகிறதை ஆவலாதியுடன் பார்த்தாள். இவ்வளவு தூரம் கைப்பற்றி நடந்து வந்தவள் இனிமேல் எப்படி தனியாக போகப் போகிறாள்?

 நான் அந்த சந்துக்குள் நுழைந்து அப்பெண்ணை கவனித்தேன். எனக்குப் பின்னால் அந்த துணை வந்தப் பெண் இன்னமும் சற்று கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். குண்டும் குழியுமான சாலை. பாதி வழியை அடைத்து ஒரு மேடை போட்டிருந்தார்கள். ஒரு மாடு வழியை அடைத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. ஆட்டோ, பைக் என அவ்வப்போது வழிமறியல் வேறு செய்தார்கள். பைக்கில் என்னால் பாதி வழியை கடக்க பத்து நிமிடம் ஆயிற்று. ஆனால் அப்பெண் குச்சியை தட்டியபடி சுலபமாய் நடந்து போய்க் கொண்டிருந்தாள். சட்டென அவளை அடையாளம் கண்டு ஒரு பூக்காரி அம்மா எழுந்து வந்து, எதையும் கேட்காமல் அவளிடம் சகஜமாய் பேசிக் கொண்டு அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்றாள். சந்தின் மறுமுனையில் ஒரு சிறு கோயில். அது வரை பூக்காரி அம்மாள் அழைத்துப் போய் விட்டாள். இதை அடுத்து மந்திரம் போட்டது போல் இன்னொரு அம்மா வந்தார். அவர் இப்பெண்ணின் கையை அடுத்து பற்றிக் கொண்டார். இப்படியே அப்பெண் நான்கு சந்துகளை தாண்டும் வரை ஐந்து பேர் அவள் கையைப் பற்றி வழிநடத்தினார்கள். அவர் யாரிடமும் உதவி கோர நேரவில்லை. அவள் வீடு ஒரு அடுக்குமாடியில். அங்கு சென்றதும் குஞ்சுப் பறவை கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொண்டு மறைவது போல் நுழைந்து மறைந்து விட்டார். எவ்வளவு சிரமம், ஆனால் எவ்வளவு சுலபம்!
சிலநேரம் வாழ்வில் எனக்கான தேவைகளை நானே கச்சிதமாய் திட்டமிட்டு நானே நிறைவேற்ற வேண்டும் என தவிப்பேன். என் திட்டங்களில் சிறிது பிசகினாலும் சோர்ந்து விடுவேன். ஆனால் சிலநேரம் அதே வாழ்வில் எதையும் திட்டமிடாமல் நம்மை வழிநடத்தும் ஏதோ ஒரு கரத்தை நம்பி கண்ணை மூடி இறங்கி விட வேண்டும் எனத் தோன்றுகிறது. அந்த குருட்டு நம்பிக்கை தான் நம்மை துன்பங்களில் இருந்து விடுவிக்கும். அன்பை நோக்கி நடத்திச் செல்லும். சிலநேரம் நம் பகுத்தறிவுக் கண் அவிய வேண்டும். அது நல்லது!


Comments

bandhu said…
தங்களின் சிறந்த பதிவில் ஒன்று!