தில்லி எட்டும் தூரமே

Image result for delhi is not far
ரஸ்கின் பாண்ட் ஏகப்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். நிறைய சின்னச் சின்ன கதைகளும். நினைவேக்கமும் ரொமாண்டிசிஸமும் இயற்கை பற்றின நெகிழ்ச்சிக் கனவுகளும் நிறைந்த எழுத்து அவருடையது. இவரிடம் இலக்கியத் தன்மை இல்லை என நான் அவர் நூல்கள் பக்கமே முன்னர் போனதில்லை.
 ஆனால் எனது பெரும்பாலான மாணவர்களுக்கு அவரைப் பிடிக்கும். அவரிடம் உள்ள எளிமை, மென்மை, களங்கமின்மை, முழுக்க முழுக்க மனிதர்களின் நன்மையை மட்டுமே பேசும் முயற்சி ஆகியவை அவரை நோக்கி பலரையும் ஈர்க்கும் விசயங்கள்.
 அதாவது ரஸ்கின் பாண்டை நமது வண்ணதாசனின் ரொம்ப ரொம்ப சாதுவான ஒரு வடிவம் எனலாம். வண்ணதாசனின் அந்த கவித்துவம், மொழிச்செறிவு இவரிடம் இல்லையே ஒழிய மனப்பான்மை இருவருக்கும் ஒன்று தான். ரத்தம் ஒழுக ஒழுக ஒரு கத்தியை கொண்டு காட்டினாலும் “என்ன ஜாம் அப்படியே இருக்கிறது? அலம்பி வச்சிடுங்க” என்பார்.

இப்படி அவரை ஒரு காலத்தில் கேலியாய் பார்த்திருந்தாலும் இப்போது எனக்கு ரஸ்கின் பாண்ட் மீது மதிப்பு கூடியிருக்கிறது (வண்ணதாசன் மீதும் தான்). அடுத்த மனிதர்களை நாம் வெறுப்பது அறியாமையினால் தான் எனும் ஞானம் அவரிடம் வெளிப்படுகிறது. அதனாலே தன்னை சுரண்டுபவர்களைக் கூட அவரால் வெறுக்கவோ கரித்துக் கொட்டவோ முடிவதில்லை. கடுமையான வாழ்க்கைச் சூழலிலும் ஏதோ ஒரு ரசிக்கத் தக்க அம்சத்தை ஒரு முட்புதரில் இருந்து எட்டிப் பார்க்கும் ரோஜாவைப் போல் பார்த்துக் கொண்டாட அவரால் முடிகிறது.  
Delhi Is Not Far என்ற தலைப்பைப் பார்த்ததும் முதலில் ஏதோ அரசியல் நூல் என்று தான் நினைத்தேன். அல்லது பயண நூல். இரண்டும் இல்லை. இது ரஸ்கின் பாண்டின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று. அவர் எழுத்தாளனாய் நிலைப்படாத ஒரு காலத்தில் எழுதி பதிப்பாளர்களிடம் காட்டி தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட ஒரு படைப்பு இது. ஏன் என இப்போது அதைப் படிக்கையில் புலனாகிறது. நாம் ரஸ்கின் பாண்டிடம் காணும் அந்த ரொமாண்டிசிஸம், பளபளப்பு, இயற்கையை வழிபடும் பக்தி இதில் இல்லை. இருண்மை சூழ்ந்த ஒரு கதை இது. ஆனால் அந்த இருண்மையிலும் ஒரு ஒளிக்கீற்றை அவர் கண்டுபிடித்து ஜொலிக்க விடுவது தான் இந்நாவலின் சிறப்பு.
மிகச்சின்ன நாவல் இது. இரண்டே மணிநேரங்களில் படித்து விடலாம்.
ஒரு சின்ன டவுன். அங்கே ஒரு ஏழை எழுத்தாளன். உருதுவில் குப்பையான த்ரில்லர் நாவல்கள் எழுதுகிறவன். உருப்படியாய் ஒரு நாவலாவது வாழ்க்கையில் எழுத வேண்டும் எனும் ஆசையில் வாழ்பவன். அவன் பெயர் அருண். அவன் அந்த டவுனில் சந்திக்கும் சுவாரஸ்யமான பல பாத்திரங்கள், அவனது அன்றாட அல்லல்கள், எளிய மக்களின் சிறுமை, அதே நேரம் அவர்களிடம் உள்ள அன்பும் கருணையும் என நாவலின் முதல் கால்வாசி போகிறது.
 சூரஜ் எனும் 17 வயது இளைஞனை அருண் சந்திக்கும் இடத்தில் இருந்து தான் நாவல் வேகம் பிடிக்கிறது. சூரஜ் அருணை விட அவலமானவன். ஆனால் அந்த அவலம் புலப்படாத வண்ணம் அவனை மிக மிருதுவான, எளிதில் நொறுங்கிப் போகிற ஒரு மனிதனாய் பாண்ட் சித்தரிக்கிறார். அவனுக்கு அடிக்கடி வலிப்பு வந்து விழுந்து விடுவான். அப்படியான ஒரு சந்தர்பத்தில் தான் அருண் அவனைக் கண்டு உதவுகிறான். இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். இருவரது உறவில் உள்ள அந்த மிக சன்னமான ஒரு பரிசுத்த அன்பைக் காட்ட இந்த வியாதி உதவுகிறது. அவர்களின் அன்பு அப்படியான ஒரு வலிப்பு தான். உணர்வுமேலிடும் போது வலியாக, வலிப்பாக, தவிப்பாக மாறும் ஒருவித பிரியம்.
சூரஜ் அனாதை. தன் பள்ளிப்படிப்பு செலவை சுயதொழில் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சமாளிப்பவன். அவனுக்கு என ஒரு வீடு இல்லை. அவன் அதனால் அருணுடன் அவனது எளிய ஒற்றை அறையில் வசிக்கிறான். ஒருநாள் அருண் பேசிய ஏதோ ஒன்று அவனை காயப்படுத்த வெளியேறுகிறான். அவனைத் தேடி அருண் செல்கிறான். அவன் ஒரு மைதானத்தில் அமர்ந்திருக்கிறான். “ஏன் வீட்டுக்கு வர மாட்டாயா?” என வினவுகிறான். சூரஜ் திரும்ப கேட்கிறான், “ஏன் நீ என் வீட்டில் தங்க மாட்டாயா?” அவன் வீடு அந்த மைதானம். திறந்த வெளி. அருண் உடனே “ஓ தாராளமாய்” என்கிறான். அவனது அன்பு அப்படி ரொம்ப முதிர்ச்சியானது. ஈகோ இல்லாதது. இந்த பதில் சூரஜின் வருத்தத்தை போக்கிட அவன் மகிழ்ச்சியாய் அருணின் வீட்டுக்கு திரும்புகிறான். இது போல் அழகான எளிய சில காட்சிகளை பாண்ட் சின்ன துயரமும் மகிழ்ச்சியும் கலந்து பிளேடால் முகத்தில் கீறுவது போன்ற கூர்மையுடன் சித்தரித்துள்ளார்.
எனக்குப் பிடித்த இன்னொரு காட்சி சூரஜ்ஜுக்கு ஒருமுறை வலிப்பு வர அருண் அவனை அப்படியே அணைத்துக் கொள்கிறான். அவனது துடிப்பும் தவிப்பும் அலையலையாய் தன்னுடலில் பரவுவதை உணர்கிறான். சூரஜ் அதைப் பார்க்காவிடிலும் மனதளவில் உணர்வான் என அருண் நம்புகிறான். அவன் நாக்கைக் கடிக்காமல் இருக்கச் செய்ய அவன் வாய்க்குள் கையை விட்டுத் தடுக்கிறான். ஆனால் சூரஜ் அவன் கையை ஆழமாய் கடித்து விடுகிறான். கை அவன் வாய்க்குள் மாட்டிக் கொள்கிறது. அப்படியே சூரஜ் மயங்கிப் போக, அருணால் நீண்ட நேரம் கையை வெளியே எடுக்க முடிவதில்லை. இருவரும் அப்படியே படுத்துக் கிடக்கிறார்கள். விழித்ததும் சூரஜ் எழுந்து கிளம்புகிறான். அருண் அவனிடம் கைக் காயத்தை மறைக்கிறான்.
இருவருக்குமான உறவில் ஒரு மென்மையான், வெளிப்படுத்தாத ஹோமோசெக்‌ஷுவல் இச்சை உள்ளது. இதை பாண்ட சொல்லாமல் சொல்வதால் அது இன்னும் கவித்துவமாய் உணர்ச்சிகரமாய் உள்ளது. ரஸ்கின் பாண்ட் இப்படியான ஒரு உறவுச்சிக்கலை எடுத்து எழுதுவார் என நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.
நாவலில் பெரிதாய் சம்பவங்கள் ஏதும் இல்லை. சூரஜ் பரீட்சையில் தேறிகிறான். அருணுக்கு தில்லியில் வேலை கிடைக்கிறது. இருவரும் தில்லியை நோக்கி பயணப்படுகிறார்கள்.
ஒரு கசப்பான, துக்கமான உலகில், பிடிவாதமாய் இருண்மையை பார்க்க மறுத்து அன்பை உறிஞ்சி வாழும் இரு ஜீவன்களின் கதை இது. இதை ஒரு moodyஆன நாவல் எனலாம். ஒரு நீண்ட காதல் கவிதை போன்ற ஒரு நாவல். முராகாமியின் Norwegian Wood பாணியிலான கதை.

நீங்கள் ஆஸ்பத்திரியில் ஒரு நோயுண்ட குழந்தையை பார்க்கிறீர்கள். அது கிட்டத்தட்ட சாகும் தறுவாயில் இருக்கிறது. ஆனால் விளையாடி சிரித்தபடி இருக்கிறது. அதன் உற்சாகம் வழியும் சிரிப்பைப் பார்த்தால் உங்களுக்கு ஒரு உணர்வு ஏற்படுமே, இந்த நாவல் படித்து முடிக்கையில் எனக்குள் எழுந்த மன அலைகள் அப்படியானவை. அந்த குழந்தையின் முகத்தைப் போல் இந்நாவலையும் என்னால் சுலபத்தில் மறக்க முடியாது.

Comments